Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Tuesday, December 9, 2014

நீங்கள் உண்மையான நண்பரா? ஆனந்தம்



     Sadhguru - Making Corruption Cosmic



      உங்கள் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? பெருவாரியான மக்களைப் போல் நீங்களும் இருந்தால், உங்கள் எண்ணங்களுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு, நீங்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கு, உங்கள் விருப்பு-வெறுப்புகளுக்கு ஒத்துப் போகிறவராய் பார்த்து உங்கள் நண்பராய் தேர்ந்தெடுப்பீர்கள். இதை மற்றொரு விதத்தில் பார்த்தால், உங்கள் குளறுபடிகளை ஒத்துக் கொண்டு ஆதரிப்பவர்களையே நண்பர்களாக ஆக்கி கொள்கிறீர்கள்.
      நீங்கள் யாரோ ஒருவருடைய நண்பராக இருக்கும்போது, அந்த மனிதரை அவருடைய குற்றம் குறைகளைச் சொல்லி சதா சர்வகாலமும் நச்சரித்துக் கொண்டே இருக்க மாட்டீர்கள். அதே சமயம் உங்கள் நண்பரிடம் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லும் நேர்த்தியும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
      அனைவரும் நம்மை விரும்ப வேண்டும் என்ற நம் தாகத்தால், முட்டாள்தனமான செய்கைகளை நாம் செய்யத் துவங்கிவிடுகிறோம். உங்களைச் சுற்றி இனிமையான சூழ்நிலையை உருவாக்குவதற்காக உங்களுக்குள் நீங்கள் உருவாக்கும் இனிமையற்ற சூழ்நிலையைப் பாருங்கள்! மனம் ஒரு வளமையான நிலம், அதில் நீங்கள் விதைக்கும் உணர்வுகளுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மிகவும் இனிமையற்ற விஷயங்களை நீங்கள் உங்களுக்குள் புதைத்தால், வளரும் கனிகள் கசப்பாகத்தான் இருக்கும்.
      உங்கள் நட்பின் உறுதியை நீங்கள் பரிசோதிக்க விரும்பினால், உங்கள் நண்பரிடம் நல்ல பெயர் எடுக்கும் எண்ணத்தை தளர்த்த முயற்சி செய்து பாருங்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு துணிவு இருக்கிறதா? தற்சமயம் உங்கள் நட்பு, உடன்படிக்கைகளின் பேரிலும் விருப்பு-வெறுப்பின் பேரிலும் நடைபெறுகிறது. ஆனால் உண்மையான நண்பன் என்றால், உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் அதே சமயத்தில் உங்களிடம் அதே அன்பையும் அரவணைப்பையும் வழங்குவார்.


என்ன புரியவில்லையா? ஒரு கதை சொல்கிறேன்…

      அமெரிக்க போர் தளபதிகள் ஒருநாள் கூடினார்கள். தங்கள் போர் படைகளுடன் உடற்பயிற்சிக்காகவும், களிப்பிற்காகவும் கிரான்ட் கன்யான் என்னும் பள்ளத்தாக்கிற்கு பயணப்பட்டார்கள். வெகு சீக்கிரத்திலேயே படைத் தளபதிகள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளத் துவங்கினர்.
      முதல் தளபதி “என் படை வீரர்களைப் போல் துணிவும் கட்டளைக்கு பணிந்து போகும் திறனும் வேறு ஒருவருக்கு வராது,” என்று தன் படைவீரர்களின் திறத்தை மெச்சத் துவங்கினார்.
      நான் நிரூபித்துக் காட்டுகிறேன் பாருங்கள், என்று “ஏ! பீட்டர்.” அங்கொரு இளம் படைவீரர் ஓடி வந்தார். “உனக்கு பின்னால் அந்த பிரம்மாண்ட பள்ளத்தாக்கை பார்க்கிறாயே? அதை நீ இப்பொழுதே தாவி மறுபக்கத்திற்குச் செல்ல வேண்டும்!”
      அந்த வீரன் தன்னால் எவ்வளவு வேகத்தில் ஓடிக் குதிக்க முடியுமோ, ஓடிக் குதித்தான். அவனால் அவ்வளவு பெரிய பள்ளத்தாக்கை தாண்ட முடியுமா என்ன? பாறையில் விழுந்து, மண்டை உடைந்து செத்துப் போனான்.
      தற்போது இரண்டாவது படைத் தலைவனின் சந்தர்ப்பம். இரண்டாவது தலைவன் இலக்காரமாக சிரித்து, “என்னைப் பார்,” என்றான்.
      “ஹிகின்ஸ்,” என்று அழைத்தார். ஒரு வீரன் வந்தான். “தற்போது ஓர் அவசர நிலை, நீ இந்த பள்ளத்தாக்கை கடந்து பறந்து சென்று மறுமுனையில் இருக்கும் நம் ஆபீஸருக்கு தகவல் சொல்லிவிட்டு வா,” என்றார்.
      அந்த மனிதர் தன் கைகளை அசைத்துக் கொண்டு… வேறென்ன நிகழ்ந்திருக்கும் பள்ளத்தாக்கில் தொப்பென விழுந்தார்.
      மூன்றாவது படைத் தளபதி மிக அமைதியாகிவிட்டார். ஆனால் பிற தளபதிகள் அவரை விடுவதாய் இல்லை. வெளியே சென்று மூன்றாமவரின் போர் வீரன் ஒருவனை அழைத்து, “அதோ கீழே உள்ள அந்த ஓடையை உன்னால் பார்க்க முடிகிறதா?” அந்த வீரன் தலை அசைத்தான். அந்த ஓடை மிகப் பெரிய அருவி ஒன்றிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே இருந்தது. அந்த படை வீரனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, “நீ அந்த ஓடைக்குள் குதித்து, அதை நீந்திக் கடந்து, இந்தத் தகவலை தலைமையகத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று சொன்னார்.
      குழம்பிய நிலையில் தளபதியை பார்த்த அந்த வீரன், “சார், நீங்க ரொம்ப குடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன், இது மாதிரி முட்டாள்தனமான விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்,” என்றான்.
      மூன்றாவது தளபதி, அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பிற தளபதிகளைப் பார்த்து, “இதுதான் உண்மையான தைரியம்!” என்றார்.

      உங்கள் நட்பில் தைரியமாய் இருங்கள். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாய் பேசுவது உங்கள் நண்பரை இழக்கச் செய்தால், பிரிவதற்கு தயாராய் இருங்கள்.

வாழ்க வளமுடன்!

Wednesday, September 5, 2012

பாக்கெட் மணி விபரீதம்! ஆனந்தம்


      என் மகனுக்கு நான் நிறைய பாக்கெட் மணி கொடுத்தேன். அவன் அதை வைத்துக் கொண்டு நிறைய தீய பழக்கங்களுக்கு ஆகிவிட்டான். என்ன செய்ய?
      நீங்கள் முதலில் உங்கள் மகனுடன் ஒரு நண்பராகப் பழகுங்கள்! அவனுடன் ப்யணம் செய்யுங்கள். அவன் உங்களுடன் பயணம் செய்ய வேண்டும். அவனுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவனுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரவேண்டும். அப்போது தான் உங்களால் அவனுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியில் கை வைக்க முடியும்!
      மாறாக இப்போது நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால், அவன் உங்களை உதைத்தாலும் உதைப்பான். இன்னும் சொல்லப்போனால் மேலும் சில அற்பமான விஷயங்களைத் தேடிச்செல்வான்.
      பிள்ளைகளை வளர்ப்பது என்றால், வெறும் பணத்தை வீசிஅடிப்பது மட்டுமல்ல. அதற்கு ஈடுபாடு தேவை. ஒரு குழந்தையை ஈடுபாடு இல்லாமல் வளர்ப்பது ஒருபோதும் வேலை செய்யாது?
      இப்போது பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவன் திருந்துவான் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு பணம் தான் கட் செய்வீர்கள்? நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவன் வேறு எதையோ பணத்துகாக செய்வான். செய்வானா இல்லையா? அதனால் அவனிடம் நட்புறவுடன் பழகுங்கள்! அவனுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். அப்போது, நீங்களே தெளிவான பாதைக்கு மெல்ல மெல்ல அழைத்துச் செல்லுங்கள். வாழ்க வளமுடன்!
....................................சத்குரு ஜக்கிவாசுதேவ்.........................................

Tuesday, September 4, 2012

ஆண் - பெண் நட்பு! ஆனந்தம்


      பொருளாதாரம், ஆண் - பெண் உடலுறவு இன்பம் என்ற இருவகைக்குள் மனிதனின் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் அடங்கிவிடும். சமுதாய அமைப்பில் நிலவி வரும் பலவித சூழ்நிலைகளால் ஏற்படும் வாழ்க்கைத் தொல்லைகளைச் சமாளித்து வெற்றி பெறுவதில் தம்பதிகளுக்கிடையே நட்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்ததும், அவசியமானதும், பொறுப்பு வாய்ந்ததும் ஆகும்.
      தம்பதிகளின் மனம் ஒத்த நட்பின் மூலம் கைடைக்கும் பலதரப்பட்ட வாழ்க்கையின் இன்பங்களை வேறு எவ்வழியில் பெற முடியும்? வாழ்க்கைச் செல்வங்களுள் மிகவும் சிறப்பானது அன்றோ தம்பதிகளுக்கிடையே நட்பு?
      அறியாமை, அலட்சியம், முரட்டுத்தனம், வரட்டு கெளரவம் ஆகியவற்றால் ஒரு சிறந்த விசயமான நட்பை ஒரு ஆணோ, பெண்ணோ, குலைத்துக் கொள்கிறார்கள் என்றால்? இந்த நட்ப்பில் களங்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்கிறார்கள் என்றால்? அவர்கள் அறிவின் நிலையை, திற‌மையை என்னெவென்று சொல்வது?
      பிறந்து விட்டதனால் வாழ்ந்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ள நாம் ஒவ்வொருவரும், ஆணும், பெண்ணும் ஆழ்ந்து சிந்தித்து தம்பதிகள் நட்பினிலே உள்ள  களங்கத்தை போக்கிக் கொண்டு, நல்ல நட்பு கொண்டு உறுதியான ஒரு நட்பான நிலை பாட்டில் வாழ முயற்சி செய்ய வேண்டும்.
      1. ஒருவர் உள்ளத்தை ஒருவர் புரிந்து கொண்டு செயலாற்றுவது.
      2. தவறான போக்கு எனில் ஒருவருக்கொருவர் அன்போடும் அளவோடும் கண்டித்து திருத்துவது.
      3. கோபம் என்ற விஷம் ஏறாமல் ஒவ்வொருவரும் த‌ங்களை பாதுகாத்துக் கொள்வது.
      4. சிக்கனமாகவும், பிறர்பழிகஞ்சியும் செலவு செய்து வருவதும்.
      5. நேர்மையான வழியில் மட்டுமே முயற்ச்சித்து பொருளீட்டுவது.
      6. உயிரை விடவும் மேலாக கற்பொழுக்கத்தை பாதுகாத்துக் கொள்வது.
      7. பெற்றோர்களையும், குழைந்தைகளையும், பராமரிப்பதிலும், விருந்துபசரிப்பதிலும் சமமான பொறுப்பை ஏற்றுக் கொள்வது
      8. சமுதாயம், சந்தர்ப்பம், அஜாக்கிரதை அகிய மூவகையில் ஏற்ப்படும் கஷ்ட நஷ்டங்களை காரணங்களை உணர்ந்து சகித்துக் கொள்வதும்.
      என்ற எட்டு வழிகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நுட்பத்தோடு பின்பற்ற பழகிக்கொண்டால் இவைகள் தம்பதிகளின் நட்பை பாதுகாக்கும் பலம் வாய்ந்த கோட்டையாகிவிடும்.

      ......................................................வாழ்க வளமுடன்!........................................................

Thursday, February 3, 2011

நட்பு - ஆனந்தம்

        மனித வாழ்க்கையில் விலை மதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுகதுக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பாண்மையே நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.
        பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தியும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றவரோடு நட்பு கொள்ள இடமிருக்கிறது. ச‌முதாயத்தில் இத்தகைய நட்பு தான் மலிந்திருக்கிறது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்து கொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்பத்திலேயே உணர்ந்து முறித்துவிடுவது நலம்.
        ஒரு நீதிபதி தன்முன் குற்றம் சுமத்தப்பட்டு எதிரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாக இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தே விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளி என்று திர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால் அளிக்கிறார். அதுவரையில் அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அது போல, பொருள் தேவை, ஒழுங்கீனம் மிகுந்துள்ள இந்தக் காலத்தில், அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக் கூடாது என்ற கருத்தை முதலில் வைத்துக்கொண்டே அவரோடு நட்பு கொண்டு அவர் நடத்தையை ஆராயவேண்டும். சந்தர்ப்பங்கள் தான் மனித உள்ளத்தை உரை போடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்ளம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தானவர் என்ற முடிவுக்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்பதை முன் வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின் கொள்ளுகிறார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் களங்கமுடையோன் என்ற கருத்தை வைத்து சோதனைக்கு பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.
        நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு‍‍‍‍‍-சீடன், கணவன்-மனைவி, ஆசிரியர்-மாணவன், எசமான்-பனியாள், பொருட்களை விற்பவர்-வாங்குவோர், துணைவர்கள் அகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவுநிலை இந்த மூன்றிலும் ஒவ்வொருவரும் வேறு பட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் எறு கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்து போக இருக்கும் வாய்பு தான் அதிகம்.
        சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு, அத்த‌கைய நண்பர்கள் மேல் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்க்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள்தான் கொஞ்சமா?
        எதிரிகளால் ஏற்ப்படவிருக்கும் கெடுதல்களை புரிந்து கொள்ள முடியும். முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உளவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாது. இத‌ற்கு உலகசரித்திரம் சான்று கூறுகிறது.
        எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையே தான் அது வலுவுள்ளதாக இருக்க முடியும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால்-இணைந்தால்-ந‌ட்புக்கு எந்த வித‌த்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.
        நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும். வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.
        நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள்த் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள இந்தக் காலத்தில் அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம் பெற்றோர் எண்ணிக்கையைவிட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.
        அறிவோடும், விழிப்போடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, அகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ, ஆற்றலையோ உத‌வியும், பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத-ஏமாற்றமளிக்காத-உயர்முறையாகும். அதுவே ஆனந்தமான வாழ்க்கைக்கு உதவும் முறையாகும்................................
.........................அருட்தந்தை வேதத்திரி மகரிஷி................................. 
வாழ்க வளமுடன்!