Saturday, January 7, 2012

தெய்வத்தின் திருவிளையாடல் ஆனந்தம்


      உண்மையிலேயே விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் பொருள் வறுமை இல்லவே இல்லை. மக்கள் அறிவு வறுமையால்தான் பொருட்கள் நிரவி வராமல் தேங்கியும், அவசியமற்ற பொருட்கள் பெருக்கமும், அவசியமான பொருட்கள் மீது அலட்சியமும் ஏற்பட்டுப் பொருள் வறுமை போன்ற ஒரு மயக்க நிலை உருவாகி நிலைத்து வருகிறது என உணர்ந்து கொண்டேன்.
      தெய்வநிலை அறிந்த உங்களால் ஏன் இந்த நிலைகளைச் சீர்திருத்தி உலக மக்கள் வாழ்வில் அமைதி ஏற்படுத்தக் கூடாது? என்று பல அன்பர்கள் நினைக்கலாம். தெய்வத்தை அறிந்து கொண்டால் பல நன்மைகளை உலகுக்கு சாதித்துவிட முடியும் என்றுதான் நானும் தெய்வ அறிவு பெறாத முன்னம் நினைத்திருந்தேன். ஆனால் தெய்வ நிலையுணர்ந்த பிறகுதான் உண்மையில், உண்மை விளங்கிற்று. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான தெய்வம் கேட்டால் கொடுப்பதில்லை. செய்யும் செயலுக்குத்தான் ஏற்றபடி விளைவைக் கொடுக்கிறது, நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள் இவ்வைந்துக்கும் ஏற்ப ஒவ்வொரு செயலிலும் தக்கபடி சிறிது கூடத் தவறாத நீதியோடு விளைவைக் கொடுக்கிறது.
      முதலில் இவ்வுண்மை உணர்ந்து வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் ஒப்பிட்டுப் பார்த்தபோது தெய்வத்தன்மை அளிக்கும் விளைவுகள் ஒவ்வொன்றும் அற்புதமாகவே கருதினேன். நாட்கள் செல்லச் செல்ல, சிந்தனை மேலும் உயர, உயர நான் கண்ட உண்மை இவ்வற்புதங்கள் இறைநிலையின் இயல்பு என்பதாகும். எங்கும், எல்லாவற்றிலும், எப்போதும் விளைந்துகொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள் எவ்வாறு அற்புதமாக இருக்க முடியும்? ஏதோ ஒரு இடத்தில், ஒரு சமயத்தில், ஒரு பொருளில் நிகழ்ந்தால் அதை அற்புதம் என்று எண்ணலாம். இப்போது அவ்வற்புதங்கள் அனைத்தும் இறைநிலையின் இயல்பாகவே உணர்கிறேன். இதனையே நமது முன்னோர்கள் தெய்வத்தின் திருவிளையாடல் என்று கூறினார்கள்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான தெய்வம் கேட்டால் கொடுப்பதில்லை. செய்யும் செயலுக்குத்தான் ஏற்றபடி விளைவைக் கொடுக்கிறது, நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள் இவ்வைந்துக்கும் ஏற்ப ஒவ்வொரு செயலிலும் தக்கபடி சிறிது கூடத் தவறாத நீதியோடு விளைவைக் கொடுக்கிறது.

அற்புதமான இறைநிலை பகிர்வு.. பாராட்டுக்கள்..

Post a Comment