வாழ்வில் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் தடைகளைத் தவிர்க்க முடியாது. ஆன்மிகம் தான் என்றில்லை, எந்த செயலுக்கும் இது பொருந்தும். ஆனால், தவறான கோட்பாடுகள், கருத்துக்கள் பாம்பின் ஷத்தை விட மோசமானவை என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. ஒருமுறை இவ்வாறு நடந்தது.
சாத்தான் தன் செய்து வந்த வியாபாரத்தை விட்டுவிட நினைத்தது. வியாபார கருவிகளை எல்லாம் விற்றுவிட எண்ணி "இவை விற்பனைக்கு' என்று எழுதி வைத்தது. கோபம், பொறாமை, வெறுப்பு, பேராசை,
சுயநலம், ஆணவம் இப்படி பல பொருட்கள் விற்பனைக்கு வந்தன. மக்களும் விருப்பமாக பொருட்களை சாத்தானிடம் வாங்கினர்.ஆனால், இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் சாத்தானின் பையிலிருந்து வந்தது. ""அவற்றை ஏன் விற்பனைக்கு வைக்கவில்லை?'' என்று கேட்டனர். அவை விற்பனைக்கு அல்ல. மன அழுத்தமும், உற்சாகம் இழப்பதும் தான் அவை.
சாத்தான் விற்பனைக்கு வைக்காத அவ்விரு பொருட்களையும் கூட உங்களில் பலரும் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் மீதும், உங்களை சுற்றியுள்ளவர்கள் மீதும் அதைத் தொடர்ந்து பிரயோகிக்கிறீர்கள். துரதிர்ஷ்டமாக தன்னை அறிவு ஜீவிகளாக நினைப்பவர்களும் கூட உற்சாகம் இழந்து, மன அழுத்தத்தோடு சிரமப்படுகின்றனர். தர்க்கரீதியாக நீங்கள் வாழ்க்கையை பிளவுபடுத்திக் கொண்டிருந்தால் உற்சாகமின்மை உண்டாகிவிடும்.
வாழ்க்கை தற்போது எப்படி உள்ளதோ, அதை அப்படியே உணரப் பழகிகொள்ள வேண்டும். இப்போதைய கனம் எப்படி இருக்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருமுறை ஒரு கிராமத்துக்கு, நாடாளும் மன்னன் வருகை தரப்போவதாக அரண்மனை ஆட்கள் தெரிவித்தனர். எளிமையான அந்த மக்கள், மன்னனிடம் முட்டாள்தனமாக நடந்து கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்தனர். அதனால் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சங்கரன்பிள்ளை என்பவரை கிராமத்தின் பிரநிதியாக இருக்க கேட்டுக் கொண்டனர்.
சம்மதம் தெரிவித்த சங்கரன்பிள்ளைஅரசன் வரும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அரண்மனை ஆட்கள் சங்கரன்பிள்ளையிடம், ""மன்னர் உங்களிடம் மூன்று கேள்வி கேட்பார். முதலில் வயது என்ன என்பார் கேட்பார், அதற்கு எழுபது என்று மட்டும் தான் கூறவேண்டும் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட கூற கூடாது. இரண்டாவதாக, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பார். நீங்கள் "ஆறு' என்று மட்டும் கூற வேண்டும். மூன்றாவது கேள்வியாக இந்த ஆண்டு மழை எப்படி இருக்கிறது என்பார். நீங்களும் நன்றாக உள்ளது என்று கூற வேண்டும்,'' என்றனர்.
சங்கரன்பிள்ளையும் ஒத்துக் கொண்டார். அரண்மனை ஆட்கள் மன்னனிடம்,"" மன்னா! கிராமத்து மக்கள் உங்களை பார்க்க அளவு கடந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அறியாமையால் தவறாகப் பேசினாலும்கோபம் கொள்ளாதீர்கள், கிராமத்து பிரதிநிதியிடம் அவருடைய வயது, எத்தனை குழந்தைகள், மழை நிலவரம் மட்டும் கேளுங்கள். அதுபோதும்,'' என்று கூறி அழைத்து வந்தனர்.
மக்களை சந்தித்த அரசர், மக்களிடம்,"" உங்கள் பிரதிநிதி யார்?'' என்று கேட்டார். கூட்டத்திலிருந்து எழுந்து வந்தார் சங்கரன்பிள்ளை.
அவரிடம் மன்னன், ""உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?'' என கேட்டார். ""எழுபது'' என்றார் சங்கரன்பிள்ளை.
"" உங்கள் வயது என்ன?'' என்று கேட்டார் மன்னர். அவர்,"ஆறு' என்று ஒருவார்த்தையில் முடித்துக் கொண்டார். மன்னர் கோபமாக,"" உங்களுக்கு என்ன பைத்தியமா?''என்று கேட்டார். சங்கரன் பிள்ளையும்,""நன்றாக உள்ளது,'' என்றார். மன்னர் மிகுந்த
கோபமடைந்து, "இந்த ஆள் சரியான பைத்தியம், கிராமத்து பிரதிநிதியாக இவன் ஏன் இருக்கிறான்,'' என்றார். சங்கரன்பிள்ளையும் மன்னனிடம்,"" நீங்கள் தான் பைத்தியக்காரன். நான், பதிலை வரிசையாகத்தான் கூறினேன். நீங்கள் தான் தவறாக கேள்விகளைக் கேட்கிறீர்கள்,''என்றார்.
நம் மனம் கடந்த காலத்திலேயே நின்று கொண்டு செயல்படுகிறது.
மனதின் போக்கில் போனால் நாம் குழப்பமாகிவிடுவோம். நான் தர்க்கமனத்தைப் பற்றித் தான் சொல்கிறேன்.
தர்க்கரீதியாக யோசிப்பது என்றால், ஒவ்வொரு நாள் காலையிலும் கண் விழித்தவுடன் பல் துலக்குகிறீர்கள். காலைக்கடமைகளைச் செய்கிறீர்கள். சாப்பாடு, வேலை, சாப்பாடு, தூக்கம் என்று நாள் முழுக்க ஏதோ ஒன்றில் ஈடுபடுகிறீர்கள். இப்படி ஆண்டுக்கணக்கில் செய்கிறோம்.
இச்செயல்களைத் தொடர்ந்து செய்வதில் என்ன மதிப்பிருக்கிறது? சில கணநேர அனுபவங்களும் இதற்கிடையில் உண்டு. சூரியோதயம், வானில் வட்டமிடும் பறவைகள், தோட்டத்தில் பூத்த புதுமலர்கள், மழலை பேசும் குழந்தையின் முகம் என்று மகத்தான விஷயங்களால் இந்த வாழ்க்கை மதிப்புடையதாகவும் எண்ணத் தோன்றலாம். ஆனால், இதெல்லாம் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள்.
தர்க்கரீதியாக எண்ணும் போதெல்லாம் மன அழுத்தம் அதிகமாகி உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்கிறீர்கள். யாரொருவர் தன்னையும், தனக்கு சாத்தியமான சூழ்நிலையையும் மதித்து நடக்கிறாரோ அவரே அனைத்திற்கும் மதிப்பளிக்கும் இயல்புடையவராக இருப்பார்.
எப்படியோ வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டீர்கள். வாழ்வைப் புரிந்து கொள்வது என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதில் சிக்கல் என்பது நீங்களாகவே உருவாக்கிக் கொண்டது. பின் நீங்களே அதற்கு தீர்வு தேடி அலைகிறீர்கள். நீங்களே திருடனாகவும் இருக்கிறீர்கள். காவல்காரனாகவும் செயல்படுகிறீர்கள். திருடன்பிடிபடுவானா? ஒருபோதும் மாட்டான். தர்க்க மனத்தின் தன்மையும் அப்படித்தான்!
No comments:
Post a Comment