Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Thursday, May 24, 2012

குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய? ஆனந்தம்


      குழந்தையின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். முதலில் உங்களுடைய எண்ணங்களை உங்கள் குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் இறந்தகாலம் சார்ந்தவை.  உங்களுடைய முட்டாள் தனமான எண்ணங்களை குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். குழந்தையே தன்னுடைய வாழ்க்கையை அதன் சொந்த வழியில், சொந்தப் புரிதலில், சொந்த அறிவுணர்ச்சியோடு உணர்ந்து,  உள்வாங்கிக் கொள்ளட்டும்.
      குழந்தை பிறந்த நாள் முதல் நம்முடைய மதம், ஒழுக்க விதிகள், கோட்பாடுகள், தத்துவங்கள், சிந்தனைகள் என்று எல்லா முட்டாள்தனங்களையும் அதன் மீது சுமத்தி வருகிறோம். இல்லையா? குழந்தை மலர ஆரம்பிப்பத்ற்கு முன்பாகவே அதை அழித்து விட முனைகிறீர்கள். இந்த உலகில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்கள், தொழிலாளிகளோ, பெண்களோ அல்லது விலங்குகளோ அல்ல. குழந்தைகள் தான் மிகவும் சுரண்டப்படுபவர்கள்.
      நீங்கள் தான் தனக்கு மிகவும் நம்பகமானவர் என்று நினைத்து குழந்தை உங்களிடமிருந்தே ஒவ்வொன்றையும் எதிர்பார்க்கிறது. ஆனால் நீங்களோ அதன் வாழ்க்கையை மிக மோசமாக சீர்குலைக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தையும் துன்பப்படுமாறு எப்படியும் பார்த்துக் கொள்கிறீர்கள்.
      அன்பை மட்டும் கொடுங்கள்....போதும்..... வாழ்க வளமுடன்

Sunday, January 8, 2012

கணவன் மனைவி-ஆனந்தம்


      குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்.
      கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும்.
குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.
      தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.
      நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.

Friday, December 23, 2011

கவனத்தை கவரும் போதை ஆனந்தம்


      என்னைச் சுற்றியுள்ள நண்பர்களில் பெரும்பாலோர் எப்படி இந்த சமூகத்தின் அவலங்களில் சிக்கியுள்ளனர், அவர்களின் மன இயக்கத்தின் ஆணி வேராக இருப்பது எது என்று பார்த்தேன். அது ‘கவனத்தை கவரும் முயற்சி ’ என்று தெரிகிறது. அடுத்தவர்களின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற உணர்ச்சியே ஆட்டிப் படைக்கிறது.
      தர்க்கம் செய்து, குதர்க்கம் செய்து, கடித்து, ஜோக் சொல்லி, பாடி, அலங்காரம் செய்து, ஒதுங்கி நின்று, கூடி கும்மியடித்து, அடுத்தவரை மட்டம் தட்டி, தன் கதை பேசி, ஊர் வம்பு பேசி, அறிவுத் திறனைக் காட்டி, தனது இயலாமையை பறை சாற்றி, இறுமாப்பு காட்டி, தன் நோயைச் சொல்லி, தன் வலிமையை காட்டி, இப்படி எதையாவது செய்து அடுத்தவரின் கவனத்தைக் கவர வேண்டும். அதுவே உயிர் வாழத் தேவைப்படும் மிக முக்கிய உணவாக இன்றைய மனிதனுக்கு இருக்கிறது.
      தனிமை இதனாலேயே மிரட்டுகிறது. அடுத்தவர் கவனம் இல்லாமல் ஒரு கணமும் வாழ முடியாத மனநோய் பிடித்த ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கியுள்ளோம். அடுத்தவர் கவனம் கிடைக்காத கணத்தில் உடனே போதை தேவைப்படுகிறது. சிகரெட்டில் ஆரம்பித்து, சினிமா, டிவி, மது, இண்டர்நெட், சேட்டிங், மொபைல் அரட்டை, மொபைல் விளையாட்டு என போதை எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் தயாரித்து விற்கப்படுகிறது.
மனிதனின் இந்த வலிமையற்ற நிலையால் இந்த அடுத்தவர் கவனத்தின் போதை இல்லாமல் இருக்கமுடியாத நிலையால், அவன் கலை இலக்கியம், விஞ்ஞானம், படைப்பு என எல்லாவற்றையுமே போதையூட்டிக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்பவனாக இருக்கிறான்.
      எல்லாவற்றையும் எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறான் ஒருவன் என்பதைப் பொறுத்தே அதன் விளைவு இருக்கும். கத்தியை ஆளை வெட்டவும் பயன்படுத்தலாம், அழகு படுத்தவும் பயன்படுத்தலாம். அது போல இன்றைய மனிதனின் போதைத்தனம் எதையும் போதைக்கு பயன்படுத்தவே தூண்டுகிறது.
      பணம் கிடைத்தாலும், பதவி கிடைத்தாலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கிடைத்தாலும், வசதி கிடைத்தாலும் அதை அவன் தன்னை வளர்த்திக் கொள்ளவும் தன்னுணர்வு வரை தன் உணர்வை வளர்த்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ‘கவனிப்பு போதை’ கிடைக்காமல் தனிமை நேர்ந்தால் அதை தவிர்க்கவே பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். அல்லது அந்த கவனிப்பு போதை இன்னும் தலைக்கேற என்ன செய்ய இது நமக்கு உதவும் என யோசிக்கிறான்.
      பணம் உள்ளவன் அதை பகிர்ந்து கொள்ளத் தயாரில்லை. கலை உள்ளவன் அதில் கரைந்து புதிய வெளிப்பாடுகளை கொண்டுவர முயற்சிப்பதில்லை. பதவி உள்ளவன் கடமையை நிறைவடைய விரும்புவதில்லை. இன்று யாருமே தனக்கு கிடைத்த வாழ்வை வாழ்ந்து பார்க்கவோ கணத்தில் கரைந்து பார்க்கவோ தயாரில்லை.
      அடுத்தவர் கவனம் அதிகம் பெறுவது எப்படி என்று ஆரம்பித்து அது ஏற்படுத்திய இயந்திரத்தனத்தின் கட்டுப்பாட்டில் ஏன் எதற்கு என்று தெரியாமல் தேடியும் நாடியும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் மேலும்.......இது மட்டும் தான் உத்தரவு. இயந்திரத்தனத்தின் கட்டளை.
கணவனிடம் கவனம் கிடைக்காத மனைவி நண்பனை நாடுகிறாள். முதலாளியால் பாராட்டப் படாத வேலையாள் இடம் மாறுகிறான். இன்று எல்லோருக்கும் அடிப்படைத் தேவையாய் இருப்பது அடுத்தவர் கவன போதை. இதை நியாயப் படுத்தும் வளர்க்கும் நம் சமூக அமைப்பை நீங்கள் கவனிக்க வேண்டும்.
      ஒரு மனிதனின் உயர்வு அவன் எத்தனை பேரால் கவனிக்கப்படுகிறான் என்பதைப் பொறுத்தே உள்ளது இன்றைய சமூகத்தில். ஆனால் அது உண்மையா அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா தலைவர்களும் புகழ் பெற்றவர்களாய் இன்று உள்ளவர்களும் எவ்வளவு மனவளர்ச்சி குன்றியவர்களாய் உள்ளனர் என்பதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். அவர்களிடம் எவ்வளவு பேராசை, பொய், கீழ்மை, ஏமாற்றுத்தனம், நடிப்பு, வியாபாரம். ஆனாலும் அவர்களை மக்கள் வழி காட்டும் தலைவர்களாய், குருவாய், தனது மானசீக எதிர்காலமாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் இவர்கள் தேடும் போதையில் திளைப்பவனாய், அதிகம் கவனிக்கப்படுபவனாய் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே. புகழ், அந்தஸ்து, கௌரவம் என்று மனிதனுக்கு போதையூட்டும் எல்லாவற்றின் அடித்தளமும், அதனால் ஆட்பட்டுவிட்ட இயந்திரத்தனமும்தான்.
      இதன் ஆணிவேர் என்ன? எங்கிருந்து பிறந்தது இது?  ஏன் இப்படி நம்மை ஆட்டிப் படைக்கிறது என்று கேட்கிறீர்களா கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.
      மனிதக் குழந்தை முழு வளர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தை. இரண்டு காலில் நடக்க ஆரம்பித்த பிறகு கடைசி வரை குழந்தையை சுமக்க மனித உடம்பால் முடியாமல் போயிற்று. மனிதக் குழந்தைக்கு பராமரிப்பு அவசியம். அடுத்தவர் கவனம் இல்லாவிட்டால் மனிதக் குழந்தை இறந்துவிடும். குழந்தை பெறும் விலங்குகளுக்கு குட்டி சிறிது வளர்ந்தபின் தாய்மையுணர்வு மறைந்துவிடுவதைப் போல மனிதனுக்கும் மறைந்துவிட்டால் மனிதக் குழந்தையால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
விலங்குகளைப் போல வெறும் உணர்ச்சிகளின் வாழ்க்கை உள்ளவனல்ல மனிதன். முழு வளர்ச்சியடையாமல் பிறப்பதால், பிறந்த பின்தான் தன் வளர்ச்சியை மனிதக் குழந்தை எட்டுகிறது. உணர்ச்சிகளுடன் பிறக்கும் குழந்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிறர் கவனத்தையே நம்ப வேண்டி உள்ளது. ஆக அடிப்படையில் மனிதக் குழந்தை உயிர் வாழ்வதற்கான ஒரு அடிப்படைத் தேவை அடுத்தவர் கவனம். ஆகவே குழந்தை அடுத்தவர் கவனத்திலேயே ஒவ்வொரு கணமும் இருக்க விரும்புகிறது. தனிமை மரணத்தைக் கொண்டு வந்துவிடும் என அலறுகிறது.
      இது ஒரு நடைமுறை உண்மை. ஆகவே இதில் தவறில்லை. ஆனால் அந்தக் குழந்தை வளர வளர அதன் உணர்வுகள் கூர்மைப் பட நாம் உதவ வேண்டும். அதன் உடலின், மன இயக்கத்தின் தனித்தன்மையை உணர உதவ வேண்டும். இயற்கை அதன் உடலின் மூலம் இந்த உலகிற்கு கொண்டு வரும் அழகை, கொண்டாட்டத்தை, மலர்ச்சியை, வளர்ச்சியை, மாற்றத்தை அந்தக் குழந்தை உணர்ந்து அதன் உள்ளுணர்வுப்படி வாழ உதவ வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு இயற்கையின் செய்தியாளன். அது வாழ்ந்து மலர வேண்டிய ஒரு விஷயம் அங்குள்ளது. அதைக் கண்டுணர நாம் உதவ வேண்டும்.
      மாறாக நாம் என்ன செய்கிறோம் குழந்தைக்கு மேலும் மேலும் அடுத்தவர் கவனம் கவர்வது எப்படி அது எவ்வளவு முக்கியம் என்று கற்றுத் தருகிறோம். பலரின் கவனத்தை அது கவர்ந்தால் பாராட்டுகிறோம். கவனிக்கப்படா விட்டால் இகழ்கிறோம். கவனிப்பு பெற என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய் என்கிறோம். பள்ளிக்குப்போனால் அதுவேதான். பலரின் கவனத்தை ஈர்ப்பவன் தலைவன், அவனுக்குப் பாராட்டு, புகழ். கவனத்தை ஈர்க்க முடியாதவன் உதவாக்கரை. இப்படி மேலும் மேலும் மேலும் இந்த போதையை ஊட்டியே வளர்க்கிறோம் நாம். உடம்பு சரியில்லை என்றால் நிறையப் பேர் வந்து பார்த்து விட்டுப் போக வேண்டுமாம். என்ன மடத்தனம். மருத்துவரும் மருந்துமே உண்மைத் தேவை. ஆனால் அதைவிட நமக்கு இந்த கவனிப்பு போதையே தேவைப்படுகிறது.
      மேலும் இந்த கவனம் பெறும் முயற்சியின் அடிப்படையில் இதற்காக போட்டி, பொறாமை, தந்திரம், சூழ்ச்சி, போலித்தனம் எல்லாம் போற்றி வளர்க்கப்படுகிறது. இதுதான் நமது சமூக அமைப்பு.
      இந்த கவனிப்பு போதையால் நிகழ்ந்துள்ள மற்றொரு மிகப் பெரிய தீமை என்னவென்றால் இதுவே அன்பு என்று இன்று ஆகி விட்டதுதான். உண்மையான அன்பு மறைந்து போகவும் இது காரணமாகிவிட்டது. நம்மை மதிப்பவர்கள், நமக்கு ஏதாவது என்றால் வந்து பார்ப்பவர்கள்தான் அன்பாய் இருப்பவர்கள். அன்பு என்றால் ஒருவனுக்கு கவனிப்பு போதை தர வேண்டும். அதுவே அன்பு என்று ஆகி விட்டது.
      நீங்கள் உங்களது மனைவியை அவர்கள் இயல்புபோல் சுதந்திரமாக இருக்க அனுமதித்துவிட்டு நீங்கள் உங்கள் இயல்புப்படி வாழ்வது தவறு என்று ஆகிவிட்டது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உதவி செய்துகொண்டு வாழ்வதே சிறந்தது என்பது போய், மனைவி கணவன் தன்னை மதிப்பதில்லை, தனக்கு கவனிப்புப் போதை தருவதில்லை, தன்னிடம் வம்பு பேசுவதில்லை, தன்னுடன் சண்டை போடுவதில்லை, என்று சொல்வதும் மனைவி அவர்கள் இயல்புப்படி இருந்து கொண்டு கணவனுக்கு தேவையான உதவிகளைச் செய்தாலும் மனைவி தன்னைப் புகழ்வதும், தனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்வதும் தனக்காக உருகுவதும் போன்ற கவனிப்பு போதை சமாசாரங்களே அன்பு என்று கருதப் படுகிறது.
      அதிக கவனிப்பு அதிக அன்பு என்று கருதப் படுகிறது. இது இருவருக்கும் தேவைப்படுவதால் இருவரும் கவனிப்பு போதையை பரிமாறிக் கொள்கின்றனர். இது அன்பு அல்ல.
      அவசியமான உதவிகள் செய்யலாம். ஆனால் அவரவர்களே செய்து கொள்ளக்கூடியதைக் கூட மற்றவர் செய்து தருவது இந்த போதை ஏற்றும் விஷயம்தானே தவிர, அது அன்பு அல்ல. இந்த கவனிப்புத் தேவை என்ற அம்சம் சிறு குழந்தைக்கு ஒரு அவசியம். ஆனால் அதை நாம் வளர வளர வெட்டிவிடாமல் அந்தக் குழந்தையை அடிமைப்படுத்த இந்த அதிக கவனிப்பை அன்பு என்ற பெயரில் கொடுத்து போதையூட்டி வளர்த்து விடுகிறோம். இந்த போதைக்கு அடிமைப்பட்டுப் போன இன்றைய சமூகம் அன்பை இழந்து நிற்கிறது.
      அன்பின் சுவை அறியாமல் போலியான இந்த கவனிப்பு சுவையில் விழுந்து வருந்துபவர்களையே நான் பார்க்கிறேன். கவனிப்பு அதிகமாகும் பக்கம் மனம் சாய்வதால் உறவுகளில் விரிதல், நட்பில் விரிசல், வாழ்க்கையே தடம் புரளுதல் என எல்லாம் நடக்கிறது. இந்த கவனிப்பு போதையை பயன்படுத்தி குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஏராளமான தீய பழக்கங்கள் மற்றவர்களால் ஏற்றப்படுகின்றன. இதற்குத் தடுப்புச் சுவர்களும் எழுப்பபடுகின்றன. ஆனால் உண்மையான இயல்பான வழி அதுவல்ல. ஒரு குழந்தைக்கு வளர வளர மற்றவர் கவனிப்பில் நாட்டம் குறைய வேண்டும். மற்றவர் கவனம் தேவை என்பதை தாண்டி அது வளர வேண்டும்.
தனக்காக, தன் தன்மையை வாழ்ந்து அனுபவித்து அது ஆனந்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் கிடைப்பார்கள். இல்லாவிடில் புகழுக்கும் பெருமைக்கும் அலையும் கவனிப்பு போதையில் ஆழ்ந்து கிடக்கும் கும்பலே மிஞ்சும்.
      மேலும் தன் தனித்தன்மையில் நிறைவும் சந்தோஷமும் அனுபவிக்காத ஒருவன் தன்னுணர்வுப் பாதைக்கு வர முடியாது. வந்தால் அதுவும் போலியாகவே இருக்கும். தானாக, தன்னைப் போல, தான் எப்படியோ அப்படியே இருப்பதில் உள்ள சுதந்திரத்தையும், நிறைவையும் அனுபவிப்பதே தியானத்தின் ஆரம்பம்.
      அதிலிருந்து தான் ஒருவன் உணர்வைக் கூர்மைப் படுத்திக் கொண்டே போய், பிரபஞ்சவுணர்வுகளில் ஒன்றைத் தொட்டுக் கரைகிறான், கலக்கிறான். அந்த அனுபவமே தியானம். தன்னுணர்வு அனுபவம். விழிப்புணர்வு அனுபவம். அதன்பின் அவன் பிரபஞ்சவுணர்வின் பலதில் ஏதோ ஒரு அம்சத்தை மட்டும் வெளிப்படுத்தும் தனித்தன்மை கொள்கிறான். எதன் மூலம் அவன் தொடர்பு கொண்டானோ அதுவே அவன் வெளிப்பாடாகிறது. இப்படி உடலின் தனிதன்மையில் ஆழ்ந்து அனுபவித்து வாழும் மனிதன் பிரபஞ்சத்தன்மைகளில் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்தும் ஒரு தனித்தன்மை கொண்டவனைப் மலர்கிறான்.
      இந்த மலர்ச்சியே மனிதனின் மகிழ்ச்சியான எதிர்காலம். மாறாக இப்போது வாழும் கவனிப்பு போதை வாழ்வு மேலும் மேலும் மனிதனை அடிமைப்படுத்துவதாய், இயந்திரமயமாக்குவதாய், வலிமையற்றவனாக்குவதாய், தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பாதைக்கே கொண்டு செல்லும்.
      ஆகவே நண்பர்களே
      உங்கள் உடல் மன இயக்கங்களை கவனியுங்கள். அதை வாழுங்கள், வளருங்கள்.
      பிரபஞ்சவுணர்வு வரை வளருங்கள். அதை வாழ்கையில் இந்த மரணம் ஒரு கட்டுக்கதை, மனம் ஒரு கருவி, வாழ்க்கை ஒரு விளையாட்டு.ஆனந்தமே நிச்சயம்.
                                                       வாழ்க வளமுடன்!

Wednesday, April 6, 2011

குழந்தையும் தெய்வமும் ஆனந்தம்


      பேருந்தில் பயணம் செய்கின்றபோது குழந்தைகளை கவனித்திருப்போம். சில குழந்தைகள் வைத்தகண் வாங்காமல் நம்மை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பார்த்து அப்படி ஒரு புன்சிரிப்பு பூப்பார்கள். பல சைகைகளைக் காட்டி நம்மை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள். இதையெல்லாம் பார்த்து நம்மில் சிலர் அப்படியே உளம் பூரித்துப்போய் அந்தக் குழந்தையின் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளியிருப்போம். 'என்னிடம் வருகிறாயா' என்று கேட்பதுபோல் குழந்தையைப் பார்த்து பல சைகைகளைக் காட்டியிருப்போம்.

      அந்தக் குழந்தை யாரென்று நமக்கு தெரியாமலிருக்கலாம். எந்த ஊரென்பதும் நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையால் ஒருவகையான இனம்புரியாத மகிழ்ச்சி நம்மில் உதயமாகிறது. நாம் பல்வேறு சிந்தனைகளோடு அந்த பேருந்தில் ஏறியிருக்கலாம். அவசர அவசரமாக குழப்பத்தோடு எங்காவது கிளம்பியிருக்கலாம்.ஆனால், அவற்றையெல்லாம் அந்த குழந்தையின் புன்னகையும் அழகிய சைகைகளும் அப்படியே மறக்கச் செய்துவிடும்.

      இவ்வாறு குழந்தைகள் இருக்கும் இடமெல்லாம் சொர்க்க பூமியாக மாறிவிடுவதை நாம் அனுபவிக்கிறோம். அது கோவிலாக இருந்தாலும் சரி.. மருத்துவமனையாக இருந்தாலும் சரி.. ஏன் இறப்புச் சடங்கு நடக்கும் வீடாக இருந்தாலும் சரி... குழந்தைகள் அந்த இடங்களை தங்களது மழலை வார்த்தைகளாலும் கள்ளங்கபடற்ற செயல்களாலும் சொர்க்கமாக மாற்றி விடுகிறார்கள். குழந்தைகளின் செல்ல மொழியும் தெய்வீக புன்னகையும் சுட்டித்தனமான செயல்களுங்கூட நம்மை அப்படியே மெய்மறக்க செய்துவிடுகின்றன.

      இதனால்தான் 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்! ஆம். தெய்வம் இருக்கின்ற இடத்தில் ஆனந்தமும் குதூகலமும் இருப்பது இயல்புதானே. அது தானே இறையின் குணம்... குழந்தையின் குணம்....

Monday, February 28, 2011

குழந்தை வளர்ப்பு ஆனந்தம்

 உங்களைப்போல் தடுமாறிப் போகாமல் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? உங்கள் வாழ்க்கை- குழப்பத்தில், தடுமாற்றத்தில் இருக்கிறது என்ற உண்மை தெரிந்திருக்கிறதென்றால் நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை, உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது. உங்கள் குழப்ப மனநிலையைக் கொண்டு அவர்கள் மனதில் எந்தப் பாதிப்பும் உருவாக்காதீர்கள். இதுதான் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல்படி.
      மற்றவர்கள் அழுகிய மனங்களோடு உங்கள் குழந்தைக்குத் தொல்லை தரக்கூடும். அவர்களிடமிருந்து உங்கள் குழந்தையைத் தனிமைப்படுத்திவிட முடியாது. ஏனெனில், உலகமெங்கும் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? குழந்தைக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தைக்கு எப்படி வழிகாட்ட வேண்டும்?
      அறிவுக்கூர்மையோடும், விழிப்புணர்வோடும் இருக்க உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். வாழ்க்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை அறிவு எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. ஒரு எறும்பு பிறக்கிறது. எறும்பை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். இந்த எறும்புக்கு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான அனைத்து அறிவும் இருக்கிறது. நீங்கள் செய்வதை அதனால் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு எறும்ப்ய் என்ன செய்யவேண்டுமோ, அதற்குத் தேவையான அறிவு அதற்கு இருக்கிறது. இது ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தும்.
      ஆனால், என்ன சிக்கல் என்றால், உங்களைப் போன்ற அறிவோடு உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்தக் குழந்தை தன் இயல்புக்கேற்றாற்போல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் புரிந்துகொண்ட விதத்திலேயே உங்கள் குழந்தையையும் அறிவைப் புரிந்து கொள்ளவேண்டும் என எண்ணுகிறீர்கள்.  
      உங்களைப் பொறுத்தவரை உங்கள் குழந்தை ஒரு மருத்துவராக வேண்டும். ஆனால் அந்தக் குழந்தை அற்புதமான தச்சுப் பணியாளராக வரலாம். உங்கள் குழந்தை மருத்துவராக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த உலகிற்கு மருத்துவர் தேவை என்பதாலோ, மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பவர்மீது அக்கறை கொண்டோ இம்முடிவை நீங்கள் எடுக்கவில்லை. உங்களுக்கு ஒரு முட்டாள்தனமான கருத்து, சமூகத்தில் ஒரு மருத்துவரோ- இல்லை ஒரு பொறியாளரோ அல்லது வேறு ஏதோ ஒரு அபத்தமான பொறுப்போதான் உங்களுக்கு பெருமை என்று கருதுகிறீர்கள்.
      இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால் உங்கள் வாழ்க்கை உங்களுக்கு நிறைவு தருவதாக இல்லை. எனவே உங்கள் வாழ்க்கையை உங்கள் குழந்தை மூலம் வாழ விரும்புகிறீர்கள். ‘என் குழந்தை ஒரு மருத்துவர்’ என்பது குழந்தையைக் கெடுப்பதற்கான வழி. எல்லாக் குழந்தைக்கும் போதிய அறிவு இருக்கிறது. தன்னுடைய அறிவுநிலைக்கு ஏற்ப அந்தக் குழந்தை வளர்வதற்குச் சூழ்நிலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, உங்கள் சிந்தனைகளை அக்குழந்தையின்மீது திணிப்பது ஆகாது.
      அந்தக் குழந்தைமேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதில் ஆசிரியருக்கென்று ஒரு பங்கு இருக்கிறது. நண்பர்களுக்கென்று ஒரு பங்கு இருக்கிறது. சமூகத்தின் பிற பகுதிகளுக்கும் சில பங்குகள் இருக்கின்றன. இதை நீங்கள் முழுக்கத் தவிர்த்துவிட முடியாது. ஆனால் பெற்றோர் என்ற முறையில் ஒரு முக்கியப் பங்காற்றி குழந்தையின் இயல்பான அறிவுநிலை வளர நீங்கள் துணை செய்யலாம். முதலில் ஒரு குழந்தை பிறந்தாலே அதற்குப் போதனை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறீர்கள். பிறகு அந்தக் குழந்தியை நீங்கள் கெடுத்து விடுவீர்கள். ஒரு குழந்தை பிறக்கிறதென்றால் நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக அர்த்தம்; உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இழந்திருக்கிறீர்கள். எவ்வளவோ கோணல்கள் ஏற்பட்டுவிட்டன.
      குழந்தை வாழ்க்கையை முற்றிலும் புதிதாகப் பார்க்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையோடு புதிதாக உங்கள் வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு உங்கள் அழுகிய சிந்தனையும் தலைகாட்டும். அதையும் தாண்டி அக்குழந்தையின் அறிவு தானாக வளரும்.
      எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தரக்கூடியது அன்பும், ஆதரவும்தான். அது போதும். அன்புமயமான ஒரு சூழல் ஏற்படுத்தினால் அக்குழந்தையின் அறிவு இயல்பாகவே மலரும். இதைத்தான் உங்களால் செய்ய முடியும். நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்தீர்களோ அதையே உங்கள் குழந்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நினைத்தும் பார்க்காத ஒன்றை உங்கள் குழந்தை செய்யலாம் இல்லையா? நீங்கள் ஒன்றைப் பற்றி யோசிக்கக்கூட அஞ்சியதை, உங்களுக்கு வரவே வராத எண்ணத்தை குழந்தை இயல்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த உலகத்தில் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் எண்ணிக்கை ஏராளம்.
      இந்த நாட்டின் மக்கள் தொகையைப் பார்த்தால் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே ஒரு குற்றம். இந்த மக்கள்தொகை பெருக்கத்தை நீங்கள் அன்பு காரணமாகச் செய்யவில்லை. செய்வதற்கு வேறு ஏதும் பணி இல்லை. ஆகவே செய்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் வேறு ஏதேனும் மதிப்புடியதாகச் செய்வதற்கில்லை. எனவே நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்டே போகிறீர்கள். இது அன்பின் காரணமாக அல்ல. ஒன்று பாதுகாப்பின்மையினால் அல்லது வேறு பணி இல்லாததால். பெரும்பாலும் பாதுகாப்பு உணர்வு இல்லாததால் தான், இல்லையா?
     இன்னும் சிலபேர் செய்கிற தவறான விஷயம் என்னவென்றால் குழந்தையை அன்பாக வளர்ப்பதென்றால் அது கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது என்று நினைக்கிறீர்கள். இது முட்டாள்தனம். முதலில் உங்கள் குழந்தையையே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பதில்லை. உங்கள் குழந்தையைப் போதிய அறிவோடு நீங்கள் பார்ப்பீர்களேயானால், அந்தக் குழந்தை கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது முட்டாள்தனம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு அன்பு என்று பெயர் சுமத்துகிறீர்கள்.
      குழந்தையை எப்படி நீங்கள் வளர்க்க வேண்டுமென்றால் அதைக் காட்டில் விட்டாலும், சமூகத்தில் விட்டாலும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அப்படித்தான் வளர்க்க வேண்டும். குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் பதட்டமும், கோபமும், அச்சமும், பொறாமையும் அரங்கேறிக் கொண்டே இருக்குமானால் இவற்றைத்தான் அது பழகும்.
      இதற்குத்தான் வீட்டில் செய்முறைப் பயிற்சி குழந்தைக்குக் கிடைக்கிறது. எனவே நல்ல முறையில் குழந்தையை வளர்க்க வேண்டுமானால், நீங்கள் முதலில் உங்கள் தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். அன்புமயமான- ஆனந்தமான- அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்பவராக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களையே நீங்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால், மிகவும் சக்திவாய்ந்த உங்கள் குழ்ந்தையை என்ன செய்ய முடியும்? உங்கள் பதட்டங்கள், உங்கள் கோபங்கள் போன்ற அபத்தமான குணங்கள் உங்கள் குழந்தைக்கும் வரும்.
      குழந்தைமீது உள்ளபடியே அக்கறை இருக்குமானால். நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எனவே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பே இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கின்ற தகுதி உங்களுக்கு இருக்கிறதா, இல்லையா என்று யோசியுங்கள். யோசிக்கும்போது உங்கள் வாழ்க்கைக்குக் குழந்தை அவசியமா, இல்லையா என்றும் யோசியுங்கள். முதலில் நீங்கள் ஆனந்தமான வாழ்வுக்கு மாறுங்கள்...........