Saturday, June 4, 2011

நெருப்பு சுடும்-ஆனந்தம்

       நெருப்பு சுடும். இது தான் இயல்பு எனினும் நெருப்பு நமது வாழ்வில் தவிர்க்க முடியாத தேவைப் பொருளாக இருக்கிறது. முறையோடும் அளவோடும் இடத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நெருப்பை பயன்படுத்தி வாழ்வில் பயன்பெறுகிறோம். உணவு சமைக்கும் போது அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தைக் கையால் எடுத்தாலும், தொட்டாலும் சுட்டு விடுகிறது. அதற்கு என்ன செய்கிறோம் அதை அப்படியே விட்டு விடுகிறோமா? ஒரு கந்தைத் துணியைக் கையில் பிடித்துக் கொண்டு அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தை நகர்த்துகிறோம், எடுக்கிறோம், பயன்பெறுகிறோம்.
      இது போன்றே நாம் நமது வாழ்வில் கருத்து வேறுபாடு உடைய பலரோடு தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் தேவை, பழக்கம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அறிவின் வளர்ச்சி என்ற நான்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்த நிலைகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
      இதனால் ஒருவரோடு ஒருவர் கருத்து வேறுபாடு கொள்வது இயல்பு. தவிர்க்க முடியாதது. இக்கருத்து வேறுபாடுகளில் மனதைச் சிக்க வைத்துக் கொண்டு உணர்ச்சி வயப்படுத்துகிறோம். தவறு செய்கிறோம். வருந்துகிறோம். மேலும் மேலும் வாழ்வில் சிக்கல்களைப் பெருக்கிக் கொள்கிறோம். மனிதன் தனித்து வாழ்வது முடியாது. கூடாது. இயன்ற மட்டும் எல்லோருடனும் அளவோடும், முறையோடும் பழகி வாழ்வில் நலம் பெற்று வெற்றிகாண வேண்டும்.
      சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைக் துணி உதவி கொண்டோ, கொரடாவின் உதவி கொண்டோ அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து, அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல், கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் காண வேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும்போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும், கவலையும் எழாது. வளராது. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும், இன்பமும், அமைதியும் ஓங்கும்.
      இந்த விளக்கத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு கணவன்மனைவி, பெற்றோர், மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என்ற எல்லா உறவுகளிலும் பயன்படுத்தி முதலில் வெற்றி பெறுங்கள். இதன் விளைவாக வெறி உலக மக்களிடம் கொள்ளும் தொடர்பிலும் உங்கள் வாழ்வின் மற்றெல்லாப் பகுதிகளிலும் வெற்றி ஒளி வீசும். போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்..

Anonymous said...

போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.
good...congratz

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.html

Post a Comment