Sunday, November 6, 2011

எதிலும் நுணுக்கம் வேண்டும் ஆனந்தம்


காலை எட்டரை மனி வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது, அப்புறம் தான் ஆரம்பிக்கிறது எல்லாம்! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மனைவியை அவ்ள் அலுவலகத்திற்க்கு இறக்கிவிட்டு, அலுவலகத்திற்க்கு வந்தால் அங்கேயும் ஆயிரம் பிரச்சனைகள். நாம் திட்டமிட்டபடி செயல் படப்பார்த்தாலும், மற்றவர்கள் அதை குழப்பி டென்ஷன் ஆக்கிவிடுகிறார்களே, எப்படி டென்ஷன் இல்லாமல் செயல் படுவது?
      காட்டு வழியில் தன் சீடனுடன் நடந்து கொண்டிருந்தார் ஒரு ஜென் குரு. சீடனிடம் அங்கிருந்த ஒரு செடியை காட்டினார்.
      "இந்த செடியைப் பற்றி சொல்!"
      "இதன் பெயர் பல்லடோனா! இதன் இலைகள் மிகவும் விஷமிக்கவை, உயிரைப் பறிக்ககூடியவை!"
      "இலைகளை வேடிக்கைப் பார்த்தால் ஆபத்தில்லை, சுவைத்தால் தான் உயிர் போகும். பிரச்சனைகளும் அப்படித்தான். தேவையான கவனம் கொடுத்தால் போது(அதிகம் தேவையில்லை), ஆபத்தின்றி தீர்ந்து போகும். தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து, இழுத்து மண்டையை போட்டு குடைந்து கொண்டால், உயிரை எடுத்துவிடும்" என்றார் குரு.
      உங்கள் பிரச்சனை குடும்பமல்ல, நிறுவனமல்ல; பிரச்சனையே நீங்கள் தான். வெளியே இருப்பதை சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்கலே திருகிக்கொள்கிறீர்கள்.
      கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளங்கைகளை மேல்முகமாக திருப்பி வையுங்கள். உங்கள் மூச்சை கவனியுங்கள்(அரை நிமிடமாவது). அதேபோல் உங்கள் கைகளை கீழ்முகமாக திருப்பி வைத்துக் கொண்டு உங்கள் மூச்சை கவனியுங்கள்( எந்த மூக்கில் மூச்சு நன்றாக வருகிறது என்று). இப்போது மூச்சு வேறு விதமாக இயங்கும்( இடது மூக்கு, வலது மூக்கு என்று மாறும்).
      உடலுறுப்புகளை எந்த விதத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, உங்கள் உயிர் சக்தியின் ஓட்டம் மாறுகிறது. இது பற்றிய கவனமில்லாமல் உங்கள் கைகளை கோபத்தின் டென்ஷனின் போது இப்படியும் அப்படியும் வீசும் போது உங்கள் உயிர் சக்தி எவ்வளவு குழப்பத்திற்க்குள்ளாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
      இப்படி கவனமின்றி எவ்வளவு தூரம் உங்கள் உயிர் சக்தியை வீணடிக்கிறீர்கள்? நீங்கள் சரியான படி இயங்க வில்லை என்றால் உஙளுக்கு எதுவும் சரியாக நடக்காது!
      குடும்ப டென்ஷன், நிறுவன டென்ஷன், போக்குவரத்து டென்ஷன், என ஒவ்வொன்றும் டென்ஷனாகிப்போனால் நீங்கள் இந்த பூமியில் வாழத்தகுதி இல்லாதவராகி விடுவீர்கள்.
      உங்கள் உடலையும் மனதையும் கூட கையாளத் தெரியவில்லையே, குடும்பத்தையும், நிறுவனத்தையும் எப்படி கையாள்வீர்கள்?
      உங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பை விட்டு விட்டு, எதையும் ஆழ்ந்த கவனத்துடன் அனுகிப்பாருங்கள்.
      சங்கரன்பிள்ளை இறக்குமதி செய்யப்பட்ட ஒரு காபி இயந்திரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதை, அவர் வீட்டில் வேளாஈ ஸேய்யூம் பெண்மணி கவனித்தாள்.
      "இந்த இயந்திரத்தை எப்படி பொருத்துவது என்பதைப் பற்றி ஃபிரெஞ்சு மொழியில் குறிப்பு அச்சிடப்பட்டு இருக்கிறது.அதன் படி செய்து பார்த்து விட்டேன், இயந்திரத்தில் ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன்" எனறார் சங்கரன்பிள்ளை.
      பணிப்பெண் பக்கத்தில் வந்து ஒரே முயற்ச்சியில் அந்த இயந்திரத்தை மிகச் சுலபமாக பொருத்தி விட்டாள்.
      "எப்படி?" என்றார் சங்கரன்பிள்ளை.
      "எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது, அதனால் குழப்பிக்கொள்ளவில்லை" என்றாள் பணிப்பெண்.
      புரிகிறதா?
      உங்களை நீங்கள் பெரிதாக நினைத்துக் கொள்ளாமல், நீங்கள் நிஅனைப்பது தான் சரி என்ற அகங்காரத்துடன் எதையும் அனுகாமல் இருந்தால், எந்தப் பிரச்சனை தான் உங்களை கட்டிப் போட முடியும்.
      பிரச்சனைகளின் விளைநிலம் உங்கள் குடும்பமோ, நிறுவனமோ அல்ல; உங்கள் மனம் தான். அற்புத கருவியாக இயங்க வேண்டிய சாதனம் அவலமான கருவியாகிவிட்டது. வேண்டியதை வழங்க வேண்டிய சாதனம், வேதனைகளை வழங்கும் சாதனமாகிவிட்டது.
      என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், ஈஷா இயக்கத்தில் உலகெங்கும் 10 லட்சத்திறுக்கும் அதிகமானோர் தண்ணார்வத் தொண்டர்களாக இருக்கின்றனர். அவர்கள் வெவ்வேறு கலாச்சாரப் பிண்ணணியில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். அவர்கள் இந்த தொண்டிற்கென்று எந்த தனி பயிற்ச்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. இதை புரிந்து கொள்ளாமல் நான் எடுத்ததற்கெல்லாம் டென்ஷனால், நான் எதிர்பார்க்கும் எந்த வேலை நடக்கும்? கோபத்தால் அத்தனை லட்சம் பேரை நான் எப்படி கையாள முடியும்?
      நான் அவர்களுக்கு தகப்பனாக, மகனாக, குருவாக, சேவகனாக, மனநல மருத்துவனாக எவ்வளவோ தளங்களில் இயங்க வேண்டியிருக்கிறது. அப்படி செய்யத் தயாராக இருந்தால் தான் நீங்களும்... குடும்பத்திற்க்கும் நிறுவனத்திற்க்கும் தலைமை பொறுபேற்க்க முடியும்.
      உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் அங்கே நீங்கள் ஒரு பிரச்சனை ஆகிவிடாத அளவிற்க்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் போது எப்போது டென்ஷனே இருக்காது.
      ரிச்சர்டு கவுலி என்ற பிரபல மருத்துவரிடம் ஒருவன் வந்தான்.
      "டாக்டர் எனக்கு 32 வயதாகிறது, கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை இன்னும் விடமுடியாமல் தவிக்கிறேன்" என்று கூச்சத்துடன் சொன்னான்.
      "இதில் கவலைப் ப்ட ஒன்றுமில்லை, எத்தனை வருடங்களுக்கு தான் இதே விரலை சூப்புவாய், இன்றிலிருந்து கவனமாக வேறுஒரு விரலை பயண்படுத்து" என்று அறிவுறுத்தி அனுப்பினார் ரிச்சர்டு கவுலி.
      ஒரே வாரத்தில் திரும்பி வந்தான் அவன்.
      "முப்பது வருடமாக தவிர்க்க முடியாதபடி இருந்த பழக்கத்தில் இருந்து ஆறே நாளில் எப்படி விடுதலை பெற்றேன் டாக்டர்?" என்றான்.
      "ஒரு விசயத்தை பழ்க்கதோசத்தில் செய்யாமல், ஒவ்வொரு முறையும் புதிதாக முடிவேடுக்க வேண்டி வந்தால், அதை கவனத்துடன் அனுகுவோம். தேவையற்ற பழக்கம் தானாகவே உதிர்ந்துவிடும்" என்றார் கவுலி.
      கோபமும், டென்ஷனும் உங்கள் வாடிக்கையாகிப் போயிருந்தால் இனி ஒவ்வொரு முறையும் அது பற்றிய கவனத்துடன் அனுகிப்பாருங்கள், விஷம் உதிரும், அமுதம் நிலைக்கும்.
.................................................................சத்குரு..................................................................................

Sunday, October 30, 2011

சரியான தீர்வு யாரால்? ஆனந்தம்


      அரசியல்வாதிகளில் பலர் ஆன்மீகவாதிகளிடம் ஆலோசனை கேட்டு நடக்கிறார்களே, ஆன்மீகவாதிகளால் சமூகப்பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
      இந்த வாதிகளில் பெரும்பாலானோர் உண்மையில் வியாதிகள்! அவர்களால் பிரச்சனையை உருவாக்க முடியுமே தவிர, தீர்வு சொல்ல முடியாது. அரசியைல் பிரச்சனைகள், ச்மூகப்பிரச்சனைகள் மட்டுமல்ல ஆன்மீகப் பிரச்சனைகளைக் கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியாது.
      தங்கள் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கருத்துக்களைக் கோர்த்து, நல்ல கோட்பாடுகளின் அடிபடையில் நடப்பதாக நினைத்து அவர்கள் கொடுத்துவரும் ஆலோசனைகள் பிரச்சனைகளை தீவிரப் படுத்தியிருக்கின்றனவே தவிர தீர்த்துவைக்கவில்லை.
      சில பிரச்சனைகள் தீர்வு பெறாமலேயே தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றனவே ஏன்? அவற்றை தெளிவான கண்ணோட்டத்துடன் அனுகும் பக்குவம், அவற்றைக் கையாள்பவரிடம் இல்லை. அதுதான் விஷயம். அந்த பிரச்சனைகள் பூதகரமாக வளர்ந்திருப்பதற்க்கு அதுதான் காரணம்.
      "முன்பு அரசவைகளில் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கிய துறவிகளும் இந்த வகையை சார்ந்தவர்கள் தானோ?"
      இல்லை, இல்லை; தன்னை ஆன்மீகவாதி என அறிவித்துக்கொண்டு மரியாதை எதிர்பார்ப்பவர்கள் வேறு; ஆன்மீகத்திலேயே ஈடுபட்டிருப்பவர்கள் வேறு!
      ஆன்மீகப் பாதையில் தன்னை உணர்ந்து செல்பவர்களின் பார்வை மற்றவர்களைக் காட்டிலும் மிகத்தெளிவாக இருக்கும். வாழ்க்கை பற்றியும், மனித உறவுகளைப் பற்றியும் அவர்களுடைய கணிப்பு இன்னும் ஆழமாக, அனுபவப்பூர்வமாக இருக்கும்(ஏனென்றால் அவர்களுக்கென்று எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்பும் இருக்காது). எதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அவரால் பிரச்சனைகளை எல்லாக் கோணங்களில் இருந்தும் பாரபட்சமின்றி மிகத்தெளிவாக பார்க்க முடியும். சரியான தீர்வும் சொல்ல முடியும்.
      அதனால் தான் அரசவைகளில் முற்றும் துறந்த ஞானிகளின் ஆலோசனைகளுக்கு மதிப்பு இருந்தது. ஆடம்பர வாழ்வை எதிர்பார்த்து அவர்கள் அரண்மனைகளில் குடியேற‌வில்லை. அரிய ஞானம் கொண்டு அலோசனைகள் வழங்கவே மன்னனுடன் அவர்கள் வசித்தார்கள்.
      ஜனக மன்னன் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற போது, தன் குருவுடன் ஆசிரமக்குடிலுக்கு போகவே பிரியப்பட்டான். ஆனால் அவன் குரு அஷ்டவக்கிரர் அவனைத் தடுத்தார்.
      "உன் சுகங்களை விட்டுகொடுப்பது பற்றிய பிரச்சனை அல்ல இது. ஒரு ஞானவானின் ஆட்சி எப்படி இருக்கும் என்று மக்கள் அறிந்து, அனுபவித்து மகிழ வேண்டும். எனவே, நீ அரியணையிலேயே இரு!" என்று அவனைத்திருப்பி அரண்மனைக்கே அனுப்பினார்.
      ஞானிகளின் தீர்கமான அணுகுமுறை மன்னனுக்கும் மக்களுக்கும் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும்.
      மனிதப் பிறவியை பற்றிய பல அம்சங்களைத் தெரிந்து வைதிருப்பர் ஞானிகள். மனித உடல் எப்படி இயங்குகிறது, மனம் எப்படிச் செயல்படுகிறது. அவனுடைய சக்தியை எப்படி மேம்படுத்துவது என்று ஞானிகள் அறிவர். அவர்களுடைய சேவையை சமூகம் பயன் படுத்திக்கொள்ள முன்வந்தால், அது மிகச் சிறந்த பலன்களையே கொடுக்கும்.
      ஆனால் உண்மையான ஞானிகள் சமூகம் பற்றிய விசயங்களுக்கு வருவதே அபூர்வம். யாரோ ஓரிருவர் தான் அத்தி பூத்தார் போல் சமூகத்திற்கே வருவர். மிகுந்து ஞானிகள் தனித்தே இருப்பர். அவ்வாறு யாராவது நிஜமாக வந்து தீர்வு கொடுத்தால் அந்தத் தலைமுறை மிகுந்த பாக்கியம் செய்த தலைமுறையாகும். அதனால் தான் அந்தக் காலத்து மன்னர்கள் துறவிகளைத் தேடிப்பிடித்து தீர்வு கேட்க அழைத்து வருவர். அல்லது அவர்களது ஆசிரமம் இருக்கும் இடத்திற்க்கு சென்று தீர்வு கேட்பர்

      "ஒழுக்கம் உள்ளவர்களாலும், நல்லவர்களாலும் கூட பாரபட்சமின்றி தீர்வு தரமுடியுமே? இதற்க்கு ஆன்மீக ஞானம் அவசியமா?
      பிரச்சனை என்பதற்க்கு ஒரு தீய பகுதி இருக்கும். மிகந‌ல்லவர்களால் நல்லதைப் பார்க்க முடியுமே தவிர, தீயதை உண்ர்ந்து கொள்ள முடியாது.
      ஆஸ்திரேலியாவில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்ட ஒருவன் தன் மூன்று சகோதரிகளுடன் ஒரு பயணம் மேற்க்கொண்டான்.
      வழியில், அந்தப் பகுதியின் இளவரசன் எதிர்ப்பட்டான், "இந்த மூன்று அழகான பெண்களில் ஒருத்தியை என் மனைவியாக்கிக் கொள்கிறேன் சம்மதமா?" என்று கேட்டான் இளவரசன்.
      மூவரில் ஒருத்திக்கு மட்டும் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்தால் மற்றவர்கள் இருவர் வேதனைப் படுவார்கள் என நினைத்துக் கொண்டு, "மூவரையும் ஒரே தகுதி கொண்டவர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பதாய் இருக்கின்றேன்" என மறுத்துவிட்டான் ஆன்மீகவாதி.
      அப்படி எல்லா விததிலும் ஒரே தகுதி கொண்டா மூவரைத் தேடித் தேடி பல வருடங்களை வீண‌டித்தான். கடைசி வரை அந்த பெண்கள் கன்னிகளாகவே வாழ வேண்டியதாகி விட்டது.
      "எங்களில் ஒருத்திக்காகவாவது கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை உன் எண்னத்தினால் வீணாகப்போயிற்றே" என புலம்பி கண் கலங்கினர் சகோதரிகள்.
      மற்ற இரு சகோதரிகள் வேதனை கொள்வார்கள் என அவன் நினைத்து தீர்மானித்து அவன் எடுத்த 'நல்ல' முடிவால், யாருக்குமே சந்தோசம் கிடைக்காமல் போனது. ஒரு சரியான முடிவெடுக்க அவர்கள் நல்லவர்களாக மட்டுமிருந்தால் போதாது என்பதைச் சுட்டிக் காட்டும் கதை இது.
      அதே போல் தான் ஒழுக்கம் உள்ளவர்களும்! தங்கள் விதி முறைகளில் சிக்கிக் கொண்டு விட்டால், பிரச்சனைகளின் முழுப் பரிமாணத்தை அவர்களால் கவனிக்க முடியாது. அதற்க்கொரு தீர்வும் சொல்லமுடியாது. இரு வெவ்வேறு மனிதர்களின் ஒழுக்க நிலைகளின் பெரும்பாலும் சண்டைகளில் தான் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. நல்லவர்களிடமும், ஒழுக்கம் பற்றிய கவனம் கொண்டவர்களிடம் பாரபட்ச மற்ற தீர்வு என்பது சாத்தியமே இல்லை.
      ஞானிகளிடம் தான் அந்த அமுதம் கிடைக்கும்.

Wednesday, October 26, 2011

ப‌ண்டிகைகள் ஏன்? ஆனந்தம்


      பண்டிகை நாள் என்றாலே வெறுப்பாக இருக்கிறது பெண்கள் சமையல் கட்டிலேயே அடைந்து கிடந்து. விதவிதமாக திண்பண்டங்களைச் செய்தே களைத்துப் போகிறோம். இதுவா கொண்டாட்டம் என்பது?
      வாழ்க்கை என்பதே ஆனந்தமாக கொண்டாடப்பட வேண்டியது, அப்படி அமைத்துக் கொள்ளாதவர்களுக்காகத்தான் வெளியில் பல கொண்டாட்டங்களை அமைத்துக் கொடுத்தார்கள்.
      வயலை உழப்போகிறார்களா அது ஒரு கொண்டாட்டம், விதை தூவப்போகிறார்களா அது ஒரு கொண்டாட்டம், களையெடுப்பது ஒரு கொண்டாட்டம், அறுவடை செய்வது ஒரு கொண்டாட்டம், உழவு மாடுகளுக்கு மரியாதை செய்வது ஒரு கொண்டாட்டம்,யார் வீட்டிலாவது திருமணமா அது பல நாள் கொண்டாட்டம், என்றெல்லாம் ஏன் அமைத்தார்கள்?
      கொண்டாட்டம் என்பது சந்தோசத்தின் வெளிப்பாடு, வாழ்க்கையின் அடிப்படை. நீங்கள் கொண்டாட்டத்தை எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான், உங்களின் ஆனந்தம் இருக்கிறது.
      கொண்டாட்டம் வயிறு முட்ட சாப்பிடுவதில் இல்லை, உணர்வில் இருக்கிறது, உங்களின் முதல் கவனம் சந்தோசமாக இருப்பதில் தான் இருக்க வேண்டும்.
      விதவிதமாக சமைக்க வேண்டும் பின்பு அதைப் புசிக்க வேண்டும், அப்புறம் தான் கொண்டாட வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
      முதலில் உங்கள் வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ளுங்கள். சமையல் செய்வதை ஏன் வேலையாக நினைக்கிறீர்கள்? காய்கள் நறுக்குவதைக் கூட ஒரு கொண்டாட்டமாக மற்றிக் கொண்டு செய்து பாருங்கள் பண்டிகை நாள் மட்டுமல்ல வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தான் என்பதை உணர்வீர்கள்.
      பெண்கள் வேலை செய்ய வேண்டும், ஆண்கள் தான் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
      ஆண், பெண் என பிரித்து பேசவில்லை, வாழ்க்கையை வேதனையோடு நகர்த்த தீர்மானித்திருக்கிறீர்களா? அல்லது கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ள விருப்பமா? என்று தான் கேட்டேன்.
      அன்பும், பிரியமும், விருப்பமும் இல்லாமல் நீங்கள் சமைத்தால் ஒரு விதத்தில் ஆண்களுக்கும் அது தண்டனை தானே?
      பெண்களாவது புலம்பித் தள்ளி விடுகிறார்கள். ஆண்கள்.....?
      ஒருமுறை சங்கரன்பிள்ளை பெண்கள் கூட்டம் ஒன்றுக்கு போயிருந்தார்...
      "பெண்கள் முட்டாள்களாக கருதப்படுகிறார்கள். அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். வேட்டையாடப்பட்டும், இரைகளாக விரட்டப்பட்டும் இருக்கிறாகள். அவர்கள் எந்த விதத்திலாவது வேதனைப் படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா?" என்று மைக்கை இறுகப் பற்றி ஒரு கனமான பெண்மணி உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டிருந்தாள்.
      சங்கரன்பிள்ளை எழுந்தார். "என்னால் சொல்லமுடியும். பெண்கள் ஒரு போதும் மெளனமாக வேதனைப்பட்டதில்லை" என்றார்.
      உண்மைதானே?
      உங்களுக்குள் நீங்கள் சந்தோசமாக இல்லாதபோது சுற்றி உள்ளவர்களை நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்க அனுமதிப்பீர்கள்? தூக்கி வைத்த முகத்துடன் நீங்கள் உட்கார்ந்தால், மற்றவர்களின் கொண்டாட்டம் என்னவாகும்? சமைத்த களைப்பும் சாப்பிட்ட அயர்ச்சியும் தான் பண்டிகை நாட்களில் மிச்சமாகும்.
      சந்தோசமான நபராக இருக்கும் வரைதான் நீங்கள் ஆபத்தில்லாதவர். சந்தோசம் இல்லாத நேரங்களில், பரிதாபகரமான செயல்களில் எல்லாம் நீங்கள் ஈடுபடுவீர்கள், ஆண்களும் இதைப்புரிந்து கொண்டால் உங்களுக்கு இந்த வேதனை இருக்காது.
      ஆண்களைப் பற்றி பேசும்போது தான் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
      கடற்க்கரையில் ஒரு பெண், கூழாங்கல் ஒன்றைக் கண்டெடுத்தாள், சுத்தம் செய்ய அதைத் தேய்த்தாள். எதிரில் ஒரு பூதம் தோன்றியது.
      "என்னை விடுவித்ததற்க்காக உன் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுகிறேன் என்ன வேண்டும் கேள்?" என்றது பூதம்.
      "என் நாய்க்குட்டி பேசவேண்டும், பாட வேண்டும், ஆட வேண்டும்!"
      பூதம் உதட்டைப் பிதுக்கியது. "அத்தனை சக்தி எனக்கில்லை. வேறு ஏதாவது கேள்!"
      "அப்படியானால் அன்பானவனாக, நகைச்சுவை உணர்வு மிகுந்தவனாக, வீட்டு வேலைகளில் சந்தோசமாக உதவுபவனாக, என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக, என்னிடம் பொய்யே சொலாதவனாக ஓர் ஆண்மகனை எனக்கு கணவனாக கண்டுபித்துக் கொடு!"
      பூதம் பெறு மூச்சுவிட்டது. "முதல் ஆசையே பரவயில்லை, எங்கே உண் நாய்க்குட்டி" என்றது.
      இந்த தேசத்தில் மட்டுமல்ல....உலகெங்கிலும் சிடுக்கான குடும்பப் பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்துவதை ஆண்கள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
      வீட்டில் பெண்கள் வேதனையாக இருந்தால், அந்த வீட்டின் மொத்த சந்தோசமும் பறிபோகும் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
      கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்பட்டவையே பண்டிகைகள். கால ஓட்டத்தில், அடிப்படை நோக்கம் மறைந்து போய், வெறும் சடங்குகள் மட்டும் நின்றுவிட்டதால் தான் பண்டிகைகள் பெண்கள் மீது பெரும் பாரமாக அழுத்துகின்றன.
      அரசியலோ, ஆண்மீகமோ எந்த அமைப்பாக இருந்தாலும் காலத்துக்கு ஏற்றார்போல் திருத்தி அமைக்கப் பட வேண்டும். அப்போது தான் அதன் அடிப்படை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்.
      பண்டிகைகளுக்கும் அந்த அவசியம் வந்துவிட்டது.
      வெளியே மிதக்கும் விஷத்தைக் கக்கினால் தான் உள்ளே ததும்பும் அமுதத்தை ருசிக்க முடியும்!     

Wednesday, September 28, 2011

வேலையிலேயே மூழ்குதல் ஆனந்தம்


      வேலையிலேயே மூழ்கி கிடப்பவனுக்கும் தங்களது வேலையில் முழுமையாக இருப்பவனுக்கும் என்ன வித்தியாசம்
      இந்த வேற்றுமை மிகப் பெரிது. வேலையில் முழ்கி இருப்பவன் தனது வேலையில் முழுமையாக இல்லை. வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான். அவனால் மௌனமாக அமைதியாக உட்கார முடியாது. எதையாவது செய்தாக வேண்டும். அது தேவையா இல்லையா அது கேள்வியே கிடையாது.
      எப்படி மக்கள் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்களோ அது போல வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமையாகி கிடக்கிறான். வேலைதான் அவர்களது போதை. அது அவர்களை ஆக்ரமித்திருக்கிறது. அது அவர்களது கவலையிலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது அவர்களது பதட்டத்திலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது மற்ற போதைகளைப் போலவே உனது கவலை, பயம், பதட்டம், வேதனை ஆகியவற்றை முழ்கடித்து விடுகிறது.
      அதனால் வேலைவெறி பிடித்தவர்கள் தியானத்திற்கு எதிரானவர்கள். ஒவ்வொரு பழக்கமும் நீ தியானிப்பவனாக மாறுவதை தடுக்கக் கூடியது. எல்லா பழக்கங்களும் விட வேண்டியவையே.
      உனது வேலையில் நீ முழுமையாக இருப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். வேலையில் முழுமையாக இருப்பது ஒரு பழக்கமல்ல. அது ஒருவிதமான தியானம். நீ உனது வேலையில் முழுமையாக இருக்கும் போது உனது வேலை நேர்த்தியாக அமையக்கூடிய சாத்தியமுள்ளது. அந்த நேர்த்தியான வேலையின் மூலம் ஒரு சந்தோஷம் உன்னுள் எழும்.
      உன்னால் வேலையில் முழுமையாகவும் நேர்த்தியாகவும் இருக்க முடிந்தால், வெறுமனே உட்கார்ந்திருக்கவும் முழுமையான மௌனத்தில் அமரவும் உன்னால் முடியும். எப்படி முழுமையாக இருப்பது என்று உனக்குத் தெரியும். உனது கண்களை மூடிக் கொண்டு முழுமையாக உள்ளே இருப்பாய். முழுமையாக வாழ்வது எப்படி என்பதன் ரகசியம் உனக்குத் தெரியும்.
      அதனால் வேலையில் முழுமையாக இருப்பது தியானத்தில் உதவி செய்யும். வேலை வெறி பிடித்தவனால் தியானம் செய்ய முடியாது. அவனால் ஒரு சில நிமிடங்கள் கூட அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. அவன் அமைதியற்று இருப்பான். அவன் தனது நிலையை மாற்றிக் கொண்டேயிருப்பான். அவன் எதையாவது செய்வான். இந்த பாக்கெட்டில் அல்லது அந்த பாக்கெட்டில் பார்ப்பான். அதில் எதுவும் இல்லையென அவனுக்குத் தெரியும். அவன் தனது கண்ணாடியை எடுத்து சுத்தம் செய்து போட்டுக் கொள்வான். அது சுத்தமாகத்தான் இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும்.
      தனது வேலையில் முழுமையாக இருக்கும் மனிதன் வேலை வெறி பிடித்தவனல்ல. அவன் முழுமையாக இருப்பான், எதிலும் முழுமையாக இருப்பான். அவன் காலாற நடந்தாலும் சரி, தூங்கினாலும் சரி, அதில் அவன் முழுமையாக இருப்பான். அவன் நடக்கும் போது வெறுமனே நடப்பது மட்டுமே வெறெதுவும் இல்லை. வேறு நினைப்பு எதுவும் இல்லை. கற்பனை செய்வதில்லை. தூங்கும் போது கனவு காண்பதில்லை. தூங்கும் போது தூக்கம் மட்டுமே. சாப்பிடும்போது சாப்பிடமட்டுமே செய்வான்.
நீ அப்படி செய்வதில்லை. நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், உனது மனம் ஆயிரத்தோரு இடங்களுக்கு போய் வருகிறது.
      நான் பார்க்கிறேன். ஒரு படுக்கையில் இரண்டு பேர் மட்டும் இருப்பதில்லை. ஒரு கூட்டமே இருக்கிறது. கணவன் மனைவியுடன் கூடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் சோபியா லாரன்ஸை நினைத்துக் கொண்டிருக்கிறான். மனைவி தனது கணவனுடன் கூடுவதில்லை. அவள் முகம்மது அலியை நினைத்துக் கொள்கிறாள். ஒவ்வொரு படுக்கையிலும் நீ ஒரு கூட்டத்தை காணலாம். ஒருவரும் எந்த செயலிலும் முழுமையாக இருப்பதில்லை. – கூடுவதிலும் கூட.
      செய்யும் செயலை முழுமையாக செய். இல்லாவிடில் செய்யாதே. முழுமையாக இரு. – அப்போது உனது வாழ்வு முழுவதுமே தியானமாகி விடும்.

எதிர் செயல்‍ பதில் செயல் ஆனந்தம்


      எதிர் செயல் எண்ணங்களிலிருந்து வருவது. பதில் செயல் புரிதலிலிருந்து வருவது. எதிர் செயல் கடந்த காலத்திலிருந்து வருவது. பதில் செயல் நிகழ்காலத்தில் இருப்பது. ஆனால் நாம் எப்போதும் எதிர் செயல்தான் செய்கிறோம். – நம்மிடம் எப்போதும் உள்ளே எதிர்செயல் ஏற்கனவே தயாராக உள்ளது.
      யாரோ எதையோ செய்கிறார்கள். நாம் ஏதோ பட்டன் அழுத்தப்பட்டது போல எதிர்செயல் செய்கிறோம். யாரோ உன்னை அவமதிக்கிறார்கள். – நீ கோபமடைகிறாய். அது முன்போ நிகழ்ந்தது. அது எப்போதும் அப்படித்தான் நடக்கிறது. அது ஒரு பட்டன் போல ஆகி விட்டது. யாரோ அதை அழுத்துகிறார்கள். நீ கோபமடைகிறாய். ஒரு வினாடி கூட காத்திருக்கவில்லை. ஒரு வினாடி நேரம் கூட சூழ்நிலையை பார்க்கவில்லை. ஏனெனில் சூழ்நிலை வேறுபட்டிருக்கலாம். உன்னை அவமதித்த ஆள் சரியாக கூறியிருக்கலாம். அவர் உன்னிடம் உன்னைப் பற்றிய உண்மையை கூறியிருக்கலாம். அதனால் நீ அவமானமாக உணர்ந்திருக்கலாம். அல்லது அவர் தவறாக இருக்கலாம். அல்லது அவர் ஒரு குசும்பு பிடித்த ஆளாக இருக்கலாம். ஆனால் நீ அவரைத்தான் பார்க்க வேண்டும்.
      அவர் சரியாக சொல்லியிருந்தால் நீ அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர் உனக்கு ஒன்றை சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் உன்னிடம் கருணை காட்டி இருக்கிறார். உண்மையை சொன்னதன் மூலம் உன் நெஞ்சுக்கு நெருக்கமாயிருக்கிறார். அது சுடலாம், ஆனால் அது அவர் தவறல்ல, அல்லது அவன் மடையனாக, அறியாதவனாக, உன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஏதாவது சொல்லிருக்கலாம். அப்போது அங்கே கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் சொல்வது தவறு எனில் முற்றிலும் தவறான ஒன்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதில் ஏதோ சிறிதளவு உண்மையில்லாவிட்டால் நீ அதனால் கடுப்படைய மாட்டாய். நீ அதைப் பார்த்து சிரிப்பாய். அதன் முட்டாள்தனத்தைப் பார்த்து அதன் பொருந்தாதன்மையினால் சிரிப்பு வரும். அல்லது அந்த ஆள் ஒரு முசுடு, அவர் எப்போதும் அப்படித்தான், எல்லோரையும் அவமதித்துக் கொண்டிருப்பார். அதனால் அவர் குறிப்பாக உன்னைப் பார்த்துகூறவில்லை. அவர் எப்போதும் போல சொல்லிக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான். உண்மையில் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. அவர் அது போலத்தான்.
      உன்னைக் கவனி. மற்றவர்களை கவனி, மற்றவர்கள் எப்படி ஒரு இயந்திரத்தனமாக, சுயநினைவின்றி, தூக்கத்தில் நடப்பவர்கள் போல செயல்படுகிறார்கள் என்று பார்.
எதிர் செயல் மனதிலிருந்து எழுவது,
பதில் செயல் மனமற்ற நிலையிலிருந்து வருவது.

Friday, September 23, 2011

நம்மை பற்றிய நமது கருத்து ஆனந்தம்


      ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது.
      ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார்.
      ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான்.
      அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை.
      இது நம்மை பற்றிய நமது கருத்தை எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப் பற்றிய கதை.
      ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜீஸஸூக்கும் நிகழ்ந்தது.
      இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை.
      தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார்.
      மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது.கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோ சிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய்.
      கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக் கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்.......அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மை தன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ‍இன் என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய்.
      பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய்.
      அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய்.
      ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன.
      அதனால்தான் பல மதங்களும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும்.
நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய்.
      நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை.
      உயிர் துடிபுள்ளவனாகும் போது உன்னிடம் இருந்து அகங்காரம் மறைகிறது. அகங்காரம் மரையும் போது நீ கடவுள் தன்மை உள்ளவனாகிறாய். கடவுள் தன்மை வரும்போது அளவற்ற ஆற்றலும் நிதானமும் சரியாக சிந்திக்கும் திறனும் வரும். வெற்றிக்காக உழைக்க வேண்டாம். அது உன் செயலிலேயே ஒளிந்துள்ளது, தானாக் கிடைக்கும். அப்போது மகிழ்ச்சியாக உண‌ர்வாய். இந்த மாதிரி வெற்றியே உனக்கு முழுமை கொடுக்கும்.

Wednesday, August 31, 2011

மனித நாகரீகம் என்பது இதுவா? ஆனந்தம்


      எந்தப் புலியாவது தன்னை நல்ல புலியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று தன் இயல்பை மறைத்து மாறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறதா? எந்த எருதாவது தன்னை கெட்ட எருதாக காட்டிக்கொள்ளக் கூடாது என்று கபடமாக நடந்து கொள்கிறதா?
      பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும் இனப்ப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி.
      மற்ற‌படி மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை.
      மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான். ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டைபோடத்துவங்கினான். பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது. அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது.
      சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. லண்டன், பாரீஸ், மும்பை, நியூயார்க் என இன்றைக்கு மிக நாகரீக நகரம் என்று நீங்கள் கருதும் எந்த நகர‌த்தை வேன்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே சட்டத்தை விலக்கி காவல்த்துறையை கலைத்து விட்டு பாருங்கள்....மூன்றே நாளில் எல்லாம் தலைகீழாகிவிடும். மிக நாகரீகமான மனிதன் என்று நீங்கள் கருதியவர் கூட குகை மனிதனை விடக் கேவலமானவனாக நடந்து கொள்வதை நீங்கள் பார்க்கலாம்.
      சங்கரன்பிள்ளை ஒருநாள், தன் தோட்டக்காரன் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.
      "ஏய், ஏன் தோட்டத்திற்க்கு த‌ண்ணீர் ஊற்றப் போகவில்லை?" என்றார்.
      தோட்டக்காரன் அவரை சந்தேகத்தோடு பார்த்து, "வெளியே மழை கொட்டிக்கொண்டு இருக்கிறதே ஐயா" என்றான்.
      "அதனால் என்ன குடையை எடுத்துகொண்டு போ" என்று விரட்டினார் சங்கரன்பிள்ளை.
      மனிதன் வகுத்த சட்டங்கள் இப்படித்தான்...., சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்த சமயங்களில் சட்டங்கள் அர்த்தமற்றுப் போகின்றன.
      காடுகளில் வாழ்க்கை கடினாமாக இருக்கின்றது என்று தான் மனிதன் நகரங்களை உருவாக்கினான், இப்போது நகரங்களில் நகரங்களில் வாழ்க்கை அதை விடக் கடுமையானதாக ஆகிவிட்டிருக்கிறது.
      அட்த்தவனை விட தான் குறைவான நிலையில் இருந்தால் கூசிக்குறுகிப் போகின்றான். எந்த நிலையில் வாழ்கிறானோ அதில் சிறிதளவு குறைந்து விட்டால் கூட, தன் நிலை தாழ்ந்து விட்டதாக எண்ணி, நிம்மதியை தொலைக்கிறான், உயிரே போய்விட்டது போல் துக்கப்படுகிறான்.
      எப்போது மனிதன் தன்னை உடலோடு அடியாளப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தானோ, அப்போதே இந்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.
      உடல் என்பது மிருகம் தான். உடலின் அபாரத் தேவைகளுக்காக நீங்கள் இறங்குகையில் அந்தப் போரட்டத்தில் உங்களுடைய பெரும்பாலான சக்தி விரயமாகிறது.
      நாகரீகம், கல்வி உங்களின் மிருக குணங்களைப் பின்னிழுக்க வைத்து உங்களை போலியாக வெளியுலகில் காட்டிக் கொள்ளத் தூண்டுகின்றன. எப்பொழுதெல்லாம் நாகரீகமும், கல்வியும் மறந்து போகின்றதோ அப்பொழுதெல்லாம் உங்களின் அடக்கி வைத்த குணம் தன்னை முன் தள்ளி வெடித்துக் கிளம்புகின்றது.
      உங்களை உடலுடன் அடையாளபடுத்திப் பார்க்கும் தன்மை விலகி, உள்ளத்தின் நிலையை புரிந்து கொள்ளும் தன்மை வரவேண்டும். அப்போது தான் உங்களின் உயிர்த்தன்மை வெளிப்ப‌ட்டு உங்களை சீர்படுத்தும். உண்மையான ஆன்மீகமும் அதுவே. என்றென்றும் உங்களை ஆனந்தமாக வைத்திருக்கும்.