Sunday, January 8, 2012

புத்தர் கூறிய கதை-ஆனந்தம்


      ஒரு முறை புத்தருடைய சீடர்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய அறியாமையை விலக்கி, அஹிம்சா வழியை போதிக்க எண்ணிய புத்தபிரான் அவர்களுக்கு கீழ் கண்ட கதையைக் கூறினார்.
      முன்னொரு காலத்தில் பனாரஸ் என்ற ( வாரணாசி) பகுதியில் கௌசலா என்ற பகுதியை திர்கதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆனால் பக்கத்து நாட்டு அரசனான பிரும்மதத்தா என்ற மன்னன் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்தபடி கௌசலா நாட்டையும் கைப்பற்றிய பின் அந்த அரசனையும், அரசியையும் கொன்று விட்டால் பிறகு வேறு எவரும் தலை தூக்க முடியாது என எண்ணியதால் அவர்களைத் தேடத் துவங்கினான். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் தப்பி ஓடி மாறு வேடத்தில் தங்கி இருந்து தமது நண்பனான ஒரு குயவன் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு குழந்தையும் பிறந்து பெரியவனாகியது. ஆனாலும் பிரும்மதத்தா அவர்களை கொன்று விட வேண்டும் என்ற கவலையில் அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.
      ஒரு நாள் திர்கதியின் மகன் திர்காயு வெளியில் சென்று இருந்த பொழுது மாறு வேடத்தில் இருந்த மன்னனை அடையாளம் கண்டு கொண்ட முடி வெட்டுபவன் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை அரசனிடம் காட்டிக் கொடுத்துவிட அவர்களை கைது செய்த அரசன் அவர்களை மக்கள் முன் சிரச்சேதம் செய்து கொல்ல ஏற்பாடு செய்தான். அந்த கொடுமை நடக்க இருந்த இடத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் திர்காயுவும் இருந்தான். மரணம் அடைய இருந்த திர்கதியோ எங்கே தன்னுடைய மகன் கோபப்பட்டு கூட்டத்தில் இருந்து வந்து சண்டையிடத் துவங்கி விடுவானோ, அப்படி வந்தால் அவனையும் அல்லவா மன்னன் கொண்று விடுவான் என பயந்து, உரத்த குரலில் கூவினான் ‘ மகனே, நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே, வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது, அஹிம்சையே சிறந்த வழி’ அதைக் கேட்ட மன்னன் அதன் அர்த்தம் தெரியாமல் குழம்பினான். ஆனால் அவன் புரிந்து கொண்டான் கூட்டத்தில் திர்கதியின் மகனும் உள்ளான். ஆகவே திர்கதியையும், அவன் மனைவியையும் கொன்ற பின் திர்காயுவைத் தேடினான், அவன் கிடைக்கவில்லை. திர்காயுவின் மனதில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. தன் பெற்றோரைக் கொன்ற மன்னனை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
      திர்காயு யானைகளை அடக்குவதில் சிறந்து இருந்ததினால் அவனுக்கு அரண்மணையில் யானைக் கொட்டத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய சாதூர்யத்தை பலமுறை கண்ட மன்னன் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை தன் காவல் பணியில் வைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு திர்காயு யார் என்பது தெரியாது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற பொழுது அவர்கள் இருவரைத் தவிற மற்றவர்கள் எங்கோ போய் விட்டனர். களைப்படைந்த மன்னனை ஒரு மர நிழலில் தன் தொடை மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்குமாறும், அதன் பின் கிளம்பிப் போகலாம் எனவும் திர்காயு கூற மன்னனும் உறங்கத் துவங்கினான். தான் எதிர் பார்த்து வந்த தருமணம் வந்து விட்டது என எண்ணிய திர்காயு மன்னனைக் கொல்ல வாளை கையில் எடுத்த பொழுது, தன் தந்தை கூறிய அறிவுறை மனதில் தோன்ற தனது முடிவை மாற்றிக் கொண்டு வாளை உறையில் வைக்க, திடுக்கிட்டு எழுந்த மன்னன் கூறினான் ‘எனக்கு பயமாக உள்ளது. என்னைக் கொல்ல எவனோ என் அருகில் வாளை எடுத்துக் கொண்டு வந்ததைப் போல இருந்தது.’ .அதற்கு திர்காயு பதிலளித்தான் ‘ அது நான்தான்’. மன்னன் கதறினான், கெஞ்சினான் ‘ ஐயோ என்னைக் கொன்று விடாதே, விட்டுவிடு’. திர்காயு அமைதியாகக் கூறினான் ‘உன்னை நான் விட்டு விடுகின்றேன். என்னையும் நீ கொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடு’. உடனேயே மன்னனும் வாக்குறுதி அளிக்க தான் யார் என்பதை வெளிப்படுத்தினான் திர்காயு.
      அதன் பின் சற்று நேரம் கழித்து மன்னன் திர்காயுவிடம் அவனுடைய தந்தை தான் மரணம் அடையும் முன் கூறிய ‘ நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே,’ என்ன கூறினாரே அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்க திர்காயு கூறினான் ‘நீண்ட தூரம் பார்க்காதே என்றால் உன் வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்காதே என்று பொருள், குறைந்த தூரத்தையும் பார்க்காதே என்றால் அவசரப்பட்டு இப்போது எதுவும் செய்து விடாதே என்ற அர்த்தம். அன்று அவசரப்பட்டு நான் ஓடி வந்து உங்களை கொன்று இருந்தால் மக்கள் என்னைக் கொன்று இருப்பார்கள். அதன் பின் என் ஆட்கள் என்னைக் கொன்றவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டும் தொடர் கதையாகி இருக்கும். இப்போது நாம் இருவரும் ஆத்திரத்தை விட்டுவிட்டு அஹிம்சையை பின் பற்றினால் அனைவருக்கும் நல்லது அல்லவா, என்று கூற விரோதிகள் இருவரும் இணைந்தனர்.
      இந்த கதையைக் கூறிய புத்தர் தம் சீடர்களுக்கு வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.

ஆனந்தமான பகிர்வு..

Post a Comment