Wednesday, October 26, 2011

ப‌ண்டிகைகள் ஏன்? ஆனந்தம்


      பண்டிகை நாள் என்றாலே வெறுப்பாக இருக்கிறது பெண்கள் சமையல் கட்டிலேயே அடைந்து கிடந்து. விதவிதமாக திண்பண்டங்களைச் செய்தே களைத்துப் போகிறோம். இதுவா கொண்டாட்டம் என்பது?
      வாழ்க்கை என்பதே ஆனந்தமாக கொண்டாடப்பட வேண்டியது, அப்படி அமைத்துக் கொள்ளாதவர்களுக்காகத்தான் வெளியில் பல கொண்டாட்டங்களை அமைத்துக் கொடுத்தார்கள்.
      வயலை உழப்போகிறார்களா அது ஒரு கொண்டாட்டம், விதை தூவப்போகிறார்களா அது ஒரு கொண்டாட்டம், களையெடுப்பது ஒரு கொண்டாட்டம், அறுவடை செய்வது ஒரு கொண்டாட்டம், உழவு மாடுகளுக்கு மரியாதை செய்வது ஒரு கொண்டாட்டம்,யார் வீட்டிலாவது திருமணமா அது பல நாள் கொண்டாட்டம், என்றெல்லாம் ஏன் அமைத்தார்கள்?
      கொண்டாட்டம் என்பது சந்தோசத்தின் வெளிப்பாடு, வாழ்க்கையின் அடிப்படை. நீங்கள் கொண்டாட்டத்தை எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான், உங்களின் ஆனந்தம் இருக்கிறது.
      கொண்டாட்டம் வயிறு முட்ட சாப்பிடுவதில் இல்லை, உணர்வில் இருக்கிறது, உங்களின் முதல் கவனம் சந்தோசமாக இருப்பதில் தான் இருக்க வேண்டும்.
      விதவிதமாக சமைக்க வேண்டும் பின்பு அதைப் புசிக்க வேண்டும், அப்புறம் தான் கொண்டாட வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
      முதலில் உங்கள் வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ளுங்கள். சமையல் செய்வதை ஏன் வேலையாக நினைக்கிறீர்கள்? காய்கள் நறுக்குவதைக் கூட ஒரு கொண்டாட்டமாக மற்றிக் கொண்டு செய்து பாருங்கள் பண்டிகை நாள் மட்டுமல்ல வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தான் என்பதை உணர்வீர்கள்.
      பெண்கள் வேலை செய்ய வேண்டும், ஆண்கள் தான் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
      ஆண், பெண் என பிரித்து பேசவில்லை, வாழ்க்கையை வேதனையோடு நகர்த்த தீர்மானித்திருக்கிறீர்களா? அல்லது கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ள விருப்பமா? என்று தான் கேட்டேன்.
      அன்பும், பிரியமும், விருப்பமும் இல்லாமல் நீங்கள் சமைத்தால் ஒரு விதத்தில் ஆண்களுக்கும் அது தண்டனை தானே?
      பெண்களாவது புலம்பித் தள்ளி விடுகிறார்கள். ஆண்கள்.....?
      ஒருமுறை சங்கரன்பிள்ளை பெண்கள் கூட்டம் ஒன்றுக்கு போயிருந்தார்...
      "பெண்கள் முட்டாள்களாக கருதப்படுகிறார்கள். அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். வேட்டையாடப்பட்டும், இரைகளாக விரட்டப்பட்டும் இருக்கிறாகள். அவர்கள் எந்த விதத்திலாவது வேதனைப் படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா?" என்று மைக்கை இறுகப் பற்றி ஒரு கனமான பெண்மணி உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டிருந்தாள்.
      சங்கரன்பிள்ளை எழுந்தார். "என்னால் சொல்லமுடியும். பெண்கள் ஒரு போதும் மெளனமாக வேதனைப்பட்டதில்லை" என்றார்.
      உண்மைதானே?
      உங்களுக்குள் நீங்கள் சந்தோசமாக இல்லாதபோது சுற்றி உள்ளவர்களை நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்க அனுமதிப்பீர்கள்? தூக்கி வைத்த முகத்துடன் நீங்கள் உட்கார்ந்தால், மற்றவர்களின் கொண்டாட்டம் என்னவாகும்? சமைத்த களைப்பும் சாப்பிட்ட அயர்ச்சியும் தான் பண்டிகை நாட்களில் மிச்சமாகும்.
      சந்தோசமான நபராக இருக்கும் வரைதான் நீங்கள் ஆபத்தில்லாதவர். சந்தோசம் இல்லாத நேரங்களில், பரிதாபகரமான செயல்களில் எல்லாம் நீங்கள் ஈடுபடுவீர்கள், ஆண்களும் இதைப்புரிந்து கொண்டால் உங்களுக்கு இந்த வேதனை இருக்காது.
      ஆண்களைப் பற்றி பேசும்போது தான் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
      கடற்க்கரையில் ஒரு பெண், கூழாங்கல் ஒன்றைக் கண்டெடுத்தாள், சுத்தம் செய்ய அதைத் தேய்த்தாள். எதிரில் ஒரு பூதம் தோன்றியது.
      "என்னை விடுவித்ததற்க்காக உன் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுகிறேன் என்ன வேண்டும் கேள்?" என்றது பூதம்.
      "என் நாய்க்குட்டி பேசவேண்டும், பாட வேண்டும், ஆட வேண்டும்!"
      பூதம் உதட்டைப் பிதுக்கியது. "அத்தனை சக்தி எனக்கில்லை. வேறு ஏதாவது கேள்!"
      "அப்படியானால் அன்பானவனாக, நகைச்சுவை உணர்வு மிகுந்தவனாக, வீட்டு வேலைகளில் சந்தோசமாக உதவுபவனாக, என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக, என்னிடம் பொய்யே சொலாதவனாக ஓர் ஆண்மகனை எனக்கு கணவனாக கண்டுபித்துக் கொடு!"
      பூதம் பெறு மூச்சுவிட்டது. "முதல் ஆசையே பரவயில்லை, எங்கே உண் நாய்க்குட்டி" என்றது.
      இந்த தேசத்தில் மட்டுமல்ல....உலகெங்கிலும் சிடுக்கான குடும்பப் பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்துவதை ஆண்கள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
      வீட்டில் பெண்கள் வேதனையாக இருந்தால், அந்த வீட்டின் மொத்த சந்தோசமும் பறிபோகும் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
      கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்பட்டவையே பண்டிகைகள். கால ஓட்டத்தில், அடிப்படை நோக்கம் மறைந்து போய், வெறும் சடங்குகள் மட்டும் நின்றுவிட்டதால் தான் பண்டிகைகள் பெண்கள் மீது பெரும் பாரமாக அழுத்துகின்றன.
      அரசியலோ, ஆண்மீகமோ எந்த அமைப்பாக இருந்தாலும் காலத்துக்கு ஏற்றார்போல் திருத்தி அமைக்கப் பட வேண்டும். அப்போது தான் அதன் அடிப்படை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்.
      பண்டிகைகளுக்கும் அந்த அவசியம் வந்துவிட்டது.
      வெளியே மிதக்கும் விஷத்தைக் கக்கினால் தான் உள்ளே ததும்பும் அமுதத்தை ருசிக்க முடியும்!     

No comments:

Post a Comment