Thursday, May 23, 2013

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்! ஆனந்தம்


     
      குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

      குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

      இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.

      நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும்.
எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

      ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.

      ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?

      இப்படித்தான் குண்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.

      அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

      முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!
........................வாழ்க வளமுடன்!..............................

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன விதம் அருமை... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பகிர்வு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

evvaru kundaliniyai adaivathu ?

Post a Comment