Tuesday, January 3, 2012

பொய்யும் மெய்யும்-ஆனந்தம்


      மெய் என்றால் ஒன்றுபட்டது என்றும் பொய் என்றால் இரண்டுபட்டது என்றும் பொருள்படும். பொய் என்றால் இல்லாதது என்று பலரால் கருதப்படுகின்றது. இல்லாதது எப்படி இருக்க முடியும்? அதை எப்படிச் சொல்ல முடியும்? இருப்பதைக் தான் கருதுகின்றோம், பேசுகின்றோம்.
      ஒருவன் ஒரு பொருளை வைத்திருக்கிறான். ஆனால் கேட்பவர்களுக்கு அப்பொருள் இல்லை என்று சொல்லுகின்றான். இந்த இடத்தில் இல்லை என்று சொல்லுவதைப் பொய் என்று சொல்லுகின்றோம். அந்தப் பொருளை அவன் வைத்திருப்பது அவன் உள்ளத்தில் மறைந்து விடவில்லை. மேலும் வேறு ஏதோ காரணத்தால் இல்லை என்று சொல்லுகின்றான்.
      அவனுடைய உள்ளத்தில் அப்பொருள் இருப்பது, இல்லை என்று சொல்ல வேண்டுமென்பது ஆகிய இரண்டும் இருக்கின்றன. இருக்கிறது என்ற ஞாபகத்தோடு இல்லையென்று சொல்ல வேண்டிய ஞாபகமும் கூடி இரண்டு பட்டுவிட்டது. அதே பிளவுபட்ட கருத்து, சொல்லிலும் வந்தால் அதைப் பொய் என்று சொல்லுகின்றோம்.
      இதேபோன்ற ஏக நிலையாக  அரூப நிலையாக இருந்த தெய்வ நிலை, அணுவாகவும், கோள்களாகவும், உயிரிணமாகவும் பரிணாமமடைந்து விட்டபின், அது இரு நிலைப்பட்டு விட்டது. இவைகளில் பின்னர் தோன்றிய அணு முதல் அண்ட கோடிகளையும், அவைகளின் இயக்க நிகழச்சிகளையும், வேதாந்திகள் பொய் என்று சொல்லுகின்றார்கள். அதாவது இரண்டு பட்ட நிலை என்று சொல்லுகின்றார்கள். இப்படி இரண்டு பட்ட நிலைகளில், ஏக நிலையாக உள்ள அரூப நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை ஞானம் என்றும், அதை மறந்து இரண்டு பட்ட நிலையை மாத்திரம் கண்டு அறிவு மிரட்சி கொண்டு இயங்கி நிற்கும் நிலையை மாயை என்றும் கூறுகின்றார்கள்.

1 comment:

குறையொன்றுமில்லை. said...

பொய் மெய் பற்றி தெளிவான விளக்கம். நன்றி

Post a Comment