Monday, November 19, 2012

ஹிக்ஸ் போஸான் – கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா? ஆனந்தம்


      கேள்வி: சத்குரு, ஹிக்ஸ் போஸான் என்று ஒரு புதிய அணுத் துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் கடவுள் இருப்பது நிரூபிக்கப்படுமா? அறிவியல் மூலம் அது விளக்கப்படுமா?

      கடவுள் துகள் (god particle) என்று அதற்கு பெயர் வைத்தது நல்லதாய் போயிற்று. ஏனென்றால் யாரோ ஒருவர் அதற்கு கடவுள் சபித்த துகள் (god damn particle) என்று பெயரிட வேண்டும் என்று நினைத்தார்கள்.
      உலகம் முழுவதிலும், பௌதிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கூட, இப்பொழுது அணுத்துகள் பௌதிகம் (particle physics) பற்றி பேசுவதே மிகப் பெரிய சாதனைதான். தற்சமயம் போஸானால் தொழில்நுட்ப ரீதியாக உபயோகம் இல்லாவிட்டாலும் அதனை அறிந்து கொள்வதற்காக மட்டுமே பத்து பில்லியன் டாலர் செலவழிக்கப் போகிறார்கள்.
      அறிவியல் ரீதியாக இதன் விளக்கம் என்ன? யோகாவில் படைப்பனைத்தையும் ஸ்தூலம், சூட்சுமம், சூனியம், சிவம் என்று பகுத்துள்ளார்கள். ஸ்தூலம் என்றால் பொருள்தன்மையில் இருப்பது. நீங்கள் பார்ப்பவை, கேட்பவை மற்றும் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தும் ஸ்தூலமாகக் கருதப்படுகிறது. அவற்றை உங்கள் அறிவுத்திறனால் புரிந்துகொண்டு கிரகித்துக்கொள்ள முடியும். ஒரு பொருளின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் அணு. தேவையான அணுக்கள் சேர்ந்தால் நம் கண்ணுக்கு அது புலப்படுகிறது.
      சூட்சுமம் என்பது நம் கண்ணுக்கும் மற்ற புலங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கும், ஆனாலும் அதுகூட பொருள்தன்மை கொண்டதுதான். சூட்சும நிலைக்கு வந்துவிட்டால், அப்பொருளை உங்கள் புத்தியால் ஆராய்ந்து அறிய முடியாது. அதற்கு அசாதாரணமான அறிவுத்திறன் அதாவது, விசேஷ ஞானம் தேவைப்படும்.
      இந்த விசேஷ ஞானம்தான் விஞ்ஞானம் எனப்படும். ஐம்புலங்களால் கூட உணர முடியாதவற்றை உங்களால் உணர முடிந்தால் அதுவே விஞ்ஞானம். ஹிக்ஸ் போஸானை யாருமே பார்த்த்தும் இல்லை, பார்க்கவும் முடியாது – அதன் கால்தடம் மட்டுமே பார்க்கமுடியும். கால்தடத்தைப் பார்த்து தான் ஹிக்ஸ் போஸான் இருப்பதாக நம்புகிறார்கள். காட்டில் புலியின் கால்தடத்தைப் பார்த்து புலி நடமாட்டம் இருப்பதாக நம்புகிறோம் அல்லவா, அதுபோலத்தான்.
      இன்னும் மேற்கொண்டு சென்றால் சூன்யம் ஆகிவிடும். சூன்யம் என்றால் முழு வெறுமை என்று அர்த்தம். சூன்யத்தில் உங்கள் அறிவுத்திறன், ஐம்புலங்கள் எல்லாமே பயனற்று போய்விடும். ஏனென்றால் அங்கே பொருள், உருவம் எதுவும் இல்லை. சூன்யத்திற்கும் அப்பாற்பட்டது சிவம். எது இல்லையோ அதுவே சிவம். அது உருவமாக இல்லை. இதனை உங்கள் தர்க்க மனம் கொண்டு உணரவும் முடியாது.
      இன்று நவீன அறிவியல் பிரபஞ்சம் முழுவதையும் தர்க்க மனம் கொண்டு புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறது. உங்கள் அறிவு வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கலாம்; ஆனால் பிரபஞ்சம் உங்கள் அறிவுக்குள் அடங்கிவிடாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தை தாண்டியவுடனேயே உங்கள் தர்க்க அறிவு பயனற்றுப் போகிறது.
      பிரபஞ்சம் பற்றி யோகக் கலாச்சாரத்தில் இப்படியெல்லாம் விவரித்து இருக்கிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒருவரிடம் விளக்கினேன். பிரபஞ்சம் குறித்த விஷயங்கள் யோகக் கலாச்சாரத்தில் கதைகளாக சொல்லப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஒருவர் தன் அனுபவத்தின் மூலம் நிதர்சனமாய் அறிந்தால் மட்டுமே நம்பவேண்டும். அதுவரை எதையும் அப்படியே நம்பக்கூடாது என்றும் இக்கலாச்சாரத்தில் சொல்வார்கள் என்று சொன்னேன்.
      மேலும் என் அனுபவத்தில் இது தான் பிரபஞ்சம் குறித்த நிதர்சனம் என்று என் அனுபவத்தைச் சொன்னேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர்கள், “சத்குரு, நீங்கள் சொன்ன விஷயத்திற்கு, கூடவே கணிதம் மூலம் ஆதாரம் காண்பித்தால், நோபல் பரிசே கிடைத்து விடும்,” என்றார்கள்
      எனவே அறிவியல் மூலம் அறிய விரும்பும் விஷயங்களை எனக்குள் உண்மை என்று உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் பத்து பில்லியன் டாலர் கருவி செய்துதான் நிரூபிக்க முடியும் என்று சிலர் நினைத்தால் அது அவர்கள் பாடு. இது (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) என்ன என்பதின் ஆழத்திற்கு நீங்கள் போகத் தயாராக இருந்தால், உங்களுக்கு அந்த உண்மை நிரூபணமாகிவிடும்.
      ஏனென்றால் இதுவும் (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) பிரபஞ்சமும் ஒரே விதமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தால் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுள்ள விதத்தையும் ஊகித்து அறிய முடியும். விஞ்ஞானமும் இப்பொழுது ஊகம் தானே செய்கிறது.
      பிரபஞ்சம் முடிவில்லாதது என்று விஞ்ஞானம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. முடிவில்லாத ஒன்றில் போய் படைப்பின் மூலத்தை தேடுவது எளிதா? அல்லது உங்களுக்குள்ளேயே தேடுவது எளிதா? காலையில் சாப்பிட்ட இட்லி, தோசை எப்படி சிலமணி நேரங்களில் மனிதனாக மாறியது? படைப்பின் மூலமே உங்களுக்குள் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. எனவே படைப்பினைப் பற்றி ஏதேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நமக்குள் பார்ப்பது தானே சிறந்த வழியாக இருக்க முடியும்?
      விஞ்ஞானம் இன்று பிழைத்திருப்பதன் காரணம், அது வழங்கும் தொழில்நுட்பம்தான். தொழில்நுட்பமாக மாறாமல் இருந்திருந்தால், விஞ்ஞான ஆய்விற்கு யார் இவ்வளவு செலவு செய்யப்போகிறார்கள்? எனவே விஞ்ஞானத்தால் இத்தகைய பயன்கள் உள்ளன. ஆனால் அந்த விஞ்ஞானத்தால் பிரபஞ்சத்தை உங்களுக்கு திறந்து காட்ட முடியாது. ஏனென்றால் அது அறிவின் மூலம் மட்டுமே அறியமுயல்கிறது. உங்கள் அறிவுத்திறன் எதையும் கூறுபோட்டுதான் பார்க்கும்.
      அழகிய மலரை கூறுபோட்டு அதன் அங்கங்களை அறிய முடியும் – ஆனால் அதன் அழகை, அதன் முழுமையை, தெய்வீகத்தின் கரங்களைப் பார்க்க முடியாது. நீங்கள் அந்த மலரில் முழு கவனம் செலுத்தினால் அதில் பிரபஞ்சத்தையே காண முடியும்.
      இப்பொழுது விஞ்ஞானம் எப்படி ஆகிவிட்டது தெரியுமா? பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் நாம் எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்க்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அணு, ஏன் அந்த கடவுள் துகள் போஸானைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருவேளை ‘போஸான் குண்டு’ செய்தால்? உலகமே ஒரு நொடியில் காணாமல் போய்விடும். புரிகிறதா?
      இன்று இந்த உலகத்தையே நாசப்படுத்துவது இதே தொழில்நுட்பம் தானே? ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், நவீன தொழில்நுட்பம் முதலில் இராணுவத்தில் பயன்படுத்தி பல உயிர்களை வாங்கிய பின்பே மற்ற பயன்பாட்டிற்கு வரும். இன்னும் எவ்வளவு உயிர்ச்சேதம் வேண்டும்?
      எதைப்பார்த்தாலும் அதை எப்படி உபயோகிப்பது? அதிலிருந்து எனக்கு என்ன பயன்? இப்படித்தான் பார்க்கிறோம். இது தான் நவீன யுகத்தின் போக்காக உள்ளது. எப்போதுமே எனக்கு என்ன பலன் என்று வாழ்வது பெறுமைக்குரிய முறை அல்ல. அப்படி வாழ்ந்தால், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல்தான் உணர்வீர்கள்.
      எனவே உங்களை முழுமையாக வழங்குவது எப்படி என்று நீங்கள் அறிய வேண்டும். இதோ இந்த மரத்தைப் பார்த்தால் கூட நாம் எப்படி இந்த மரத்திற்கு நம்மை முழுமையாக அர்பணிக்க முடியும் என்று பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையை உணர்வீர்கள். இதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற மனப்பான்மையால் வாழ்க்கை உங்களை தவிர்த்து போய்விடும்.
      இந்த போஸான், இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் பெயர்கொண்டிருக்கிறது தெரியுமா? அவர் ஒரு கணித மேதை. ஐன்ஸ்டைன் சொன்னார், “மேற்கத்திய விஞ்ஞானிகள், இந்திய கணிதவியல் வல்லுனர்களின் உதவி இல்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.” கணிதத்தின் அடிப்படையே கிழக்கு நாடுகள்தான். ஆனால் நாம் நம் கலாச்சாரத்தில் இயற்கைக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டோம். இங்கே இயற்கையை இயற்கை அன்னை என்றுதான் குறிப்பிடுகிறோம்.
      அன்னையிடம் இருந்து என்ன வேண்டுமோ அது மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவளை கற்பழிக்கக்கூடாது. விஞ்ஞானத்தை ஒரு கருவியாக, தேடுதலாக பயன்படுத்துவதே சிறந்ததாகும். இல்லையேல் அதுவே நமக்கு வீழ்ச்சியாகி எல்லாமே ‘கடவுள் சபித்தது’ ஆகிவிடும்.

Wednesday, November 14, 2012

காந்தி எப்படி மகாத்மா ஆனார்? ஆனந்தம்


     
      அனைத்து ஆன்மீகச் செயல்முறைகளையும் ஒவ்வொருவரும் செய்யமுடியும். இதில் கேள்விக்கே இடமில்லை. அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், அது மிகவும் துன்பகரமானது. ஏதோ ஒன்றுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால்தான் அவர்கள் ஓர் எல்லைக்குள் தங்களை குறுக்கிக் கொள்கிறார்கள். நம் அடையாளங்கள் குறுகிய எல்லைக்குள் இருப்பதால், நம்முடைய சாத்தியங்களும் குறுகிய எல்லைக்குள்ளேயே இருக்கிறது. உடலுடன் உள்ள அடையாளத்தை விட, எவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
      சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்… மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன.
      தென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். காந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.
      அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. “எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்” என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார்.
      மகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார். இந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துதான் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது.
      காவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம். முதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.
      தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நிலவிவந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது. எனவே நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று நிர்ணயித்து ஓர் எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

      உங்களால் செய்ய முடிந்த எதையும் செய்யுங்கள். செய்ய முடியும் என்று நினைக்கும் எதையும் செய்யுங்கள்! வாழ்க வளமுடன்!

நீங்கள் இறந்திருக்கிறீர்களா? ஆனந்தம்



      மரணம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவியிருக்கிற விதத்தைப் பார்த்தால் விசித்திரமாக இருக்கிறது. நீங்கள் இதற்குமுன் இறந்திருக்கிறீர்களா? மரணம் குறித்த அனுபவம் உங்களுக்கு இல்லை. மரணமடைந்த யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்களுடைய உடல்களை வேண்டுமானால் பாத்திருப்பீர்கள். மரணமடைந்த யாரேனும் உங்களிடம் வந்து ‘என் மரண அனுபவம் இப்படி இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார்களா? அதுவும் இல்லை.
      மரணத்தை நீங்கள் அனுபவித்ததில்லை. அதை நீங்கள் பார்த்ததில்லை. அது குறித்த நேரடி அனுபவம் பெற்ற யாரும் விளக்கம் சொல்லிக் கேட்டதும் இல்லை, அப்படியானால் மரணம் குறித்த இந்த யோசனைகள் உங்களுக்கு எங்கிருந்து வந்தன? அறியாத சிலர் ஏற்படுத்திய மாயைதான் மரணம் என்பது. விழிப்புணர்வே இல்லாமல் வாழ்க்கையை வாழ்பவர்களின் உருவாக்கம் அது. வாழ்க்கை என்ற ஒன்று மட்டுமே நிகழ்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணம் நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. வாழ்க்கைக்கென்று எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. உடல் என்ற எல்லையைத் தாண்டிய பரிமாணத்துக்குள் வாழ்க்கை செல்கிறபோது அதனை மரணம் என்கிறீர்கள்!

மரணம் நல்லதா? கெட்டதா?

      இந்தக் கேள்வியே அபத்தமானது. அது நல்லதோ, கெட்டதோ, நிகழத்தான் போகிறது. நீங்கள் பிறந்த விநாடியே உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கே, எப்போது நிகழும் என்பதுதான் கேள்வி. பிறந்ததும் ஒருவர் கல்வி கற்பாரா, கல்யாணம் செய்வாரா, ஆனந்தமாய் இருப்பாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பிறந்தால் இறந்து போவார் என்பது மட்டும் உறுதி.
      மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது.
      மரணத்தில் எந்தத் தவறும் இல்லை. அது நிகழ்ந்தே தீரும். மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது. மரணமென்றால் என்னவென்று தெரியாததால்தான் அச்சம் ஏற்படுகிறது. வாழ்க்கை பற்றி என்னென்ன எண்ணங்கள் உங்களுக்கு இருந்தாலும் மரணம் வருகிறபோது அது காணாமல் போய்விடுகிறது. மனித மனத்தால் மாசுபடுத்த முடியாத ஒரே பகுதி அதுதான். அன்பு, உறவு, கடவுள், புனிதம், அனைத்தையும் மனிதர்கள் பலவிதமாக மாசுபடுத்தியும் திரித்தும் பேசிவருகிறார்கள். மரணம் குறித்துதான் அவர்களால் உறுதிபட எதையும் சொல்ல முடியவில்லை. ஒரு சிலர் அது குறித்தும் பேசுகிறார்கள். தாங்கள் சொர்க்கத்துக்குத்தான் போகப்போவதாக அடித்துச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் உறுதியாக இருப்பவர்கள் புறப்படலாம். எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிடவும் சிறந்த இடத்துக்குச் செல்வதென்று நிச்சயமாகத் தெரிந்தால், விரைந்து போகத் தோன்றும். எங்கே எப்படி போவதென்று தெரியாதபோது, ஆறுதலுக்காக இப்படிச் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்!
      மரணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலேயே, அது பெரிய சிக்கலாக உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் உடல், இந்த பூமியின் ஒரு பகுதி. பூமியிலிருந்து தோன்றியது பூமிக்குள் மீண்டும் போகப் போகிறது. நீங்களும் நானும் இந்த பூமிக்கு வரும் முன்பு எண்ணிலடங்காத எத்தனையோ பேர் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிட்டார்கள். ஆழப் புதைத்துவைக்காத பட்சத்தில் நீங்களும் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிடுவீர்கள்!
      உடலைக்கொண்டு சில அற்புதங்களை நிகழ்த்தியிருந்தால், இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள்.
      நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக வைத்துக்கொள்வோம். அதனைப் பத்து கோடியாக நீங்கள் பெருக்கிவிட்டீர்கள். பத்தாண்டுகள் கழித்து நான் உங்களைத் தேடி வந்தால் என்னை மகிழ்வுடன் வரவேற்று, ஒரு கோடிக்கு இரண்டு கோடியாய் திருப்பித் தருவீர்கள். ஒருவேளை அந்த ஒரு கோடி ரூபாயை நீங்கள் வீணடித்திருந்தால் கடன்காரர் வரும்போது அஞ்சுவீர்கள்.
      இந்த உடம்பும் அப்படித்தான். உலகத்திடம் நீங்கள் பெற்ற கடன் இது. இதைக் கொண்டு சில அற்புதங்களை, மிக முக்கியமானவற்றை நீங்கள் நிகழ்த்தியிருந்தால் இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள். நீங்கள் எப்படி மரணமடைகிறீர்கள் என்பதே, உங்களுக்குள் எப்படி வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதன் அடையாளம்தான். ஒரு மனிதனின் கடைசி விநாடி குறித்து பல ஆன்மீக மரபுகள் ஆழமாகப் பேசுகின்றன. அந்த விநாடியில் உங்களால் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், அந்தத் தன்மையே காலங்கடந்தும் தொடர்கிறது. இன்றிரவு தூங்கச் செல்லும்போது, அன்புமயமான உள்நிலையை உருவாக்கிக் கொண்டு, புன்னகையுடன், விழிப்புணர்வுடன் தூங்கச் செல்லுங்கள். இரவு முழுவதும் அன்பு நிலை உங்களுக்குள் ததும்பி, காலை வேளையிலும் வெளிப்படுவதை உணர்வீர்கள்!
      இன்றிரவு படுக்கப் போகும்போது, விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் நீங்கள் ஆழ்கிற அந்தக் கடைசி விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.
      உங்களுக்கு அது சாத்தியமானால், நீங்கள் கற்பனை செய்துகூடப் பாராத பல அம்சங்கள் உங்கள் வாழ்வில் நிதர்சனமாய் நடப்பதை உணர்வீர்கள். விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் அமிழ்கிற விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், வாழ்விலிருந்து மரணத்துக்குள்ளும் முழு விழிப்புணர்வுடன் நுழைய முடியும்! வாழ்க வளமுடன்!

Tuesday, November 13, 2012

சுழற்சியிலிருந்து விடுதலை நோக்கி - யோகா ஒரு பார்வை! ஆனந்தம்


   
      உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும், ஒரு மனிதனால் செய்ய முடிகிறபோது, ஏன் யோகா செய்ய வேண்டும்?
      மனிதர்களால் செய்ய முடிந்த அத்தனையும் அடிப்படையில், அவர்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். யாரோ ஒருவர் பாடுகிறார்கள், யாரோ ஆடுகிறார்கள், யாரோ புத்தகம் எழுதுகிறார்கள், யாரோ ஒரு ஓவியத்தை வரைகிறார்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான்.
      நீங்கள் விழிப்புணர்வுள்ளவராக முடியும், இருந்தாலும், நீங்கள் சொல்லும் அனைத்தும், செய்யும் அனைத்தும், உங்களிடமிருந்து வெளி வரும் அனைத்தும் அடிப்படையில் நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். அப்படிப் பார்க்கும்போது, யோகா இதற்கு முற்றிலும் மாறானது, ஏனென்றால் அது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடு அல்ல – அது நீங்கள் யார் என்பதை தீர்மானிப்பது. நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானித்து, ஒருவரது இருப்பின் அடிப்படையையே, மூலத்தையே மாற்றிவிடுவது.
     இன்று, யோகாவின் மூலம் உங்கள் மூளையின் செயல்பாடுகளை, உங்கள் இரசாயனத்தை, உங்கள் மரபணுக்களின் அடிப்படையைக் கூட மாற்றிவிட முடியும் என்று நிரூபிப்பதற்குப் போதுமான அளவு மருத்துவரீதியான, விஞ்ஞானரீதியான சான்றுகள் இருக்கின்றன. உண்மையில் இதற்கு எந்த நிரூபணங்களும் தேவையில்லை, ஏனென்றால், அதை நாம் எப்போதுமே அனுபவத்தில் பார்த்து வந்திருக்கிறோம், ஆனால் இன்று இதை நிரூபிக்க வேண்டுமானால் அதற்கும் விஞ்ஞானரீதியான சாட்சியங்கள் உள்ளன.
      எனவே, யோகா என்பது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடு அல்ல, அது நீங்கள் எந்த தன்மையில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது பற்றியது. தற்போது நீங்கள் யார் என்பதை உருவாக்கியிருக்கும் அடிப்படை மூலக்கூறுகளையே மாற்றுவது. யோகாவை ஒரு அமைப்பு ரீதியாகப் பார்த்தால், நாம் செய்யும் மற்ற எந்த செயலையும் விட, இதற்கு மிகுந்த ஈடுபாடு தேவைப்படுகிறது. மற்ற செயல்களெல்லாம் நாம் யார் என்பதன் வெளிப்பாடுகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட செயலிலேயே உங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினால், அதுவும் கூட ஓரளவு உங்களை நிலைமாற்றும்.
      சமைப்பதில் முழு மனதுடன் ஈடுபட்டால், சில மாற்றங்கள் நிகழும். முழு மனதுடன் பாடினால், முழு மனதுடன் ஆடினால் சில மாற்றங்கள் நிகழும். ஆனால் அவற்றில் ஒரு குறிப்பிட்ட தாக்கம் மட்டுமே இருக்கும், ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டுமே நீங்கள் முழுமையான ஈடுபாட்டைக் காட்டினீர்கள். ஆனால் அடிப்படையில் அந்த செயல், இயல்பிலேயே நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். அது உங்கள் தன்மை என்ன என்பதை தீர்மானிப்பதில்லை.
     
      நாம் நம்முடைய செயலை நிலைமாற்றுவதற்காக ஆசனா, தியானம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆசனா மற்றும் தியானம் ஒரு வெளிப்பாடு அல்ல. இது ஒரு முறை. இது ஒரு வழி. நீங்கள் யார் என்பதை மாற்றுவதற்கான ஒரு தொழில்நுட்பம். இதன் மூலம் உண்மையில் நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்களோ அந்த வடிவத்தை மாற்றலாம். அதை மாற்ற முடியும், ஏனென்றால் நீங்கள் என்பது உங்கள் மரபணு சார்ந்த விஷயங்கள், அதற்கு முன்னர் உங்களது கர்மவினைகள் என அனைத்தும் கலந்தே உள்ளது. அதனால்தான் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கருவறையைத் தேர்ந்தெடுத்து அதில் பிறந்தீர்கள். நீங்கள் பிறந்த அந்த கணத்திலிருந்து, பலவகையான அனுபவங்கள், சூழ்நிலைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உறவுகள், தொடர்புகள் என்று எவையெல்லாம் உங்களுக்குள் சென்றிருக்கின்றனவோ, நீங்கள் எதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டீர்களோ, அவையெல்லாம் சேர்ந்து உங்களை ஒரு குறிப்பிட்ட வகையான மனிதராக ஆக்கியிருக்கிறது.
      “நான் ஒரு குறிப்பிட்ட வகையான மனிதன்” என்று நீங்கள் சொல்லும்போது, எனக்கு இந்த மாதிரியான கட்டாயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் அப்படிச் சொல்கிறீர்கள். “நான் இப்படிப்பட்ட ஒரு மனிதன்” என்று நீங்கள் சொன்னால், இந்த வகையான கட்டாயங்களுடன் என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டேன், அதனால் நான் இப்படிப்பட்ட மனிதனாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நான் காலை மனிதர் அல்லது மாலை மனிதர் அதாவது மாலையில் என்னால் விழிப்புணர்வுடன் வேலை செய்ய முடியாது அல்லது காலையில் என்னால் விழிப்புணர்வுடன் வேலை செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள். இப்படி உங்கள் வெளிப்பாடுகள் வளர்ந்து கொண்டே போகிறது. சிலர் ப்ளாக்பெரி அலைபேசி வைத்திருக்கிறார்கள், சிலர் ஆப்பிள் அலைபேசி வைத்திருக்கிறார்கள்; இப்படி இந்த உலகம் ஏகப்பட்ட வழிகளில் பகுக்கப்பட்டுள்ளது. அவை வெறும் அலைபேசிகள் அல்ல, அவற்றை நீங்கள் பயன்படுத்திவிட்டு கீழே வைப்பதுடன் முடிந்துவிடுவதில்லை, அவற்றுடன் நீங்கள் அடையாளப்பட்டு விடுகிறீர்கள். சிலர் சப்பாத்தி சாப்பிடுவார்கள், சிலர் அரிசி சாப்பிடுவார்கள், சிலர் தோசை சாப்பிடுவார்கள், சிலர் இட்லி சாப்பிடுவார்கள்… இப்படி எல்லா வகையான மனிதர்களும் இருக்கிறார்கள்.
      நீங்கள் எந்த வகை என்பது ஒருவிதமான கட்டாயம்தான். இதுபோன்ற கட்டாயங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாததால் நீங்கள் உங்களை யோகாவின் செயல்முறைகளில் ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள். அந்தக் கணத்துக்கு என்ன தேவையோ அப்படிப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்கள். அது காலையாக இருந்தால் ஒரு காலை மனிதராக இருக்கிறீர்கள், மாலையில் ஒரு மாலை மனிதராக இருக்கிறீர்கள். அதாவது நீங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறீர்கள். இந்த நெகிழ்வுத்தன்மையை முதலில் உங்கள் உடலிலிருந்து தொடங்குகிறீர்கள். பிறகு அது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வந்துவிட வேண்டும் – உங்கள் உடல் அமைப்பு, உங்கள் மன அமைப்பு, உங்கள் உணர்ச்சிகளின் அமைப்பு, உங்கள் கர்ம அமைப்புகள் என்று அனைத்திலும் வந்துவிட வேண்டும். அனைத்தும் நெகிழ்வுத்தன்மையுடன் ஆகிவிட வேண்டும், எப்படித் தேவையோ அப்படி ஆக வேண்டும். இந்த வழி அல்லது அந்த வழியில் சிக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
      யோகா என்பது, நாம் ஆளுமைத்தன்மை என்று அழைக்கும், நமக்குள் வலிமையாகப் பதிந்திருக்கும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு செயல்முறை, ஒரு தொழில்நுட்பம், ஒரு விஞ்ஞானம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதராக இருப்பதிலிருந்து ஒரு இருப்பாக மாறுவதற்கு உதவுவது. நீங்கள் ஒரு மனிதராக இருக்கிறேன் என்னும்போது உங்களைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கிவிட்டீர்கள் என்று பொருள். நீங்கள் உருவாக்கிவிட்ட அந்த கூட்டிற்குள்தான் உங்களால் செயல்பட முடியும். இந்த கூட்டை உடைத்தால், அதற்கு மேல் நீங்கள் ஒரு மனிதராக இல்லாமல், வெறும் ஒரு இருப்பாக இருப்பீர்கள் – ஒரு உயிராக, கடவுளைப் போன்று ஒரு இருப்பாக மட்டும் இருப்பீர்கள். யோகா என்றால் மெதுவாக அந்தக் கூட்டை மெலிதாக்கி, மெலிதாக்கி, அதில் நிறைய நுண்துளைகளை இட்டு, ஒருநாள் அந்தக் கூடு இல்லாமல் நீங்கள் இருக்கமுடியும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்று பொருள்.
      இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்தன்மையின் அத்தனை அம்சங்களும் ஒரு சுழற்சி முறையில் செயல்படுகின்றன. கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன, சூரிய மண்டலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பால்வெளி மண்டலத்தில், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் சுழன்று வருகின்றன. உங்கள் உடலுடன் நீங்கள் அதிகமாக அடையாளப்படும்போது, நீங்களும் ஒரு சுழற்சியில் சிக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் அனுபவங்கள் சுழற்சி அடைகின்றன, வாழ்க்கையின் செயல்பாடு சுழற்சி முறையில் அமைகிறது. நீங்கள் கவனமாக ஆராய்ந்து பார்த்தால், உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் கூட சுழற்சி முறையில்தான் வருகின்றன.
     யோகா என்றால், ஒரு நிலையில், வாழ்வின் சுழற்சியினை உடைப்பது; இப்போது சுழற்சியில் இருக்கும்போது நீங்கள் எங்கோ செல்வதைப் போன்று ஒரு எண்ணம் உங்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் உண்மையில் நீங்கள் எங்கும் செல்வதில்லை. மீண்டும், மீண்டும் அதே சுழற்சிக்குள்தான், அதே விஷயத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். யோகா என்றால் இந்த வளையத்தைத் திறந்து, ஒரு நேர்கோடாக நீட்டி, அந்த நேர்கோட்டை நீங்கள் பின்தொடர்ந்து சென்றால், ஏதோ ஓரிடத்திற்கு நீங்கள் சென்று சேர்வதற்கு உதவுவது என்று பொருள். நீங்கள் சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்க மாட்டீர்கள்.
      உங்களில் பலர் இதை ஏற்கனவே ஆராய்ந்து பார்த்திருக்கக் கூடும். இதுவரை ஆராயவில்லையென்றால் இனி இதை ஆராயாதீர்கள், ஏனென்றால் அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை நான் இப்போதே தருகிறேன். இரண்டு, மூன்று, ஐந்து வருடங்களாக நீங்கள் சாதனா செய்து வந்திருக்கலாம். அதை நீங்கள் ஒரு மூன்று மாதங்கள் நிறுத்திப் பாருங்கள். திடீரென்று இவையெல்லாம் என்னுள் ஒரு பகுதியாக இருந்தனவா என்று நீங்கள் கற்பனை கூட செய்து பார்த்திராத கட்டாயங்களையெல்லாம் பார்ப்பீர்கள். முன்பே போய்விட்ட அவையெல்லாம், திடீரென்று உங்களில் ஒரு பகுதியாகிவிடும். ஆசிரமத்தில் நடக்கும் ஒரு சாதாரண விஷயம், காலை பத்து மணிக்கும், மாலை ஏழு மணிக்கும் பரிமாறப்படும் உணவு. குறைந்தபட்சம் 90 சதவிகித மக்கள் இதை கடைப்பிடிக்கிறார்கள், இன்னொரு பத்து சதவிகிதம் பேர் – அவர்களுடைய கைகள் எதையோ தின்று கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு நொறுக்குத்தீனியை அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது.
      தங்கள் சாதனாவை ஒழுங்காக செய்பவர்கள் காலையில் உண்கிறார்கள், மீண்டும் மாலை வரை அவர்கள் உணவைப் பற்றி நினைப்பதில்லை. அதைப் பற்றி அவர்களுக்குள் நினைவு தோன்றுவதில்லை, ஏனென்றால் அது இனியும் அவர்களுக்கு ஒரு கட்டாயமாக இருப்பதில்லை.
      நீங்கள் உண்ணுங்கள், விழிப்புணர்வுடன் உண்ணுங்கள், இல்லையேல் வேண்டாம். உங்கள் சாதனாவை மூன்று மாதங்களுக்கு நிறுத்திப் பாருங்கள்; உங்கள் கை எதை எதையோ எடுத்து உங்கள் வாயில் போட்டுக் கொள்ளும். இந்த கட்டாயங்களெல்லாம் நீங்கள் சாதனாவை உடைத்த உடன் மீண்டும் உங்களுக்குள் திடீரென வந்துவிடும். ஏனென்றால் இயற்கை உங்களை அத்தனை சுலபமாக விட்டுவிடாது. அதற்காக நீங்கள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இல்லையேல், வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதிலேயே நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.
      ஒரு சுழற்சியை ஒரு சர்கஸ் என்றும் சொல்லலாம். நீங்கள் விழிப்புணர்வடைந்து விட்டால், அனைத்தும் உங்களுக்கு ஒரு சர்கஸ் என்று தோன்றும். நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லையென்றால், உங்களுக்கு முன்னே மூன்று அடி வரை மட்டும்தான் உங்களால் பார்க்க முடியும். பிறகு அது மட்டுமே உங்களுக்கு உண்மையாக இருக்கும். உங்கள் வாழ்வின் முழு சுழற்சியையும் உங்களால் பார்க்க முடிந்தால், திடீரென்று அது ஒரு சர்கஸ் போல ஆகிவிடுகிறது. அது ஒரு சர்கஸ் என்று நீங்கள் உணரும்போது, மீண்டும், மீண்டும் அந்த சர்கஸுக்குள் போக நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்கள் தொலைநோக்குப் பார்வை மிகவும் குறுகியதாக இருந்தால்தான், உங்களுக்கு முன்னால் மூன்று அடி வரை மட்டும் பார்ப்பீர்கள், அவை அனைத்தும் உங்களுக்கு உண்மையானதாகத் தெரியும். நீங்கள் உங்களைத் திறந்த நிலையில் வைத்துக் கொண்டு முழு வட்டத்தையும் பார்த்தால், நீங்கள் சென்று கொண்டிருக்கும் வழியைப் பார்த்தால், அப்போது அது ஒரு சர்கஸ் போலத் தோன்றும். கண்டிப்பாக அதை நீங்கள் முடிவின்றி தொடர விரும்ப மாட்டீர்கள். அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.
      வாழ்க வளமுடன்!........

Wednesday, November 7, 2012

பணம் வந்தால் துன்பமும் சேர்ந்து வருமா? ஆனந்தம்


      பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது முட்டாள்தனமும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த நிலையில் துன்பமும் சேர்ந்து வரலாம். அதற்காக பணம் வந்துவிட்டாலே துன்பமும் வந்தாக வேண்டும் என்று கிடையாது. பணம் உங்களுக்கு நிச்சயமாக வசதிகளைக் கொண்டு வருகிறது.
      ஆனால் வசதிகள் ஏன் துன்பமாக மாற வேண்டும்? நாம்தானே வசதியை தேடினோம்? அப்படியிருக்க, நாம் விரும்பியதே நமது துன்பத்திற்கு ஏன் காரணமாக வேண்டும்? ஏதோ ஒன்று நமது கையில் இருக்கும்போது, அதனுடன் சேர்ந்த மற்றொன்றை முழுவதுமாக மறந்து விடுகிறோம். மனிதர்களின் பெரிய பிரச்சினை இது. காலையில் சாப்பிட உட்கார்கிறீர்கள். ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கிறது. இப்போது மற்றவற்றை மறந்து விடுகிறீர்கள். ஊறுகாய், ஊறுகாய், ஊறுகாய் மட்டுமே வயிறு நிரம்ப சாப்பிடுகிறீர்கள். மாலையே பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை வரை கூட அது காத்திருக்காது.
      அதே போலத்தான் செல்வமும் செழுமையும். அவை உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வரும்போது மிகவும் அழகாக இருக்கும். உங்களிடம் போதுமான பணம் இருந்தால் அடுத்த நாள் வேலை செய்வதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் உட்கார்ந்து விடலாம். இன்று சம்பாதித்தால்தான் நாளை உணவு என்ற நிலையிலிருப்பவர், விரும்பினாலும் அப்படி தியானத்தில் உட்கார முடியாது. எனவே பணம் உங்களுக்கு துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்கு துன்பத்தை வரவழைக்கிறது.
      ஏராளமானோர் தினமும் கோவில், மசூதி, மாதா கோவிலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து திரும்பிவரும்போது அவர்கள் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் முகம் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறதா? கடவுளைப் பார்த்து வந்த பின் அவர்கள் முகம் பிரகாசமாக மாறியிருக்கிறதா?  கோவிலிலிருந்து திரும்பிவரும் போது ஒருவருக்கொருவர் ‘கிசுகிசு’வோடு திரும்பி வருவார்கள். கடவுளைப் பற்றி பேசுவதை விட கோவிலில் பார்த்த மற்ற மனிதர்களைப் பற்றிக் கிசுகிசுவோடு தான் வெளிவருவார்கள். அல்லது அவர்கள் விட்டுச் சென்ற செருப்பு வேறு யாரோடாவது நடந்து போய் விடடால் இந்த உலகத்தையே, ஏன் கடவுளைக் கூட சபிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
      கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. அதிக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வெளிவருகிறார்கள். இது மிகவும் வெட்கக் கேடானது, இல்லையா? தெய்வீகத்தை விட தோசை அவர்களுக்கு அதிக திருப்தியைத் தந்திருக்கிறது. எனவே தெய்வீகமா, செழுமையா, தோசையா என்பதல்ல கேள்வி. மனிதர்கள் விஷயங்களை மோசமாகக் கையாண்டால் எப்படியும் துன்பம் வருகிறது என்பதைப் பாருங்கள்.
      துன்பம் பணத்தால் வரவில்லை. பணம் உங்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக உங்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம் வருகிறது. அதை சட்டைப் பைக்குள் மட்டும் வைத்துச் கொண்டால் அது மிகவும் அற்புதம். பணம் இருக்க வேண்டிய இடம் அதுதான், உங்கள் தலை இல்லை. பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இவ்வுலகில் அற்புதமான பணிகள் பலவற்றை செய்யமுடியும்.நீங்கள் வசதியாக இருப்பதற்கும், மற்றவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கும் பணம் பயனுள்ளதாக இருக்கிறது.
      உலகில் மனிதர்களுக்கிடையே இதுதான் ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. உலகின் மேற்கு பகுதியில் உள்ளவர்கள் உள்நிலையை சரியாகக் கையாள்வதில்லை. அமெரிக்க நாட்டில் 40 சதவீத மக்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறையாவது மன அழுத்தத்திற்கான மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் வெளியில்தான் அனைத்தும் இருக்கிறது என நினைத்து உள்சூழ்நிலையைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வாழ்க்கை ஒரு குழப்பமாகி விடுகிறது.
      இங்கு, இந்தியாவில் வேறு விதமான தவறு நடக்கிறது. சொர்க்கம்தான் எல்லாமே என்று நினைத்து தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள். இங்கு பெரிய கோவிலைக் கட்டுவார்கள், ஆனால் சரியான கழிவறை இருக்காது. இது இந்தியர்களின் பிரச்சினை. எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது என்று நினைத்து தற்போது தாங்கள் வாழும் உலகை மறந்து விடுகிறார்கள், எனவே அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். எனவே எப்போதும் இந்த இரண்டிற்கும் இடையிலான ஒரு சமநிலையைக் கொண்டு வர வேண்டும். அதற்கு தான் யோகா துனைபுரிகிறது. வாழ்க வளமுடன்!

Tuesday, November 6, 2012

ஆன்மீகம் ஓர் உயரிய தற்கொலை? ஆனந்தம்


     
      பொதுவாக, பழங்குடியினர் சமுதாயங்களில் தற்கொலைகள் மிகக்குறைவாகவே நிகழ்கின்றன. உங்களுடைய பிழைப்புக்கே நீங்கள் கஷ்டப்படும் போது, வாழ்க்கையை எப்படி முடித்துக் கொள்வது என்று சிந்தனை செய்யமாட்டீகள். வளர்ச்சியடைந்த சமூகங்களில் தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன. அல்லது சமூகத்தின் ஒருபகுதி வளமாக இருந்து ஒருபகுதி வறுமையில் இருக்கும் போது தற்கொலைகள் நிகழ்கின்றன. முழுசமூகமே ஏழ்மையில் இருக்கும் போதோ அல்லது வளம் குறைவாக இருக்கும் போதோ அங்கு தற்கொலைகள் நிகழ வாய்பில்லை ஏனென்றால் அவர்களுடைய முழுநோக்கமும் உயிர் வாழ்வதைப் பற்றி தான் இருக்கும்.
      நீங்கள் ஏழ்மையில் இருக்கும் போது நம்பிக்கை என்பது அங்கே பெரிய விசயமாக இருக்கின்றது. தெருவில் வசிக்கும் ஏழை மனிதர் ஒருபரிசுச் சீட்டை வாங்கினால், அதனால் அவருக்கு ஒரு நம்பிக்கை வந்து விடுகின்றது. அந்த பரிசு விழுந்தால் அதை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றார். பரிசு முடிவுகள் வெளிவந்து கிடைக்க வில்லைஎன்றால் இருக்கவே இருக்கின்றது அடுத்த பரிசுச்சீட்டு என்று அடுத்ததின் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துவிடுகின்றார். இதனால் அவர்கள் தொடர்ந்து பரிசுச்சீட்டு வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். பரிசு முடிவுகள் வரும் முன்பே கூட இன்னொன்றை அவர்கள் வாங்கிவிடுவர்.
      ஆனால் ஒரு பணக்காரருக்கு அவர் வாழ்வில் அந்த பரிசுத்தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது. அது அவருக்குள் எந்த ஒரு பெரிய மற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்று அவருக்குத் தெரியும். எனவே அவருக்கு ஆழமான அவந‌ம்பிக்கை உணர்வு தான் இருக்கும். உங்களுக்கு அவனம்பிக்கை தோன்றிவிட்டால் ஒன்று தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் அல்லது ஆன்மீகவாதிகள் ஆகிவிடுவீர்கள். இரண்டே வாய்புகள் தான்.
      ஆன்மீகம் என்பது உங்களுக்குள் இருக்கும் "நான்" என்கிற எண்ணத்தை, உங்கள் அகங்காரத்தை அழிப்பது. இதுவும் ஒருவகை தற்கொலை தான். ஆனால் இதில் பொருள் தன்மையை தாண்டிய பரிமாணங்களைப் பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆகவே நீங்கள் வேறு தளத்தில் தற்கொலை செய்ய முயர்ச்சிக்கிறீர்கள். உடலை நன்றாக வைத்துக் கொண்டு முற்ரிலும் வேறொறு தளத்தில் தற்கொலை செய்ய முயல்கிறீர்கள். உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்ப்படும் சமயம், உங்கள் அறிவுக்கு உடலைத் தவிர வேறொன்றும் தெரியாதபோது உடலை அழித்துக் கொள்ள முற்படுகிறீர்கள். உங்கள் அறிவு மேல்நிலை அறிவானால் ஆன்மீகத்தின் மூலமாக தற்கொலைக்கு முயல்கிறீர்கள். அப்படியானால் ஆன்மீகம் என்பது ஓர் உயர்ந்த நிலை தற்கொலை.
      பழங்குயினர் சமூகம் போலவே மிருக இனங்களில் தற்கொலைகள் மிகக்குறைவு. உதாரணமாக பாம்புகள் தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்றால் விரக்தியின் காரணமாக தற்கொலை அல்ல, பாம்புகளுக்கு தங்களுடைய சக்தி நிலை பற்றிய விழிப்புணர்வு உண்டு. இந்த விழிப்புணர்வு "வியான பிராணா" என்னும் பரிணாமத்திலிருந்து வருகிறது. எனவே பாம்புகளுக்கு தம் உடலைப் பற்றியும், உடலின் செயல்படுகளைப் பற்றியும் விழிப்புநிலை மிகாதிகமாக இருக்கிறது.
      யோகாவில் பாம்புகளைப் பலவிதமான குறியீடுகளாக பயன்படுத்தக் காரணம், அதற்குத் தன் உடலைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் தான். அதனுடைய சக்தி வடிந்து மிகக்குறைந்த நிலைக்கு வரும்போது, அவை ஓரிடத்தை தேர்ந்தெடுத்து அங்கு உணவருந்தாமல் அமர்ந்துவிடும். உணவு தேடுவதாலோ அல்லது வேறு வழிமுறைகளிலோ அதன் உடல் போஷாக்கு பெறப்போவதில்லை என்று அதற்க்குத் தெரியும். எனவே உணவு உண்ணாமல் அங்கேயே உட்கார்ந்து 7 முதல் 12 நாட்களுக்குள் அதுதன் உயிரை விட்டுவிடுகிறது. தன் வாழ்க்கையை அது நீட்டிப்பதற்கு அது முயர்சிக்கவில்லை. வாழ்க்கை முழுதும் அது உயிர் வாழ்ப் போராடினாலும். தன் சக்தி ஒருகுறிப்பிட்ட நிலையை அடைந்து விட்டன என்று தெரிந்துவிட்டால், பிறகு அது உண்ணமறுத்து உயிரை விடுகின்றது. இப்படித்தான் மனிதர்களும் உயரிய நிலைக்கு வரவேண்டும். வாழ்க வளமுடன்!

Sunday, November 4, 2012

செல்போன்கள் என்ன செய்துவிடும்? ஆனந்தம்


     
      எலெக்ட்ரானிக் சாதனங்கள் உங்களைச் சுற்றியுள்ள விசயங்களில் இருந்து உங்களை தனிமைப் படுத்திவிடுகின்றன. . எப்போது பார்த்தாலும் நீங்கள் அந்த‌ எலெக்ட்ரானிக் இசையை உங்கள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். இங்கு வீசும் தென்றலை, பறவையை, உள்ள உங்களைச் சுற்றி நடக்கும் விசயங்களை கவனிக்கத் தவறிவிடுவீர்கள். எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் நீங்கள் வாழ்கையின் உயிர்ப்பினை கூட‌ முழுமையாகத் தொலைத்துவிட நேரிடலாம்.
      தொழில்நுட்பங்கள் எல்லாம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்க்காக உருவாக்கப்பட்டவை தான். ஆனால் நாம் துரதிருஷ்டவசமாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நம்மை நாமே மந்தப்படுத்திக் கொள்கிறோம். இபோதெல்லாம் எதையுமே உள்வாங்கிக்கொள்ளும் திறன் பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை. இயற்கையான சூழலில் உள்ளவர்கள் இயற்கையை ரசிக்கிறீர்களா? ரசித்துப்பாருங்கள். நீங்கள் சென்னைக்கோ அல்லது மும்பைக்கோ போகும் போதுதான் நீங்கள் எதை இழக்கிறீர்கள் என்பது தெரியவரும்.
      இயற்கையில் ரசிப்பதற்கு பல விசயங்கள் உங்களைச் சுற்றி இருக்கின்றன. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால் பல்லாயிரம் விசயங்கள் நடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்களை உங்கள் மடியிலோ, காதுகளில் சொருகியோ வைத்துக் கொண்டு இருந்தால். நீங்கள் சுற்றி நடப்பவை அனைத்தையும் தவற விட்டுக்விடுவீர்கள். . கம்ப்யூட்டரை பார்க்கும் போது உங்கள் கண்கள் கம்ப்யூட்டருடன் ஒட்டிக் கொண்டு விடுகின்றன.
      இந்த உலகத்தைப் பாருங்கள்! அதைக் கவனியுங்கள்! இயற்கையைப் பார்ப்பதும், அதைக் கவனிப்பதும்,அதை இன்னும் கூர்மையாக கவனிப்பது எப்படி என்றும் கற்றுக் கொள்வது மிக முக்கியம்.
      எலெக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துபவர்களால் காட்டில் ஒரு நாள்கூட உயிர் பிழைத்திருப்பது மிகக்கஷ்டம். ஆனால் நீங்கள் பக்கத்தில் உள்ள ஏதேனும் கிரமத்திற்கு சென்று பாருங்கள். அங்கே உள்ள மிக வயதான கிராமவாசி கூட உங்கள் கண்களால் நீங்கள் பார்க்க முடியாத விசயங்களைக் கூடப் பார்பார். உங்கள் காதுகளால் நீங்கள் கேட்கமுடியததைக் கூட கேட்பார். அவருடைய புலன்கள் அத்தனை கூர்மையாக உள்ளன.
      இப்போது நீங்கள் தெரிந்துகொள்வது (perception) அனைத்தும் ஐந்து புலன்களின் மூலம் தான் நடக்கிறது. அவற்றை மந்தமாக்கிக் கொள்ளாதீர்கள். எலெக்ட்ரானிக் பொருட்களை அதிகம் பயன் படுத்தினால், அது பாதிப்பை ஏற்படுத்தும்  என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் அலைபேசியை பயன்படுத்தினால் மூளையில் கட்டி ஏற்படலாம் என்று உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
      அலைபேசிகளின் அதிக பயன்பாடு குருவிகளின் இனத்தைக் கொல்ல‌ முடியும் என்றால் அது உங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்ப்படுத்தாமல் இருக்க முடியுமா? ஆனால் அலைபேசிகள் இல்லாமல் இப்போது மனிதனால் வாழமுடியாது. நாவீன வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது. ஆனால் அதன் பயன்பாட்டைக் குறைக்க முடியுமா? என்றால் முடியும்!
      எனவே உங்களின் எலெக்ட்ரானிக் பொருட்களால் உங்களின் புலன் திறன்களை மந்தப்படுத்திக் கொள்ளாமல், உங்களின் உள்வாங்கும் திறனுக்கு நீங்களே தடை விதித்துக்கொள்ளாமல் எலெக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, மேம்பட்ட திறனுடன் வாழவேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்!
.................................................வாழ்க வளமுடன்!.......................................................................