Tuesday, July 5, 2011

பெண்கள் இல்லாமல் ஞானம் சாத்தியமே இல்லை


      ஞானம் நிகழக்கூடிய ஒன்று. தியானம் செய்யப் பட வேண்டிய தயாரிப்பு. அத்துடன் ஆழமான தவிப்பும் தேவைப்படுகிறது. புரிந்து கொள்ளுதல் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்று நீங்கள் சொன்னதை கேட்டேன். எனக்கு எல்லாவற்றிலுமே ஆர்வம். மனதில் தோன்றும் கற்பனைகள், இசை, பெண்கள், உணர்வுகள் என எல்லாவற்றிலும் எனக்கு ஆர்வம் இருக்கின்றது. இவையெல்லாம், ஞானத்தை தடுத்து விடக் கூடுமா?
      ஒரு பழைய கதை இருக்கிறது. ஒரு கிழவன் தன் குருவிடம் வந்து நான் பல ஆசான்களை பார்த்துவிட்டேன். எத்தனையோ ஆசைகளையெல்லாம் துறந்தும் விட்டேன். உண்ணாவிரதம் இருந்தேன். பிரம்மசரியம் மேற்கொண்டேன். ஞானம் தேடி இரவெல்லாம் விழித்திருந்தேன். வெறுக்க சொன்ன எல்லாவற்றையும் வெறுத்தேன். மிகவும் துன்பங்கள் அனுபவித்தேன். ஆனால் ஞானம் பெற முடியவில்லை. நான் என்னதான் செய்யட்டும்? என்று கேட்டான்.
      துன்பங்களையும் துறந்துவிடு என்றார் குரு.
      ஞானம் பெறுவதை இசையும் தடுக்காது, புலனின்பங்களும் தடுக்கா, பெண்களும் தடுக்க மாட்டார்கள். ஒன்று மட்டும் அதை தடுக்கும். அதுதான் உன் துன்பம்.
      ஞானம் என்பது எல்லையற்ற ஆனந்த பரவசம். ஆகவே, எந்த சிறிய கொண்டாட்டமும் ஞானத்திற்கான படிக்கட்டுதான். ஆனால் வேதனை ஞானத்திற்கான படியாக அமையவே முடியாது.
      எல்லாவற்றிலும் உனக்கு ஆர்வம் இருப்பதாக குறிப்பிடுகிறாய். உன் தியானம் வளர வளர அவை காணாமல் போய்விடும், வெளிச்சத்தை கொண்டு வந்தவுடனே இருட்டு மறைந்து விடுவது போல. இருள் ஒரு தடையே அல்ல. இருள் மிக பழையது, கெட்டி தட்டி போய் இருக்கிறது, விளக்கை கொண்டு வந்தால், அதை அமுக்கி அணைத்து விடுகிறது. என்று சொல்ல முடியுமா என்ன? இருளால் விளக்கை அணைக்க முடியவே முடியாது.
      மனக் கற்பனைகள் எல்லாம் சோப்பு நுரை குமிழிகள். தியானத்தின் ஒரு சிறு பகுதியின் தீண்டுதலில், மனதின் மாயக் கற்பனைகள் என்ன, மனமே மாய்ந்து போய்விடும்.
      ஆனால் தியானம் வளர இசை ஆழப்பட்டு விடும். உனது இசையில் புதிய சுவை பிறக்கும். புதிய மலர்கள் புதிய மணத்துடன் மலரும். உனது இசை, உனது தியானத்துடன் இசைந்து சுப சுரமாய் ஒலிக்கும்.
      பெண்கள் விஷயத்தை பொறுத்தவரை, அவர்கள் இல்லாமல் ஞானமடைதல் சாத்தியமே இல்லை. அவர்கள்தான் உண்மையான உந்து சக்தி. வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால், ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்கிறார்கள். அது உண்மையோ, பொய்யோ. ஆனால் ஒவ்வொரு ஞானிக்கும் பின்னால் பல பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.
      அவனை தொல்லை படுத்த, சித்ரவதை செய்ய பெண்கள் இருந்தால்தான் போதுமடா சாமி என்று அவன் ஞானத்தை தேடி போக முடியும். அப்படி எந்த பெண்ணும் உன்னை தொல்லை படுத்த வில்லையென்றால், நீ ஞானத்தை தேடி செல்ல வேண்டிய தேவை என்ன வந்தது?
      எந்த ஆணும் தம்மை தொல்லைப் படுத்தாததால்தான், பெண்கள் ஞானம் பெறுவதில்லை என்பது எளிய உண்மை. அதனால் பெண்களை கண்டு பயப்படாதே. அவர்கள் உனக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். அதனால் அவர்கள் உனக்கு நிச்சயம் தேவைப்படுவார்கள்.
      புலனுணர்வுகள் தடையல்ல. தியானம் ஆழப்பட பட, உன் உணர்வுகள் கூர்மை அடையும். அதனால்தான், அந்த கதையில் வரும் கிழவனுக்கு அப்படி பதில் சொன்னார் குரு.
      துயரங்களை விட்டொழி.
      உன் தியானத்தை தடுக்க வல்லது இந்த உலகில் எதுவுமே இல்லை.
                                                   .....................ஓஷோ....................

No comments:

Post a Comment