Tuesday, August 30, 2011

மூன்றின் மகிமை ஆனந்தம்


      வாழ்க்கையின் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையை கவனித்தால் போதும். உங்கள் வாழ்க்கை ஒன்றுமில்லாது போய்விடக்கூடாது என்ற அச்சம் உங்களைச் செலுத்துகிறது. அதனால் படிப்பு, வேலை, பணம், பதவி, உறவு, குடும்பம், பட்டம் என்று இவையெல்லம் மகிழ்ச்சி தரும் என நினைப்பவற்றை எல்லாம் வேட்டையாடிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லவற்றையும் உடமையாக்கிக் கொண்டால் முழுமை கிடைத்து விடும் என்ற போதையில், வெறியோடு எப்போதும் எதையாவது வைத்து உங்களை நிர‌ப்பிக்கொண்டே இருக்கிறீர்கள்.
      உங்கள் பணப்பெட்டி, உங்கள் மூளை, உஙகள் இதயம் இந்த மூன்றைத்தவிர வேறு எதை நிர‌ப்பும் திறன் உங்களிடம் இருக்கின்றது. இந்த மூன்றையும் நிர‌ப்பும் திறனாவது உங்களிடம் முழுமையாக இருக்கிறதா?
      உலகின் அத்தனை நூலகங்களின் நூல்களைக் கரைத்து உங்கள் மூளைக்குள் ஊற்றினாலும் அவற்றில் இடம்பெறாத புதிய தகவல்கள் தினம் பிறக்கும்.
      பல கோடி பேரை உறவாக ஏற்றிருந்தாலும், அடுத்து பிறக்கப் போகும் குழந்தைகளை ஏற்க இதயத்தில் இடமிருக்கும்.
      இந்த மூன்று வேட்கைகள் தானே உங்கள் போராட்டங்கள் அத்தனைக்கும் அடிப்படை? ஆனால் இவை எதிலும் நிறைவு இல்லை, முழுமை இல்லை இல்லையா?
      இப்படி செல்வம், அறிவு, உறவு இவற்றை நினைத்து ஓடுகிறீகள், கிடைத்தமட்டும் எடுத்துக்கொண்டு மேலும் ஓடுகிறீகள், சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு, கவனியுங்கள்.
      முழுமைதருவதாய் இருந்திருந்தால் அவை வாழ்வில் உங்களுக்கு ஆனந்தத்தை அல்லவா கொண்டு வந்து வழங்கியிருக்க வேண்டும். அப்படியா உணருகிறீர்கள், பல சமயங்களில் உங்கள் வேட்கையிம் கசப்பும், காழ்ப்பும், எதிர்ப்பும், ஏமாற்றமும், வருதமுமல்லவா அடைகிறீர்கள். இவை ஏன் என்று சிந்தித்தீர்களா?
      இந்த பூமியில் மகிழ்ச்சி என நினைப்பவற்றின் பின்னே ஓடுபவர்கள், தங்கள் வாழ்க்கையே தொலைக்கிறார்கள். தொங்கிய முகங்களுடன் ஆனந்தமின்றி கிடக்கிறார்கள்.
      மாறாக அரண்மனையும், ஆள்பலமும், ஊரும், உறவும் வேண்டாம் என்று உதறி விட்டுப் போன புத்தர் தன் தேடலில் உச்சபட்ச ஆனந்தத்தையல்லவா ஞானமாகக் கண்டார்? நீங்கள் தேடும் இந்தத் தேடுதலை விட்டுவிட்டு, அந்த ஆனந்ததை அவரைப்போல் எத்தனையோ ஞானிகள் அடைந்திருக்கிறார்களே எப்படி?
      ஒவ்வோரு விசயத்திலும் மனிதன் ஆனந்தத்தை தேட ஆரம்பித்தால், அதன் சூட்ட்சுமத்தை புரிந்து கொண்டால், அவன் அன்றாடம் சந்திக்கும் நரகங்களை சொர்கங்களாக‌ மாற்றிக் அமைக்க முடியும்.

அதிசயத்தை நிகழ்த்துவோம் ஆனந்தம்


      சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைதொரு தினம், இன்றைக்கு மத்தியபிரதேசம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதி. அங்கு பில்வா என்று ஒரு தீவிரமான ஒரு பக்தன் இருந்தான். அவன் அழைத்தால் பாம்புகள் அவனைச் சுற்றிக்கூடும் அந்த அளவுக்கு பாம்புகளுக்கு நெருக்கமாக இருந்த இனத்தைச் சேர்ந்தவன்.
      அன்றைய சமூகத்தின் சில முட்டாள்த் தனமான சில கட்டுபாடுகளுக்கு கட்டுப்படாததால் அவன் பலமுறை தண்டிக்கப் பட்டான். அவனுடைய ஒரு செயலை அச்ச்மூகம் அன்று மன்னிக்கத் தயாராக இல்லை. உச்சபட்ச தண்டனையாக அவனுக்கு மரணதண்டனை என்று அன்று தீர்மானிக்கப்பட்டது. அவன் எந்த பாம்புகளுக்கு நெருக்கமாக இருந்தானோ, அந்த பாம்புகளாலேயே அவனுக்கு மரண தண்டனை என்று அப்போது தீர்மாணிக்கப்பட்டது.
      அசைய முடியாதபடி அவனை ஒரு மரத்துடன் பினைத்தார்கள். கருநாகம் ஒன்றை உசுப்பி அவனைக் கடிக்க வைத்தார்கள். அவனை சாகவிட்டு விலகிப்போனார்கள். உடலில் விஷம் பாய்ந்ததால், அவன் ரத்தம் அடர்த்தியாகிக் கொண்டேபோனது. ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பம்ப் செய்ய முடியாமல் இதயம் திணறியது. மூச்சு முட்டியது.
      அத‌ற்க்கு முன்பாக அவன் சுவாசத்தைக் கவணித்ததில்லை. தன்னிச்சையாக நட‌ந்தேரும் எந்த விசயத்தையும் மனிதன் கவனிப்பதில்லை. அதில் தடுமாற்றம் ஏற்ப்பட்டால் தான் அதன் முக்கியத்துவம் அவனுக்கு புரிகிறது.
      மரணத்தின் வாயிலில் இருந்த பில்வா, வேறு ஏதும் செய்ய இயலாததால் தனது திண‌றும் முச்சை கவணிக்கத் தொடங்கினான். உள்ளே போவதும் வருவதுமாக இருந்த காற்று, அந்த உடலுடன் உயிரை பிணைத்து வைதிருந்ததை அப்போதுதான் அவன் கவனித்தான்.
      அது ஒருவகை தியானம் என்று தெரியாமலேயே அவன் அதில் ஈடுபட்டான். அடங்கும் மூச்சை அவன் இடைவிடாமல் மிகவும் விழிப்புணர்வுடன் கவனித்தான். அவனுள் பெரும் மாற்றம் நிகழ்ந்தது, முக்தியின் பாதையில், ஆனந்தத்தின் திசையில் செலுத்தப்பட்டுவிட்டான். விஷம் என்று நினைத்து அவனுக்கு செலுத்தப்பட்டது பேரமிர்தமாக மாறிற்று.

Monday, August 22, 2011

எங்கே தனித்தன்மையும் அகங்காரமும் வேறுபடுகிறது ? ஆனந்தம்


      தனித்தன்மை என்றால் தனித்துவம் – யாருடனும் ஒப்பிடமுடியாது. ஒப்பிடமுடியாத தனித்துவம் அதுதான் தனித்தன்மை. தனித்தன்மை அழகானது. அப்படித்தான் கடவுள் உங்களை உருவாக்கினார். தனிப்பட்ட விதத்தில். அகம்பாவம் ஒப்பிடுவதால் வருவது, அகம்பாவம் உன்னுடைய கண்டுபிடிப்பு. கடவுள் உனக்கு அகம்பாவத்தை கொடுக்கவில்லை, அவர் உனக்கு ஒரு தனிதன்மையைத்தான் கொடுத்துள்ளார்.
      அகம்பாவம் ஒப்பிடுதல்தான். நீ மற்றவர்களை விட அதிக புத்திசாலியாக உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ உன்னை அடுத்தவரைவிட உயர்வாக அல்லது தாழ்வாக நினைத்துக்கொள்கிறாய். அடுத்தவரை விட நீ அழகாக இருப்பதாக நீ நினைத்துக்கொள்கிறாய். அப்போது நீ அகம்பாவத்தை உள்ளே கொண்டுவருகிறாய். நீ யாருடனாவது உன்னை ஒப்பிடும்போது அந்த ஒப்பிடுதல் மூலம் வரும் முடிவு தான் அகம்பாவம்.
      நீ ஒப்பிடுவதை நிறுத்தும்போது நீ மட்டுமே அங்கிருக்கிறாய். அளவற்ற அழகோடும் தனித்துவமாகவும் இருக்கிறாய். எல்லா உயர்வு தாழ்வுகளும் நான் யார், எங்கிருக்கிறேன், எனக்கு மேல் யார் இருக்கிறார்கள், எனக்கு கீழ் யார் இருக்கிறார்கள் என்பது எல்லாமே அகம்பாவத்தின் பிரச்னைகளே. உயர்ந்தவன் என்ற உணர்ச்சி கொண்ட மனிதனும் சிரமப்படுகிறான், தாழ்வுணர்ச்சி கொண்ட மனிதனும் சிரமப்படுகிறான், இருவருமே சிரமப்படுகிறார்கள், ஏனெனில் மிக உயர்ந்தவனும் கூட திருப்தி அடையக்கூடிய நிலை என்பதே கிடையாது.
      ஆபிரஹாம் லிங்கனின் முகம் மிகவும் அழகற்றது. அது அவரை மிகவும் கொடுமைப்படுத்தியது. அவர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் போது அவர் வோட்டு கேட்க சென்ற இடத்தில் ஒரு சிறிய பெண், “நீங்கள் தாடி வைத்துக் கொள்ளுங்கள், அது உங்களை சிறிது அழகாக காட்டும்” என்று கூறினாள். அப்போதிலிருந்து அவர் தாடி வைத்துக் கொண்டார். ஆனாலும் அவருக்கு அவரது முக அழகைப்பற்றிய கவனம் எப்போதும் இருந்தது. அவர் ஜனாதிபதியாகி விட்டார். ஆனாலும் எங்கே அழகான ஒரு முகத்தை காண நேர்ந்தாலும் அவர் மனம் புண்பட்டது.
      நெப்போலியன் போனபார்ட் அதிக உயரமில்லை, 5.5 – என் உயரமும் அதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டார். எப்போதும் யாருக்கும் 5.5 உயரம் கொண்டவராக இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, அதில் என்ன பிரச்னை இருக்கிறது ? நான் 5.5 உயரம் கொண்டவராக இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. 5.7 அல்லது 5.8 ஆக இருந்தால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது ? எதுவும் நடக்கப் போவதில்லை? நீ அப்படியே தான் இருக்கப் போகிறாய். 5.5 அல்லது 5.7 அல்லது 5.8 என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது ஆனால் அவருக்கு அது மிகப் பெரிய அளவில் தொந்தரவாக இருந்தது. அவர் அதில் மிகவும் கவனம் கொண்டவராக இருந்தார்.
      ஒருநாள் அவர் சுவரில் படம் ஒன்றை மாட்ட முயன்று கொண்டிருந்தார். ஆனால் அந்த இடம் அவரைவிட கொஞ்சம் உயரமாக இருந்தது. அதனால் அவரது மெய்காப்பாளன்,“சார், நான் உங்களை விட உயர்ந்து இருப்பதால் நான் இதை செய்து விடுகிறேன்” என்று கூறினான். உடனே நெப்போலியன், “நிறுத்து! அப்படி சொல்லாதே! உயர்ந்தவன் என்று கூறாதே, வளர்ந்தவன் என்று வேண்டுமானால் சொல் “என்று கூறினார்.
      அவர் அதை பற்றிய மிகுந்த உணர்வோடு இருந்தார். “உயர்ந்தவனா,? வளர்ந்தவன் என்று வேண்டுமானால் சொல்” என்றார். நெப்போலியன் கூட சந்தோஷமாக இல்லை என்றால் வேறு யார் சந்தோஷமாக இருக்க முடியும்?
      ஒப்பிடும் மக்கள் சந்தோஷமாக இருக்க முடியாது. இந்த மரங்கள் சந்தோஷமாக இருக்கின்றன. சிறிய மரம் பெரிய மரத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அவை ஒன்றையொன்றை பற்றி கவலைப்படுவதில்லை. சிறியது, சிறியதுதான், பெரியது பெரியதுதான். உண்மையில் சிறியது பெரியது உயர்ந்தது தாழ்ந்தது எல்லாமே மனித பிரிவினைதான். அவை மரங்களின் உலகில் இருப்பதில்லை.  ஒரு மிகப்பெரிய ஓக் மரம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவு மகிழ்ச்சியாக ஒரு ரோஜாசெடியும் இருக்கும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ரோஜாசெடி மட்டுமல்ல, புல் கூட ஒரு தாமரை மலரைப் போல மகிழ்வோடுதான் இருக்கும். அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
      கடவுள் ஒவ்வொருவரின் மேலும் பொழிகிறார். ரோஜாசெடி, புல், தாமரை ஆகிய எல்லாவற்றின் மேலும் எல்லா இடத்திலும் பொழிகிறார். இந்த முழு பிரபஞ்சமும் மகிழ்வோடு இருக்கிறது. மனிதன் மட்டுமே பிரச்னையில் இருக்கிறான். ஒப்பிடுதலால் அகம்பாவம் வருகிறது. தனிதன்மை உனக்கு இருக்கிறது, தனித்துவமான தனித்தன்மை உன்னிடம் உள்ளது. ஒப்பிடுதலால் எவ்வளவு பிரச்னைகள் எழுகின்றன.?
      சில நாட்களுக்கு முன் ஒரு பெண் அவளால் அவளது உடலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று என்னிடம் கூறினாள். அவள் குண்டாக இருக்கிறாள் என்பதுதான் காரணம். அவளுக்கு தான் குண்டாக இருக்கிறோம் என்ற எண்ணம் எப்படி வந்தது, ? எதனால் வந்தது,? ஒப்பிடுவதால் வந்தது.
      உன்னுள் ஒல்லியாக இருக்கும் பெண்களைப் பற்றிய ஏதோ ஒரு கருத்து இருக்க வேண்டும், அதனால்தான் ஒப்பிடுகிறாய், அந்த பெண்ணிடம் எந்த பிரச்னையும் இல்லை, நான் அந்த பெண்ணை பார்த்தேன். அவள் ஒரு அழகான பெண். ஒரு தனித்துவமான பெண், தனித்தன்மைவாய்ந்தவள். ஆனால் தேவையின்றி வேதனையை கவலையை கஷ்டத்தை உருவாக்கிக் கொள்கிறாள். அவள் தான் சிறிது குண்டாக இருப்பதால் தன்னை யாரும் நேசிப்பார்கள் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை.
      யார் இதை கொடுத்தது ? இதுதான் சரியானது என்பதை எப்படி நீ தீர்மானிக்கமுடியும்? இதுதான் சரியானது என்பதில் யாருக்கும் எந்த தெளிவும் கிடையாது. எல்லா சராசரிகளும் பொய்யானவையே. இந்த உடலுக்கு எந்த அளவு குண்டாக இருக்கலாம் என்பது யாருக்கும் தெரியாது. அந்த உடலுக்கு மட்டுமே தெரியும். உனது உடலை நேசி, உனது உடல் சொல்வதை கேள். ஒப்பிடாதே.
      இந்த ஒப்பிடுதலால் அவள் தனது முழு வாழ்க்கையையும் தவறவிடுகிறாள். இந்த ஒப்பிடுதல் பிரச்னையை உருவாக்குகிறது. அவளால் நேசிக்க முடிவதில்லை. அவளால் தன்னை யாரும் நேசிப்பதை அனுமதிக்க முடிவதில்லை, ஏனெனில் தன்னை யாரும் நேசிக்க முடியும் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை. அந்த மனிதன் விகார மனம் படைத்தவனாகத்தான் இருக்கமுடியும் இல்லாவிடில் எப்படி அவனால் ஒரு அசிங்கமான பெண்ணை நேசிக்க முடியும் ? அழகைப்பற்றிய உனது கருத்து விகாரமானதாக இருக்க வேண்டும் அல்லது நீ ஏமாற்றவேண்டும் என்றுதான் அவள் நினைத்துக் கொள்கிறாள்.
      அவள் யாரையும் நம்புவதில்லை. யாராவது வந்து அவளிடம் வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவளால் நம்ப முடிவதில்லை. அவளே அவளை நேசிப்பதில்லை, பின் எப்படி வேறு யாராவது வந்து அவளை நேசிக்க முடியும் சாத்தியமேயில்லை. உனக்கு வேறு ஏதாவது எண்ணம் இருக்க வேண்டும் அல்லது உனக்கு வேறு ஏதாவது கருத்து இருக்க வேண்டும் நீ வெறும் காமத்தில் மட்டும் ஆர்வம் கொண்டவனாக இருக்கலாம், அல்லது வேறு ஏதாவது உனக்கு ஈர்ப்பு இருக்கலாம், அவளது பணத்தின் மீது உனக்கு ஆசை இருக்கலாம். உன்னால் அவளை காதலிக்க முடியாதே, எப்படி அவளை காதலிக்க முடியும் அவள் தான் கண்ணாடியில் பார்க்கும் தனது சொந்த முகத்தையே காதலிப்பதில்லை. நீ அவளை வற்புறுத்தினால் கூட அவள் வேறு ஏதாவது வழியில் உனது காதலை அழிக்க முயற்சிப்பாள். அப்போதுதான் தான் சொன்னது தான் சரி, நீ சொல்வது தவறு என்று நிரூபிக்கமுடியும். உன்னை ஒத்துக் கொள்ள வைக்கும் அளவு சவாலை ஏற்கும் ஒரு காதலனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவள் காதலன் இன்றியே இருப்பாள். அவள் காதலன் இன்றி இருக்க இருக்க தான் அசிங்கமானவள் என்று தான் நினைத்ததுதான் சரி என்று அதில் நிலைப்படுவாள்.
      அவள் அசிங்கமானவள் அல்ல.
      நான் என் வாழ்வில் ஒரு அசிங்கமான நபரைக் கூட பார்த்ததேயில்லை. எப்படி ஒருவர் அசிங்கமாக இருக்க முடியும் ? நீ அசிங்கமான காக்கையை பார்த்திருக்கறாயா ? சாத்தியமேயில்லை. ஒரு அழகற்ற மரத்தை பார்த்திருக்கிறாயா  ?முடியவே முடியாது. எல்லாமும் அதனதன் படி அழகுதான். ஆனால் மனித இனத்துடன் மட்டும் இந்த ஒப்பிடுதல் வருகிறது, உடன் கூடவே பிரச்னையும் வருகிறது.
      ஒப்பிடாதே. அவசியமேயில்லை. மனித இனத்தில் இருக்கும் குழப்பத்திற்கு ஒப்பிடுதலும் ஒரு மிகப் பெரிய காரணம். நீ எப்படி இருக்கிறாயோ அப்படி மிகச் சரியாக இருக்கிறாய். உன்னை நேசி, உன்னை மதி. உனக்கு நீயே மதிப்பு கொடுக்காவிட்டால் வேறு யார் உனக்கு மதிப்பு கொடுக்கப் போகிறார்கள்,? உன்னை நீயே நேசிக்காவிட்டால் வேறு யார் உன்னை நேசிக்கப் போகிறார்கள். ? மக்கள் தங்களை தாங்களே மதிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் மதிப்பு கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்களை தாங்களே நேசிப்பதில்லை, ஆனால் இந்த முழு உலகமும் தங்களை நேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்போது நீ சாத்தியமற்றதை எதிர்பார்க்கிறாய். அப்படி நடக்காது. உன்னை நேசி, உனக்கு மதிப்பு கொடு, தனக்கு மதிப்பு கொடுக்கும் மனிதன் ஒப்பிடுவதில்லை, ஒப்பிடுவது மதிப்பு கொடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
      இதன் சாராம்சம் என்னவென்றால் அகம்பாவம் உள்ளவனாக இருப்பது உனக்கு நீயே மதிப்பு கொடுப்பதில்லை என்பதை காட்டுகிறது. தனித்தன்மை உள்ளவனாக இருப்பது மிகவும் சரியானது, ஆனால் அகம்பாவம் பிடித்தவனாக இருப்பது உன்னிடம் உனக்கு மதிப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. அகம்பாவத்தை விடு அது உண்ணை ஆனந்தமானவனாக மாற்றும்.
..................................................................ஓஷோ.............................................................................

Wednesday, August 10, 2011

இளைஞ‌ர்களுக்கு அறிவுரை தேவையா? ஆனந்தம்


      கல்லூரி படிப்பை முடிக்கும் கட்டத்தில் இருக்கிறேன். என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒருவிதமாக அறிவுரை சொல்கிறார்கள் என்ன செய்ய? அறிவுரை சொல்பவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்தாக தெரியவில்லை எப்படி அவர்கள் சொல்வதைக் கேட்பது?
      உங்கள் வயதில் நான் இருந்தபோது, நான் எந்த சுவாமிஜி முன்னாலும் உட்கார்ந்து கொண்டு இந்த மாதிரி கேள்விகள் கேட்கவில்லை. யாரோ அறிவுறுத்தி  நான் இந்த பாதைக்கும் வரவில்லை.
      எதையும் நேரடியாக அனுபவித்து உணரும் துடிப்பும் தவிப்பும் எனக்கு இருந்தது. அந்த தவிப்பும் துடிப்பும் உங்களுக்கும் இருந்தால் நீங்கள் யார் அறிவுரையையும் கேட்க வேண்டியதில்லை.
      உங்கள் அனுபவத்தில் இல்லாதது எதுவாக இருந்தாலும், அதை உண்மை என்று நம்புவது எப்படி முட்டாள்த் தனமோ, அதே போல் அதை பொய் என்று சொல்லி ஒதுக்குவதும் அதே அளவு முட்டாள்தனம்தான்.
      சிலர் சும்மா இதை செய்யப்போகிறேன் அதை சாதிக்கப்போகிறேன் என்று சும்மா திட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்க்கு யாரிடமாவது ஆலோசனை கேட்டுக்கொண்டே காலம் தள்ளுவார்கள். அறிவுரை கேட்பதிலேயே சந்தோசம் கொள்ளுபவர்கள் இவர்கள்.
      ஒருநாள் தன் கடுகடு மேலதிகாரி வீட்டுக்கு போன் செய்தார் சங்கரன்பிள்ளை வேலைக்காரன் பதில் சொன்னான் "ஐயா ஒரு விபத்தில் காலை  உடைத்துக்கொண்டார், இப்போது மருத்துவமனையில் இருக்கின்றார்!"
      மறுநாளும் அதே எண்ணுக்கு போன் செய்தார். அதே பதில் வந்தது. இப்படி தினம் தினம் காலையில் போன் செய்யவும், ஒரு நாள் அந்த மேலதிகாரியின் வீட்டு வேலைக்காரன் கோபமானான். "ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா? மறுபடி மறுபடி போன் செய்கிறாயே?" என்றான்.
      "அது ஒன்றும் இல்லை அந்த இனிமையான பதிலை தினமும் கேட்ப‌தில் ஒரு தனி சுகம் அதனால் தான்" என்றார் சங்கரன்பிள்ளை.
      இப்படி சிலருக்கு திரும்ப திரும்ப சில விசயங்களைக் கேட்பதே சுகமாக இருக்கும். எல்லாப் பிரசங்களுக்கும் போய் விடுவார்கள். அங்கு சொல்லப் படுவதெல்லாம் புரிந்தது போல் தலையாட்டுவார்கள். இவர்களுக்கு யாருடைய குரலையாவது கேட்டுக்கோண்டிருந்தாலே போதும் அதனால் தங்கள் வாழ்க்கை சீர்பட்டு விடும் என்று நம்புவார்கள்.
      அதற்க்காக அறிவுரை சொல்பவர்களை எல்லாம் நீங்கள் எதிரிகளாக பார்க்கவேண்டியதில்லை. அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தீர்ப்பு எழுதுவது தவறு.
      யாரோ ஒருவர் குடிகாரராக இருக்கிறார். அதனால் அவருக்கு எல்லாநோய்களும் வந்துவிட்டன. அவர் குடித்து விட்டு தெருவோரம் விழுந்து கிடக்கிறார். ஒயின் ஷாப் வாசலில் கூடுபவர்களைப் பார்த்து கூக்குர‌லிடுகிறார் "டேய் குடிக்காதீங்கடா, உடம்புக்கு கெடுதல்!"
      "அட இவனே குடிகாரன், இவன் என்ன நமக்கு சொல்வது?" என்று நீங்கள் குடிக்க ஆரம்பித்தால் பாதிப்பு யாருக்கு? அவ‌ருடைய மோசமான அனுபவத்தில் அவர் அறிவுரை சொல்கிறார். தகுதி இல்லாத‌வரின் அறிவுரை என்று அதைக்கேட்க மறுப்பது எப்படி புத்திசாலித்தனம் ஆகும்.
      "சிகரெட் பிடிக்காதெ என்று என் அப்பா சொல்கிறார், ஆனால் அவரே செயின் ஸ்மோக்கர்" என்று எத்தனையோ இளைஞர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
      உங்கள் அப்பா உங்க‌ளுக்காக எதைஎதையோ கொடுத்த போது அவர் அதே போல் தனக்கும் வைத்துக்கொண்டிருக்கிறாரா என்று என்றைக்காவது கவலைப்பட்டீர்களா? அறிவுரை கொடுக்கும் போது மட்டும் அது அவருக்கும் பொருந்த வேண்டும் என்று நினைக்கிறீகளே? அறிவுரை உங்களுக்காக கொடுக்கப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் தான் அதைப் பார்க்க வேண்டும்.
      பிரபல சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அந்த தம்பதி வந்திருந்தனர்.
      "என் மீது இவருக்கு அக்கறையே இல்லை" என்றாள், மனைவி.
      இவளுக்கு என்ன குறை வைத்தேன்? பெண்கள் கிளப்பில் உறுப்பினர் ஆக்கியிருக்கிறேன். வீட்டில் நீச்சல் குளம், ஜிம், ஹோம் தியேட்டர் என எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறேன். அக்கறையில்லாமலா அவையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன்?" என்றான், பிஸியான கணவன்.
      இருவரிடமும் விவரங்களையெல்லாம் கேட்டு முடித்த சைக்கியாட்ரிஸ்ட் எழுந்தார்.
      "இங்கே கவனியுங்கள்" என்று கணவனிடம் சொல்லிவிட்டு, அந்த மனைவியின் முகத்தை தன் கைகளில் தாங்கிப் பிடித்தார். ஆசையாக வருடிக்கொடுத்தார். "நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்று அவர் காதில் கிசுகிசுத்தார். கடைசியில் அழுத்தமாக அவளுக்கு ஒரு முத்தமிட்டார். அந்த பெண் திகைத்து போயிருந்தாள், அடுத்து அந்த‌ சைக்கியாட்ரிஸ்ட் அந்த கணவனிடம் திரும்பினார்.
      "உங்கள் மனைவிக்கு வாரத்திற்க்கு இரண்டு தடவையாவது இந்த காதலும் அன்பும் தெவைப்படுகிறது" என்றார்.
      கணவன் தன் டைரியை புரட்ட்டிப் பார்த்து விட்டு சொன்னான்..... "திங்கள் மற்றும் வியாழிக்கிழமைகளில் இவளை இங்கு அழைத்து வரமுடியும், உங்களுக்கு வசதிப்படுமா?"
      உங்களுக்காக சொல்லப்படுவதை சொல்பவர்களுக்கே பொருத்திப் பார்ப்பது அந்தக் கணவன் சைக்கியாட்ரிஸ்ட்டைப் புரிந்து கொண்டது போல் ஆகிவிடும்.
      எந்த அறிவுரையானாலும், அது உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதா? என்று பாருங்கள். யாரோ நமக்கு எதிரில் உட்காந்துகொண்டு நமக்காக சொல்லிக் கொண்டு இருகின்றாரே, அது என்னவென்று பார்ப்போம் என்ற திறந்த மனதுடன் அறிவுறுத்த்ல்களை அணுகுங்கள்.
      திறந்த மனதுடன் இருப்பது தான் உங்கள் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும்.

.......................................................................சத்குரு ஜக்கி வாசுதேவ்.......................................................................................

Sunday, August 7, 2011

சாதாரணமான வாழ்க்கை ஆனந்தம்


      இரண்டு ஜென் மாஸ்டரின் சிஷ்யர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

      அகிரா என்ற சீடன் தனது மாஸ்டரின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.

      "எங்கள் மாஸ்டர் மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் மாஸ்டர் என்ன செய்வார்?", என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.

      ஜிங்ஜு "எனது மாஸ்டர் ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்", என்றான்.

      அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் மாஸ்டரிடம் உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டான்.

      "அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்" என்று மாஸ்டர் சொன்னார் என்றான் ஜிங்ஜு.

      சாதாரண மனிதனாகவே இரு. அதுவே உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்.

Saturday, July 30, 2011

அகங்காரம்-தியானம் ஆனந்தம்


      அகங்காரத்துக்குள்ளேயே சிக்கி உழுன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்த அகங்காரத்தையே தன் அடையாளம் என்று கருதிக் கொண்டே இருக்கிறான். அது தன் அடையாளம் அல்ல என்கிற தெளிவு ஏற்படும் போது, அதற்கு “விழிப்புணர்வு” என்று பெயர். அடிப்படையில், அகங்காரம் என்பது ஒரு பாதுக்காப்பு ஏற்பாடு. அது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு.
      ஒரு மனிதன், தன் எல்லையற்ற தன்மையை, ஒரு எல்லைக்குட்பட்ட உடலோடோ, வேறு சில எல்லைகளோடோ அடையாளப்படுத்தத் தொடங்கும் போது அது “அகங்காரம்” ஆகிறது. தன்னுடைய அகங்காரம் இன்னொரு மனிதனின் அகங்காரத்தால் ஆக்கிரமிக்கப்படும் போது சிக்கல் ஏற்படுகிறது. மாறாக, அன்பு நிலையில் அவரிடம் இன்னொருவர் கரைந்து போகிபோது அங்கே ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், போன்றவற்றிற்கு இடமில்லை.
      ஒரு கைக்குழந்தைக்குக் கூட தேவையான நேரத்தில் தேவையான உணவு தரப்படாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தை வெளிப்படுத்த குழந்தை வீறிட்டு அழுகிறது இத்தனைக்கும் அந்தக் குழந்தைக்கு தன் பெயர் என்னவென்று கூட தெரியாது. ஆனால், தன்னைப் பற்றிய எண்ணம் அதற்குள் ஏற்பட்டு விடுகிறது.
      “அகங்காரம்” எனபது நிழலைப் போன்றது. உடல் என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டால் எப்படி நிழல் விழுவதைத் தடுக்க முடியாதோ அதைப்போல அகங்காரம் எழுவதையும் தடுக்க முடியாது. சிலர், என்னிடம் வந்து “ஊரில் மழை பெய்யவில்லை ஏதாவது செய்து மழை வர ஏற்பாடு செய்யுங்கள்” என்றுசில சமயங்களில் கேட்பதுண்டு. இதுவே, அகங்காரத்தின் வெளிப்பாடுதான்.
      இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்வது, தங்கள் சுயநலத்திற்கு இயற்கைய மாசுபடுத்தும் தொழில்களை செய்வது, பிறகு யாரைக் கொண்டாவது மழையை வரழைத்து விடாலம் என்று கருதுவது, அகங்காரம் இல்லாமல் வேறென்ன?
      மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார். “இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் உரிய செல்வம் இருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசைக்குத்தான் அது போதாது” என்றார்.
      இத்தைகய அகங்காரம் அழிவுகளை ஏற்படுத்தும், அகங்காரத்தை முழுமையாக அகற்றுவதைவிட அதனை நேர்மறையாகப் பயன்படுத்துவதே நல்லது. அகங்காரத்தை உற்றுக் கவனித்து, அதுவே “தான்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தன்மையிலிருந்து விடுபட்டு, அகங்காரத்தால் தனிமைப்பட்டுப் போகும் உயிரை மற்ற உயிர்களோடு அன்பில் கரைத்துக் கொள்வதே மனிதகுலத்திற்கு மேன்மைகள் தரும்.
      வாழ்க்கையை பலரும் வாக்குவாதங்களிலேயே கழிக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை செய்வதுதான் “சுதந்திரம்” என்று பலரும் எண்ணுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதைச் சுதந்திரமென்று மனிதன் கருதுகிறானோ, அதுவே அவனைப் பிணைத்து வைக்கிற விலங்காக மாறுகிறது.
      புகைப்பிடிப்பதை ஒரு மனிதர் விரும்புகிறார். அதையே தன் சுதந்திரம் என்றும் கருதுகிறார். ஆனால், சுற்றிலும் பெட்ரோல் சிந்தியிருக்கும்போது, “ சிகரெட் பிடிப்பது என் விருப்பம்” என்கிற அகங்காரம் வெளிப்பட்டால், அது அழிவைத் தரும்.
      சின்ன சின்ன விஷயங்களுக்கும், நிபந்தனை விதிக்கிற மனப்பான்மை மனிதனுக்கு இருக்கிறது. வாழ்க்கை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மனிதனுக்கு, எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால், தனகுத்தானே விதித்துக் கொள்கிற நிபந்தனைகளால் மனிதன், தன் எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு சிரமப்படுகிறான்.
      ‘விழிப்புணர்வு’ இந்த நிலையை மாற்றி மனினை அன்புமயமாக ஆக்கும்.
      மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும். அந்த வலியின் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும்.அது அற்புதமான அனுபவம் மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதுதான் அன்பின் அடையாளம்.
      மேற்கத்திய நாடுகளில்தான் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் கண்ணீர் என்பது மனம் அன்புமயமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உள்முகமாக, மனிதனைத திருப்பி விடுகிற நிகழச்சிகள் பல. அதை மனிதன், எந்த விதத்தில் உணர்ந்து கொள்கிறானோ, அதற்கேற்ப அவன் இயல்பு மாறுகிறது.
      உதாரணமாக, பெங்களூரில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் இருந்தார் கடும் நோய்வாய்ப்பட்டு ஆறு மாதம் படுக்கையில் இருந்தார். மரணத்திற்கும், வாழ்க்கைக்குமான போராட்டமாக அது இருந்தது.
      ஆறு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தார். அத்தனை காலம், மருத்துவமனையில் இருந்ததால், எல்லாவற்றையுமே இழந்திருந்தார். எனினும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புபோது முன்பைவிடவும் அமைதியாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியிருந்தார்.
      கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை அவருக்கு எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த மரணப் போராட்டம் காரணமாக வாழ்க்கை குறித்த தெளிவு அவருக்கு ஏற்பட்டிருந்தது.
      உள் நிலையில், தெளிவு தோன்றவும், தன்னைக் குறித்த அகங்காரமும், அடையாளங்களும் மாறவும், ஒரு மனிதனுக்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது ஒருவர் மேற்கொள்கிற பயற்சியல்ல, தன் இயல்பு நிலையோடு இருப்பது தனக்குள் இருக்கிற உண்மையை உணர்வது.
      வெளிச்சூழ்நிலையை மனிதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தன்னுடைய உள்நிலை குறித்த தெளிவு அவசியமாகிறது. அந்தத் தெளிவு வரும்வரை சிறிய நிபந்தனைக்களுக்குள், எல்லைகளுக்குள் மனிதன் சிறைபட்டிருப்பதோடு அதுவே, வாழ்வின் பலம் என்றும், தவறாகப் புரிந்து கொள்கிறான்.
      தானே, வகுத்திருக்கும் தடைகளிலிருந்து, மனிதனை விடுவிக்க வல்லதுதான் “தியானம்”. தியானம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அது குறித்து ஏராளமான, சந்தேகங்கள் தான் எல்லருக்கும் ஏற்படுகின்றன.
      தியானமும், பிரார்த்தினையும் ஒன்றா? வாழ்வில், நாம் விரும்பும் நன்மைகளை தியானம் தருமா? என்றெல்லாம், பலர் கேட்கின்றனர். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையோடு யாரக்கும், எந்தப் பிரச்னைஐயும் இல்லை. இவர்கள் விருப்பத்திற்கேற்ப, வாழ்க்கை இல்லை என்பதில் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
      உடல், மனம், ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிற வரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழக்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக்கடந்து உயிரின் மூலத்தை உணர்தற்கான கருவிதான் தியானம்.
      பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நாம், பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறோம். உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள். அதுவம், உங்களுக்கு போதிக்கப்பட ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அது வெறும் கோரிக்கைகளை இருக்கும் வரை பிரார்த்தனையால் புனிதத்தன்மை இருக்காது. ஆனால்; பிரார்த்தனையின் அடிப்படை கடவுளிடம் பேசுகிற முயற்சி, பிரார்த்தனை வழியாக கடவுளிடம் பேசுகிறீர்கள்.
      இதி என்ன சிக்கல் என்றால், இத்தனை ஆண்டுகளில் நீங்களே தொடர்ந்து, பேசிக்கொண்டேயிருக்கிறீர்களே தவிர அவரை ஒருவார்த்தைக்கூடப் பேச அனுமதிக்கவில்லை. நீங்கள் ஒரு நண்பரைப் பார்க்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் போய் அவரை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்காமல் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் என்னாகும். அடுத்தமுறை நீங்கள் அவர் வீட்டுக்குப் போகும் போது அவர் உங்களைப் பார்க்கவே பயப்படுவார். வீட்டுக்குள் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவார்.
      இப்போது கடவுளிடமும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்து அவர் இருந்து கொண்டே இல்லாது போல் பாசாங்கு செய்கிறார். எனவே, நீங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு, கடவுளைப் பேச அனுமதிப்பதற்குத்தான், தியானம் என்று பெயர்.
      தியானம் என்பது, இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வழி. வெறுமனே கண்மூடி அமர்வது, தியானமல்ல. பலர், வசியக் கலைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றுக்கொண்டு எதிரான நிலைகள். வசயத்தின் போது, யாரோ ஒருவர், அல்லது ஏதோ ஒன்றின் ஆளுமைக்குள் நீங்கள் அல்லது ஏதோ ஒன்றன் ஆளுமைக்குள் நங்கள் அகப்படுகிறீர்கள். அப்போது விழிப்புநிலை இருக்காது. ஆனால், தியானம் என்பது முழு விழிப்புணர்வில் நிகழ்வது. தியானத்தில் எல்லாற்றிடமிருந்தும் விலகி, சுதந்திரமாக இருக்கிறீர்கள். சுதந்திரம் பொதுவாகவே அச்சமூட்டுவதாய் இருக்கிறது. அதனால் தான் மேலை நாடுகளில், தியானம் என்றாலே அஞ்சுகிற நிலை இருந்தது. எல்லோரும், சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டால் கூட அடிப்படையில் ஏதாவதொன்றில் சிறைப்பட்டிருக்கவே விரும்புகிறார்கள்.
      மனைவிமார்கள் மீது, கணவன்கள் ஒரு புகார் சொல்வதுண்டு. எப்பதும் தங்களைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாரகள். அது வேண்டும், அது வேண்டும். அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று தொல்லைப்படுத்திக்க கொண்டேயிருக்கிறார்கள், என்று கணவன்மார்கள் அலுத்துக்கொள்வதுண்டு. அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும் தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது.
      தியானத்தின் வழியாக சார்பு நிலையிலிருந்து விடுதலைபெற முடியும், என்கிற அனுபவ உண்மைக்கு மனம், முதலில் தயாரடைய வேண்டும். தியானம் என்பது விழிப்புநிலை, தியானம் என்பது சுதந்திரம். தியானம் என்பது சுதந்திரம் என்பதைவிட தியானம் என்பதே சுதந்திரம் என்று சொல்ல வேண்டும்.
      தன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனை யாரும், எதுவும், அடிமைப்படுத்திவிட முடியாது. மனிதனின் புறவாழ்வுக்காக சில திறமைகள், தகுதிகள் தேவைப்படுகின்றன. அந்தத் திறமைகளோடும், தகுதிகளோடும் மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டால், அதைத் தாண்டி வளர இயலாது. புறச்சூழலின் வெற்றிக்காக பெற்றிருக்கும் தகுதிகளே தடைகளாக மாறி மனிதனை அடிமைப்படுத்த வாய்ப்புண்டு.
      மாறாக, விழிப்புணர்வு நிலையில், எதனோடும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத தன்மையில் இருக்கும்போது மனிதன் விரைவாக வளரமுடியும். அந்த விழிப்புணர்வை தியானம் தருகிறது. மனிதன் தேடிப் பெறுகிற தகவல் அறிவு அவனது உலக வாழ்க்கைக்குத் துணை புரிகிறது. ஆனால், தகவல் திரட்டு மட்டுமே இருந்தால் அந்தத் தகவல் திரட்ட உரிய முறையில் அறிவாக வெளிப்படுத்த முடியும்.
      தன் இயல்பான தன்மையை உணர்த்த ஒருவன், வாழ்வில் அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக இருக்க முடியும். தன்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ளாத போதுதான் பதட்டம் வளரும், பயம் வளரும், சுயநலம் கூடும். மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈஷா யோகா மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”
      சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள். தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.
      சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.
      இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.
      செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான். மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.
     நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை. சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.
      கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள். சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.
      எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம். இந்த அமைதிப் புரட்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

..............சத்குரு ஜக்கிவாசுதேவ்...................

Wednesday, July 27, 2011

வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள்


      ஒரு ஜென் துறவியின் குடிலுக்குள் புகுந்துவிட்ட திருடனைச் சீடர்கள் பிடித்து இழுத்து வந்தனர். திருடுவதற்கு தங்கமோ, வெள்ளியோ, பணமோ எதுவும் கிடைக்காமல், ஏற்கெனவே அவன் வெறுப்பில் இருந்தான்.
      ''திருட வந்து வெறுங் கையுடன் போகாதே. இந்தா...'' என்று துறவி தன் அங்கியைக் கழற்றிக் கொடுத்தார். அவன் அதைப் பறித்துக்கொண்டு ஓடினான். தாங்கள் பிடித்து வந்தவனை துறவி தப்பிக்க விட்டுவிட்டாரே என்று சீடர்கள் வெகுண்டு பார்த்தனர்.
      துறவி வானத்தை அண்ணாந்து பார்த்தார். ''ஐயோ பாவம்! அந்த நிலவை மட்டும் என்னால் அவனுக்கு வழங்க முடிந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!'' என்றார்.
      வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள் எப்போதுமே மனிதனுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன. ஆனால், அவற்றைவிட அவனுக்கு சிறு சிறு விஷயங்களிலேயே ஆர்வம் எழுகிறது.
      அடுத்தவரை, உலகத்தை, ஏன் பிரபஞ்சத்தையே உங்களில் ஒரு பகுதியாக உணர முடியும். மனிதனுக்கு மட்டும்தான் இந்த உணர்வு வரமாகக் கிடைத்திருக்கிறது. இதை விழிப்பு உணர்வுடன் அனுபவிக்கத் தவறிவிட்டு, களவாடுவதில் கவனம்வைக்கிறோம். மனிதர்களிடம்
இருந்து மட்டுமல்ல, இந்தப் பூமியில் இருந்தும் களவாடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
      யார் அதிகமாகக் களவாடுகிறாரோ, அவரை வெற்றிகொண்டவராக அறிவித்து மகிழ்கிறோம். பிரபஞ்சத்தையே உங்களுடையதாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் தங்கம், வைரம் என்றெல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே உங்கள் கவனம் போகிறது. எல்லை அற்றதையே
உங்களுடையதாக்கிக்கொள்வதை விடுத்து, நிலப் பகுதியின் சிறு சதுரங்களைக் கையகப்படுத்திக்கொள்வதில் சந்தோஷப்படுகிறீர்கள்.
      இந்தப் பூமிக்கு வந்திருப்பது முழுமையாக வாழ்வதற்காக. வாழ்க்கையின் ஆழத்தையும் அர்த்தத்தையும் அனுபவித்து உணர்வதற்காக. இப்படி அற்பமான அம்சங்களில் ஆர்வத்தையும் கவனத்தையும் சிக்கவைத்துவிட்டு, அற்புதங்களையும் மகத்தான விஷயங்களையும் தவறவிடுகிறோம்.
      வாழ்க்கையை எந்த அளவு தீவிரத்துடன் நீங்கள் அணுகுகிறீர்கள் என்பதுதான் அதை மேன்மைமிக்கதாக, மகத்துவம்மிக்கதாக ஆக்க முடியும். இதைச் சீடர்களுக்கு அடையாளம் காட்டுவதுபோல் நிலவே இருக்க, சிறு பொருட்களில் திருடன் சந்தோஷப்பட்டதை ஜென் துறவி சுட்டிக்காட்டுகிறார்!