Monday, January 3, 2011

நேசித்தல்: ஆனந்தம்

          நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.
           உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே பின்தொடரும்.
           நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு – அதன் அர்த்தம் - அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.
           மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது, அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.
          அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய். நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும் கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.
          யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சந்தோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும் நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச் சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது அது ஒரு சிறையாக இருக்காது!
          மரங்கள், பாறைகள், அன்னியர்கள், மக்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரையும் நேசிக்க ஆரம்பி.
          ஒரு பாறை மேல் உட்கார்ந்து அதை நீ காதலிப்பதுபோல உணர்ந்து தொட்டுப்பார்! நீ உடனடியாக பதில்விளைவை உணர்வாய்! ஒரு மரத்தை ஆழ்ந்த நேசத்துடன் தொட்டுப்பார்! திடீரென அது ஒரு வழிப்பாதையல்ல என்பதை உணர்வாய்! உணவை சாப்பிடும்போது, உணவை அன்புடன் மெல்லு! குளிக்கும்போது தண்ணீரை தெய்வீகம் போன்று ஆழ்ந்த அன்புடன் நன்றியுடன் பெற்றுக் கொள்! ஏனெனில் தெய்வீகம் எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும் உள்ளது.
          ஒருமுறை எல்லாமும் தெய்வீகம் என்று உணர ஆரம்பித்துவிட்டால் பின் நீ நேசத்திற்காக ஏங்க மாட்டாய், ஏனெனில் எல்லா இடங்களிலும் அது நிறைந்திருப்பதை நீ உணர்வாய். அது தான் ஆனந்தம் என்பதை உணர்வாய்........ ..................................................................ஓஷோ.................................................................................

2 comments:

Kousalya Raj said...

thank u for sharing this.

Kousalya Raj said...

உங்கள் தளம் இன்று தான் வருகிறேன். மிக நல்ல விசயங்களை பதிவாக பகிர்ந்து இருக்கிறீர்கள்.
மிகவும் அருமையாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment