Showing posts with label சிங்கம். Show all posts
Showing posts with label சிங்கம். Show all posts

Friday, June 1, 2012

ஒரு குட்டிக்கதை! நீங்கள் சிங்கமா? நரியா? ஆனந்தம்


ஒருமுறை ஒரு சன்னியாசி ஒருவர் காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு வேடனின் பொறியில் ஏற்க்கனவே சிக்கி , தன் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்திருந்த ஒரு நரியைப் பார்த்தார். நடக்கவே முடியாத அந்த நரி எப்போதும் ஒரு மரத்தின் அடியிலேயே படுத்திருந்தாலும், ஓரளவு கொழுத்திருந்தது. இதை அந்த ச‌ன்னியாசி பார்த்தபோது அவரால் இதை நம்ப முடியவில்லை. அதே நேரத்திலேயே ஒரு சிங்கம் தான் வேட்டையாடிய மிருகத்தின்  மாமிசத்தை அந்த நரியின் முன்னால் கொண்டுவந்து போட அதை அந்த நரியும் சாப்பிட்டது.
சன்னியாசியால் தன் கண்களை நம்ப முடியவில்லை. உடனே அந்த ச‌ன்னியாசி 'ஓ, இது கடவுள் எனக்கு அனுப்பியிருக்கும் சேதி, ஊனமுற்று, முடங்கிப் போன நரிக்கு அது உட்கார்ந்து இருக்கும் இடத்திற்க்கும் இடத்திற்கே உணவு தேடி வ‌ருகிறதென்றால், தெய்வீகத்தின் பாதையில் நடக்கும் சன்னியாசியான எனக்கு, உணவு ஏன் தானாக கிடைக்காது? இனி நானும் ஒரே இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யப் போகிறேன்' என நினைத்து ஒரே இடத்தில் உட்கார்ந்து விட்டார்.
மூன்று நாட்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. நான்காவது நாளில் இருந்து பசியின் மிகுதியால், தியானம் செய்ய முடியாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டே காதிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யோகியிடம், அந்த சன்னியாசி நடந்ததைக்கூறி இது தெய்வீகத்தின் செய்தி தானே? எனக்கு மட்டும் ஏன் உணவு தானாக வரவில்லை?' என்று கேட்டார். அதற்க்கு அந்த யோகி,'இது நீச்சயம் தெய்வீகத்தின் செய்தி தான். ஆனால் நீங்கள் ஏன் ஊணமுற்ற அந்த நரியைப் போல் நடந்து கொண்டீர்கள்? தாராள மனப்பாண்மை கொண்ட அந்த சிங்கத்தைப் போல் நடந்து கொள்ளலாமே? என்று கேட்டார்.
பல நேரங்களில் தொடர்ந்து நாம் எதிர்மறையான விசங்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். அல்லது நமக்கு சாதகமாக எது விளங்கும் என்று மட்டுமே யோசிக்கிறோம், இது மனித இனத்திற்கே நாம் இழைக்கும் மிகப் பெரிய அநீதி.
...............................................................வாழ்க வளமுடன்!...............................................................

Wednesday, February 9, 2011

ஆனந்தமாக வாழவிருப்பமா? ஆனந்தம்

        இந்த உலகில் நீங்கள் நினைத்தது போலவே 100% யாரும் இருப்பதில்லை. வேடிக்கை என்னவென்றால், நீங்கள் நினைப்பதுபோல நீங்களே இருப்பதில்லை. அதுதான் உங்கள் பிரச்சினை. நீங்கள் எந்தச் சூழலிலும் உள்ளே ஆனந்தமாக இருப்பதென்று முடிவு செய்தால் நிச்சயம் முடியும். ஆனால், உள்ளே இருப்பது என்னவென்று பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.
        சங்கரன்பிள்ளை ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே வழிப்பறிக் கொள்ளையர் களிடம் மாட்டிக் கொண்டார். அவரிடம் இருந்த மணிப்பர்சைப் பறிக்க, கொள்ளையர்கள் போராடினார்கள். ஆனால் இவர் விடவில்லை. கீழே தள்ளி பர்ஸை பலவந்தமாகப் பறித்துப் பிரித்தால் இந்தியப் பணம் ஐந்து ரூபாய் இருந்தது. அமெரிக்க டாலர்கூட இல்லை. அவர்கள் ஆத்திரத்துடன் ”இதற்கா இவ்வளவு போராடினாய்” என்று கேட்டார்கள். உடனே சங்கரன் பிள்ளை, ”நான்கூட, நான் ஷுவில் மறைத்து வைத்திருக்கும் வைரத்தைத்தான் கொள்ளையடிக்க வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்” என்று சொன்னார்.
        இப்படித்தான் பலரும் தங்களுக்குள் மறைந்து கிடக்கும் விஷயங்களின் மதிப்பு தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விழிப்புணர்வுடன் பார்த்தால் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். நீங்கள் அதிசயம் என்று தனியாக எதையும் நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. விழிப்புணர்வுடனும் முழுஈடுபாட்டுடனும் செய்தால் எல்லா செயல்களும் அதிசயங்கள்தான்.
        எங்கிருந்தோ உங்கள் உணவு வருகிறது. அதை நீங்கள் பயிராக்கவில்லை. ஆனால் அந்த உணவை எடுத்து வாயில் போட்டதும் அது உங்களில் ஒரு பகுதியாகிறது. கணப்பொழுதுக்குள் ஒரு கவளம் மனிதனாகிவிட்டது. உங்களுக் குள்ளேயே இருப்பது அற்புதம். அதை உணராமல் வாழ்வது ஆபாசம். உங்களுக்குள் இருக்கும் சக்தியை செயல்படுத்தும் தொழில் நுட்பத்துக்குத்தான் ஆன்மீகம் என்று பெயர். பலர், தங்களுக்குள் இருக்கும் சக்தியை செயல்படுத்தக்கூட எங்கிருந்தோ கட்டளை வருமென்று காத்திருக்கிறார்கள்.
        எதை நீங்கள் உங்களுக்கான செய்தியாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது, ஒருவர் தவம் செய்யலாம் என்று காட்டுக்குள் போகத் தீர்மானித்தார். அங்கிருந்து உணவுக்கு வெளியே வரவேண்டுமா என்று யோசித்த போது, அவர் பார்வையில் ஊனமுற்ற நரி ஒன்று தென்பட்டது. அதனால் அசைய முடியாது. உணவு தேடி வேட்டையாட முடியாது. ஆனால் அது பட்டினி கிடப்பது மாதிரியும் தெரியவில்லை. கொழுத்த நரியாகத்தான் இருந்தது. உணவுக்கு என்ன செய்கிறதென்று இந்த மனிதர் மறைந்திருந்து பார்த்தார். சிறிது நேரத்தில் அங்கே ஒரு சிங்கம் வந்தது. ஒரு மாமிசத் துண்டைக் கொண்டு வந்து நரியின் முன் போட்டது. தனக்குக் கடவுளின் செய்தி கிடைத்துவிட்டதாக இந்த மனிதர் அகமகிழ்ந்தார்.
        தனக்கான உணவு, தானே வரும் என்று தவம் செய்ய உட்கார்ந்தார். நாட்கள் ஓடின. யாரும் உணவு கொண்டு வரவில்லை. பசியால் சுருண்டு கிடந்த அவரை அந்தப் பக்கமாக வந்த யோகி ஒருவர் கண்டார். என்ன நடந்தது என்று கேட்டறிந்தார்.
        பிறகு அந்த யோகி சொன்னார், ”நடந்த சம்பவத்தில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. பசித்திருந்த நரி. பகிர்ந்து உண்ட சிங்கம். நீ ஏன் உன்னை நரியின் இடத்தில் வைத்துப் பார்த்தாய். நீ சிங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்திருக்கலாமே” என்றார்.
        இதேபோல் இன்னொரு சம்பவம். ஒரு குருவிடம் பயின்ற சீடர்கள் எதிர்பாராத விதமாக வேறொரு யோகியை சந்தித்தார்கள். அவரிடம், ”வாழ்க்கை என்றால் என்ன?” என்று கேட்டார்கள்.
        அதற்கு அந்த யோகி, ”வாழ்க்கை என்பது மல்லிகைப் பூவின் மெல்லிய வாசனை போன்றது” என்றார். வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். ”சுவாமி! எங்கள் குருநாதர், வாழ்க்கை என்பது குத்துகிற முட்களைப்போல் கொடுமையானது என்று கூறினாரே!’ என்றார்கள். யோகி சிரித்துக் கொண்டே சொன்னார், ”அவர் சொன்னது அவருடைய வாழ்க்கை. நான் சொன்னது என்னுடைய வாழ்க்கை” என்று.
        ”உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக அமைத்துக் கொள்ளும் சக்தி உங்களிடமே இருக்கிறது. ஆனந்தமாக வாழவிருப்பமா?”

Tuesday, February 1, 2011

குரு செய்யும் வேலை ஆனந்தம்


        கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு. ஒருமுறை ஒரு நிறை கர்ப்பிணியான பெண் சிங்கம் ஒரு மலை உச்சியிலிருந்து மற்றொரு மலை உச்சிக்கு தாவும்போது அதன் வயிற்றிலிருந்த குட்டி கீழே விழுந்து விட்டது. அந்த குட்டி அந்த சமயத்தில் அந்த இடத்தில் போய்கொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் போய் விழுந்துவிட்டது. அதனால் அது ஆடுகளுடன் கலந்து, ஆடுகளுடன் வாழ்ந்து, ஆடுகளைப் போலவே இருந்து கொண்டிருந்தது.

        தான் ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற ஒரு நினைப்பு அதன் கனவில் கூட இல்லை. எப்படி இருக்க முடியும்? அதைச் சுற்றி இருந்த அனைத்தும் ஆடுகளே. அது ஒரு சிங்கம் போல ஒருபோதும் கர்ஜித்ததே இல்லை. ஒரு ஆடு கர்ஜிப்பது இல்லை. அது ஒரு சிங்கம் போல தனித்து இருந்ததே இல்லை. ஒரு ஆடு ஒருபோதும் தனித்து இருக்காது. அது எப்போதும் கூட்டத்தில்தான் இருக்கும். – கூட்டம் கதகதப்பானது, உத்தரவாதமானது, பாதுகாப்பானது. ஆடுகள் நடப்பதை நீ கவனித்து பார்த்தால் அவை ஒன்றையொன்று உரசிக்கொண்டு நெருக்கமாகத்தான் நடக்கும். அவை தனித்திருக்க மிகவும் பயப்படும்.

        இந்த சிங்கம் வளர்ந்தது. இது மிகவும் மாறுபட்ட ஒரு நிகழ்வு. அது மனதளவில் தன்னை ஒரு சிங்கமாக நினைக்கவில்லை என்றாலும் கூட உடலியல் அதனுடன் ஒத்துப் போகவில்லை. இயற்கை உன்னை பொருட்படுத்துவது இல்லை.

        அது மிகவும் அழகான இளைய சிங்கமாக உருவெடுத்தது. ஆனால் வளர்ச்சி மிகவும் மெதுவானதாக இருந்ததால் சிங்கம் ஆடுகளுடன் ஒத்து போனதைப் போலவே ஆடுகளும் இந்த சிங்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டன. ஆடுகள் இது ஒரு சிறிதளவு வளர்ச்சியில் வேறு பட்டது என நினைத்தன. அது வேறுபட்டு நடந்து கொள்ளவில்லையே – ஒரு சிறு உடலியல் மாறுதல் தானே – சிங்கம் வளர்ந்து கொண்டே வந்தது.

        அப்படி வளரக் கூடாது. சிங்கத்தைப் போல தோற்றமளிக்கக் கூடாது........ ஆனால் இது சிங்கமல்ல. இது பிறந்ததிலிருந்தே அவை பார்த்துக் கொண்டிருக்கின்றன, அவை தான் இதை வளர்த்தன, அவைதான் இதற்கு பால் கொடுத்தன. இந்த சூழ்நிலையில் வளர்ந்த இது சைவமாகதான் இருந்தது. எந்த சிங்கமும் சைவமல்ல. ஆனால் இந்த சிங்கம் சைவமாக இருந்தது, ஏனெனில் ஆடுகள் சைவமே. இது புல்லை மிகவும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டது.

        ஆடுகள் இது மிகவும் பெரிதாகவும் சிங்கத்தை போல இருப்பதையும் ஏற்றுக் கொண்டன. ஒரு அனுபவசாலியான ஆடு, இது இயற்கையின் தவறு. எப்போதாவது ஒருமுறை இப்படி நடப்பது இயல்புதான். என்றது. அதுவே அதுதான் உண்மை என நினைத்துக் கொண்டது. சிங்கத்தின் நிறம், உடல் எல்லாமே வேறுபட்டுள்ளது – சாதாரணமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக – ஆனால் இது ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற நினைப்பே சாத்தியமில்லை. அது எப்போதும் ஆடுகளால் சூழப் பட்டிருந்தது. அவை இதனிடம், கவலைப்படாதே, நீ ஒரு சிறிதளவு வித்தியாசமானவனாக இருக்கிறாய் அவ்வளவே. நாங்கள் உன்னை பார்த்துக் கொள்கிறோம். என்றன.

        ஆனால் ஒருநாள் ஒரு வயதான சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இந்த இளைய சிங்கம் இருப்பதை பார்த்தது. அதனால் அதன் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இருப்பதையோ, அதை பார்த்து எந்த ஆடும் பயப்படாததையோ சரித்திரத்திலேயே கேள்வி பட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சிங்கம் ஆட்டைபோலவே நடந்தது, புற்களை கொறித்தது.
வயதான சிங்கத்தால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.

        தன்னுடைய காலை உணவாக ஒரு ஆட்டை பிடிக்கவேண்டும் என்பதையே முற்றிலுமாக மறந்து அது அந்த சிங்கத்தை பிடிக்க பாய்ந்தது. ஆனால் இதற்கு வயதாகிவிட்டது. அதற்கோ சிறு வயது. – அதனால் வேகமாக ஓடியது. அது தான் ஒரு ஆடு என நினைத்தாலும் கூட, ஆபத்து வரும்போது மனதின் அடையாளம் மறந்துபோய் விடுகிறது.

         அது ஒரு சிங்கம் போல ஓடியது. வயதான சிங்கத்திற்கு அதை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இறுதியில் அதை பிடித்தபோது அது அழுதுகொண்டே என்னை மன்னித்து விட்டுவிடு, நான் ஒரு ஆடு என்றது. வயதான சிங்கம், முட்டாளே, அழுவதை நிறுத்து, என்னுடன் குளக்கரைக்கு வா என்றது.

         அருகிலேயே ஒரு குளம் ஒன்று இருந்தது. இது அதை அங்கே கூட்டி சென்றது. இளைய சிங்கத்திற்கு போக விருப்பமேயில்லை
விருப்பமேயில்லாமல்தான் சென்றது. நீ ஒரு ஆடாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும். நீ அதன் பேச்சை கேட்காவிட்டால் அது உன்னை கொன்றுவிடும். அதனால் இது அதனுடன் சென்றது. குளம் மிகவும் சலனமின்றி, அலைகளில்லாமல், ஒரு கண்ணாடி போல இருந்தது.
வயதான சிங்கம் இதனிடம், பார், என் முகத்தை பார், உன் முகத்தையும் பார். என் உடல் பார், உன் உடலையும் பார். தண்ணீரில் பார். என்றது.

        ஒரு விநாடியில் அங்கே ஒரு கர்ஜனை எழுந்தது. அது எல்லா மலைகளிலும் எதிரொலித்தது. ஆடு மறைந்து அங்கே சிங்கம் எழுந்தது. அவன் வேறுபட்டவன். அவன் தன்னை அறிந்து கொண்டான். தான் ஒரு ஆடு என்று கொண்ட அடையாளம் உண்மையல்ல, அது ஒரு கருத்து மட்டுமே. அவன் இப்போது உண்மையை கண்டுகொண்டான்.

        வயதான சிங்கம், இப்போது நான் எதுவும் கூற வேண்டியதில்லை, நீ புரிந்து கொண்டு விட்டாய். என்றது.

        இளைய சிங்கம் இதுவரை அறிந்திராத வேறுபட்ட வலிமையை உணர்ந்தது...... அந்த வலிமை இதுவரை தடைபட்டிருந்தது. அது இப்போது அளவற்ற சக்தியை உணர்ந்தது. அது இதுவரை ஒரு வலிமையற்ற, பணிவான ஆடாக இருந்தது. அந்த பலமற்ற, வலிமையற்ற தன்மை காற்றில் கரைந்துவிட்டது.

        இது தான் ஒரு குரு தன் சிஷ்யர்களுக்கு காட்டும் வழி. சிஷ்யர்களின் பலத்தை உண‌ர்த்துவதே அவரின் வேலை. சிஷ்யர்களின் உண்மையான திறமையை கண்டறிந்து அவர்களுக்கு அதை உணர்த்தி அதை உயிர்பெறச் செய்வதே, குருவின் வேலை.......