Showing posts with label துக்கம். Show all posts
Showing posts with label துக்கம். Show all posts

Thursday, February 24, 2011

கதவைத்திற காற்று வரட்டும் ஆனந்தம்


        ஒரு ஜென் ஞானி, மலையையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்.
        அந்த நதிக்கரையோரத்தில் துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவன், குடிசையில் அடைந்து கொண்டு “வாழ்க்கை துக்ககரமானது! வாழ்க்கை துக்ககரமானது! என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
        இதைக்கேட்ட ஞானி, “இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமானது. குடிசையைவிட்டு வெளியே வந்துபார். உனக்குத் தெரியும்” என்றார். துறவியின் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
        முதலில் கதவைத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடி வரும் தென்றல் உன்னை வெளியே கொண்டு வரும்” என்று சொன்னார் ஞானி. அதையும் அவன் கேட்கிற மாதிரி இல்லை.
        உடனே அந்த ஞானி, ” அடடே….ஆபத்து! ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது” என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக்கொண்டு அவன் வெளியே ஓடி வந்தான்.
        வந்தவனைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மின்னுவதையும், அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றான்.
        ‘குடிசையை விட்டு வெளியே வா… அழகைக் கண்டு ஆராதிக்கலாம் என்று அழைத்தபோது அவன் குட்கவில்லை. அவனோ கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எனவே, ‘பரம்பொருளைக் காணலாம் மோட்சம் அடையலாம்” என்று அவனிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவனை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?
        அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்தியது தான், “ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது” என்று கத்தியது.
        விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது. புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது.நீரில் குதிக்க பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.கதவைத் திறக்க பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது. ஆனந்தம் பொங்காது. அனைவரது வாழ்விலும் ஆனந்தம் பொங்க வாழ வேண்டும். எல்லா நிலையிலும் ஆனந்தத்தோடு வாழவேண்டும். ஆனந்தமே ஒவ்வொருவரது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
      

Saturday, December 11, 2010

செய்வதை ஆனந்தமாக செய்யுங்கள்:

       ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் உங்களூக்கு சம்பாதிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் வந்துவிடுகிறது.
       எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும், மற்றொன்று அதைவிட சிறப்பானதாகத் தோன்றுகிறது. அதற்கு மாறமுடியுமா? என்று மனம் அலைபாய்கிறது.
       ஆசை ஒன்றிலிருந்து மற்றதுக்கு மாறிக்கொண்டு இருப்பதால், அதன் இலக்கு மசமசப்பாகி விடுகிறது.
       இசையில் தான் என் ஆர்வம், ஆனால் வயிற்றுப் பாட்டிற்கு ஏதாவது ஒரு வேலைக்கு போயாக வேண்டியிருக்கிறதே என்றால்....
       எந்தமாதிரி வேலைக்குப் போக வேண்டும்? இசைக் கருவி விற்பனை செய்யும் கடையில் தரையைக் கூட்டுபவனாகக் கூட வேலைக்குப் போகவேண்டும்.
       இசைக்கருவிகளைத் துடைத்து சுத்தம் செய்தாலும் நூறு சதவிகித ஈடுபாட்டுடன் செய்யவேண்டும்.
      இப்படி முழுமையாக தன்னை அர்ப்பனித்துக் கொண்டு இந்த வேலைகளில் ஈடுஒஅட்டால், எப்படி மலர வேண்டுமோ அப்படி தானாக மலருவோம்.
      எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்று தீமானிக்கிற புத்திசாலித்தனம் உங்களிடம் இல்லையா?
       கவலை வேண்டாம்! இப்போது எந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். முழுமையாக என்றால் இதயத்தையும், உயிரையும் அதற்காக ஒப்படைக்கத் தயாராக இருக்கும் முழுமை.
       செய்வதை நூறு சதவிகித ஈடுபட்டுடன் செய்தால், உங்கள் உள்சக்தி உங்களை சரியான பாதைக்கு தானாக அழைத்துச் செல்லும்.
       சந்தோசமாக வேலை செய்வதால் உணர்ந்தால் மட்டுமே உங்களால் முழுமையாக செயலாற்ற முடியும். கட்டாயத்துக்காக வேலை செய்வதாக நினைத்து விருப்பம் இல்லாமல் செய்தீர்கள் என்றால், ரத்தக்கொதிப்பும், அல்சரும், மற்ற மனநோய்களும் கூப்பிடாமலே வந்து உள்ளே உட்கார்ந்து கொள்ளும்.
       சங்கரன்பிள்ளை ஒருமுறை ரயிலில் பயணம் செய்தார். வசதியான இருக்கை கிடைத்து உட்கார்ந்தார். அதன் பின்னும் தன் தலை மீதிருந்த பயண மூட்டையை இறக்கிக் கீழே வைக்கவில்லை.
       டிக்கெட் பரிசோதகர் வந்தார், உணவு விற்பவர் வந்தார், மூட்டையை வைத்துக் கொண்டு சங்கரன்பிள்ளையால் எந்த இயல்பான வேலையும் செய்யமுடியவில்லை.
       சக பயணிகளில் ஒருவர் கேட்டார், "ஐயா, பெரிய மூட்டையாக இருப்பதால் கீழே இறக்கி வைக்க உதவி தேவைப்படுகிறதா?"
       "அதெல்லாம் இல்லை!"
       ", மூட்டையில் விலையுயர்ந்த பொருள் ஏதாவது உள்ளதா? அப்படியானால் மூட்டையை கீழே வைத்து அதன் மீது நீங்கள் எறி உட்கார்ந்து கொள்ளலாமே"
       "இல்லையில்லை, எல்லாம் பழைய துணிகள் தாம்!"
       "அப்புறம், எதற்காக அதைத் தலையில் சுமக்கிறீர்கள்!"
       "என் பாரத்தை அனாவசியமாக இந்த ரயில் மீது சுமத்தக் கூடாது என்று பார்க்கிறேன்" என்றார் சங்கரன்பிள்ளை.
       சங்கரன்பிள்ளையைப் போல் சுமையை இறக்கி வைக்கத் தெரியாதவர்களால் எதை ஒழுங்காக செய்யமுடியும்? குடும்பத்தையே தன் தோள் மீது சுமப்பதாக நினைத்துக் கொண்டு துக்கத்துடன் வேலை செய்பவர்களுக்கு எந்த ஆசை நிறைவேறும்?
தயவு செய்து உங்கள் மனபாரங்களை இற‌க்கி வையுங்கள், செய்வதை சந்தோசமாக செய்யுங்கள்.
       ஒருவேளை நீங்கள் செல்ல வேண்டிய ரயில் நான்கு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று சொல்லிவிட்டால்......
உலகமே முடிவுக்கு வந்துவிட்டதை போல் அத்தனை பேர்களும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வீர்கள், காத்திருக்கும் அந்த நான்கு மணி நேரமும் முள் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருப்பீர்கள், ரயில்வேயை விடாமல் சபித்துக் கொண்டிருப்பீர்கள்.
       ஆனால் பயணத்துக்காக காத்திருக்கும் குழந்தைகளை கவனியுங்கள், கையில் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஜாலியாக, எந்த துக்கமும் இல்லாமல் விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.
       தேவையில்லாமல் உங்களைப் போல் தங்களை வருத்திக் கொள்வது இல்லை. கிடைத்த தருணங்களை சந்தோசமாக அனுபவிக்கிறார்கள். அதிக சிரமம் இல்லாமல் தங்கள் வாழ்கையை பூரணம் ஆக்கிக் கொள்கிறார்கள்.
       ஆனால் நீங்கள் வாழ்கையை சந்தோசமாக ஆக்கிக் கொள்ள தங்களையே வருத்திக் கொள்கிரீர்கள். ஆனாலும் சந்தோசம் கிடைக்காமல் தோற்று விடுகிறீர்களே?
       மனதை துக்கமும், படபடப்பும் அழுத்தாமல் பொறுப்புடன் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.
       இந்த ரயில் இல்லையென்றால் பஸ் பிடிக்கலாம், டாக்ஸி பிடிக்கலாம், இல்லை வேறு வாகனங்கள் கிடைகுமா என்று பார்க்கலாம். இல்லை காத்திருக்க கிடைத்த நேரத்தை வேறு வழியில் ஆனந்தமாக செலவு செய்யலாம்.
       துக்கப்படுவதால் எதுவும் மாறி நிகழப்போவது இல்லை. ஆனந்தமான மனிதர்களால் தான் எந்த வேலையையும் அச்ச‌மில்லாமல், சிரமமில்லாமல் விளையாட்டாக செய்ய முடியும்... ஆகவே எதிலும் ஆனந்தமாக ஈடுபடுங்கள்....

வாழ்க வளமுடன்!

Sunday, November 14, 2010

கவலைகளை களைந்தால் –ஆனந்தம்:

         மனம் உற்சாகமாக இருந்தால், புல் கூட ஆயுதமாக தோன்றும், தோல்வியும் கூட குருவாக தோன்றும். சாத்தியம் இல்லாததிலும் சாத்தியம் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் மனக்கண்ணில் தெளிவாகத் தெரியும்.
        மனம் சோர்வுற்றிருந்தால் படையே உடன் இருந்தால் பயம் இருக்கும். வெற்றி கூட இப்போதைக்கு ஒ.கே. அடுத்த தோல்வி எப்போது வருமோ? என்று யோசிக்கத் தோன்றும். மிகச்சிறிய சாத்தியமின்மைகள் கூட பெரியதாகத் தெரியும்.
        "இந்த நூற்றாண்டில் மனிதனை மிகாதிகம் பாதித்த வியாதி எது என்று கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அது எயிட்ஸ், கேன்சர், ரத்தக்கொதிப்பு, சர்கரைவியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு. கருத்துக்கணிப்பின் முடிவு சற்றும் எதிர்பாராதது..
        மனிதனை அதிகம் பாதிப்பது துக்கம், மனச்சோர்வு ( Depression) தான் காரணம் என்பது தான் அது.
        ஒரு கிராமத்தில், ஒரு பெண்மணி நகரத்தில் வாழும் தன் மகன்க‌ளையே நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தார். பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும், அவர் மக்களின் கஷ்டங்களை தீர்த்து வைப்பதாகவும் பெண்மணியின் காதுகளுக்கு எட்டியது. பெண்மணி ஞானியை தரிசிக்க கிளம்பினார்.
        "என் பையன்களைப் பற்றிய கவலை தான் எப்போதும்! என் பையன்களுக்கு நல்ல காலம் பிறக்க வேணடும் அதற்கு ஏதாவது வழி சொல்லுங்க" என்றார் ஞானியிடம்.
        ஞானி, "அப்படியாம்மா.. சரி.. ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைத்தே கவலைப் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
பெண்மணி, " என்னுடய மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழைகாலத்தில் மழையில் உப்பு எல்லாம் நனைந்து விடுமே. வெய்யில் முழுமையாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாதே. அவன் வியாபாரம் மழைகாலத்தில் சரியாக நடக்காதே. என்னுடய இளைய‌ மகன் குல்லா, கம்பளி வியாபாரம் செய்கிறான். வெய்யில் காலத்தில் இளையவனுக்கு வியாபாரம் சரியாக நடக்காதே.
        இப்படி மூத்த மகன் பாதி காலத்திலும், இளைய‌ மகன் பாதி காலத்திலும் சரியாக சம்பாதிக்காத போது, நான் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?" என்றார்.
        ஞானி, "ஏம்மா இப்படி உங்களை நீங்களே தேவையே இல்லாமல் வருத்திக்கொள்ளுகிறீர்கள்? வெய்யில் காலத்தில் மூத்த மகன் உப்பு வியாபாரம் நன்றாக செய்வதையும், இளைய‌ மகன் மழைகாலத்தில் குல்லா, கம்பளி வியாபாரம் நன்றாக செய்வதையும் நினைத்து சந்தோசப்படுங்கள், இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்" என்றார்.
        பலர் இப்படித் தான் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர். தொடர்ந்து கவலைப் படும்போது அது துக்கமாக மாறுகிறது. துக்கத்துக்கு காரணம் தேடுவதை நிறுத்துங்கள் கவலையைத் தாண்டி நிம்மதி உணர்ச்சி பெறுவீர்கள்.
        "யாருக்காக கவலைப்படுகிறேன்?, எல்லாம் என் குடும்பத்துக்காகவும், ஊருக்காகவும் தானே கவலைப்படுகிறேன். மத்தவங்க மேல இருக்கிற கருனையால் தானே கவலைப்படுகிறேன். மற்றபடி எனக்கு ஒரு கவலையும் இல்லை என்று சுயபச்சதாபம் தேடும் சிலர் சொல்வதுண்டு. நம் கவலைகளை ஒழிக்க நம் எண்ண ஓட்டத்திலும் ஓடும் சில துன்புறுத்தும் வார்த்தைகளை கண்டுபிடித்து நாமே களையவேண்டும்.
        நான் பிரயோஜனமில்லாதவன், நான் முட்டாள், நான் துரதிருஷ்டசாலி என்று எண்ண ஓட்டத்தில் ஓடும் வார்த்தைகளை களைய வேண்டும்.
        கவலைகளை களைந்தால் வெளிப்படாமல் இருக்கும் ஆனந்த சக்தி வெளிப்பட ஆரம்பிக்கும். ஆனந்தம் பொங்கும்.......

வாழ்க வளமுடன்!