Wednesday, August 10, 2011

இளைஞ‌ர்களுக்கு அறிவுரை தேவையா? ஆனந்தம்


      கல்லூரி படிப்பை முடிக்கும் கட்டத்தில் இருக்கிறேன். என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒருவிதமாக அறிவுரை சொல்கிறார்கள் என்ன செய்ய? அறிவுரை சொல்பவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்தாக தெரியவில்லை எப்படி அவர்கள் சொல்வதைக் கேட்பது?
      உங்கள் வயதில் நான் இருந்தபோது, நான் எந்த சுவாமிஜி முன்னாலும் உட்கார்ந்து கொண்டு இந்த மாதிரி கேள்விகள் கேட்கவில்லை. யாரோ அறிவுறுத்தி  நான் இந்த பாதைக்கும் வரவில்லை.
      எதையும் நேரடியாக அனுபவித்து உணரும் துடிப்பும் தவிப்பும் எனக்கு இருந்தது. அந்த தவிப்பும் துடிப்பும் உங்களுக்கும் இருந்தால் நீங்கள் யார் அறிவுரையையும் கேட்க வேண்டியதில்லை.
      உங்கள் அனுபவத்தில் இல்லாதது எதுவாக இருந்தாலும், அதை உண்மை என்று நம்புவது எப்படி முட்டாள்த் தனமோ, அதே போல் அதை பொய் என்று சொல்லி ஒதுக்குவதும் அதே அளவு முட்டாள்தனம்தான்.
      சிலர் சும்மா இதை செய்யப்போகிறேன் அதை சாதிக்கப்போகிறேன் என்று சும்மா திட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்க்கு யாரிடமாவது ஆலோசனை கேட்டுக்கொண்டே காலம் தள்ளுவார்கள். அறிவுரை கேட்பதிலேயே சந்தோசம் கொள்ளுபவர்கள் இவர்கள்.
      ஒருநாள் தன் கடுகடு மேலதிகாரி வீட்டுக்கு போன் செய்தார் சங்கரன்பிள்ளை வேலைக்காரன் பதில் சொன்னான் "ஐயா ஒரு விபத்தில் காலை  உடைத்துக்கொண்டார், இப்போது மருத்துவமனையில் இருக்கின்றார்!"
      மறுநாளும் அதே எண்ணுக்கு போன் செய்தார். அதே பதில் வந்தது. இப்படி தினம் தினம் காலையில் போன் செய்யவும், ஒரு நாள் அந்த மேலதிகாரியின் வீட்டு வேலைக்காரன் கோபமானான். "ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா? மறுபடி மறுபடி போன் செய்கிறாயே?" என்றான்.
      "அது ஒன்றும் இல்லை அந்த இனிமையான பதிலை தினமும் கேட்ப‌தில் ஒரு தனி சுகம் அதனால் தான்" என்றார் சங்கரன்பிள்ளை.
      இப்படி சிலருக்கு திரும்ப திரும்ப சில விசயங்களைக் கேட்பதே சுகமாக இருக்கும். எல்லாப் பிரசங்களுக்கும் போய் விடுவார்கள். அங்கு சொல்லப் படுவதெல்லாம் புரிந்தது போல் தலையாட்டுவார்கள். இவர்களுக்கு யாருடைய குரலையாவது கேட்டுக்கோண்டிருந்தாலே போதும் அதனால் தங்கள் வாழ்க்கை சீர்பட்டு விடும் என்று நம்புவார்கள்.
      அதற்க்காக அறிவுரை சொல்பவர்களை எல்லாம் நீங்கள் எதிரிகளாக பார்க்கவேண்டியதில்லை. அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தீர்ப்பு எழுதுவது தவறு.
      யாரோ ஒருவர் குடிகாரராக இருக்கிறார். அதனால் அவருக்கு எல்லாநோய்களும் வந்துவிட்டன. அவர் குடித்து விட்டு தெருவோரம் விழுந்து கிடக்கிறார். ஒயின் ஷாப் வாசலில் கூடுபவர்களைப் பார்த்து கூக்குர‌லிடுகிறார் "டேய் குடிக்காதீங்கடா, உடம்புக்கு கெடுதல்!"
      "அட இவனே குடிகாரன், இவன் என்ன நமக்கு சொல்வது?" என்று நீங்கள் குடிக்க ஆரம்பித்தால் பாதிப்பு யாருக்கு? அவ‌ருடைய மோசமான அனுபவத்தில் அவர் அறிவுரை சொல்கிறார். தகுதி இல்லாத‌வரின் அறிவுரை என்று அதைக்கேட்க மறுப்பது எப்படி புத்திசாலித்தனம் ஆகும்.
      "சிகரெட் பிடிக்காதெ என்று என் அப்பா சொல்கிறார், ஆனால் அவரே செயின் ஸ்மோக்கர்" என்று எத்தனையோ இளைஞர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
      உங்கள் அப்பா உங்க‌ளுக்காக எதைஎதையோ கொடுத்த போது அவர் அதே போல் தனக்கும் வைத்துக்கொண்டிருக்கிறாரா என்று என்றைக்காவது கவலைப்பட்டீர்களா? அறிவுரை கொடுக்கும் போது மட்டும் அது அவருக்கும் பொருந்த வேண்டும் என்று நினைக்கிறீகளே? அறிவுரை உங்களுக்காக கொடுக்கப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் தான் அதைப் பார்க்க வேண்டும்.
      பிரபல சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அந்த தம்பதி வந்திருந்தனர்.
      "என் மீது இவருக்கு அக்கறையே இல்லை" என்றாள், மனைவி.
      இவளுக்கு என்ன குறை வைத்தேன்? பெண்கள் கிளப்பில் உறுப்பினர் ஆக்கியிருக்கிறேன். வீட்டில் நீச்சல் குளம், ஜிம், ஹோம் தியேட்டர் என எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறேன். அக்கறையில்லாமலா அவையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன்?" என்றான், பிஸியான கணவன்.
      இருவரிடமும் விவரங்களையெல்லாம் கேட்டு முடித்த சைக்கியாட்ரிஸ்ட் எழுந்தார்.
      "இங்கே கவனியுங்கள்" என்று கணவனிடம் சொல்லிவிட்டு, அந்த மனைவியின் முகத்தை தன் கைகளில் தாங்கிப் பிடித்தார். ஆசையாக வருடிக்கொடுத்தார். "நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்று அவர் காதில் கிசுகிசுத்தார். கடைசியில் அழுத்தமாக அவளுக்கு ஒரு முத்தமிட்டார். அந்த பெண் திகைத்து போயிருந்தாள், அடுத்து அந்த‌ சைக்கியாட்ரிஸ்ட் அந்த கணவனிடம் திரும்பினார்.
      "உங்கள் மனைவிக்கு வாரத்திற்க்கு இரண்டு தடவையாவது இந்த காதலும் அன்பும் தெவைப்படுகிறது" என்றார்.
      கணவன் தன் டைரியை புரட்ட்டிப் பார்த்து விட்டு சொன்னான்..... "திங்கள் மற்றும் வியாழிக்கிழமைகளில் இவளை இங்கு அழைத்து வரமுடியும், உங்களுக்கு வசதிப்படுமா?"
      உங்களுக்காக சொல்லப்படுவதை சொல்பவர்களுக்கே பொருத்திப் பார்ப்பது அந்தக் கணவன் சைக்கியாட்ரிஸ்ட்டைப் புரிந்து கொண்டது போல் ஆகிவிடும்.
      எந்த அறிவுரையானாலும், அது உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதா? என்று பாருங்கள். யாரோ நமக்கு எதிரில் உட்காந்துகொண்டு நமக்காக சொல்லிக் கொண்டு இருகின்றாரே, அது என்னவென்று பார்ப்போம் என்ற திறந்த மனதுடன் அறிவுறுத்த்ல்களை அணுகுங்கள்.
      திறந்த மனதுடன் இருப்பது தான் உங்கள் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும்.

.......................................................................சத்குரு ஜக்கி வாசுதேவ்.......................................................................................

No comments:

Post a Comment