Monday, August 22, 2011

எங்கே தனித்தன்மையும் அகங்காரமும் வேறுபடுகிறது ? ஆனந்தம்


      தனித்தன்மை என்றால் தனித்துவம் – யாருடனும் ஒப்பிடமுடியாது. ஒப்பிடமுடியாத தனித்துவம் அதுதான் தனித்தன்மை. தனித்தன்மை அழகானது. அப்படித்தான் கடவுள் உங்களை உருவாக்கினார். தனிப்பட்ட விதத்தில். அகம்பாவம் ஒப்பிடுவதால் வருவது, அகம்பாவம் உன்னுடைய கண்டுபிடிப்பு. கடவுள் உனக்கு அகம்பாவத்தை கொடுக்கவில்லை, அவர் உனக்கு ஒரு தனிதன்மையைத்தான் கொடுத்துள்ளார்.
      அகம்பாவம் ஒப்பிடுதல்தான். நீ மற்றவர்களை விட அதிக புத்திசாலியாக உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ உன்னை அடுத்தவரைவிட உயர்வாக அல்லது தாழ்வாக நினைத்துக்கொள்கிறாய். அடுத்தவரை விட நீ அழகாக இருப்பதாக நீ நினைத்துக்கொள்கிறாய். அப்போது நீ அகம்பாவத்தை உள்ளே கொண்டுவருகிறாய். நீ யாருடனாவது உன்னை ஒப்பிடும்போது அந்த ஒப்பிடுதல் மூலம் வரும் முடிவு தான் அகம்பாவம்.
      நீ ஒப்பிடுவதை நிறுத்தும்போது நீ மட்டுமே அங்கிருக்கிறாய். அளவற்ற அழகோடும் தனித்துவமாகவும் இருக்கிறாய். எல்லா உயர்வு தாழ்வுகளும் நான் யார், எங்கிருக்கிறேன், எனக்கு மேல் யார் இருக்கிறார்கள், எனக்கு கீழ் யார் இருக்கிறார்கள் என்பது எல்லாமே அகம்பாவத்தின் பிரச்னைகளே. உயர்ந்தவன் என்ற உணர்ச்சி கொண்ட மனிதனும் சிரமப்படுகிறான், தாழ்வுணர்ச்சி கொண்ட மனிதனும் சிரமப்படுகிறான், இருவருமே சிரமப்படுகிறார்கள், ஏனெனில் மிக உயர்ந்தவனும் கூட திருப்தி அடையக்கூடிய நிலை என்பதே கிடையாது.
      ஆபிரஹாம் லிங்கனின் முகம் மிகவும் அழகற்றது. அது அவரை மிகவும் கொடுமைப்படுத்தியது. அவர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் போது அவர் வோட்டு கேட்க சென்ற இடத்தில் ஒரு சிறிய பெண், “நீங்கள் தாடி வைத்துக் கொள்ளுங்கள், அது உங்களை சிறிது அழகாக காட்டும்” என்று கூறினாள். அப்போதிலிருந்து அவர் தாடி வைத்துக் கொண்டார். ஆனாலும் அவருக்கு அவரது முக அழகைப்பற்றிய கவனம் எப்போதும் இருந்தது. அவர் ஜனாதிபதியாகி விட்டார். ஆனாலும் எங்கே அழகான ஒரு முகத்தை காண நேர்ந்தாலும் அவர் மனம் புண்பட்டது.
      நெப்போலியன் போனபார்ட் அதிக உயரமில்லை, 5.5 – என் உயரமும் அதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டார். எப்போதும் யாருக்கும் 5.5 உயரம் கொண்டவராக இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, அதில் என்ன பிரச்னை இருக்கிறது ? நான் 5.5 உயரம் கொண்டவராக இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. 5.7 அல்லது 5.8 ஆக இருந்தால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது ? எதுவும் நடக்கப் போவதில்லை? நீ அப்படியே தான் இருக்கப் போகிறாய். 5.5 அல்லது 5.7 அல்லது 5.8 என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது ஆனால் அவருக்கு அது மிகப் பெரிய அளவில் தொந்தரவாக இருந்தது. அவர் அதில் மிகவும் கவனம் கொண்டவராக இருந்தார்.
      ஒருநாள் அவர் சுவரில் படம் ஒன்றை மாட்ட முயன்று கொண்டிருந்தார். ஆனால் அந்த இடம் அவரைவிட கொஞ்சம் உயரமாக இருந்தது. அதனால் அவரது மெய்காப்பாளன்,“சார், நான் உங்களை விட உயர்ந்து இருப்பதால் நான் இதை செய்து விடுகிறேன்” என்று கூறினான். உடனே நெப்போலியன், “நிறுத்து! அப்படி சொல்லாதே! உயர்ந்தவன் என்று கூறாதே, வளர்ந்தவன் என்று வேண்டுமானால் சொல் “என்று கூறினார்.
      அவர் அதை பற்றிய மிகுந்த உணர்வோடு இருந்தார். “உயர்ந்தவனா,? வளர்ந்தவன் என்று வேண்டுமானால் சொல்” என்றார். நெப்போலியன் கூட சந்தோஷமாக இல்லை என்றால் வேறு யார் சந்தோஷமாக இருக்க முடியும்?
      ஒப்பிடும் மக்கள் சந்தோஷமாக இருக்க முடியாது. இந்த மரங்கள் சந்தோஷமாக இருக்கின்றன. சிறிய மரம் பெரிய மரத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அவை ஒன்றையொன்றை பற்றி கவலைப்படுவதில்லை. சிறியது, சிறியதுதான், பெரியது பெரியதுதான். உண்மையில் சிறியது பெரியது உயர்ந்தது தாழ்ந்தது எல்லாமே மனித பிரிவினைதான். அவை மரங்களின் உலகில் இருப்பதில்லை.  ஒரு மிகப்பெரிய ஓக் மரம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவு மகிழ்ச்சியாக ஒரு ரோஜாசெடியும் இருக்கும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ரோஜாசெடி மட்டுமல்ல, புல் கூட ஒரு தாமரை மலரைப் போல மகிழ்வோடுதான் இருக்கும். அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
      கடவுள் ஒவ்வொருவரின் மேலும் பொழிகிறார். ரோஜாசெடி, புல், தாமரை ஆகிய எல்லாவற்றின் மேலும் எல்லா இடத்திலும் பொழிகிறார். இந்த முழு பிரபஞ்சமும் மகிழ்வோடு இருக்கிறது. மனிதன் மட்டுமே பிரச்னையில் இருக்கிறான். ஒப்பிடுதலால் அகம்பாவம் வருகிறது. தனிதன்மை உனக்கு இருக்கிறது, தனித்துவமான தனித்தன்மை உன்னிடம் உள்ளது. ஒப்பிடுதலால் எவ்வளவு பிரச்னைகள் எழுகின்றன.?
      சில நாட்களுக்கு முன் ஒரு பெண் அவளால் அவளது உடலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று என்னிடம் கூறினாள். அவள் குண்டாக இருக்கிறாள் என்பதுதான் காரணம். அவளுக்கு தான் குண்டாக இருக்கிறோம் என்ற எண்ணம் எப்படி வந்தது, ? எதனால் வந்தது,? ஒப்பிடுவதால் வந்தது.
      உன்னுள் ஒல்லியாக இருக்கும் பெண்களைப் பற்றிய ஏதோ ஒரு கருத்து இருக்க வேண்டும், அதனால்தான் ஒப்பிடுகிறாய், அந்த பெண்ணிடம் எந்த பிரச்னையும் இல்லை, நான் அந்த பெண்ணை பார்த்தேன். அவள் ஒரு அழகான பெண். ஒரு தனித்துவமான பெண், தனித்தன்மைவாய்ந்தவள். ஆனால் தேவையின்றி வேதனையை கவலையை கஷ்டத்தை உருவாக்கிக் கொள்கிறாள். அவள் தான் சிறிது குண்டாக இருப்பதால் தன்னை யாரும் நேசிப்பார்கள் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை.
      யார் இதை கொடுத்தது ? இதுதான் சரியானது என்பதை எப்படி நீ தீர்மானிக்கமுடியும்? இதுதான் சரியானது என்பதில் யாருக்கும் எந்த தெளிவும் கிடையாது. எல்லா சராசரிகளும் பொய்யானவையே. இந்த உடலுக்கு எந்த அளவு குண்டாக இருக்கலாம் என்பது யாருக்கும் தெரியாது. அந்த உடலுக்கு மட்டுமே தெரியும். உனது உடலை நேசி, உனது உடல் சொல்வதை கேள். ஒப்பிடாதே.
      இந்த ஒப்பிடுதலால் அவள் தனது முழு வாழ்க்கையையும் தவறவிடுகிறாள். இந்த ஒப்பிடுதல் பிரச்னையை உருவாக்குகிறது. அவளால் நேசிக்க முடிவதில்லை. அவளால் தன்னை யாரும் நேசிப்பதை அனுமதிக்க முடிவதில்லை, ஏனெனில் தன்னை யாரும் நேசிக்க முடியும் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை. அந்த மனிதன் விகார மனம் படைத்தவனாகத்தான் இருக்கமுடியும் இல்லாவிடில் எப்படி அவனால் ஒரு அசிங்கமான பெண்ணை நேசிக்க முடியும் ? அழகைப்பற்றிய உனது கருத்து விகாரமானதாக இருக்க வேண்டும் அல்லது நீ ஏமாற்றவேண்டும் என்றுதான் அவள் நினைத்துக் கொள்கிறாள்.
      அவள் யாரையும் நம்புவதில்லை. யாராவது வந்து அவளிடம் வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவளால் நம்ப முடிவதில்லை. அவளே அவளை நேசிப்பதில்லை, பின் எப்படி வேறு யாராவது வந்து அவளை நேசிக்க முடியும் சாத்தியமேயில்லை. உனக்கு வேறு ஏதாவது எண்ணம் இருக்க வேண்டும் அல்லது உனக்கு வேறு ஏதாவது கருத்து இருக்க வேண்டும் நீ வெறும் காமத்தில் மட்டும் ஆர்வம் கொண்டவனாக இருக்கலாம், அல்லது வேறு ஏதாவது உனக்கு ஈர்ப்பு இருக்கலாம், அவளது பணத்தின் மீது உனக்கு ஆசை இருக்கலாம். உன்னால் அவளை காதலிக்க முடியாதே, எப்படி அவளை காதலிக்க முடியும் அவள் தான் கண்ணாடியில் பார்க்கும் தனது சொந்த முகத்தையே காதலிப்பதில்லை. நீ அவளை வற்புறுத்தினால் கூட அவள் வேறு ஏதாவது வழியில் உனது காதலை அழிக்க முயற்சிப்பாள். அப்போதுதான் தான் சொன்னது தான் சரி, நீ சொல்வது தவறு என்று நிரூபிக்கமுடியும். உன்னை ஒத்துக் கொள்ள வைக்கும் அளவு சவாலை ஏற்கும் ஒரு காதலனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவள் காதலன் இன்றியே இருப்பாள். அவள் காதலன் இன்றி இருக்க இருக்க தான் அசிங்கமானவள் என்று தான் நினைத்ததுதான் சரி என்று அதில் நிலைப்படுவாள்.
      அவள் அசிங்கமானவள் அல்ல.
      நான் என் வாழ்வில் ஒரு அசிங்கமான நபரைக் கூட பார்த்ததேயில்லை. எப்படி ஒருவர் அசிங்கமாக இருக்க முடியும் ? நீ அசிங்கமான காக்கையை பார்த்திருக்கறாயா ? சாத்தியமேயில்லை. ஒரு அழகற்ற மரத்தை பார்த்திருக்கிறாயா  ?முடியவே முடியாது. எல்லாமும் அதனதன் படி அழகுதான். ஆனால் மனித இனத்துடன் மட்டும் இந்த ஒப்பிடுதல் வருகிறது, உடன் கூடவே பிரச்னையும் வருகிறது.
      ஒப்பிடாதே. அவசியமேயில்லை. மனித இனத்தில் இருக்கும் குழப்பத்திற்கு ஒப்பிடுதலும் ஒரு மிகப் பெரிய காரணம். நீ எப்படி இருக்கிறாயோ அப்படி மிகச் சரியாக இருக்கிறாய். உன்னை நேசி, உன்னை மதி. உனக்கு நீயே மதிப்பு கொடுக்காவிட்டால் வேறு யார் உனக்கு மதிப்பு கொடுக்கப் போகிறார்கள்,? உன்னை நீயே நேசிக்காவிட்டால் வேறு யார் உன்னை நேசிக்கப் போகிறார்கள். ? மக்கள் தங்களை தாங்களே மதிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் மதிப்பு கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்களை தாங்களே நேசிப்பதில்லை, ஆனால் இந்த முழு உலகமும் தங்களை நேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்போது நீ சாத்தியமற்றதை எதிர்பார்க்கிறாய். அப்படி நடக்காது. உன்னை நேசி, உனக்கு மதிப்பு கொடு, தனக்கு மதிப்பு கொடுக்கும் மனிதன் ஒப்பிடுவதில்லை, ஒப்பிடுவது மதிப்பு கொடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
      இதன் சாராம்சம் என்னவென்றால் அகம்பாவம் உள்ளவனாக இருப்பது உனக்கு நீயே மதிப்பு கொடுப்பதில்லை என்பதை காட்டுகிறது. தனித்தன்மை உள்ளவனாக இருப்பது மிகவும் சரியானது, ஆனால் அகம்பாவம் பிடித்தவனாக இருப்பது உன்னிடம் உனக்கு மதிப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. அகம்பாவத்தை விடு அது உண்ணை ஆனந்தமானவனாக மாற்றும்.
..................................................................ஓஷோ.............................................................................

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

ஒப்பிடுதலால் எவ்வளவு பிரச்னைகள் எழுகின்றன.?

உண்மைதான்.

முனைவர் இரா.குணசீலன் said...

“நான் மறையைக் கற்றவனல்ல ஞானி
நான் மறையக் கற்றவனே ஞானி“

நல்லதோர் பதிவு.

முனைவர் இரா.குணசீலன் said...

ஆனந்தமான தேடல் தொடரட்டும்.

Post a Comment