Thursday, January 5, 2012

பக்தி-ஆனந்தம்

      தொடர்ந்துவந்த பழக்கத்தால், எனக்கும் கற்பிக்கப்பட்ட முறைப்படி, வணக்க முறைகளை நான் நடத்தி வந்தேன்.
      வணங்குபவன் யார்? வணக்கத்துக்கு உரியவர் யார்? வணங்குவதன் பயன் இதுவரை என்ன? இனி என்ன? என்று ஆராய்ந்தேன். என் அறிவு நிலையை இந்த அளவுக்கு உயர்த்துவதற்காக முன்னோர்களால் கற்பிக்கப்பட்டது, தான் வணக்க முறை என்று அறிந்துகொண்டேன். எந்த ஒரு பெரும் அகண்டாகார அரூப சக்தியை அறிய என்னை வணங்கச் சொன்னார்களோ, அந்தச் சக்தி என்னிடத்திலும் நிறைவு பெற்றுத்தானே இருக்க வேண்டும்? அப்படி என்னிடத்தில் நிறைவு பெற்று இருந்தால், நான் வேறு அது வேறாகப் பிரிந்து இருக்க முடியாது. ஆகையினால், என்னிலை என்ன? என்று ஆராய வேகம் கொண்டேன். அன்று முதல் வணக்கத்தை விட்டுவிட்டேன்.
      எந்தப் பொருளோ சக்தியோ ஒருவன் தன் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பதாகக் கருதினாலும் அதையே அவன் வணங்குகிறான். அவனவன் அறிவின் வளர்ச்சிக்கேற்றவாறு வணக்கத்திற்குரிய பொருள்கள் மாறுபடும். ஆகாரம் தான் வாழ்வுக்கு ஆதாரம் என்று கொண்டவன் உணவை வணங்கினான். ஆகாரம் பூமியில் கிடைக்கிறது. அதுதான் வாழ்வுக்கு ஆதாரம் என்று கண்டவன் பூமியை வணங்கினான். தண்ணீரில் வாழ்வுக்கு அனைத்தும் கிடைக்கிறது அதுதான் ஆதாரம் என்று கொண்டவன் தண்ணீரை வணங்கினான்.
      மேலும் மேலும் ஆராய்ச்சி வேகம் கூடக் கூட, காற்று, ஆகாயம், வெட்டவெளி என்றும், ஆயுதங்கள்  சிலைகள்  செங்கல் முதலியவற்றால் தொழில் செய்து பிழைத்தவன் அவையவைகளை அவன் வாழ்வின் ஆதாரப் பொருள் என்றும் வணங்கினான், வணங்குகிறான்.
----------------------------------------வேதாத்திரி மகரிஷி----------------------------------------

No comments:

Post a Comment