Tuesday, May 22, 2012

தலைவராக விரும்புகிறீர்களா? ஆனந்தம்



      இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவிதமான மக்கள் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்பவர்கள். இன்னொரு விதமான மக்கள் இருக்கிறார்கள் இவர்களை  வேறு யாராவது தள்ளி விட்டுக்க்கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் எப்பொழுதும் அடிமைகளாகவும், வேலையாள் போலவும் தான் இருப்பார்கள். ஆனால் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்ளும் மக்கள் எப்பொழுதும் தலைவர்களாக இருப்பார்கள்.
      நீங்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையை கையாள வேண்டும் என்று விரும்பினால், அது வீடோ அல்லது அலுவலகமோ, அந்த சூழ்நிலைக்கு முழுமையாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லைகளைக் கடந்து அந்த சூழ்நிலைக்கான தீர்வுக்காக பணி புரியத்தயாராக இருக்க வேண்டும். இப்படித் தயாராகும் போது உங்களை வேறு யாரும் இயக்கத் தேவையில்லை. உங்களை நீங்களே இயக்கிக் கொள்வீர்கள். தேவையான சுதந்திரமும் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு தாலைவராக ஏற்றுக் கொள்ளபடுவீர்கள்.
      எனக்கு அது வராது, என்னால் அது முடியாது, நான் இவ்வளவு தான் செய்யமுடியும் என்று எப்பொழுதும் தன்னைத் தானே குறுக்கிக் கொள்பவர்கள் என்றென்றும் அடிமைகளாகவும், மற்றவர்களால் விரட்டப்படும் நிலையில் தான் இருப்பார்கள். எனவே தலைவராக விரும்புகிறீர்களா? அல்லது அடிமையாகவே காலத்தை கழிக்க விரும்புகிறீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

.....................................................வாழ்க வளமுடன்...........................................................................

Tuesday, February 14, 2012

உணர்ந்தால் தெளிவு! ஆனந்தம்




      உடல் ஜீரணிக்கிற அளவுக்கு மேலே எப்போதும் யாரும் உணவுண்டதே கிடையாது, அது முடியவும் முடியாது. அதிகமாக உண்டால் தொல்லைதான் விளைவாக வரும். அது போன்றே உடல் சுமக்கும் அளவுக்கு மேலே உடைகளைப் போட்டுக் கொள்ள முடியுமா? நின்றால் காலளவு. படுத்தால் உடலளவு. இதற்குமேல் பூமியை யாரும் அனுபவிக்கிறதில்லை.
      உண்மையிலேயே நாம் எல்லோருமே ஞானிகளாக, அனைத்தையும் துறந்தவர்களாக, தியாகிகளாகத் தான் இருக்கிறோம். அப்படி ஏதேனும் பொருள் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாலும் கூட, உயிர் போகும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கொடுத்து விட்டுத் தான் போகிறோம், சிறிது கூட அதிலே எடுத்துக் கொண்டு போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். நினைத்துக் கொண்டால் போதும்.
      உணர்ந்தாலும் சரி, உணராது போனாலும் சரி எந்தப் பொருள் எங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது? உணர்ந்து விட்டால் உண்மையோடே இருக்கிறோம். உணராதபோது மயக்கத்திலே இருக்கிறோம். உணர்ந்தால் தெளிவு உணராவிட்டால் மயக்கம். ஆகையினாலே அந்த மயக்கத்தை விட்டு, உணர்ந்த‌ நிலையிலே இருந்து நான் பிறருக்கு எந்த அளவிலே உதவியாக இருக்க முடியும் என்று கணித்துக் வாழ வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.
                             வாழ்க வளமுடன்!

Monday, January 23, 2012

யோகா‍-தியானம் ஏன்? ஆனந்தம்


     


      நமது உணவை நாமே சமைக்கிறோம். நம் ஆடைகளை நாமே தூய்மை செய்கிறோம். இவையெல்லாம் உலகியலிலன் அங்கங்கள்தான். இவற்றையெல்லாம் செய்யாமல் இங்கே வாழ இயலாது.
      ஒவ்வொரு மனிதரும், உலகியலில் தான் எந்த வித்ததில் ஈடுபட வேண்டுமென்பதை, சுய விருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார். சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் தொழிலகங்களை நடத்துகிறார்கள். சிலர் தரை பெருக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே உலகியலில் இருப்பவர்கள்தான். எனவே உலகியலில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
      உலகியலில் என்ன செய்ய விரும்புகிறோம். எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனி மனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.
      இதில் சிலர் தானாக எதையும் செய்வதில்லை. பிறர் செய்வதையெல்லாம் பார்த்து அது போல் செய்ய முற்படுகிறார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை.
      இத்தகைய ஒரு சிலர்தான், ஆன்மீக வழியில் செல்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் பொறுப்புகளை உதறிவிட்டுப் போகிறார்கள். உலகிற்காக வாழாமல் தனக்காக வாழ்கிறார்கள்’ என்று புகார் சொல்கிறார்கள்.
      வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டுமே இயங்குபவரகள் தனக்காக வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உலக நலனில் அக்கறையில்லை. தனது சொந்த நலனுக்காக என்று வந்துவிட்டு அந்த வலையிலிருந்து விடுபட இயலாமல தவிப்பவரகள் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களைப் பார்த்து “வாழத் தெரியாதவர்கள், உலகத்தை விட்டு ஒதுங்கிவிட்டவர்கள்” என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.
      ஒரு குடிகாரன் இருந்தான். முழுபோதையில் தள்ளாடியபடியே ஒருபேருந்துக்குள் ஏறியவன், எல்லார் கால்களையும் மிதித்து பெட்டிகளைக் கலைத்து, தட்டுத்தடுமாறி, ஒரு கிழவியின் மீது விழுந்தான். கோபம் கொண்ட அந்தக் கிழவி, ‘ நீ நரகத்திற்குப் போவாய்’ என்று சபித்தாள். உடனே அந்தக் குடிகாரன், ‘அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தான்.
      எந்தப் பேருந்து சரியானது, எது தவறானது என்பதெல்லாம் குடிகார்ர்களுக்குத தெரியாது. தங்கள் வாழ்வை விதம் விதமான சிக்கல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்ப்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டு பயணம் செய்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் தவறானவர்கள்’ என்று பேசுகிறார்கள்.
      இன்றைய உலகில் 0.1% பேர்தான் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் இருப்பவர்கள். 50% பேர் இயந்திரங்கள் போல் இடையறாமல் செயல்பட்டு, தங்கள் செயல்களாலேயே உலகுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.
      மனித சுயநலத்தின் காரணமாய், பூமி, வேண்டாத பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறது. 50% பேரையாவது ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தினால் இந்த உலகம் காற்றப்படும்.
      அளவுக்கதிமான செயல்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் தங்களுக்கோ, சமூகத்திற்கோ, உலகிறகோ சுற்றுச சூழலுக்கோ கேடு விளைவிப்பதில்லை.
      சிறிது கூட விழிப்புணர்வின்றி, தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மற்றவர்கள் செய்வதையெல்லாம் தாங்களும் செய்ய முற்பட்டவர்கள் பூமி உருண்டைக்கு போதுமான அளவு சேதம் விளைவிக்கிறார்கள். இத்தகைய செயல்களிலிருந்து விடுபடுவதொன்றும் தவறானதல்ல. அதுவே மனித குலத்திற்கு செய்கிற பெரும் உதவி.
      இந்த உலகம் எப்போதுமே அற்புதமானதாக இருந்து வந்திருக்கிறது. தன்னலம் மிக்க சிலரின் அடாவடி செயல்கள், உலகுக்கு நன்மை செய்வதாய் நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் தீமைகள், இவைதான் உலகிற்கு எதிரான ஒன்றை ஏற்படுத்தி வருகிறது.
      மனிதகுலம் நாகரீகமடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் மனிதகுலம் வாழ்வதற்காக எத்தனையோ விலங்குகளை வேட்டையாடி, சில சமயம் மனிதர்களையே வேட்டையாடிய பிறகும் மனித குலம் நன்மையடையவில்லை.
      மனிதன், வெளிச்சூழலை சரி செய்ய விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் உதவிகொண்டு என்னென்னவோ செய்துவிட்டான். ஆனால் அவன் உள் தன்மையில் நாகரீகமடையவில்லை.
      உள்நிலையில் கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மனிதன் உயர்நிலை அடைய இயலும். அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக வழியே யோகம் தியானம் ஆகியவை.

Wednesday, January 18, 2012

மனமும் எண்ணமும்

      


      மனம் என்கிறோம், எண்ணம் என்கிறோம், இரண்டும் ஒன்றே தான். ஆனால் ஏன் அதை எண்ணம் என்று சொல்கின்றோமென்றால் மனம் இயங்கும் போது நான்கு வகைக் கணிப்பாக இயங்குகின்றது - காலமாக, தூரமாக, பருமனாக, வேகமாக. 
      எந்த இயக்கத்திலே, எந்தப் பொருளைப் பற்றி, நினைத்தாலும் காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கு பரிமாணத்திலே தான் மனம் இயங்குகின்றது. இந்த நான்கு பரிமாணத்தைக் கணக்கிடுவதாலே, *கணக்கிடுதல்* என்ற சொல் எண்ணுதல் என்று வந்து, அந்த எண்ணுதலிருந்து எண்ணம் என்பதாகவே வந்தது. ஆகையினாலே மனத்துக்கு எண்ணம் என்ற பெயரும் உண்டாயிற்று.

------------------------------- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி ---------------------------------------------

Tuesday, January 17, 2012

களங்கமற்றவன்! ஆனந்தம்




     


      மனிதன் களங்கமற்றவன், தேவை பழக்கம், அறியாமை, சந்தர்ப்பம் இவைகளால் சமுதாயத்தையும் அதன் நலத்தையும் மறந்து தன்னளவிலும் தற்கால இன்பத்திலும் குறுகி செயலாற்றுகின்றான். இதன் விளைவாக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கொண்டே எந்த மனிதனும் களங்கமுள்ளவனாக மதிக்கப்படுகிறான்.
      தேவைகளை காலா காலத்தில் முடித்துக் கொள்ள, நல்ல பழக்கங்களில் நிலைக்குமாறு குழந்தை முதல் ஒழுக்கமாக வளர அறிவு சமுதாய நல நோக்கத்திலும் இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும் செயல்பட்டு வளர்ச்சி பெற, சரியான முறையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அமர்த்திக் கொண்டால், எல்லா மனிதர்களும் களங்கமற்றவர்களாகவே காணப்படுவார்கள்.
      மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும். நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்து பயிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது. அதுபோன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதிபெற்று வாழ்வின் பயனாக விளைந்துவிடும்.
      ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் உன்றவோ வளரவிடவோ கூடாது.
      1. கோபம், 2. வஞ்சம், 3. பொறாமை, 4. வெறுப்புணர்ச்சி, 5. பேராசை, 6. ஒழுக்கம் மீறிய காம நோக்கம், 7. தற்பெருமை, 8. அவமதிப்பு, 9. அவசியமற்ற பயம், 10. அதிகாரபோதை என்ற பத்தும் நமது உள்ளத்தில் நிலைபெற வொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும்.
      இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ, நிலைப்பதற்கோ, இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியை பாழாக்கிக்கொண்டே இருக்கும் ஓட்டைகளாக இக்கெட்ட குணங்கள் மாறிவிடும்.
      காலையிலும் மாலையிலும் 10 நிமிடநேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்.

Friday, January 13, 2012

யார் மனிதன்? யார் கடவுள்? ஆனந்தம்

                                          
      கடவுள் என்ற தன்மையில் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் சேர்ந்தால் மனிதன். மனிதன் என்ற தன்மையின் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் கழித்து விட்டால் அவன் தான் கடவுள்.

Sunday, January 8, 2012

கணவன் மனைவி-ஆனந்தம்


      குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்.
      கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும்.
குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.
      தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.
      நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.