Showing posts with label மன்னிப்பு. Show all posts
Showing posts with label மன்னிப்பு. Show all posts

Monday, October 21, 2013

மன்னிக்க முடியாத மன்னிப்பு ! ஆனந்தம்

      


      வெறும் நம்பிக்கைகளாகவும் ஒழுக்க விதிகளாகவும் திணிக்கப்படும் அட்வைசுகளில் ஒன்றான மன்னிப்பை, மறுப்பதே நம்மில் பலர் வழக்கமாய் கொண்டிருக்கிறோம். மன்னிக்கச் சொல்லி பல மதங்கள் நமக்கு அறிவுரை வழங்கினாலும் ஏற்றுக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நம்மை படுத்துகிறது.

அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் இது.

      “நேற்று காலையில் என் மகளுடன் சண்டை. அவள் என்னை அடித்தாள்; கிள்ளினாள்; கடித்தாள். இரவு தூங்கப்போகும் முன், வழக்கம்போல் எனக்கு முத்தம் கொடுக்க வந்தாள். ‘ஒன்றும் தேவையில்லை’ என்றேன் வெறுப்புடன். ‘இதேபோல் நான் உன்னை அடித்துக் காயப்படுத்திவிட்டு, முத்தம் கொடுக்க வந்தால், நீ என்ன செய்வாய்?’ என்றேன். அவள் சற்றும் யோசிக்காமல், ‘உன்னை மன்னித்துவிடுவேன். என்ன இருந்தாலும் நீ என் அம்மா அல்லவா?’ என்றாள்” – இதைச் சொல்லும்போது அந்தப் பெண்மணிக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

மன்னிப்பு என்பது அவ்வளவு உணர்ச்சிகரமானது.

      என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. என் உயிரைப் பறிக்கும் முயற்சிகள் கூட நடந்து இருக்கிறது. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை.
ஆனால், என் வாழ்வில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை. யாரையாவது குற்றவாளி என்று நினைத்தால்தானே மன்னிக்க முடியும்?

      அதற்காக என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை. யாரையும் குற்றவாளியாகப் பார்க்கவில்லை.

     உண்மையில் மன்னிப்பு என்பதே ஒருவித தந்திரம். அது இன்றைக்கு உலகில் பெரிய வியாபாரமாகிவிட்டது. முதலில் தவறு செய்யது விட்டு அல்லது செய்ய வைத்து விட்டு பின் மன்னிப்பு என்பது?

      ஒருவன் கடற்கரையில் நடந்து கொண்டு இருந்தான். எதிரில் ஒரு விற்பனையாளன் வந்தான்.

“ஐயா, ஒரு டூத்பிரஷ் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்நூறு ரூபாய்.”

“என்னது… பல் தேய்க்கும் பிரஷ் ஐந்நூறு ரூபாயா? கொள்ளையாக இருக்கிறதே?”

“வீட்டில் தயாரித்த சாக்லேட் இருக்கிறது. வெறும் ஐந்து ரூபாய்தான். அதையாவது வாங்கி உதவுங்கள்.”

“இது நியாயமாகத் தெரிகிறது” என்று அவன் ஐந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கி வாயில் போட்டான். உடனே, ‘த்தூ… த்தூ…’ என்று துப்பினான்.

“ஏய் இதில் கழிவறை நாற்றம் வருகிறதே?”

“அங்கிருந்து எடுத்ததுதான் சார். இப்போது சொல்லுங்கள். வாயைச் சுத்தம் செய்ய டூத்பிரஷ் வேண்டுமா?”

      இப்படித்தான், முதலில் உங்களைப் பாவம் செய்ய வைத்து பின்னர் அதற்கு மன்னிப்பு வழங்கி அல்லது கேட்க வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இது ஒரு வித அரசியல்

      ஒருவரை ஏன் குற்றவாளியாகப் பார்க்கிறீர்கள்? அவர் உங்களைப்போல் சிந்திக்கவில்லை. நடந்து கொள்ளவில்லை. உணரவில்லை என்பதால்தானே?

      நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படி சுதந்திரமாக வாழ விரும்புகிறீர்கள். உங்களைச் சுற்றி உள்ள மற்ற மனிதர்களும் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்களோ, எப்படி அறிந்திருக்கிறார்களோ, அப்படி வாழ விரும்புகிறார்கள். அவ்வளவுதானே?

      யாரையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டதாக நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால், வாழ்நாள் முழுவதும் அவர்களை உங்கள் அடிமைகளாக நினைக்கத் தோன்றும்.

அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதாமல் இருப்பது அதைவிடச் சிறப்பல்லவா?

Friday, February 4, 2011

சினம் - மன்னிப்பு ஆனந்தம்

        சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு. மகாத்மா எழுதிய ஆயிரமாயிரம் வாசகங்களில் தலைசிறந்த வாசகம் எது? அதன் முடிவு, பலகீனமானவன் யாரையும் மன்னிப்பதில்லை, பலம் பொருந்தியவன் அனைவரையும் மன்னிக்கிறான்.
        மன்னிப்புக்கு மாற்றுப்பாதை கோபம். நாம் தவறு செய்யும் போது, அப்பாவோ, அம்மாவோ அல்லது உயரதிகாரிகளோ "ந‌டந்தது நடந்து போச்சு, சரி பரவயில்லை" என மன்னிக்க மாட்டார்களா என ஏங்குகிறோம், நாம் மன்னிப்புக்கு ஏங்குகிறோம், பிறரை மன்னிக்கத் தயங்குகிறோம்.
        நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களில் பல ரகங்கள் உண்டு. சாதுக்கள், சண்டாளர்கள், ஏமாற்றுபவர்கள், ஏமாறுபவர்கள், கருமிகள், தருமவான்கள், முன்கோபிகள், மூர்க்கர்கள், அருளாளர்கள் என பலவகையினரை நாம் பார்க்கிறோம். இவர்களுக்கு மத்தியில் தான் நாம் வாழவேண்டியிருக்கிறது. யாருடனும் பகைமை கொள்ளாது அனைவரிடமும் இணக்கமாக வாழ, நமக்கு அவரவர்களை அவரவர் நிலையில் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.
        நமது வாழ்க்கையில் நித்தம் நித்தம் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சம்பவங்களே! சிலது நல்ல பலனைத் தரும், சிலது நல்ல பாடத்தைத் தரும். பலனைப் பெறும்போது சந்தோசமடைகிறோம், பாடத்தைப் பெறும் போது சம்மந்தப்பட்ட மனிதர்களை கோபம் கொண்டு காயப்படுத்துகிறோம்.

        கண்டிப்பு வேண்டும், ஆனால் கோபம் கொண்டு வார்த்தைகளை தாறுமாறாக கொட்டும் கோபம் வேண்டாம். கோபம் கொண்டால் மனிதனுக்கும் விலங்கிற்கும் வித்தியாசமில்லை. ஆனால் மன்னித்தல் என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியமானது. மனிதனின் த்னித்தன்மையை இழக்கச் செய்வது சினம். ஆகவே வள்ளுவர் அருளினார்,
                      " தன்னைத்தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
            தன்னையே கொல்லும் சினம்"
        அன்பின் அடையாளம் மன்னிப்பு. ஆணவத்தின் ஆரவாரம் சினம்.
        வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிறுசிறு சம்பவங்கள்-கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை, வசதி மிகுந்த சிலர் என்னை மதிக்கவில்லை, வெளிநாடு போகும் போது என்னிடம் சொல்லிக்கொண்டு போகவில்லை, மருத்துவமனையில் இருக்கும் போது என்னை வந்து பார்க்கவில்லை என்ற எண்ணங்கள் சில சிக்கல்களை கோபத்தை மனதில் ஏற்படுத்தலாம். உருவான சிறுசிறு சிக்கல்களை  பெரிதாக்குவது நம்கையில் தான் இருக்கிறது. சிக்கல் உருவானது நம் மனதில் ஆகவே தீர்வும் அங்கே தான் உருவாக வேண்டும். சிக்கல் சிறிதாக இருக்கும் போது அதை உருவாக்கியவரை மன்னித்து சம்பவம் நடக்காதது மாதிரி நாம் நடந்து கொண்டால் அந்த சிக்கலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கிறோம். மாறாக, சினம் கொண்டு சம்மந்தப்பட்டவர்களை வார்த்தைகளால் வாரி இறைத்தால் சிக்கல் பெரிதாகி விடுகிறது. அவர் மீது நமக்கு வெறுப்பும், நம் மீது அவருக்கு வெறுப்பும் உண்டாகி நல்ல உறவுகளை இழக்கிறோம்.
                      "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
                     இனமெனும் ஏமப்புனையைச் சுடும்"
        சென்னையில் எனது நெருங்கிய உறவுக்காரர், மிகவும் வேண்டியவர். அவர் வீட்டுக் கல்யாணத்திற்கு பத்திரிக்கை இன்னும் வரவில்லை, விடிந்தால் கல்யாணம் கல்யாணத்திற்கு செல்வதா? வேண்டாமா?
        நெருங்கிய உறவுக்காறர் ஆயிற்றே பத்திரிக்கை கொடுத்து தான் கல்யாணத்திற்கு செல்ல வேண்டுமா? என்று அவரை மன்னித்து கல்யாணத்திற்கு சென்றால், நான் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். "நேரில் வந்து அழைக்கலாமென்று இருந்தேன், கடைசி நேரத்தில் விட்டுப் போய்விட்டது என்று கட்டிப் பிடிப்பார் அவர். அங்கே நல்உறவு  வாழ்க்கை முழுவதும் நீடிக்கும். அல்லது சென்னையில் எத்தனையோ திருமணங்கள் அழைப்பில்லாமல் நடக்கின்றன அதில் இதுவும் ஒன்று என்று பேசாமல்(கல்யாணத்திற்கு போகாமல்) விட்டுவிட்டால் அதோடு சிக்கல் தீர்ந்து உறவு நீடிக்கும். அதை விடுத்து கோபத்தில் போகாமல் விட்டுவிட்டதுடன், நாளைக்கு நம்வீட்டு விசேஷத்திற்கும் அவருக்கு அழைப்பு கொடுக்கக் கூடாது என்ற முடிவுடன், அவரைப் பற்றி தகாத வார்த்தைகளை அள்ளி வீச, அதை நான்கு பேரிடம் சொல்ல உறவு முறிகிறது.
        வீட்டிலாகட்டும், வெளியிலாகட்டும் கோபம் கொண்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டு உறவுகளை முறித்து விடாதீர்கள். உறவுகள் முறிய முறிய தனிமைப் படுத்தப்படுவோம். உற‌வுகளைக் கட்டிக் காப்பற்றுவது தெய்வீகம். அந்த தெய்வீகத் தன்மையை வளர்ப்பது நமது மன்னிக்கும் தன்மையே.
        சினம் நம்மைத் தாழ்த்திவிடும், மன்னிக்கும் தன்மை ஒன்றே நம்மை உயர்த்தவல்லது. மன்னிப்பே மகத்தானது. மன்னிப்பே நமக்கும் நிம்மதியைத் தந்து, மற்ற‌வர்களுக்கும் நிம்மதியைத் தரும். மன்னிப்பதால் ஆனந்தம் நிலைக்கும், ஆனந்தம் பெருகும்..........
…………………… அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி…………………….

Wednesday, December 29, 2010

தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் ஆனந்தம்:

       மனிதனாக பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் தவறு என்று உணர்ந்த பின், அந்த தவற்றை ஒப்புகொள்ளத் தயாராக இருக்கிறீர்களா என்பது தான், உங்களை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.
       செய்தது தவறா, தவறில்லையா என்பது கூட பிரச்சனையல்ல.. அதை ஒப்புக்கொள்கிற அகங்கார நினைப்புதான் பிரச்சனனை!
       குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வளைந்து கொடுத்தீர்கள்? உங்களை அடிதவரிடமே கூட எந்த வண்மமும் இல்லாமல் திரும்ப அவ்ர்களிடம் செல்வீர்களே... அப்போது அந்த சந்தோசம் எப்படி இருந்தது?
       வளர வளர உடல் அளவிலும் மனதளவிலும் இருகிவிட்டீர்கள்.
       சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.
       அந்த அடையாளத்தின் கெளரவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில், உங்கள் நேர்மையையே பலி கொடுக்கத் தயாராகிவிட்டீர்கள். அதனால் தான் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை குணத்தைக் கூட இழந்துவிட்டீர்கள்!
       "மன்னித்துவிடு! தெரியாமல் நடந்துவிட்டது, அறியாமல் செய்துவிட்டேன்! அடுத்த தடவை திருத்திக்கொள்கிறேன்!" என்று பணிந்து சொல்வதால், என்ன குறைந்துவிடுவீர்கள்.
       தவற்றை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல், மேலும் அதை நியாயப்படுத்திகொண்டு இருப்பது தான் தவறு.
       ஒரு முறை சங்கரன்பிள்ளை, இன்னொருவர் தோட்டத்தில் கனிந்த பழங்கள் தொங்குவதைக் கண்டார். ஒரு கோணிப்பை எடுத்து வந்தார், வேலி தான்டிக் குதித்தார்.
       மரத்திலிருந்து பழங்களைப் பறித்தார். கோணிப்பையை நிர‌ப்பித் தோளில் போட்டுக்கொண்டார். வேலி தாண்டி வெளியேறப் பார்த்த போது தோட்டத்தின் சொந்தக்காரன் கையில் வசமாக சிக்கிக் கொண்டார்.
       "யார் அனுமதியுடன் இவற்றைப் பரித்தாய்?"
       "நான் பறிக்கவில்லையே, பலமான காற்று அடித்தது, அவற்றில் இவை எல்லாம் உதிர்ந்தன!" என்றார் சங்கரன்பிள்ளை.
       "அப்படியானால், இந்தக் கோணியை எதற்காக எடுத்து வந்தாய்?"
       "ஓ... இதுவா? இதுவும் காற்றில் காற்றில் எங்கிருந்தோ பற‌ந்து வந்தது!"
       காற்றிலே பழங்கள் உதிர்ந்திருக்கட்டும்.... கோணியும் பறந்து வந்திருக்கட்டும்! பழங்களைக் கோணியில் நிர‌ப்பியது யார்?" என்று சொந்தக்காரன் உறுமினான்.
       சங்கரன்பிள்ளை அதற்கும் கலங்காமல், அப்பாவி போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு, "அது தான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்றார்.
       தவறு செய்பவர்கள் பலரும் சங்கரன்பிள்ளை போலத் தான்.... கையும்கள‌வுமாகப் பிடிபட்டாலும், தன் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவார்கள்.
       இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது!
நண்பர்களிடம், சக ஊழியர்களிடம், மேலதிகாரியிடம், உங்க‌ளுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் என்று பாகுபாடு பார்க்காதீர்கள்.
       என்ன தவறு செய்தாலும் அதை நேர்மையாக ஒப்புக்கொள்ளுங்கள். அது உங்களைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.
       தவறு என்றே உணராமல், சிலர் வார்த்தைகளாலும், செயல்களாலும் அடுத்தவரைக் காயப்படுத்தி விடுவார்கள். அதைச் சுட்டிக் காட்டினால் உனக்கு வேதனை ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல என்பார்கள்.
       பழைய ஜோக் ஒன்று...
       பஸ்ஸில் ஒருவன் தனக்கு பக்கத்தில் நின்றவனின் காலை அழுத்தமாக மிதித்துவிட்டான். பின்பு கவனிக்கலே என்று சொல்லி, காலை எடுத்துக் கொண்டான்
       மிதிபட்டவன் தன் காலைப் பார்த்து, "ஏ...காலே! அவர் தான் காரணத்தை சொல்லி விட்டாரே! இன்னும் ஏன் வலிக்கிறாய்?" என்று அதட்டினாய்.
       வேண்டும் என்றே மிதித்தாலும், தெரியாமல் மிதித்தாலும் வலி, வலி தானே?
       மன்னிப்புக் கேட்பதை விடுத்து, "வேண்டுமென்றா மிதித்தேன்?" என்று விவாதிப்பது எப்படி நியாயமாகும்.
       கவனமற்று இருப்பதே ஒரு தவறு என்பதை புரிந்து கொள்ள மறுக்கலாமா?
       கவனிக்காதவரை, அதே வேதனையை இன்னும் பல நூறு பேர்களுக்கு கொடுக்க நேரலாம் அல்லவா?
       கவனமில்லாமல் ஒரு முறை தவறு செய்யலாம். ஆனால், தவறு பற்றிய கவனமில்லாமல் தான் தொடர்ந்து இயங்குவேன் என்பது வளர்ச்சிக்கு எதிரானது.
       சிலர் உங்கள் தவறுகளை பூதக்கண்ணாடியால் பார்க்கக்கூடும், பார்த்துவிட்டு தான் போகட்டுமே!
       நீங்கள் மன்னிப்பு கேட்டால், உங்கள் யுத்தம் அங்கேயே முடிந்து, குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்?
       புரிந்துகொள்ளுங்கள்.. இது விட்டுக் கொடுப்பதோ, தோற்றுப் போவதோ அல்ல! உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்....
       வியாபாரம் செய்தாலும், விளையாட்டாக இருந்தாலும், உங்கள் தவறுகளை எற்றுக்கொள்ளப்வதைப் பொறுத்து் தான் வாழ்க்கையில் உங்கள் வெற்றி அமைகிறது.
      தவற்றை ஒப்புக்கொள்ளாதவரை, மனதிற்க்குள் சிலுவை போல் உங்கள் குற்ற உணர்வைத் தேவையின்றி சுமக்க நேரிடும்.
       உங்கள் அலட்சியமான குணத்தினால் அதைப் பற்றி அப்போது (தவறிழைக்கும் போது) உணர்ந்தாலும், கவலைப்படாமல் செயல்பட்டாலும், காலம் வரும்போது அந்தக் குற்றஉணர்வு உங்களைத் துரத்தும்.
       தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது, எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம். எதிர்த்து விழ்த்த முடியாத பலம். வாழ்க்கையில் உங்களை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் பலம்!

வாழ்க வளமுடன்!