Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts

Wednesday, September 28, 2011

வேலையிலேயே மூழ்குதல் ஆனந்தம்


      வேலையிலேயே மூழ்கி கிடப்பவனுக்கும் தங்களது வேலையில் முழுமையாக இருப்பவனுக்கும் என்ன வித்தியாசம்
      இந்த வேற்றுமை மிகப் பெரிது. வேலையில் முழ்கி இருப்பவன் தனது வேலையில் முழுமையாக இல்லை. வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான். அவனால் மௌனமாக அமைதியாக உட்கார முடியாது. எதையாவது செய்தாக வேண்டும். அது தேவையா இல்லையா அது கேள்வியே கிடையாது.
      எப்படி மக்கள் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்களோ அது போல வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமையாகி கிடக்கிறான். வேலைதான் அவர்களது போதை. அது அவர்களை ஆக்ரமித்திருக்கிறது. அது அவர்களது கவலையிலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது அவர்களது பதட்டத்திலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது மற்ற போதைகளைப் போலவே உனது கவலை, பயம், பதட்டம், வேதனை ஆகியவற்றை முழ்கடித்து விடுகிறது.
      அதனால் வேலைவெறி பிடித்தவர்கள் தியானத்திற்கு எதிரானவர்கள். ஒவ்வொரு பழக்கமும் நீ தியானிப்பவனாக மாறுவதை தடுக்கக் கூடியது. எல்லா பழக்கங்களும் விட வேண்டியவையே.
      உனது வேலையில் நீ முழுமையாக இருப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். வேலையில் முழுமையாக இருப்பது ஒரு பழக்கமல்ல. அது ஒருவிதமான தியானம். நீ உனது வேலையில் முழுமையாக இருக்கும் போது உனது வேலை நேர்த்தியாக அமையக்கூடிய சாத்தியமுள்ளது. அந்த நேர்த்தியான வேலையின் மூலம் ஒரு சந்தோஷம் உன்னுள் எழும்.
      உன்னால் வேலையில் முழுமையாகவும் நேர்த்தியாகவும் இருக்க முடிந்தால், வெறுமனே உட்கார்ந்திருக்கவும் முழுமையான மௌனத்தில் அமரவும் உன்னால் முடியும். எப்படி முழுமையாக இருப்பது என்று உனக்குத் தெரியும். உனது கண்களை மூடிக் கொண்டு முழுமையாக உள்ளே இருப்பாய். முழுமையாக வாழ்வது எப்படி என்பதன் ரகசியம் உனக்குத் தெரியும்.
      அதனால் வேலையில் முழுமையாக இருப்பது தியானத்தில் உதவி செய்யும். வேலை வெறி பிடித்தவனால் தியானம் செய்ய முடியாது. அவனால் ஒரு சில நிமிடங்கள் கூட அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. அவன் அமைதியற்று இருப்பான். அவன் தனது நிலையை மாற்றிக் கொண்டேயிருப்பான். அவன் எதையாவது செய்வான். இந்த பாக்கெட்டில் அல்லது அந்த பாக்கெட்டில் பார்ப்பான். அதில் எதுவும் இல்லையென அவனுக்குத் தெரியும். அவன் தனது கண்ணாடியை எடுத்து சுத்தம் செய்து போட்டுக் கொள்வான். அது சுத்தமாகத்தான் இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும்.
      தனது வேலையில் முழுமையாக இருக்கும் மனிதன் வேலை வெறி பிடித்தவனல்ல. அவன் முழுமையாக இருப்பான், எதிலும் முழுமையாக இருப்பான். அவன் காலாற நடந்தாலும் சரி, தூங்கினாலும் சரி, அதில் அவன் முழுமையாக இருப்பான். அவன் நடக்கும் போது வெறுமனே நடப்பது மட்டுமே வெறெதுவும் இல்லை. வேறு நினைப்பு எதுவும் இல்லை. கற்பனை செய்வதில்லை. தூங்கும் போது கனவு காண்பதில்லை. தூங்கும் போது தூக்கம் மட்டுமே. சாப்பிடும்போது சாப்பிடமட்டுமே செய்வான்.
நீ அப்படி செய்வதில்லை. நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், உனது மனம் ஆயிரத்தோரு இடங்களுக்கு போய் வருகிறது.
      நான் பார்க்கிறேன். ஒரு படுக்கையில் இரண்டு பேர் மட்டும் இருப்பதில்லை. ஒரு கூட்டமே இருக்கிறது. கணவன் மனைவியுடன் கூடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் சோபியா லாரன்ஸை நினைத்துக் கொண்டிருக்கிறான். மனைவி தனது கணவனுடன் கூடுவதில்லை. அவள் முகம்மது அலியை நினைத்துக் கொள்கிறாள். ஒவ்வொரு படுக்கையிலும் நீ ஒரு கூட்டத்தை காணலாம். ஒருவரும் எந்த செயலிலும் முழுமையாக இருப்பதில்லை. – கூடுவதிலும் கூட.
      செய்யும் செயலை முழுமையாக செய். இல்லாவிடில் செய்யாதே. முழுமையாக இரு. – அப்போது உனது வாழ்வு முழுவதுமே தியானமாகி விடும்.

Saturday, December 18, 2010

கரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍ - ஆனந்தம்:

       நீங்கள் ஆசைப்பட்ட எத்தனையோ விஷயங்களை, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தால் கைநழுவவிட்டிருப்பீர்கள்.
       புதிய முயற்ச்சிகளில் பங்கு கொள்ள துணிச்சலின்றி, வாய்ப்புகளை இழந்து தவிக்கிறர்கள்.
       இசை, ஓவியம் போன்ற இனிமையான களைகளைச் சொல்லித்தரும் கல்லூரிகளை வலைவீசித் தேடவேண்டியிருக்கிறது.
       ஆனால் தெருவுக்குத் தெரு ஒரு பொறியியல் கல்லூரி என்ற நிலை விரைவிலேயே வந்துவிடும் போலிருக்கிறது.
       வருடத்திற்கு வருடம் லட்சக்கணக்கில் வெளியே அனுப்பப்படும் இஞ்சினியர்களுக்கு வேலை கிடைக்கிறதோ இல்லையோ, அந்தப் படிப்பை பெற்றோர் தங்கள் மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர் தவிக்கிறார்கள்.
       ஏன் இப்படி?
       ஒரு காலகட்டத்தில் அந்தப் படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. உடனே அது தான் பத்திரமான பந்தயம் என்று தங்கள் பிள்ளைகளை பகடைக்காய்களாக பெற்றோர் உருட்ட ஆரம்பித்துவிடார்கள்.
       அவர்களை பொறுத்தவரை, மனித உடல் கிடைத்துவிட்டாலும், மனதளவில் பரிணாம வளர்ச்சி செம்மறி ஆட்டின் தன்மையோடு ந்ன்றுவிட்டது போலத்தான்!
       ஆயிரம் பேர் செய்வதைத் தான் செய்வார்கள். சுயமாக எந்த முடிவும் எடுக்கவும் துணியமாட்டார்கள்.
       ராத்திரி பகலாக இதையே சொல்லி சொல்லி த்ங்கள் பிள்ளைகளின் மன‌தையும் மந்தமாக்கி வைத்திருப்பார்கள்.
நான் பொறியியல் துறையை மட்டும் சொல்லவில்லை, எந்தத் துறையாக இருந்தாலும் அதை நீங்கள் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்திருந்தால், வரவேற்கலாம். பிழைப்புக்காக தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் வாழ்கையை அல்லவா வீணடித்து விடுவீர்கள்?
       இது தனக்குத் தேவையா? உலகத்துக்குத் தேவையா? என்றெல்லாம் மனதளவில் யோசிக்காமல், எல்லோரும் குதிக்கும் மலை முகட்டிலிருந்து குதிப்பதற்க்காகவா இத்தனை படிகளில் ஏறிவந்தீர்கள்?
       அதற்கு ஒரு கதை....
       யாரோ ஒரு ஜோசியர் அரசனுக்கு கண்டம் என்று சொல்லிவிட்டார்.
       உடனே அரசன், எந்த பீரங்கியாலும் துளைக்கமுடியாத கோட்டைச் சுவர்களை நான்கு அடி தடிமனுக்கு கட்டிக் கொண்டான். கோட்டையைச்சுற்றி அகழியை ஆழமாக்கினான்.
ஒன்றிரண்டு ஜன்னல்களைத்தவிர மற்ற திறப்புகளையெல்லாம் அடைத்துவிட்டான்.
       மிகவும் நம்பிக்கைக்குறிய சிப்பாய்களை நூறு பேரை தன் கதவருகிலேயே நிறுத்திக் கொண்டான். அந்தக் கதவைத்தாண்டி அரசன் வெளியே போகவே இல்லை.
       ஒருமுறை தற்செயலாக அரசன் ஜன்னல் வழியே வெளியே பார்த்த போது அங்கிருந்த பிச்சைக்காரன் அரசனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். அரசன் கடும் கோபம் கொண்டு, அவனை இழுத்து வரச்சொன்னான்.
       கோட்டையின் அத்தனை காவல்களையும் தாண்டி பிச்சைக்காரன் உள்ளே கொண்டுவரப்பட்டான். அப்போதும் அவன் சிரிப்பு அடங்கவேஇல்லை....
       "எதற்காக சிரிக்கிறாய், சொல் இல்லாவிட்டால் உன்தலை துண்டிக்கப்படும்" என்றான் அரசன்.
       "ஒன்றிரண்டு ஜன்னல்களை மட்டும் ஏன் திறந்து வைத்திருக்கிறாய்... அதையும் அடைத்து விடுவது தானே? கதவையும் பூட்டிக் கொண்டுவிட்டால் எந்த ஆபத்தும் உள்ளே வரமுடியாதே?" என்று பிச்சைக்காரன் தொடர்ந்து சிரிக்கத் தொடங்கினான்.....
       "முட்டாளே எல்லவற்றையும் அடைத்துவிட்டால் நான் மூச்சு முட்டி உள்ளேயே செத்துவிடுவேன்" என்றான் அரசன்.
       "இப்போது மட்டுமென்ன! நீ கல்லறையில் தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். என்ன வித்தியாசம், இந்தக் கல்லறைக்கு கதவு இருக்கிறது, காவலுக்கு ஆள் இருக்கிறது, அவ்வளவு தான்..." என்று சிரித்தான் பிச்சைக்காரன்.
       உங்களுக்கும் அதுதான்! புதிதாக எதையும் முயற்ச்சித்துப் பார்க்கும் தைரியம் இல்லையென்றால், நமது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?
       எந்த ஆபத்தும் இல்லாத ஒரு இடம் வேண்டும் என்றால் பேசாமல் கல்லறைக்கு செல்ல வேண்டியாதுதான்.
பாதுகாப்பான வாழ்க்கை என்று நம்மைச் சுற்றி சுவர்கள் எழுப்பிக்கொண்டால், நம்மால் உயிர்ப்போடு, ஆனந்த்தோடு வாழமுடியாது. அப்படி உயிரைப் பறிகொடுத்துவிட்டு உடல் மட்டும் எதற்காக அறுபது, எழுபது வருடங்கள் வரை அல்லாடிக் கொண்டு இருக்கவேண்டும்?
      கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பலைச் செலுத்திக்கொண்டிருந்தால், எந்த ஊருக்கும் போய்ச் சேரமுடியாது. கப்பல் த‌ரை தட்டித் தான் போகும்.
       நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாமல் பக்கத்துக்கு பக்கம் திகைக்க வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் வந்தால் தானே ஒரு சஸ்பென்ஸ் கதையை மிகப்பிரமாதம் என்று பாரட்டுவீர்கள்.
       ஆனால் வாழ்க்கையை மட்டும் திருப்பங்கள் இல்லாமல் சலிப்புடன் அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்களே ஏன்?
இளைஞனாக இருப்பதற்குறிய தகுதி வலுவான உடல் மட்டுமல்ல! உறுதியான மனமும் கூட!
       எதிர்பாரதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். ஆனந்தம் மட்டுமே கிடைக்கும். ஆனந்தத்தை மட்டுமே அடைவீர்கள்.......

வாழ்க வளமுடன்!

Saturday, December 11, 2010

செய்வதை ஆனந்தமாக செய்யுங்கள்:

       ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் உங்களூக்கு சம்பாதிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் வந்துவிடுகிறது.
       எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும், மற்றொன்று அதைவிட சிறப்பானதாகத் தோன்றுகிறது. அதற்கு மாறமுடியுமா? என்று மனம் அலைபாய்கிறது.
       ஆசை ஒன்றிலிருந்து மற்றதுக்கு மாறிக்கொண்டு இருப்பதால், அதன் இலக்கு மசமசப்பாகி விடுகிறது.
       இசையில் தான் என் ஆர்வம், ஆனால் வயிற்றுப் பாட்டிற்கு ஏதாவது ஒரு வேலைக்கு போயாக வேண்டியிருக்கிறதே என்றால்....
       எந்தமாதிரி வேலைக்குப் போக வேண்டும்? இசைக் கருவி விற்பனை செய்யும் கடையில் தரையைக் கூட்டுபவனாகக் கூட வேலைக்குப் போகவேண்டும்.
       இசைக்கருவிகளைத் துடைத்து சுத்தம் செய்தாலும் நூறு சதவிகித ஈடுபாட்டுடன் செய்யவேண்டும்.
      இப்படி முழுமையாக தன்னை அர்ப்பனித்துக் கொண்டு இந்த வேலைகளில் ஈடுஒஅட்டால், எப்படி மலர வேண்டுமோ அப்படி தானாக மலருவோம்.
      எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்று தீமானிக்கிற புத்திசாலித்தனம் உங்களிடம் இல்லையா?
       கவலை வேண்டாம்! இப்போது எந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். முழுமையாக என்றால் இதயத்தையும், உயிரையும் அதற்காக ஒப்படைக்கத் தயாராக இருக்கும் முழுமை.
       செய்வதை நூறு சதவிகித ஈடுபட்டுடன் செய்தால், உங்கள் உள்சக்தி உங்களை சரியான பாதைக்கு தானாக அழைத்துச் செல்லும்.
       சந்தோசமாக வேலை செய்வதால் உணர்ந்தால் மட்டுமே உங்களால் முழுமையாக செயலாற்ற முடியும். கட்டாயத்துக்காக வேலை செய்வதாக நினைத்து விருப்பம் இல்லாமல் செய்தீர்கள் என்றால், ரத்தக்கொதிப்பும், அல்சரும், மற்ற மனநோய்களும் கூப்பிடாமலே வந்து உள்ளே உட்கார்ந்து கொள்ளும்.
       சங்கரன்பிள்ளை ஒருமுறை ரயிலில் பயணம் செய்தார். வசதியான இருக்கை கிடைத்து உட்கார்ந்தார். அதன் பின்னும் தன் தலை மீதிருந்த பயண மூட்டையை இறக்கிக் கீழே வைக்கவில்லை.
       டிக்கெட் பரிசோதகர் வந்தார், உணவு விற்பவர் வந்தார், மூட்டையை வைத்துக் கொண்டு சங்கரன்பிள்ளையால் எந்த இயல்பான வேலையும் செய்யமுடியவில்லை.
       சக பயணிகளில் ஒருவர் கேட்டார், "ஐயா, பெரிய மூட்டையாக இருப்பதால் கீழே இறக்கி வைக்க உதவி தேவைப்படுகிறதா?"
       "அதெல்லாம் இல்லை!"
       ", மூட்டையில் விலையுயர்ந்த பொருள் ஏதாவது உள்ளதா? அப்படியானால் மூட்டையை கீழே வைத்து அதன் மீது நீங்கள் எறி உட்கார்ந்து கொள்ளலாமே"
       "இல்லையில்லை, எல்லாம் பழைய துணிகள் தாம்!"
       "அப்புறம், எதற்காக அதைத் தலையில் சுமக்கிறீர்கள்!"
       "என் பாரத்தை அனாவசியமாக இந்த ரயில் மீது சுமத்தக் கூடாது என்று பார்க்கிறேன்" என்றார் சங்கரன்பிள்ளை.
       சங்கரன்பிள்ளையைப் போல் சுமையை இறக்கி வைக்கத் தெரியாதவர்களால் எதை ஒழுங்காக செய்யமுடியும்? குடும்பத்தையே தன் தோள் மீது சுமப்பதாக நினைத்துக் கொண்டு துக்கத்துடன் வேலை செய்பவர்களுக்கு எந்த ஆசை நிறைவேறும்?
தயவு செய்து உங்கள் மனபாரங்களை இற‌க்கி வையுங்கள், செய்வதை சந்தோசமாக செய்யுங்கள்.
       ஒருவேளை நீங்கள் செல்ல வேண்டிய ரயில் நான்கு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று சொல்லிவிட்டால்......
உலகமே முடிவுக்கு வந்துவிட்டதை போல் அத்தனை பேர்களும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வீர்கள், காத்திருக்கும் அந்த நான்கு மணி நேரமும் முள் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருப்பீர்கள், ரயில்வேயை விடாமல் சபித்துக் கொண்டிருப்பீர்கள்.
       ஆனால் பயணத்துக்காக காத்திருக்கும் குழந்தைகளை கவனியுங்கள், கையில் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஜாலியாக, எந்த துக்கமும் இல்லாமல் விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.
       தேவையில்லாமல் உங்களைப் போல் தங்களை வருத்திக் கொள்வது இல்லை. கிடைத்த தருணங்களை சந்தோசமாக அனுபவிக்கிறார்கள். அதிக சிரமம் இல்லாமல் தங்கள் வாழ்கையை பூரணம் ஆக்கிக் கொள்கிறார்கள்.
       ஆனால் நீங்கள் வாழ்கையை சந்தோசமாக ஆக்கிக் கொள்ள தங்களையே வருத்திக் கொள்கிரீர்கள். ஆனாலும் சந்தோசம் கிடைக்காமல் தோற்று விடுகிறீர்களே?
       மனதை துக்கமும், படபடப்பும் அழுத்தாமல் பொறுப்புடன் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.
       இந்த ரயில் இல்லையென்றால் பஸ் பிடிக்கலாம், டாக்ஸி பிடிக்கலாம், இல்லை வேறு வாகனங்கள் கிடைகுமா என்று பார்க்கலாம். இல்லை காத்திருக்க கிடைத்த நேரத்தை வேறு வழியில் ஆனந்தமாக செலவு செய்யலாம்.
       துக்கப்படுவதால் எதுவும் மாறி நிகழப்போவது இல்லை. ஆனந்தமான மனிதர்களால் தான் எந்த வேலையையும் அச்ச‌மில்லாமல், சிரமமில்லாமல் விளையாட்டாக செய்ய முடியும்... ஆகவே எதிலும் ஆனந்தமாக ஈடுபடுங்கள்....

வாழ்க வளமுடன்!