Sunday, July 3, 2011

ஆனந்தத்தின் ஊற்று


      எல்லா உறவுகளையுமே மனிதர்கள் பற்றுகளாகத் தான் பார்க்கிறார்கள். பற்று என்பது அறியாமையின் வெளிப்பாடு. இதற்கு அடிப்படைக்காரணம், உங்கள் உடலோடு <உங்களை நீங்கள் ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதுதான். குறிப்பாக, இரண்டு மனிதர்களின் உடல் சார்ந்து ஓர் உறவு அமைகிறபோது, அந்தப்பற்று இன்னும் ஆழமாகிறது.
      ஆன்மிகம் உறவுகளுக்கோ, உடல் சார்ந்த இன்பங்களுக்கோ எதிரானதல்ல. ஆனால், இவையெல்லாம் பற்றினை ஆழப்படுத்தும் என்பது தான் விஷயம். ஒன்றை நீங்கள்புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பற்று இன்னொருவர் மீதல்ல. உங்கள் உடலின் மேல் உங்களுக்கு இருக்கும் ஆழமான பற்று உங்களை இன்னொருவர் மீது பற்று வைக்கச் செய்கிறது. உங்கள் உடல் மீது உங்களுக்கு பற்று இல்லாத பட்சத்தில் இன்னொருவர் மேல் உங்களால் பற்று வைக்க முடியாது. எனவே, மற்றவர்கள் மீதிருக்கும் பற்றை அகற்ற நீங்கள் போராட வேண்டியதில்லை. உங்கள் உடல்மீது உங்களுக்கு இருக்கும் பற்றை அகற்றினாலே போதும்.
      இளமைப்பருவத்தில் உடல்மீது உங்கள் பற்று ஆழமாக இருக்கிறது. வயதாக வயதாக அது மனதுக்கோ, உணர்வுக்கோ தாவுகிறது. ஏனெனில், வயது ஏறஏற உடல் மரணத்தை நோக்கிச் செல்கிறது. அப்போது தான், உடல் இன்பத்தை விட நேசம், அன்பு போன்ற உணர்வுகள் முக்கியம் என்று கருதுகிறீர்கள்.
      உணர்வுகளோடு உங்களைப் பிணைக்கத் தொடங்கும்போது, கடவுள் மீது கவனம் செலுத்தத் தொடங்குகிறீர்கள். ஏனென்றால், மனிதர்கள் உங்களை கைவிட்டு விட்டார்கள்.
      எப்படியாவது வாழவேண்டும் என்ற வேட்கை, உங்களுக்குள் இருக்கிறது. முதலில் ஒன்றைப் பற்றுகிறீர்கள். அது பலவீனம் அடைகிறபோது, இன்னொன்றைப் பற்றுகிறீர்கள். அதுவும் பலவீனமாகிற போது, எதைப் பற்றுவது என்று தெரியாத அச்சத்திலேயே மரணம் வந்து சேர்கிறது. அப்போது அச்சம் ஒன்றே மிச்சமாய் இருக்கிறது. அதுவரை, கடவுளின் பெயரை உச்சரித்து வந்தவர்கள், அச்சம் வரும் போது கடவுளையும் மறந்து விடுகிறார்கள்.
      வாழ்வில், வசதி குறைவுகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறையாகத் தான் பலரும் கடவுளை பயன்படுத்துகிறார்களே தவிர, ஆன்மிகத் தேடல் காரணமாக கடவுளை நாடுவதிலலை. சொர்க்கம் என்பது, சந்தோஷம் என்று சொல்லப்பட்டதால் அங்கு போக விரும்புகிறீர்கள். அது துன்பமயமாக இருக்கும் என்று சொல்லி இருந்தால் அந்த சொர்க்கத்திற்கு போகவே விரும்ப மாட்டீர்கள். எனவே, கடவுளைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு பலரும் மகிழ்ச்சியைத் தான் தேடுகிறார்கள்.
      ஒரு காலத்தில் 70 சதவீதம் பேர், 30 சதவீதம்பேர் துறவு வாழ்விலும் புகுந்தார்கள். எப்போதுமே, சமூகத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை பாலியல் தேடல் இல்லாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிலருக்கு தீவிரமான பாலியல் வேட்கை இருப்பது போலவே, சிலருக்கு அத்தகைய தேவைகள் இல்லாமல் போகின்றன. எனவே, உறவு வாழ்க்கையோ, துறவு வாழ்க்கையோ நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமேதவிர, சமூக நியதிகள் சார்ந்து முடிவெடுக்கக் கூடாது. உணர்வு ரீதியாக,யாரையாவது சார்ந்திரா விட்டால், உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது என்கிற தவறான போதனை உங்கள் மனதிற்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிர்ப்பந்தங் களால் அத்தகைய உறவுகளை பலரும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
      திருமண வாழ்வை விரும்பி ஏற்றுக் கொண்டு காலம் முழுவதும், மோதலிலேயே சிலர் தங்கள் வாழ்வைக் கழிக்கிறார்கள். திருமணத்தில் ஏதோ தவறு என்று பொருளல்ல. மனமுதிர்ச்சி இல்லாமல் இருப்பது தான் இந்த மோதலுக்குக் காரணம். உங்கள் உடல், மனம், உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகிற முறையில் தான் திருமணம் என்ற அமைப்பே உருவானது. மேற்கண்ட தேவைகள் இல்லை என்றால், திருமணத்தை நீங்கள் தவிர்த்து விடலாம். தங்களுக்கு திருமணம் தேவையா இல்லையா என்பதை பலரும் யோசிப்பதில்லை. ஆட்டு மந்தைகள் போல் நடந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு மணமாகிறது, அதனால் நானும் மணம் செய்து கொள்கிறேன் என்கிறார்கள். மூன்று நாட்களுக்கு மேல், அவர்களால் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கமுடிவதில்லை.
      காதலர்களாக இருக்கின்ற காலகட்டங்களில், ஒருவருக்கொருவர் மிகுந்த நேசத்தோடு பழகுகிறார்கள். பெற்றோரையே எதிர்த்து கொண்டு திருமணம் செய்கிறார்கள். ஆனால், திருமணமாகி நான்கைந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. ஒருகாலத்தில் அற்புதமான மனிதராகத் தெரிந்தவர், இப்போது மிகவும் மோசமான மனிதராகத் தெரிகிறார். எந்தச் செயல் செய்தாலும், அதற்குரிய பின்விளைவுகளையும் யோசிக்கின்ற மனிதராக இருந்தால் இத்தகைய இடர்ப்பாடுகள் ஏற்படாது.
      பலரும் மகிழ்ச்சியான மணவாழ்வு குறித்து கேட்பதுண்டு. உங்கள் உடல் உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருக்குமேயானால், வாழ்வின் 30 சதவீதம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உடலோடு மனமும் உங்கள் கட்டுப் பாட்டில் இருந்தால், உங்கள் வாழ்வு மற்றும் விதியின் 60 சதவீதத்தை நீங்களே நிர்ணயிக்க முடியும். உங்கள் சக்திநிலையும் கட்டுப்பாட்டில் இருந்தால் 100 சதவீதமும் உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். உங்கள் பிறப்பையும் இறப்பையும் கூட நீங்களே முடிவு செய்ய முடியும்.
      ஒரு முனிவர் இருந்தார். அவர் நதியில் நீராடியபோது, நீரில் மிதந்து வந்த தேளை எடுத்து கரையில் விட்டார் அப்போது அந்தத்தேள் அவரைக் கொட்டியது. அது மீண்டும் நீரில் விழுந்தது. திரும்பவும் எடுத்துப் போட்டார். அது கொட்டிக் கொண்டே இருந்தது." அதை விட்டு விட வேண்டியது தானே' என்று சீடர்கள் சொன்னார்கள். அதற்கு முனிவர், ""தேள் தன்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறது. நான் என்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறேன்'' . வெளிச்சூழல்களில் பாதிக்கப்படாத தன்மையில் இருப்பவர்களுக்குத் தான் இது சாத்தியம். எனவே, உங்கள் ஆனந்தம் அடுத்தவர் தருவதாக இருக்கக்கூடாது. வெளியே ஆனந்தத்தை தேடுவதை விட்டு, உங்களையே ஆனந்தத்தின் ஊற்றாக உருவாக்கிக் கொள்வீர்களேயானால், வாழ்வில் எவ்விதமான நிர்ப்பந்தங்களும் இருக்காது.

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படிக்கையில் பேரானந்தம்...

Post a Comment