Showing posts with label அரண்மனை. Show all posts
Showing posts with label அரண்மனை. Show all posts

Thursday, November 17, 2011

தியானம்‍-கவனித்தல் ஆனந்தம்


      ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார்.
      இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான்.
      அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது.
     இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான்.
     அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள்.
      இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம்.
     அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்கு வந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை.
      இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு என்பதை உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன்.
      இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்.....அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்.... அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள்.
      ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது.
      அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில் நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும்.
      அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான்.
     பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும்.
      அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள்.
      இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படி இருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன்.
      அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்..... இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான்.
      பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான்.
      அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர்.
      அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும்.
      அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்... யாரையும் எங்கிருந்தாலும் - சாவு - உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும்.
      அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார்.
     அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின் கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான்.
      அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார்.
      இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னை வாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான்.
      அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குரு சொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய்.
      அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார்.
      இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை.
      அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள் சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
      பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
      அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான்.
      அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான்.
      அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார்.
      துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறது அரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்........ எத்தனை நஷ்டம் என்றான்.
      ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார்.
      அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான்.
அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும்
      ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம். நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒரு சாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும்.
      அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான்.
      அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார்.
      மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக - சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது.
      அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்..... ஒரே ஒரு கணம் கவனமில்லாமை...... பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது.
      கவனித்தல் ஒரு சிறிய விஷயம்.ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான்.
      பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன
      நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான்
      நீ - செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய்.
      செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும்.
மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை.
      எதையும் செய்யாதே.
      நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது
      பசிக்கும்போது சாப்பிடு.
      தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி
      தூக்கம் வரும்போது தூங்கு
      விழிப்பு வரும்போது எழுந்து கொள்.
      மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு.
      தேவையான சிறிய விஷயங்களை செய்.
      சாதாரண வாழ்க்கையை வாழ்.
      நீ கண்டுபிடிப்பாய். அது தான் தியானம், உன்னை புத்தனாக்கும், இயேசுவக்கும், கிருஷ்ணனாக்கும். வாழ்க வளமுடன்!

Thursday, January 6, 2011

மனநிலை ஆனந்தம்

        ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு துறவி மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த துறவி அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
        அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி இறங்கி, "சுவாமி, உங்களது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றான்.
        அந்த துறவி தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள்,என்றான்.
        அரசன், "நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது தவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன். அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்."  என்றான்.
        இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான்.
        ஆனால் அந்த துறவியோ எழுந்து நின்று, "போகலாம்" எனக் கூறுகிறார். 
        இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், "நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில் இருக்கும் சுகங்களை அனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியே அல்ல." என அரசன் மனம் நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து. வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள்........ அப்போது தான் அவர் ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் அந்த துறவி தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.
        ஆனால் அந்த துற‌வி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல வேலையாட்களை அமர்த்தி துறவியை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் அந்தத் துறவி தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தார். என்ன வகையான துறவி இவர்? அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.
        அரசன், "கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்." என்று நினைத்தான்.
        ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?
        ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.
        துறவியோ, நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.
        நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் இவ்வளவு காலமாக இந்த அரண்மனை சுகத்தை அனுபவிக்கும் துறவியாகிய‌ உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?
        என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில் எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் வர வேண்டும், என்றார் துறவி.
        இருவரும் பல மைல் தாண்டி சென்று கொண்டிருந்தனர். ஒரு ந‌தியை கடந்தனர். கரையை கடந்தவுடன் துறவி, "நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா" என்றார்.
        அரசன், "என்னால் எப்படி தொடர்ந்து வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்....... ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு தொடர்ந்து வர முடியும்?" என்றான்.
        துறவியோ, வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். நான் அரண்மனையில் எவ்வளவு ஆனந்தத்தோடு இருந்தேனோ அதே ஆனந்தத்தோடு மரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில் இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனக்கு எல்லாம் ஒரே நிலைதான். என்றார்.
        தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் துறவியின் காலில் விழுந்து, இப்படி நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான். நீங்க‌ள் மீண்டும் என் அர‌ண்ம‌னைக்கே வ‌ர‌வேண்டும் என்றான்.
        துறவியோ, அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றி விட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னை போகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாக தேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.
       ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.
       அந்த துறவியோ, நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும். என்றார். உன் தூக்க‌ம், நிம்மதி போய்விடும். ஆகவே உன் மீது கருணை கொண்டு நான் வரப்போவதில்லை, என் வழியே போகவிடு என்று கூறிவிட்டு போய் விட்டார்........ எந்த மனநிலையிலும்  நிலையிலும் ஆனந்தமாக வாழ்பவர்களே.... உயிர்ப்போடு வாழ்பவர்கள்.