Tuesday, December 9, 2014

நீங்கள் உண்மையான நண்பரா? ஆனந்தம்



     Sadhguru - Making Corruption Cosmic



      உங்கள் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? பெருவாரியான மக்களைப் போல் நீங்களும் இருந்தால், உங்கள் எண்ணங்களுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு, நீங்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கு, உங்கள் விருப்பு-வெறுப்புகளுக்கு ஒத்துப் போகிறவராய் பார்த்து உங்கள் நண்பராய் தேர்ந்தெடுப்பீர்கள். இதை மற்றொரு விதத்தில் பார்த்தால், உங்கள் குளறுபடிகளை ஒத்துக் கொண்டு ஆதரிப்பவர்களையே நண்பர்களாக ஆக்கி கொள்கிறீர்கள்.
      நீங்கள் யாரோ ஒருவருடைய நண்பராக இருக்கும்போது, அந்த மனிதரை அவருடைய குற்றம் குறைகளைச் சொல்லி சதா சர்வகாலமும் நச்சரித்துக் கொண்டே இருக்க மாட்டீர்கள். அதே சமயம் உங்கள் நண்பரிடம் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லும் நேர்த்தியும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
      அனைவரும் நம்மை விரும்ப வேண்டும் என்ற நம் தாகத்தால், முட்டாள்தனமான செய்கைகளை நாம் செய்யத் துவங்கிவிடுகிறோம். உங்களைச் சுற்றி இனிமையான சூழ்நிலையை உருவாக்குவதற்காக உங்களுக்குள் நீங்கள் உருவாக்கும் இனிமையற்ற சூழ்நிலையைப் பாருங்கள்! மனம் ஒரு வளமையான நிலம், அதில் நீங்கள் விதைக்கும் உணர்வுகளுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மிகவும் இனிமையற்ற விஷயங்களை நீங்கள் உங்களுக்குள் புதைத்தால், வளரும் கனிகள் கசப்பாகத்தான் இருக்கும்.
      உங்கள் நட்பின் உறுதியை நீங்கள் பரிசோதிக்க விரும்பினால், உங்கள் நண்பரிடம் நல்ல பெயர் எடுக்கும் எண்ணத்தை தளர்த்த முயற்சி செய்து பாருங்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு துணிவு இருக்கிறதா? தற்சமயம் உங்கள் நட்பு, உடன்படிக்கைகளின் பேரிலும் விருப்பு-வெறுப்பின் பேரிலும் நடைபெறுகிறது. ஆனால் உண்மையான நண்பன் என்றால், உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் அதே சமயத்தில் உங்களிடம் அதே அன்பையும் அரவணைப்பையும் வழங்குவார்.


என்ன புரியவில்லையா? ஒரு கதை சொல்கிறேன்…

      அமெரிக்க போர் தளபதிகள் ஒருநாள் கூடினார்கள். தங்கள் போர் படைகளுடன் உடற்பயிற்சிக்காகவும், களிப்பிற்காகவும் கிரான்ட் கன்யான் என்னும் பள்ளத்தாக்கிற்கு பயணப்பட்டார்கள். வெகு சீக்கிரத்திலேயே படைத் தளபதிகள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளத் துவங்கினர்.
      முதல் தளபதி “என் படை வீரர்களைப் போல் துணிவும் கட்டளைக்கு பணிந்து போகும் திறனும் வேறு ஒருவருக்கு வராது,” என்று தன் படைவீரர்களின் திறத்தை மெச்சத் துவங்கினார்.
      நான் நிரூபித்துக் காட்டுகிறேன் பாருங்கள், என்று “ஏ! பீட்டர்.” அங்கொரு இளம் படைவீரர் ஓடி வந்தார். “உனக்கு பின்னால் அந்த பிரம்மாண்ட பள்ளத்தாக்கை பார்க்கிறாயே? அதை நீ இப்பொழுதே தாவி மறுபக்கத்திற்குச் செல்ல வேண்டும்!”
      அந்த வீரன் தன்னால் எவ்வளவு வேகத்தில் ஓடிக் குதிக்க முடியுமோ, ஓடிக் குதித்தான். அவனால் அவ்வளவு பெரிய பள்ளத்தாக்கை தாண்ட முடியுமா என்ன? பாறையில் விழுந்து, மண்டை உடைந்து செத்துப் போனான்.
      தற்போது இரண்டாவது படைத் தலைவனின் சந்தர்ப்பம். இரண்டாவது தலைவன் இலக்காரமாக சிரித்து, “என்னைப் பார்,” என்றான்.
      “ஹிகின்ஸ்,” என்று அழைத்தார். ஒரு வீரன் வந்தான். “தற்போது ஓர் அவசர நிலை, நீ இந்த பள்ளத்தாக்கை கடந்து பறந்து சென்று மறுமுனையில் இருக்கும் நம் ஆபீஸருக்கு தகவல் சொல்லிவிட்டு வா,” என்றார்.
      அந்த மனிதர் தன் கைகளை அசைத்துக் கொண்டு… வேறென்ன நிகழ்ந்திருக்கும் பள்ளத்தாக்கில் தொப்பென விழுந்தார்.
      மூன்றாவது படைத் தளபதி மிக அமைதியாகிவிட்டார். ஆனால் பிற தளபதிகள் அவரை விடுவதாய் இல்லை. வெளியே சென்று மூன்றாமவரின் போர் வீரன் ஒருவனை அழைத்து, “அதோ கீழே உள்ள அந்த ஓடையை உன்னால் பார்க்க முடிகிறதா?” அந்த வீரன் தலை அசைத்தான். அந்த ஓடை மிகப் பெரிய அருவி ஒன்றிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே இருந்தது. அந்த படை வீரனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, “நீ அந்த ஓடைக்குள் குதித்து, அதை நீந்திக் கடந்து, இந்தத் தகவலை தலைமையகத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று சொன்னார்.
      குழம்பிய நிலையில் தளபதியை பார்த்த அந்த வீரன், “சார், நீங்க ரொம்ப குடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன், இது மாதிரி முட்டாள்தனமான விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்,” என்றான்.
      மூன்றாவது தளபதி, அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பிற தளபதிகளைப் பார்த்து, “இதுதான் உண்மையான தைரியம்!” என்றார்.

      உங்கள் நட்பில் தைரியமாய் இருங்கள். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாய் பேசுவது உங்கள் நண்பரை இழக்கச் செய்தால், பிரிவதற்கு தயாராய் இருங்கள்.

வாழ்க வளமுடன்!

Monday, August 4, 2014

விரும்பியவற்றைச் செய்யும் ஆற்றல் தரும் மூலாதார சக்கரம்! ஆனந்தம்

      விரும்பியவற்றைச் செய்யும் ஆற்றல் தரும் மூலாதார சக்கரம்!, Virumbiyavatrai seiyum aatral tharum mooladhara chakkaram


      தப் புது யுகத்தில் அனஹதா, சஹஸ்ராரம், ஆக்ஞா சக்கரங்களைப் பற்றி மக்கள் அதிகம் பேசுகிறார்கள். ஆனால், எல்லா சக்கரங்களுக்கும் கீழே உள்ள மூலாதாரம் பற்றி பேச்சுக்கள் அடிபடுவதில்லை. கவனிக்காமல் விடுபடும் இந்தச் சக்கரம் ஒரு சாதகரின் மேல் ஏற்படுத்தும் தாக்கமென்ன என்பது பற்றி இந்தக் கட்டுரையில்

      கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பின் கருவில் இருக்கும் மனித உடலை பார்த்தால், சின்னஞ்சிறிய சதைப்பிண்டமாகத்தான் இருக்கிறது. அந்தச் சிறிய சதைப்பிண்டம் இன்று நாம் வளர்ந்திருக்கும் அளவுக்கு தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. குறிப்பாக, தன்னை இதுபோல் ஆக்கிக் கொள்ளும், குறிப்பிட்ட மென்பொருளை பிராணமய கோஷம் அல்லது சக்தி உடல் என்று அழைக்கலாம்.

      கருவுற்ற பெண் அதிர்வுமிக்க, முழுமையான சக்தி உடலை கொண்டிருந்தால், திறமைசாலியான மனித உயிரை அவள் ஈன்றெடுப்பாள். சக்தி உடல் உருவான பிறகு, அதன் அடிப்படையில் சரீர உடல் உருவாகிறது. சக்தி உடலில் ஏதேனும் திரிபு இருந்தால் அது சரீரத்திலும் வெளிப்படும். அதனால்தான், இந்தக் கலாசாரத்தில் ஒரு பெண் கருவுறும்பொழுது, அவளுடைய சக்தி உடலின் மீது தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அவள் கோவிலுக்கு செல்வது, பெரியவர்களிடம் ஆசி பெறுவது போன்ற செய்கைகளில் ஈடுபடுத்தப்பட்டாள். கருவுற்ற பெண் அதிர்வுமிக்க, முழுமையான சக்தி உடலை கொண்டிருந்தால், திறமைசாலியான மனித உயிரை அவள் ஈன்றெடுப்பாள்.

மூலாதாரம் – அஸ்திவாரம் அவசியம்

      சக்தி உடலின் அஸ்திவாரம் மூலாதாரம். இது கீழ்நிலையிலான சக்கரம், அதனால் அதனை குறித்து எதுவும் செய்யத் தேவையில்லை என்று மக்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். அஸ்திவாரத்தை கவனிக்க வேண்டாம் என்று நினைப்பவர் நிச்சயம் முட்டாள்தான். அஸ்திவாரம் மிக முக்கியமான ஒன்று. யோகா செய்யும்பொழுது மூலாதாரத்தில் நாம் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். இதை உறுதிப்படுத்தினால், பிறவற்றை உருவாக்குவது எளிது.

      அஸ்திவாரம் உறுதியாக இல்லாத கட்டிடத்தை நிலைநிறுத்த முயற்சி செய்வது, தினசரி சர்க்கஸ் செய்வதைப் போல் இருக்கும். பெரும்பாலான மனிதர்களின் வாழ்விலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவிலான சமநிலையில், நல்வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது பலருக்கும் சர்க்கஸ் செய்வது போலத்தான் ஆகிவிட்டது. ஆனால், உங்கள் மூலாதாரம் நிலையாக இருந்தால் வாழ்வோ, சாவோ நீங்கள் சமநிலையுடன் இருப்பீர்கள். காரணம், உங்கள் அஸ்திவாரம் வலுவாக இருக்கிறது, பிறவற்றை பின்னர் சரி செய்து கொள்ளலாம். ஆனால், உங்கள் அஸ்திவாரம் உறுதியாக இல்லாதபோது, கவலையே மிஞ்சி நிற்கும்.

அனுபவ வேட்டையில் ஏற்படும் ஆபத்துகள்

      அருள் தன்னை நமக்கு வழங்க வேண்டுமென்றால், அதற்கு உகந்த உடல் உங்களிடம் இருப்பது அவசியம். தகுந்த உடல் இல்லாத பட்சத்தில், அருள் உங்கள் மீது பொழிந்தால், நீங்கள் ப்யூஸ் (fuse) போய் விடுவீர்கள். ஆழமான அனுபவங்கள் வேண்டும் என்று பலபேர் விரும்பினாலும், தன் உடலையும் அந்த நிலைக்கு உகந்தாற் போல் மாற்றிக் கொள்ள அவர்கள் முயல்வதில்லை. இந்த அனுபவ வேட்டையில், தன் உடல் நொந்து, புத்தி பேதலித்து போன பலரையும் இவ்வுலகில் நம்மால் காண முடிகிறது.

      யோகாவில் நீங்கள் அனுபவத்தின் பின் போவதில்லை, மாறாக அனுபவத்திற்கு உங்களைத் தயார் செய்வது அவசியம். யோகாவில் நீங்கள் அனுபவத்தின் பின் போவதில்லை, மாறாக அனுபவத்திற்கு உங்களைத் தயார் செய்வது அவசியம். ஆதியோகியின் முதல் ஏழு சீடர்களான சப்தரிஷிகளும் இப்படித்தான் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். 84 வருடங்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டே இருந்தனர். அவர்கள் எதையும் யாசிக்கவில்லை. அவர்கள் நிலையைக் கண்ட ஆதியோகி, தன் அருளை முழுமையாக அவர்களுக்கு வாரி வழங்கினார்.

      யோக முறைகள் எப்பொழுதும் மூலாதார சக்கரத்தில் கவனம் செலுத்துகின்றன. சமீப காலமாகத்தான், பயிற்சியே இல்லாத யோகிகள் தங்கள் புத்தகங்களில், மேலே உள்ள சக்கரங்களில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லி வருகின்றனர். இந்த மேலே கீழே விஷயம் புத்தகம் படிக்கும் மனங்களில் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால், வாழ்க்கை இவ்விதத்தில் வேலை செய்வதில்லை.

      யோகா என்றால் சமநிலை. சமநிலை என்றால் தெளிந்த புத்தி என்று அர்த்தமில்லை. உங்கள் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டுமென்றால், உங்களுக்குள் கொஞ்சம் பித்துநிலை இருப்பது அவசியம். ஆனால், பலவந்தத்தினால் நீங்கள் பைத்தியமனால், வாழ்க்கையை முழுமையாக தொலைத்து விடுவீர்கள்.

      சமநிலை பற்றி பேசும்பொழுது தெளிந்த புத்திநிலையைப் பற்றிப் பேசவில்லை. தெளிந்த புத்திநிலைக்கும், பைத்தியக்காரத்தனத்துக்கும் இடையே உள்ள அந்த நிலையைக் கண்டறிந்து அதில் நுழைந்து, சாகசம் செய்வதைப் பற்றி பேசுகிறேன். பித்துநிலை என்பது ஒரு சாகசம். கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பித்துநிலை என்பது ஒரு அற்புதமான விஷயம். கட்டுப்பாட்டினை இழந்தாலோ அது அசிங்கமாகிவிடும். அதுபோல, தெளிந்த புத்தியும் அழகான விஷயம்தான், ஆனால் முழுமையான நிதானத்துடன் இருந்தால், இறந்து போனவருக்கும் உங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருக்காது. நீங்கள் விரும்பியவற்றில், நீங்கள் விரும்பிய போதெல்லாம் நுழைந்து, சாகசம் செய்யும் ஆற்றல் உங்களுக்கு கிட்ட, உங்கள் மூலாதாரம் உறுதியுடன் இருப்பது அவசியம்.

Saturday, July 12, 2014

எது உண்மையான பாவம்?



      இன்றைக்குக் கோலோச்சிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஐந்து மதங்களில் எதையெல்லாம் பாவச் செயல்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள். இந்தப் பூமியில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பது கூட பாவமோ என்று அச்சம் வந்துவிடும்.

      பாவம், புண்ணியம் என்பதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். எந்தச் செயலைச் செய்தாலும், அதற்கு ஒரு பின்விளைவு உண்டு என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். இன்றைக்கு ஒரு விஷயத்தை ஆனந்தமாகச் செய்தீர்கள். நாளைக்கு அதற்காக உங்களைத் தூக்கில் தொங்க விட்டால் கூட அதே ஆனந்தமாக இருப்பீர்கள் என்றால், எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்.

      செயல்புரிகையில் இருக்கும் அதே சந்தோஷம் அதன் பின்விளைவைச் சந்திக்கும் போதும் தொடரும் என்றால், எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். இல்லையில்லை, பின்விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை என்று சொல்பவரா நீங்கள்? உங்களால் தாங்கக் கூடிய பின்விளைவுகளுக்கு ஏற்ற செயல்களில் மட்டும் கவனமாக இறங்குங்கள். மற்றபடி, எதுவும் பாவமும் இல்லை. புண்ணியமும் இல்லை.

-----------------------------வாழ்க வளமுடன்!-------------------------------

Friday, May 23, 2014

வாழ்க்கை முறைக்கான கடிகாரம்! ஆனந்தம்



     
      நாம் தன்னிறைவுடன் வாழ்வதற்கு நம் உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடல் நிலை சீராக இருந்தால் நம் மனமும் சீராக இருக்கும். நாம் எண்ணியதை முடிக்க முடியும்! ஆம் ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்க முடியும். எனவே உடலைக்காத்து மனதைப்போற்றுவோம். உடல் ஆரோக்கியம் தான் நமக்கு நம்பிக்கையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் சக்திகளிளேயே முதன்மையானதாகும்.

      நம் உடல் ஒவ்வொரு பாகத்திற்கென த‌னித்தனியே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்புக்கும் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வேலை செய்கிறது. அந்த இரண்டு மணி நேரம் முடிந்தவுடன், தன் நேரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.அதன் அட்டவணை இதோ....

      விடியற்காலை 3.00 ‍- 5.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - நுரையீரலின் நேரம் - இந்த நேரத்தில் சுவாசப்பயிற்ச்சி செய்து காற்றின் மூலம் வரும் ப்ராணசக்தியை உடலில் சேகரித்தால் ஆயுள் நீளும். தியானம் செய்ய ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

      விடியற்காலை 5.00 ‍- 7.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - பெருங்குடலின் நேரம் - கலைக்கடன்களை இந்த நேரத்தில் முடித்து விட வேண்டும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகஅதிகமாக உள்ள நேரமும் இதுவே. உடற்ப்பயிற்ச்சி செய்ய ஏற்ற நேரமும் இதுவே.

      காலை 7.00 ‍- 9.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - வயிற்றின் நேரம் - இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகி உணவு உடலில் ஓட்டும்.

      காலை 9.00 ‍- 11.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - ம‌ண்ணீர‌லின் நேரம் - காலையில் சாப்பிட்ட‌ உணவை மண்னீரல் செரித்து ஊட்டச்சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிர நேரம். இந்த நேரத்தில் தண்ணிர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

      முற்பகல் 11.00 ‍- 1.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - இதயத்தின் நேரம்  - இந்த நேரத்தில் அதிகமாக பேசுதல், கோபப்படுதல், அதிகமாக படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது.

      பிற்பகல் 1.00 ‍- 3.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - சிறுகுடலின் நேரம் - இந்த நேரத்தில் மிதமான மதிய உணவை உண்டு சற்று ஓய்வெடுப்பது நல்லது

      பிற்பகல் 3.00 ‍- 5.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - சிறுநீர்ப்பையின் நேரம் - நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்

      மாலை 5.00 - 7.00 மணி - சிறுநீரகங்களின் நேரம் - பகல் நேர பரபரப்பில் இருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய வழிபாடுகள் செய்ய இதுவே உகந்த நேரம்

      இரவு 7.00 - 9.00 மணி - பெரிகார்டியத்தின் நேரம் - பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றியிருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் ஷாக் அப்சார்பர். இதுவே இரவு உணவுக்கு உகந்த நேரம்.

      இரவு 9.00 - 11.00 மணி - டிரிப்பிள் கீட்டர் நேரம் - டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச்செல்வது நல்லது.

      இரவு 11.00 - 1.00 மணி - பித்தப்பை இயங்கும் நேரம் - இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை குறைபாடு ஏற்படும்.

      இரவு 1.00 - 3.00 மணி - கல்லீரல் இயங்கும் நேரம் - இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ, விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுதும் ஓடும் இரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்தப்பணி பாதிக்கப்பட்டால் மறுநாள் முழுது நீங்கள் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்

      இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொண்டதை உபயோகப்படுத்தி, சாப்பாடு, தூக்கம், வ்ழிப்பு, வேலை இவற்றை சரியான நேரத்தில் செய்து ஆரோக்கியமான் உடலைப் பெற்று ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்! வாழ்க வளமுடன்!

Saturday, January 25, 2014

குரு யார்? என்ன செய்வார்? ஒரு கதை! ஆனந்தம்

      


      தயு மற்றும் யுதாங் என்ற இரு ஜென் குருமார்களைத்தேடி தலைமைத் தளபதி ஒருத்தர் வந்தார். தன்னைச் சீடனாக ஏற்க்கும் படி கோரினார்.
      "இயல்பிலேயே நீ புத்திசாலியாகத் தெரிகிறாய் அதனால் நல்ல சீடனாக இருப்பாய்" என்றார் யுதாங்.
      "இவனா? அடிமுட்டாளாகத் தெரிகிறான்? இந்த முட்டாளுக்கு மண்டையில் அடித்துச் சொன்னால் கூட ஜென்னைப் புரிய வைக்க முடியாது" என்றார் தயு.
      தன்னை ஏளனமாகப் பேசிய தயுவையே தன் குருவாக எற்றார் அந்தத்தளபதி.
      பொதுவாக உங்களின் அகங்காரத்தைக் கேள்வி கேட்காதவரே உங்களின் உற்றவராக இருக்க முடியும். உங்களின் குறைபாடுகளை ஆதரிப்பவரே நண்பராக ஏற்றுக்கொள்ளப்படுவார். ஆனால் குரு என்பவர் உங்களின் முட்டாள்த்தனங்களை ஆதரிக்க வரவில்லை. அவர் உங்களின் வரயறைகளைத் தகர்க்க வந்தவர்.
      செளகரியமாக உணர வேண்டுமானால், அதற்க்கு தோழர்களைத்தேடிப் போகலாம், அல்லது திருமணம் செய்துகொள்ளலாம். எதற்க்காக குருவை நாடி வந்தீர்கள்? யாருடன் இருக்கையில் முகமூடி கிழிக்கப் பட்டது போல் மிகவும் அசெளகரியமாக உணர்கிறீர்களோ, அந்த நிலையிலும் யாரைவிட்டு தப்பித்து விலகப் பிரியமில்லாமல் மறுபடி நாடிப்போகிறீர்களோ, அவர்தான் உங்கள் குரு.
      "நீங்கள் அற்புதமானவர், புத்திசாலி" என்று எல்லாம் புகழ்ந்து பேசி, உங்கள் அகங்காரத்துக்கு தீனி போடுபவர், உங்களிடம் ஆதயங்களை எதிர்பார்த்து நிற்பவர்.
      முகத்துக்கு நேராக உங்கள் வரையரைகளை சுட்டிக்காட்டி, உங்கள் அகங்காரத்தை சதா தகர்த்துக்கொண்டு இருப்பவர் தான் குரு. உங்கள் குறைகளை சுட்டிக்காட்டினால், உங்கள் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகளாம். வெகு சீக்கிரத்தில் எதிரியாகவே கருதப்படலாம். ஆனால் அதைப்பொருட்படுத்தாது அளவற்ற கருணையுடன் உங்களுடைய குறைபாடுகளை எடுத்துச் சொல்லி, அவற்றைக் கடந்து நீங்கள் பயணம் செய்ய உதவி செய்வதே குருவின் உண்மையான நோக்கம். அவர் உங்களுக்கு உபச்சாரம் செய்ய வரவில்லை. உங்களை மேன்மை நிலைக்கு எடுத்துச் செல்ல வந்திருக்கின்றார்.
      தன்னைப் பாராட்டிப் பேசிய யுதங்கைவிட, தன் பதவியைப் பற்றி கவலை கொள்ளாது தன்னை ஏளனம் செய்த தயுவையே குருவாக தலைமைத் தளபதி ஏற்றதில் அவரது புத்திசலித்தனம் மிளிர்கிறது.

                          வாழ்க வளமுடன்!