பண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படையான ஆன்மீக உணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு “முக்தி” என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் – மனித குலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் – அவர்தான் ஷிவா.
பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி – முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்…
சத்குரு:
யோகக் கலாச்சாரத்தில் ஷிவா என்பவர் கடவுளாக அறியப்படுவதில்லை. மாறாக ஆதியோகியாக, யோகத்தை பிறப்பித்தவராக அறியப்படுகிறார். மனித மனத்தினுள் முதன்முதலாக இந்த விதையை விதைத்தவர் அவர்தான். யோக மரபின்படி 15,000 ஆண்டுகளுக்கும் முன்பாக ஷிவா பூரண ஞானமடைந்து, மிகத் தீவிரமான பரவச நிலையில், இமயமலையிலே பேரானந்த தாண்டவத்தில் மூழ்கிப் போனார். அவரின் பரவசம் எப்பொழுதெல்லாம் அவர் அசைந்திடும்படி அனுமதித்ததோ, அப்பொழுதெல்லாம் அவர் கட்டுக்கடங்காத தாண்டவ ரூபமாக வெளிப்பட்டார். அந்த பரவசம் மிகுந்து அசைவையும் தாண்டியபோது, அசைவற்ற நிஷ்சல ரூபமாக வெளிப்பட்டார்.
இதைக் கண்டவர்கள், அதுவரை எவருமே உணர்ந்திராத ஏதோ ஒன்றை, தங்கள் அறிவுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை, இவர் அனுபவித்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டார்கள். ஆர்வம் இப்படியே வளர வளர இது என்னவென்று உணர்ந்திட விரும்பினார்கள்; வந்தார்கள், காத்திருந்தார்கள், கிளம்பிச் சென்றார்கள். ஏனென்றால், இந்த மனிதர் தன்னைச் சுற்றி பலர் இருப்பதை துளியும் கவனிக்கவில்லை. ஒன்று தீவிரத் தாண்டவம், அல்லது முற்றிலும் அசைவற்ற நிலை, இப்படியே இருக்கிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை துளிக்கூட இல்லாதவராக வாழ்கிறாரே என்று விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஏழு பேரைத் தவிர!
இவர்கள் ஏழு பேரும் அந்த மனிதனுக்குள் பொதிந்துள்ள பொக்கிஷத்தை எப்படியாவது தாங்களும் கற்றிட வேண்டும் என்று விடாப்பிடியாக தங்கி இருந்தனர். ஆனால் ஷிவா, அவர்களை முழுமையாக புறக்கணித்தார். அவர்கள் கெஞ்சினார்கள். “தயவு செய்து அருளுங்கள்! நீங்கள் உணர்ந்திருப்பதை நாங்களும் உணர விரும்புகிறோம்!,” என்று மன்றாடினார்கள். ஷிவாவோ, “மூடர்களே! நீங்கள் இப்போது இருக்கும் தன்மையில், கோடி வருடங்கள் ஆனாலும் இதை உணர மாட்டீர்கள், இதற்கு மாபெரும் அளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் கேளிக்கை கிடையாது” என்று நிராகரித்தார்.
ஆகவே அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாகி, வருடங்களாயின. அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஷிவாவோ அவர்களை பொருட்படுத்தவே இல்லை. இப்படியே 84 வருடங்கள் சென்றுவிட்டது. ஒரு நாள், பௌர்ணமியன்று சூரியனின் ‘கதிர் திருப்பம்’ உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு மாறிய பின்பு, ஆதியோகி இந்த ஏழு பேரின் மீது தன் அருட்பார்வையை செலுத்தினார். அவர்கள், ஞானத்தை ஏந்திக்கொள்ள தகுதியுடைய கலங்களாக, அருட்களஞ்சியத்தை உள்வாங்க முற்றிலும் பழுத்தவர்களாக, மிளிறுவதை கவனித்தார். அவரால், அவர்களை அதற்கு மேலும் புறக்கணிக்க இயலவில்லை. அவர்கள் அவரது கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.
ஆதியோகியின் பார்வை அந்த 7 பேரின் மீது பட்டது.
‘அடுத்த சில நாட்களுக்கு அவர்களை கூர்ந்து நெருக்கமாக கவனித்தபடியே இருந்தார். அடுத்த பௌர்ணமி அன்று, அவர்களுக்கு மன இருளை அகற்றி, குருவாய் அருள்புரிய முடிவு செய்தார். ஆதியோகியாக இருந்தவர், தன்னை ஆதிகுருவாக்கி அருளினார். அந்த முழுமுதற் குரு தோன்றிய தினத்தைத்தான், இன்று குருபௌர்ணமியாகக் கொண்டாடுகிறோம்.
ஒருவர் நம் மனித இனத்திற்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள கட்டுக்களில் அடைபட்டே கிடக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு அப்பால் கடந்து செல்லவும் முடியும்” என்ற வாய்ப்பை, சாத்தியத்தை முதன்முதலாக உருவக்கியது ஆதியோகியே!
காந்திசரோவர் என்ற ஏரிக் கரையிலே, ஆதிகுரு தென்திசை நோக்கி அமர்ந்து, மனிதகுலத்தின் மேல் தன் பேரருளைப் பொழிந்தார். கேதார்நாத் திருத்தலத்திற்கு மேலே, சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த நீர்பரப்பின் கரையில்தான், அந்த ஏழு மாமனிதர்களுக்கு ஆதிகுரு முதன்முதலாக, யோக விஞ்ஞானத்தினைப் பரிமாறினார்.
இந்த யோக விஞ்ஞானம் என்பது, நீங்கள் செல்லும் யோகா வகுப்பு போல வெறுமனே உங்கள் உடலை வளைப்பது பற்றியது கிடையாது. அல்லது உங்கள் மூச்சை பிடித்து வைப்பது பற்றியது கிடையாது. பிறந்த குழந்தைக்கும் பிறக்காத குழந்தைக்கும் கூட அந்த விஞ்ஞானம் தெரியும். அது ஒரு மனிதனுடைய அமைப்பு முழுவதும் எப்படியெல்லாம் இயங்குகிறது என்ற நுணுக்கங்களை உணர்ந்திடும் விஞ்ஞானம்.
இந்த யோக விஞ்ஞானத்தை அந்த ஏழ்வருக்கும் ஆதிகுரு பரிமாறிய செயல், பல ஆண்டுகளுக்குப் பின் முழுமைப்பெற்றது. இதன்மூலம் ஏழு பூரண ஞானமடைந்த மாமனிதர்கள் உருவாகினர். அவர்களைத்தான் சப்தரிஷிகள் என்று நாம் இன்று போற்றிக் கொண்டாடுகிறோம். இந்திய பண்பாட்டில் வணங்கி வழிபடுகிறோம்.
ஷிவா இந்த ஏழு பேர்களில், ஒவ்வொருவருக்குள்ளும் யோகத்தின் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கினார். இந்த அம்சங்களே யோகத்தின் ஏழு அடிப்படையான அம்சங்களாயின. யோகத்தில் இந்த ஏழு தனிப்பட்ட வடிவங்கள் காத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் பொலிவுடன் விளங்குகின்றன.
ஒரு மனிதன் தன்னுடைய எல்லைகளாகிய கட்டுப்பாடுகளையும், கட்டாயங்களையும் தாண்டி, பரிணாம வளர்ச்சியில் உயர்ந்திட செய்யும் அம்சங்கள்தான் யோகவிஞ்ஞானம். இந்த அற்புத யோக விஞ்ஞானத்தில் முழுமைபெற்ற சப்தரிஷிகள் ஏழு பேரும், உலகின் எல்லா பாகங்களுக்கும் வெவ்வேறு திசையில் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஷிவாவுடைய அங்கங்களாயினர். உலகில் ஒவ்வொரு மனிதனும், படைப்பின் மூலமாகவே வாழ்ந்திடச் செய்யும்படியான தொழில்நுட்பத்தையும் ஞானத்தையும் வழங்கிடும் கரங்களாயினர்.
காலச் சக்கரத்தின் சுழற்சிகளில், உலகின் பல பாகங்களிலும் இவை குலைந்து போயிருந்தாலும், அந்தந்த பகுதிகளின் நாகரீகம், கலாச்சாரம் இவற்றை சற்று கூர்ந்து கவனித்தால், இன்னமும் கூட இந்த ஏழு மாமனிதர்களின் மகத்தான பணி ஆங்காங்கே இழைந்தோடுவதை கவனிக்க முடியும். இன்னமும் உயிரோட்டமாயிருப்பதை பார்க்க முடியும். அவர்கள் பரிமாறியவை காலப்போக்கில் பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் மாறியிருந்தாலும், அதன் அடிப்படையான சாரம் இன்னமும் அப்படியே காணப்படுகிறது.
“ஒருவர் நம் மனித இனத்திற்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள கட்டுக்களில் அடைபட்டே கிடக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு அப்பால் கடந்து செல்லவும் முடியும்” என்ற வாய்ப்பை, சாத்தியத்தை முதன்முதலாக உருவக்கியது ஆதியோகியே!
இந்த உடலுக்குள் அடங்கி இருக்கலாம், ஆனால் உடலுக்கே உரித்தாக வேண்டியதில்லை. உடலில் வசித்திடலாம், ஆனால் உடலாகவே ஆகிவிடாமல் இருக்கலாம். இதற்கொரு வழி உண்டு;
இந்த மனத்தை உச்சபட்ச திறனுக்கு பயன்படுத்திடலாம், அதேசமயம் மனத்தின் துயர்கள் துளியும் இல்லாதபடி வாழ்ந்திடலாம். இதற்கொரு வழி உண்டு;
இப்போது நீங்கள் இருப்பின் எந்த பரிமாணத்தில் உள்ளீர்கள் என்றாலும் சரி, அதை கடந்த போக முடியும். வேறுவிதமாக வாழ்ந்திட வழியுள்ளது. ஆதியோகி இதைத்தான் சொன்னார், “நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்தால், அதற்கு செய்ய வேண்டியதை உங்களுக்கு நீங்களே செய்து கொண்டால், நீங்கள் இப்போது கட்டுண்டு இருக்கும் எல்லைகளை கடந்து, பரிமாண வளர்ச்சியில் மேலெழுந்திட முடியும்” – இன்றியமையாதவர் அல்லவா ஆதியோகி.