Wednesday, October 24, 2012

நல்லவர்கள் ஏன் துன்பப்படவேண்டும்? ஆனந்தம்



   
      நல்லவர்கள் துன்பப்படவேண்டும் என்பது இயற்க்கை விதி அல்ல.
      நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கான பலன் என்பது இயற்க்கை வகுத்த நியதி. தவறான காரணங்களுக்காகச் சரியான விஷயங்களைச் செய்தால், சரியான விளைவுகள் தான் ஏற்படும். அதே போல் சரியான காரணங்களை சொல்லிக் கொண்டு தவறான செயல்களைச் செய்தால், அவற்றுக்கான தவறான விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும். அப்படித் தான் இந்த பிரபஞ்சம் அமைக்கப்பட்டிருக்கிறது.
      மிக நல்ல எண்ணங்கள் கொண்டு இருப்பவர்களாக இருக்கலாம் ஆனால், அவர்களும் முட்டாள் தனமான காரியங்களில் ஈடுபட்டால், துன்பப்பட்டு தான் ஆக வேண்டும் என்ன செய்வது?
      அதே நேரம் நீங்கள் எவ்வளவு மனிநேரம் செலவழித்து செயல் படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எவ்வளவு நேரம் உங்கள் திறமையை பயன்படுத்தி சரியான காரியங்களைச் செய்தீர்கள் என்பது தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கிறது.
      உங்களை நீங்கள் குறையாக நினைத்துக் கொண்டு செயல்களைச் செய்தால் நீங்கள் செய்ய முடிந்ததைக்கூட நிறைவாக செய்து முடிக்க முடியாது. அப்புறம் எப்படி வெற்றி கிடைக்கும். வாழ்க வளமுடன்!

Sunday, October 21, 2012

புத்தரா அலெக்ஸாண்டரா? ஆனந்தம்


     
      ஒரு மனிதன் தன்னை உணரும் போது தான் உள்நிலையிலும் வெளிநிலையிலும் முழுமையடைகிறான். அதுவரை அது வேண்டும், இது வேண்டும் என்று பிச்சைக்காரனைப் போல ஏங்கிக் கொண்டிருக்கின்றான்.  நினைத்தது கிடைத்தாலும் பின் வேறொன்றுகாக ஏங்க ஆரம்பித்து விடுகின்றான். அவனுடைய ஏக்கம் மூச்சு நிற்கும் போது கூட பூர்த்தியாவது இல்லை. நாளை என்வாழ்க்கை முழுமையடையும் என்ற நினைவிலேயே இறந்துவிடுகின்றன்.
      16 வயதில் ஆரம்பித்து 32 வயதிற்குள் பாதி உலகை வென்ற பிறகும் கூட, அலெக்ஸாண்டர், இன்னமும் பாதி உலகை வெல்லவில்லையே என்ற ஏக்கத்தோடு தான் இறந்தான். தன் ஆசைக்காக அப்பாவி மக்களை 16 ஆண்டுகளாக கொன்று குவித்த பிறகும் அவனிடம் அறிவு வெளிப்படவில்லை.
      அவனை நீங்கள் "அலெக்ஸாண்டர் தி கிரேட்" என்று அழைக்கிறீர்கள். பாடப்புத்தகங்கள் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கும் அப்படி போதிக்கிறீர்கள். மக்களின் நலனுக்கு அவன் என்ன செய்தான் சொல்லுங்கள்! துரதிர்ஷ்டவசமாக உங்கள் சிந்தனை அந்த வழியில் தான் செல்லுகிறது.
      ஒவ்வொருவரும் மனதளவில் அலெக்ஸாண்டராக தான் இருகிறீர்கள். ஆனால் நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் இல்லாமல் இருக்கிறீர்கள். இப்படி நீங்கள் அலெக்ஸாண்டராக இருக்கும் வரை ஒவ்வொருவரையும் ஏதாவது துன்பப்படுத்தி தான் ஏதாவது அடையவேண்டும் என்ற நோக்கம் இருக்கும் வரை, வலியும் துன்பமும் தான் இந்த உலகத்தின் வழியாக இருக்கும். இப்படித் தான் உங்கள் சிந்தனை இருக்குமென்றால், உங்கள் செயல்கள் இருக்குமென்றால், இந்த உலகம் அழகானதாக இருக்க முடியாது.
      உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் கூட அலெக்ஸாண்டருக்கு பல பக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் மனிதனலனுக்காக பாடுபட்ட ஞானமடைந்த புத்தருகோ சில வரிகள் மட்டுமே. அதுவும் கூட அவன் அரசனாக இருந்தான் என்பதற்காக மட்டும் தான்.
      உண்மையில் உங்கள் நோக்கம் மற்றும் விழிப்புணர்வு, மனிதநலனை நோக்கிதான் முழுமையாக இருக்க வேண்டும். எப்போது உங்களை முழுமையாக உணர்கிறீர்களோ அப்போது உங்கள் நோக்கம் மற்றவர்களின் நலன் குறித்தே இருக்கும். எனவே உங்களின் எண்ணமும் செயலும் முழு உணர்தலை நோக்கியே மாற வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க வளமுடன்!

Friday, October 19, 2012

அறுபதாம் கல்யாணம் ஏன்? விளக்கம்! ஆனந்தம்


      நம் பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை , அந்த பருவத்தை பாலாவஸ்தா என்பார்கள். அப்போது குழந்தை செய்வதெல்லாம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் அவ்வளவு தான். அதற்கு மேல் அவன் ஏதும் செய்யத்தேவையில்லை.
      12 வயது நிறைவுற்றதும் அவனுக்கு பிரம்மோபதேசமும் அதன் பின் வித்தியாபியாசம் அதாவது கல்வி கற்பித்தலும் நடக்கும். பிரம்மோபதேசம் என்பது, இது எனது, எனதில்லை என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்திலும் பிரம்மனைக் காணக் கற்றுத் தருவது. இந்த தன்மை இல்லாத மனிதருக்கு கல்வி கற்பிக்கக்கூடாது. ஏனெனில் கல்வி என்பது மாபெரும் சக்தி. அவர், இவர், எனது, எனதில்லை, வேண்டும், வேண்டாம் என்று பிரித்துப் பார்க்கும் மனிதருக்கு சக்தியை கொடுத்தால் அவரால் பிரச்ச‌னை தான் வரும்.
      எனவே 12வயதில் பிரம்மோபதேசம் கொடுத்து, அதன் பின் 12ல் இருந்து 24 வயது வரை வித்தியாபியாசம் கொடுத்தார்கள். அவன் தன் வீட்டில் இல்லாமல் ஒரு குருவிடம் சென்று தங்கி அங்கேயே அனைத்தையும் கற்றுக்கொள்வான். அப்போது அவனுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆகியவை போதிக்கப்படும், இந்த நிலையை பிரம்மச்சரியம் என்பார்கள். 12 வருடம் குருவிடம் தேவையான கல்வி கற்று 24வது வயதில் தேவையான அறிவு பெற்றவராக இருப்பார்.
      இப்போது அவருக்கு ஆர்வம் இருக்கும் பட்சத்தில் பிரம்மச்சரிய நிலையில் இருந்து துறவு நிலைக்கு நேரடியாக சென்றுவிடலாம். அல்லது திருமணம் செய்து கொண்டு அடுத்த 24 ஆண்டுகள் இல்லற வாழ்கையில் ஈடுபடலாம்.
      அந்த 24 வருட தாம்பத்தியத்திற்கு பிறகு, அதாவது 48வது வயதில் குழந்தைகள் வளர்ந்து பெரியவராகி இருப்பார்கள். அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சன்னியாசம் எடுப்பார்கள். ஓரிடத்திற்கு சென்று ஆன்மீக சாதனை செய்து தன்னை உணர்ந்த நிலையில் திரும்பி வருவார்கள்.
      12 வருட‌ங்கள் தனித் தனியாக இருந்த கணவனும் மனைவியும் மீண்டும் இப்போது அவருடைய 60வது வயதில் ஒன்று சேருவார்கள்.
அவர்களுக்கு முதல் முறை திருமணம் நடந்த போது அவர்களுக்கு உடல் ஆர்வம் மிக முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது கணவனுடைய 60வது வயதில் அவர்களுக்கு உடல் ஆர்வத்தினால் ஒன்று சேரவில்லை. வேறு ஒரு ஆழமான தன்மையை உணர்ந்த நிலையில் ஒன்று சேருகிறார்கள்.
      இப்போது அவர்கள் தனியாக காட்டிற்க்கு சென்று வேறொரு தன்மையில் மீண்டும் ஒன்றாக வாழ விரும்புகிறார்கள். இந்த வாழ்க்கையை தான் வானபிரஸ்தா என்றனர். வானபிரஸ்தா செல்லும் முன் அவர்கள் ஏற்கனவே பிரிந்திருந்ததால், அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும் வ‌ழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்தது.
      ஆனால் இப்போது வீட்டில் சேர்ந்து இருந்து வாழ்ந்து கொண்டே 60வயதில் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொள்கின்றனர். இதில் ஒன்றும் அர்த்தமில்லை. வெறும் சடங்காகத்தான் இருக்கிறது. வாழ்க வளமுடன்!

Tuesday, October 16, 2012

மனைவியுடன் மகத்தான உறவு? ஆனந்தம்


     
      மிகவும் கஷ்டமான கேள்விதான். மனைவியுடன் சுமுகமான உறவு வேண்டும் என விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித‌உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது.
      "இவள் என் மனைவி" என்று நீங்கள் பார்க்கத்துவங்கும் கணத்திலேயே அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்கு சொந்தமான‌ சொத்து என்றாகியவுடனேயே  உங்களின் அனுகுமுறை வேறாகிவிடுகிறது. ஒருவரை உங்களின் உரிமைப் பொருள் என்ற அளவிலே குறைத்துவிடும் பொழுது அவருடன் இனைந்து வாழும் அழகு மறைந்து விடுகிறது.
      வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவராகத் தெரியலாம். ஆனால் உங்களின் கண்களுக்கு வேறுவிதமாகத் தெரிவாள். அவளை உங்களின் உரிமைப் பொருளாக பார்க்கும் காரணத்தால் அவளுடைய‌ அற்புதத்தன்மை தெரிவதில்லை. உண்மையில் யாரையும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. உங்களுடைய மனைவியோ, கணவரோ, குழந்தையோ யாருமே உங்களின் உரிமை கிடையாது. இந்த நிமிடத்தில் அவர் உங்களுடன் இனைந்திருப்பதை கொண்டாடி மகிழுங்கள்.
      "இந்த உயிர் என்னோடு இனைந்திருப்பதை தேர்வு செய்திருப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்" என்று நீங்கள் மனதார உணர்ந்தால் மட்டுமே கொண்டாடும் தன்மை உங்களுக்கு வரும். மாறாக, "இவள் என் மனைவி, எப்படியும் எனக்கு  உடமையானவள், என்னிடம் மட்டுமே இருக்க வேண்டியவள்" என்று நீங்கள் நினைக்கும் கணத்திலேயெ பாராட்டும் கொண்டாடுதலும் கானாமல் போய் விடும்.
      இரண்டு உயிர்களுக்கிடையே பாராட்டும், கொண்டாடுதலும் கானாமல் போன பிறகு அவர்களிடையே இருக்கக்கூடிய உறவு நிலையில் என்ன அழகு இருக்க முடியும்? கண‌வரோ, மனைவியோ எந்தத் தன்மையுடன் இருக்கின்றாரோ அதே தன்மையுடன் மதிக்கவும், கொண்டாடவும் முடியவில்லை என்றால், பிறகு அருமையான உறவு முறை அங்கே எப்படி இருக்க முடியும்?
      ஆனால் அவரை இன்னோரு உயிராக நீங்கள் மதிக்க ஆரம்பித்தால் அங்கே மிகவும் ஆழமான அழகான உறவுமுறை மலரும். உங்களுடைய வாழ்க்கைக்குள் வந்த பெண்ணை "இதோ, இங்கே இருப்பது இன்னோரு சக உயிர்" என்ற அளவில் வெறுமனே பாருங்கள். அப்போது இவ்வொரு கணமும் அங்கு கொண்டாட்டம் மட்டுமே இருக்க முடியும்.
      அவளுக்கு வேறு வழியே கிடையாது என்ற வழியை நீங்கள் சமூக ரீதியாக நீங்கள் உருவாக்க முயற்ச்சிக்கலாம். ஆனால் அவளுக்கும் சில வழிகள் இருக்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் சிலர் தன்னை மாய்த்துக் கொண்டாவது கணவனுக்கான உரிமையை மறுத்திருக்கிறார்கள், இல்லையா? எனவே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
      அப்படி யாரோ ஒருவர் சமூக ரீதியாக உங்களுடன் பினைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் விருப்பத்தின் பேரில் தான் தொடர்ந்து உங்களுடன் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே அவர் விருப்பத்திறக்கு நன்றி கூறி அவரையும் அவரது அருகாமையும் மகத்தானதாக கொண்டாடுங்கள். இப்படி உறவை மதிக்கவும், கொண்டாடவும் தெரிந்திருந்தால் அங்கே மேன்மையான‌தொரு உறவு மட்டுமே இருக்கமுடியும்! வாழ்க வளமுடன்!

Monday, October 15, 2012

யோகா எப்படி உதவுகிறது? ஆனந்தம்


     
      அவ்வப்போது பலரும் நான் ஏன் பிறந்தேன்? எனது வாழ்க்கைக்கு நோக்கம் என்ன இருக்கிறது? என்று கேட்கின்றனர். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் இல்ல்லாமல் இருந்தால் என்ன? முதலில் உங்களுக்குள் இந்த கேள்வி எழுவதற்கு காரணமே நீங்கள் இன்னமும் வாழ்கையின் முழுமையை, பேரான‌ந்தத்தை ருசிக்கவில்லை. எனவே தான் வாழ்கையின் அனுபவங்களுக்கு அர்தத்தை தேடுகிறீர்கள். மனிதனாக இருக்கும் மகத்துவம் இன்னும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. உங்கள் ஒவ்வொரு அனுபவமும் ஆனந்தத்தில் திளைத்தால் இப்படி கேட்கமாட்டீர்கள்.
      இந்தத் தன்மையைக் கடக்காமல் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் போது எல்லாவிதமான தவறான முடிவுகளுக்கும் தான் வருவீர்கள். தற்போதைய உங்களின் வாழ்க்கை அனுபவங்களை துன்பம் என்று முத்திரை குத்துவீர்கள். பிறகு கடவுள் உங்களுக்கு வைக்கும் பரீட்ச்சை என்று நினைப்பீர்கள். கடைசியாக இதில் நான் தேர்ச்சி பெறாக வேண்டும் என்று முடிவெடுப்பீர்கள். ஆக எல்லா தவறான முடிவுகளுக்கும் வருவீர்கள்.
      உங்களின் வாழ்க்கைப் பாதை எப்போதோ ஒரு ஷணம் வெற்றி, எப்போதோ இன்பம், எப்போதோ ஒரு ஷணம் மகிழ்ச்சி என்று இப்படிப் போகிறது. இதைஎல்லாம் கழித்துப் பார்த்தால், காலையில் எழுகிறீர்கள், சமைக்கிறீர்கள், வயிற்றுக்கு அள்ளிப்போடுகிறீர்கள், அலுவலகம் செல்கிறீர்கள். வீட்டிற்கு சோர்வுடன் திரும்புகிறீர்கள், மீண்டும் காலையில்...... இப்படித் தான் உங்கள் வாழ்க்கை போகிறது.
      இருப்பே பேரான‌ந்தமாக இருந்தால், நோகத்தை பற்றி யாருக்கு என்னெ கவலை? துன்பமான மனிதர்கள் ஒன்று சேர்ந்து தான் தத்துவங்கள், மதங்கள், சமூகங்கள் என்று உருவாக்கி வாழ்கைக்கு எல்லாவிதமான நோக்கங்களை கண்டுபிடித்தார்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணமும் உங்களுக்குள் பேரானந்தத்துடன் வெடிக்கும் போது, ஏன் எதற்காக என்ற கேள்வி எப்படி வரமுடியும்? இந்த நிலையில் தான் உங்களுக்கு யோகா உதவப்போகிறது. யோகாவைப் பயன்படுத்தி உங்கள் எல்லைகளை தகர்த்து எறிந்து முன்னேறும் போது, வெறுமனே வாழ்வதே பேரானந்தம் தான். வாழ்க வளமுடன்!

Sunday, October 7, 2012

யோகா செய்தால் எடை குறையுமா? ஆனந்தம்


     

      எடை குறைப்பிற்க்கான வழிமுறைகள் இன்று படு வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. யோகம் முதல் தெய்வீகம் வரை அனைத்துமே எடை குறைப்பிற்கானவை தான் என்று சந்தையில் விலை பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் யோகாவினால் ஏற்படும் இரட்டிப்பு பலன்கள் என்னவென்றால்......
      நீங்கள் யோகா செய்யும் போது அதிகப்படியான எடை  தானாகவே கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஒரு உடற்பயிற்ச்சியாக மட்டும் செயல்படுவதில்லை, அது உங்கள் அமைப்பிற்க்கு ஒரு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடும் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டுவருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புணர்வு வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும் தான் உண்ணும். அதற்கு மேல் அது எதையும் உண்ணாது. மற்ற உடற்ப்பயிர்ச்சிகளையோ அல்லது உணவுத்திட்டங்களையோ நீங்கள் கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்ச்சிப்பீர்கள். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்து வரும்போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
      நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும், நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்ளும். இது தான் யோகாவில் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும்.
      கிரியா யோகப் பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கும்போது, சிலர் எடை இழக்கத்துவங்குவார்கள். சிலர் எடை கூடத்துவங்கும். உங்கள் ஜீரணசக்தி, மோசமாக, அதாவது உணவை உடலை மாற்றும் திறமை மோசமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கும் போது, ஜீரண நெருப்புக்கள் தூண்டப்பட்டு, ஜீரணசக்தி மேம்பட்டு, உணவு உடலாக மாறும் திறன் அதுகரித்து, உங்கள் எடை கூடத்துவங்கும்.
      உங்கள் ஜீரணசக்தி ஏற்கனவே நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கினால், ஜீரணசக்தி மேலும் தூண்டப்படும் இருந்தாலும், உணவு உடலாக மாறாமல் சக்திநிலையில் சூட்சுமப் பரிணாமமாக மாற்றிவிடும். இப்போது நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உங்கள் எடை குறைந்து கொண்டே போவதை காண்பீர்கள்.
      கிரியாக்களை செய்யும் போது அதிகப்படியான உணவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பதை காண்பீர்கள் அல்லது உங்கள் எடை குறையவும் கூடும். அல்லது உங்கள் சாப்பாடு குறைந்தாலும் எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விதம் மாறி விடுவதால் இப்படி ஆகிறது.
      எடையை குறைப்பதற்காக யோகா இல்லை, உங்களை ஒல்லி ஆக்குவதற்க்கோ, தலைவலிக்கோ, முதுகுவலிக்கோ அல்ல யோகா. நீங்கள் அன்பாக ஆனந்தமாக மாறவே யோகா. ஆனால் இவ்விளைவுகள் எல்லாம் யோகாவின் கூடுதல் பலன்கள்.
      உடலைத் தாண்டி உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணர வைப்பதே யோகாவின் நோக்கம். அந்த பரிணாமம் உயிர்ப்புடன் இருக்கும் போது தான் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாக உங்களுக்காக திறக்கத் துவங்கும். நீங்கள் உடலைத் தாண்டிய‌ உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத்துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.
..........................வாழ்க வளமுடன்!............................