மனிதன் களங்கமற்றவன், தேவை பழக்கம், அறியாமை, சந்தர்ப்பம் இவைகளால் சமுதாயத்தையும் அதன் நலத்தையும் மறந்து தன்னளவிலும் தற்கால இன்பத்திலும் குறுகி செயலாற்றுகின்றான். இதன் விளைவாக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கொண்டே எந்த மனிதனும் களங்கமுள்ளவனாக மதிக்கப்படுகிறான்.
தேவைகளை காலா காலத்தில் முடித்துக் கொள்ள, நல்ல பழக்கங்களில் நிலைக்குமாறு குழந்தை முதல் ஒழுக்கமாக வளர அறிவு சமுதாய நல நோக்கத்திலும் இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும் செயல்பட்டு வளர்ச்சி பெற, சரியான முறையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அமர்த்திக் கொண்டால், எல்லா மனிதர்களும் களங்கமற்றவர்களாகவே காணப்படுவார்கள்.
மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும். நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்து பயிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது. அதுபோன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதிபெற்று வாழ்வின் பயனாக விளைந்துவிடும்.
ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் உன்றவோ வளரவிடவோ கூடாது.
1. கோபம், 2. வஞ்சம், 3. பொறாமை, 4. வெறுப்புணர்ச்சி, 5. பேராசை, 6. ஒழுக்கம் மீறிய காம நோக்கம், 7. தற்பெருமை, 8. அவமதிப்பு, 9. அவசியமற்ற பயம், 10. அதிகாரபோதை என்ற பத்தும் நமது உள்ளத்தில் நிலைபெற வொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும்.
இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ, நிலைப்பதற்கோ, இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியை பாழாக்கிக்கொண்டே இருக்கும் ஓட்டைகளாக இக்கெட்ட குணங்கள் மாறிவிடும்.
காலையிலும் மாலையிலும் 10 நிமிடநேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment