ஒரு பழைய கதை .... ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை. அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான். காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது.
இந்த விறகுவெட்டி அந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி உட்கார்ந்திருப்பதை பார்ப்பான். அவர் இரவு, பகல், வெயி்ல், மழை, குளிர் என எல்லாநேரங்களிலும் எல்லா காலங்களிலும் அங்கே இருப்பதை பார்ப்பான். அதனால் காட்டிற்குள் நுழையும் முன் அவர் காலில் விழுந்து வணங்குவான். அவன் வணக்கம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் அவனைப் பார்த்து, சிரித்தபடி,"நீ ஒரு முட்டாள்" எனக் கூறுவார்.
விறகுவெட்டி ஆச்சரியமடைவான். ஒவ்வொரு முறை வணங்கும்போதும் அவர் ஆசி கூறுவதற்கு பதிலாக முட்டாள் எனக் கூறுகிறாரே என நினைத்துக் கொண்டு போவான்.
ஒருநாள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவரிடம்,"ஏன் இப்படி கூறுகிறீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு அவர், "நீ தினமும் இந்த காட்டினுள் சென்று விறகு வெட்டி கொண்டு வருகிறாய். ஆனால் இதனுள் இன்னும் சிறிது தூரம் சென்றால் செம்பு சுரங்கம் உள்ளது. அங்கு சென்று செம்பு எடுத்து சென்றால் ஏழு நாட்களுக்கு கவலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு முட்டாளுக்கு மட்டுமே அது தெரியாமல் போகும். உனது வாழ்நாள் முழுவதும் நீ இந்த காட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். நீ அதை பார்த்திருந்தால் இப்படி தினமும் வந்து விறகு வெட்டிகொண்டு செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது." என்றார்.
விறகுவெட்டியால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்த காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அவர் ஏதோ கேலி செய்கிறார் என நினைத்தான். ஆனாலும் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமானால்..............சரி, சிறிதுதூரம் போய் தேடுவதால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என நினைத்துகொண்டு இன்னும் சிறிது தூரம் காட்டினுள் சென்று ஏதேனும் செம்பு சுரங்கம் இருக்கிறதா என்று கவனமாகவும் விழிப்போடும் தேடினான்.
அங்கே அவன் செம்பு சுரங்கத்தை கண்டான். அவர் எப்போதும் நீ ஒரு முட்டாள், தேவையில்லாமல் இந்த வயதான காலத்திலும் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என ஏன் சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.
இப்போது அவன் வாரத்திற்கு ஒருமுறைதான் சென்றான். ஆனாலும் அந்த பழைய வழக்கம் தொடர்ந்தது. அவர் காலை தொட்டு வணங்கினான். அவர் மறுபடியும் அதேபோலவே சிரித்தபடி,"நீ ஒரு முட்டாளேதான்" என்றார்.
அவனுக்கு குழப்பமாக இருந்தது. "ஏன்? நான்தான் செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேனே! பிறகும் ஏன் இப்படி கூறுகிறீர்கள்?" எனக் கேட்டான்.
அவர் இன்னும் சிறிது தூரம் சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது என்று கூறினார்.
விறகுவெட்டி அதிர்ச்சியுற்றான். "ஏன் இதை முதலிலேயே கூறவில்லை?" எனக் கேட்டான். அதற்கு அவர்,"நீ என்னை செம்பு சுரங்கம் பற்றி கூறியபோதே நம்பவில்லை. பிறகு எப்படி வெள்ளி சுரங்கம் பற்றி கூறினால் நம்புவாய்? இன்னும் சிறிது தூரம் உள்ளே செல்" எனக் கூறினார்.
அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலும் இந்த தடவை ஒருவிதமான நம்பிக்கையுணர்வு அவனுள் தோன்றியிருந்ததால் அவன் இன்னும் சிறிது தூரம் உள்ளே தேடிச் சென்ற போது வெள்ளி சுரங்கத்தை கண்டறிந்தான்.
வெள்ளியை எடுத்துக் கொண்டு அவரிடம் திரும்பி வந்து, "இப்போது மாதத்திற்கு ஒருமுறை வந்தால் எனக்கு போதும். ஆனால் எனக்கு உங்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களிடமிருந்து நீ ஒரு முட்டாள் என்பதை இனி நான் கேட்க முடிய போவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருக்கிறது. நீங்கள் என்னை நீ ஒரு முட்டாள் என்று கூறுவதை நான் விரும்ப தொடங்கி விட்டேன்." என்றான்.
அதற்கு அவர்,"நீ சர்வ நிச்சயமாக முட்டாளேதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
அதற்கு அவன்,"நான் வெள்ளி சுரங்கத்தை கண்டு விட்டபிறகுமா இப்படிக் கூறுகிறீர்கள்?" எனக் கேட்டான். "ஆம், இதன் பின்னும் நீ முட்டாள்தான்! அதைத் தவிர வேறில்லை. ஏனெனில் இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு தங்க சுரங்கம் இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாளையே வா." என்றார்.
இந்த முறை அவர் நிச்சயமாக கிணடல் செய்கிறார் எனத் தோன்றியது. ஏனெனில் அப்படி அங்கே தங்கம் இருந்திருக்குமானால் இவர் ஏன் இப்படி இந்த மரத்தடியில் மற்றவர்கள் கொணடு வந்து தரும் உணவை நம்பி, -அவர்கள் கொண்டு வருகிறார்கள் பலதடவை கொண்டு வருவதில்லை.- இதுபோல வெயிலுக்கு ஒரு மறைப்பின்றி, மழைக்கு குடையின்றி குளிருக்கு போதுமான கம்பளியின்றி கஷ்டப் பட வேண்டும். அதனால் அவர் இந்த தடவை கேலிதான் செய்கிறார். ஆனால் அவர் சொல்வது எப்போதும் உண்மையாகத் தான் இருந்திருக்கிறது. மேலும் இதில் என்ன தீங்கு இருக்கிறது. யாருக்குத் தெரியும்? இந்த கிழவன் ஒரு புதிரான ஆளாகத் தான் இருக்கிறார்!
இன்னும் சிறிது தூரம் சென்றபின் அங்கே மிகப் பெரிய தங்க சுரங்கத்தைக் கண்டான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்த காட்டில்தான் அவன் தன் வாழ்நாள் முழுவதும் விறகுவெட்டி கழித்து வந்தான். அந்த கிழவன் இந்த காட்டின் ஆரம்பத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரிந்தது, தனக்குத் தெரியவில்லை.
பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டுவந்தவன் ஞானியிடம் வந்து, "இனிமேலும் நீ ஒரு முட்டாள் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்." என்றான்.
அதற்கு அவர், "அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவல்ல, அதனால் நாளை வா." என்றார்.
அவன், "என்னது தங்கம் கிடைத்தது முடிவல்லவா, ஆரம்பம்தானா!" என வியந்தான். அதற்கு அவர், "ஆம், நாளை இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் அங்கே வைரங்களைக் காண்பாய். ஆனால் அதுவும் முடிவல்ல, ஆனால் நான் உனக்கு அதிகப்படியாக எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் சொல்லிவிட்டால் உன்னால் இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை சந்தி." என்றார்.
அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் என்றல்லவோ கூறுகிறார், வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.
அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். "வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் உறங்கியிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா." என்றார்.
அவன் "வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்." எனக் கேட்டான். அதற்கு அவர் "முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று! இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்." என்றார்.
அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம்,"நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது." என்றான்.
அவர் சிரித்துக் கொண்டே, "இன்னும் நீ முட்டாள்தான்." என்றார்.
அவன்,"இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை" என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே கிடைக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்," என்றார்.
அவன் வைரங்களை கீழே போட்டான். "நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை." என்றான்.
அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி.
தகவல் அறிவுநிரம்பிய ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல.
விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.
ஞானி அவனை உலுக்கி, "இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ......... இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்." என்றார்.
விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.
அவன் ஞானியைப் பார்த்து, "நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு அவர். "நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன்". காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் புரிந்துகொண்டு ஒவ்வொரு அடியையும் சென்றடைந்தால்தான், அதையும் தாண்டி செல்லலாம், செல்லவேண்டும் என்பது தெரியும்,
மீண்டும் தேடல் தலைதூக்கும்...
தேடலின் முடிவே முடிவற்ற ஆனந்தம்தான் என்பது தெரியும்....
அதற்கு ஒவ்வொரு செயலிலும் ஆனந்தத்தை காண வேண்டும்....
முடிவற்ற ஆனந்தநிலை அடைவீர்கள்.....
No comments:
Post a Comment