Tuesday, July 26, 2011

மாபெரும் மனிதராக வேண்டுமா? ஆனந்தம்


      சமூகத்தில் மாபெரும் மனிதராக வேண்டும் என்று நினைப்பதே சிறுமையான மனநிலை. அற்பமாக உணர்பவர்கள் தான் வித்தியாசமாகத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று முனைவார்கள். சிறப்பானவராகவோ, பெருமைக்கு உரியவராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அவசியமே இல்லை.
      மற்றவர்கள் உங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதற்காக நினைக்கிறீர்கள்?
      அந்தத் திரையரங்கம் நிரம்பிவிட்டது.
      ''எங்கள் இருக்கைகளை வேறு ஒருவன் ஆக்கிரமித்து இருக்கிறான். எவ்வளவு சொன்னாலும் நகர மறுக்கிறான்'' என்று ஒரு தம்பதி மேனேஜரிடம் புகார் செய்தனர்.
      மேனேஜர் கோபமாக உள்ளே சென்றார். ஒரு ஆள் அடுத்தடுத்து மூன்று இருக்கைகளை ஆக்கிரமித்து மல்லாந்து படுத்துக்கிடப்பதைக் கவனித்தார்.
      ''தம்பி, குடித்துவிட்டு வந்திருக்கிறாயா? படம் ஆரம்பிக்கப் போகிறது. உனக்கான இருக் கையில் உட்கார். மற்ற இரண்டு இருக்கைகளை உடனே காலி செய்.''
      படுத்துக்கிடந்தவன் ஏதோ முனகினானே தவிர, அசையவில்லை. மேனேஜர் கோபமாகி போலீஸ்காரரை அழைத்து வந்தார்.
      போலீஸ்காரர் மிரட்டலாகக் கேட்டார்.
      ''டேய், உன் பெயர் என்ன?''
      அவன் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தான்.
      ''சங்கரன்'' என்றான்.
      ''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று அதட்டலாக அடுத்த கேள்வி வந்தது.
      வலி கலந்த முனகலாகப் பதில் வந்தது: ''பால்கனியிலிருந்து.''
      இப்படி மற்றவர்கள் கவனத்தைக் கவர்ந்தவராக மாறவா ஆசை? 'இல்லை. என்னை மற்றவர்கள் போற்றும் அளவு நடக்க வேண்டும்' என்று சொல்கிறீர்களா?
      வாழ்க்கையில் எதை அணுகினாலும், 'நான் என்ன ஆவேன்? எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்குகளை நீக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். உங்கள் திறனை 100 சதவிகிதம் முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்துவிட்டாலே நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்கள்.
      தவிர, ஒருவர் வாழும் நாட்கள் சரித்திரத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான பெருமையும் மாறும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நபர் இந்தத் தேசத்துக்கு மிகத் தேவையாக இருந்தபோது கிடைத்ததால்தான் மகாத்மா காந்தி ஆனார். மகாத்மா என்றால், மிகச் சிறந்த உயிர் என்று அர்த்தம். இன்றைய காலகட் டத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், மற்றவர்க ளோடு தாக்குப்பிடிப்பாரா... யோசியுங்கள்.
      ஊழலிலே மூழ்கிப்போன ஓர் அரசியல்வாதி தனியே ஓய்வு எடுக்க கடற்கரைக்குச் சென்றார். தண்ணீரில் கால்களை நனைத்து அவர் நின்றிருந்த போது, திடீரென்று அலைகள் அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டன.
      இதைக் கவனித்த இளைஞன் ஒருவன் தண்ணீரில் பாய்ந்தான். அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
      அரசியல்வாதி வெலவெலத்துப் போயிருந்தார். ''நன்றி, தம்பி. எனக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. உனக்கு என்ன வேண்டுமோ கேள். நிறை வேற்றிவைக்கிறேன்.''
      ''ஐயா, என் இறுதிச் சடங்குகளை ராணுவ மரியாதையுடன் செய்ய வேண்டும். இதுவே என் ஆசை.''
      அரசியல்வாதி திகைத்தார்.
      ''தம்பி, இவ்வளவு இளைஞனாக இருக்கிறாய். அதற்குள் உனக்கு எதற்கு மரணத்தைப் பற்றிய கவலை?''
      ''நான் கடலில் இருந்து யாரைக் காப்பாற்றி இருக்கிறேன் என்பது வெளியில் தெரிந்தால், என் உயிருக்கு ஏது ஐயா உத்தரவாதம்?'' என்றான், இளைஞன் நடுக்கத்துடன்.
      இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நிறைந்த இன்றைய இந்தியாவில், மகாத்மா காந்தி தனது நேர்மையான கொள்கைகளை வைத்துக்கொண்டு தேர்தலில் நின்றால், வெற்றி பெற முடியுமாஎன்பதே சந்தேகம்தான்.
      அவர் வாழ்ந்த காலகட்டத்திலும் தான் பெருமைக்கு உரியவராக அறியப்பட வேண்டும் என்ற முனைப்புடனா செயல்பட்டார்? இல்லை. தன் தனிப்பட்ட தேவைகளைப் பின்தள்ளி வைத்துவிட்டு, தேசத்துக்கு எது தேவையானதோ, அதற்கு அவர் முக்கியத்துவம் தந்தார். அதனால், பெருமை பெற்றார்.
      உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாயக் கணக்கை நீக்கிவிட்டு உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைக் கவனியுங்கள். தானாகவே உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கவனிப்பீர்கள். தேவையானதைச் செய்வதற்கு உங்கள் திறமையை இன்னும் எப்படி மேலோங்கச் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். திறமைகளைக் கூர்தீட்டிக்கொள்வீர்கள்.
      இந்தியாவிலேயே செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் பாக்கி இருக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பேசுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. செய்து முடிப்பதற்கு இன்னும் பல நூறு விஷயங்கள் மிச்சம் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல், உங்கள் தேவைகளை முன்னிறுத்தி மட்டுமே வேலைகளைத் தேடுவதால்தான் அவை கிடைப்பது இல்லை.
      'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்கு விலகியவுடன் நீங்கள் பிரகாசிக்கத் துவங்கிவிடுவீர்கள்.
      உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும், எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உங்கள் திறனைப் பொறுத்துதான் அமையும். தேசத்தில் உயர்ந்தவராக நீங்கள் அறியப்படலாம். அல்லது, உங்கள் ஊரில் பெருமைமிக்கவராக மாறலாம். உங்கள் தெருவில் கவனிக்கப்படுபவராக இருக்கலாம். எதுவும் இல்லாமல், உங்கள் வீட்டளவில் மட்டுமே நீங்கள் சிறப்பானவராக மதிக்கப்படலாம். அதனால் என்ன?
      மற்றவர்கள் உங்களை மகாத்மா என்று அழைக்கட்டும். அழைக்காமல் போகட்டும். அது ஒரு பொருட்டல்ல. உங்கள் அளவில் நீங்கள் மகாத்மாவாக உணர்வீர்கள். மகாத்மாவாக வாழ்வீர்கள்!

3 comments:

அப்பாதுரை said...

சுவாரசியமான கதைகளுடன் சுவையான பதிவு.
அடிப்படைக் கருத்தில் வேறுபடுகிறேன். மாபெரும் மனிதனாக வாழவேண்டும் என்று நினைப்பதில் எந்த சிறுமைத்தனமும் இல்லை. உண்மையில் ஒவ்வொரு மனிதரும் அப்படி வாழ நினைக்கவேண்டும். மாபெரும் மனிதனாக வாழ நினைப்பதற்கும் புகழை விரும்புவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இரண்டையும் கலந்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. மாபெரும் மனிதராக வாழ விரும்புவோர்/வாழ்வோர் புகழினால் பெருமையோ புகழின்மையால் வருத்தமோ அடைவதில்லை.

அப்பாதுரை said...

எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ஐயா? வேலையில்லாத் திண்டாட்டம் இன்றைய சமூக அமைப்பின் மிகப் பெரிய சிக்கல். அதைத் தீர்க்க முனைவது ஒவ்வொரு வளர்ந்த மனிதரின் முக்கியக் கடமைகளுள் ஒன்றாகும்.

Anand said...

மன்னிக்கவும் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்... இது ஒரு த‌ன்னப்பிக்கை ஊட்டும் விசயம்.

Post a Comment