மனிதனுடைய இன்றைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ’ஈகோ’ தான். எது உண்மையான ’நான்’ அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் அவன் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ’ஈகோ’ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்குமே தவிர எதுவுமே அவனை அமைதியடைய விடாது.
வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோ’வினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் தான் ‘ஈகோ’விற்கு அதிக சிரத்தை இருக்கும். யாரையும் விடக் குறைந்து விடக் கூடாது, அடுத்தவர் பார்வையில் தாழ்ந்து விடக் கூடாது என்பது போன்ற எண்ணங்களே பிரதானமாக இருக்கும். யாராவது அதிகம் உயர்ந்து விட்டாலோ அதைப் பார்த்து பொறாமைப்படத் தோன்றும். எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பு நோக்கத் தோன்றும். செயல்படக் கிடைக்கும் இந்தக் கணத்தில் கடந்ததை எண்ணி துக்கமும், வரப்போவதை எண்ணி கவலையும் அடைந்து இந்தக் கணத்தை வீணாக்கி விடும். இத்தனையும் ஒருவருடைய செயல்திறனை மங்க வைக்கும் அம்சங்கள் மட்டுமல்ல, துக்கத்திற்கும் மூலகாரணிகள்.
ஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவீதம் மனம் லயிக்க வேண்டும். அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல் குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும். விளைவைப் பற்றிய எண்ணம் கூட அந்த செயலிற்கு இடைஞ்சல் தான். விளைவு எப்படி இருக்கும், அதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற வகையில் எண்ணங்கள் ஓடுமானால் செயலில் நூறு சதவீதம் இல்லை என்று பொருள். செயலிற்கு வேண்டிய நூறு சதவீதத்தில் இருந்து எடுக்கப்பட்டு சில சதவீதங்கள் செயலிற்கு உதவாத எண்ணங்களில் வீணாகின்றன என்று அர்த்தம்.
“செயல்பட வேண்டிய நேரத்தில் முழு விழிப்புணர்வோடு இரு. கருத்துக்களாலும், வழக்கங்களாலும் சிறைப்பட்டு விடாமல் சுதந்திரமாக இரு. எதையும் எதிர்பாராதே. விளைவைப் பற்றிய கவலை கொள்ளாதே. விருப்பு வெறுப்பு இல்லாமல் இரு. இயல்பாக, எளிமையாக, தெளிவாக, முழுமையாக இரு. அப்போது தான் உள்ளது உள்ளபடி தெளிவாகப் புரியும். பின் செய்ய வேண்டியதை கச்சிதமாகச் செய்வது மிக சுலபமாகும்”. (இந்தக் கருத்தைச் சொன்னது ஒரு துறவியோ, தத்துவ ஞானியோ அல்ல. வாழ்ந்த குறுகிய காலத்தில் தற்காப்புக் கலைகளில் தன்னிகரில்லா நிபுணராக விளங்கிய ஒரு செயல்வீரனின்(ப்ரூஸ் லீயின் கருத்து) கருத்து இது
அந்த முழுமையான நிலையில் செய்யப்படும் எதுவும் சோடை போகாது. எல்லா தனித்தன்மை வாய்ந்த, காலம் கடந்தும் சிறப்பு குறையாமல் இருக்கும் கலைப்படைப்புகளும் அப்படி உருவாக்கப்பட்டவையே. அங்கு ஈகோ இல்லை. உதாரணத்திற்க்கு அஜந்தா ஓவியங்களையும், எல்லோரா சிற்பங்களையும், ஒப்புயர்வில்லா உபநிடதங்களையும் உருவாக்கியவர்கள் தங்கள் பெயர்களைக் கூட அவற்றில் விட்டுச் செல்லவில்லை. வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை கூட அவர்களிடமில்லை.
அப்படிப்பட்ட உன்னதமான உயர்வான உள்ளத்தோடு செய்யப்படும் செயல்கள் எதுவும் செய்பவர்களை பிணைப்பதில்லை. செய்பவன் அதன் விளைவுகளில் இருந்து விடுபட்டவனாகவே இருக்கிறான். அப்போது தான் ஆனந்த வாழ்வு வாழலாம். அது நிலையான ஆனந்த வாழ்வாக இருக்கும்.