Wednesday, November 14, 2012

நீங்கள் இறந்திருக்கிறீர்களா? ஆனந்தம்



      மரணம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவியிருக்கிற விதத்தைப் பார்த்தால் விசித்திரமாக இருக்கிறது. நீங்கள் இதற்குமுன் இறந்திருக்கிறீர்களா? மரணம் குறித்த அனுபவம் உங்களுக்கு இல்லை. மரணமடைந்த யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்களுடைய உடல்களை வேண்டுமானால் பாத்திருப்பீர்கள். மரணமடைந்த யாரேனும் உங்களிடம் வந்து ‘என் மரண அனுபவம் இப்படி இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார்களா? அதுவும் இல்லை.
      மரணத்தை நீங்கள் அனுபவித்ததில்லை. அதை நீங்கள் பார்த்ததில்லை. அது குறித்த நேரடி அனுபவம் பெற்ற யாரும் விளக்கம் சொல்லிக் கேட்டதும் இல்லை, அப்படியானால் மரணம் குறித்த இந்த யோசனைகள் உங்களுக்கு எங்கிருந்து வந்தன? அறியாத சிலர் ஏற்படுத்திய மாயைதான் மரணம் என்பது. விழிப்புணர்வே இல்லாமல் வாழ்க்கையை வாழ்பவர்களின் உருவாக்கம் அது. வாழ்க்கை என்ற ஒன்று மட்டுமே நிகழ்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணம் நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. வாழ்க்கைக்கென்று எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. உடல் என்ற எல்லையைத் தாண்டிய பரிமாணத்துக்குள் வாழ்க்கை செல்கிறபோது அதனை மரணம் என்கிறீர்கள்!

மரணம் நல்லதா? கெட்டதா?

      இந்தக் கேள்வியே அபத்தமானது. அது நல்லதோ, கெட்டதோ, நிகழத்தான் போகிறது. நீங்கள் பிறந்த விநாடியே உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கே, எப்போது நிகழும் என்பதுதான் கேள்வி. பிறந்ததும் ஒருவர் கல்வி கற்பாரா, கல்யாணம் செய்வாரா, ஆனந்தமாய் இருப்பாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பிறந்தால் இறந்து போவார் என்பது மட்டும் உறுதி.
      மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது.
      மரணத்தில் எந்தத் தவறும் இல்லை. அது நிகழ்ந்தே தீரும். மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது. மரணமென்றால் என்னவென்று தெரியாததால்தான் அச்சம் ஏற்படுகிறது. வாழ்க்கை பற்றி என்னென்ன எண்ணங்கள் உங்களுக்கு இருந்தாலும் மரணம் வருகிறபோது அது காணாமல் போய்விடுகிறது. மனித மனத்தால் மாசுபடுத்த முடியாத ஒரே பகுதி அதுதான். அன்பு, உறவு, கடவுள், புனிதம், அனைத்தையும் மனிதர்கள் பலவிதமாக மாசுபடுத்தியும் திரித்தும் பேசிவருகிறார்கள். மரணம் குறித்துதான் அவர்களால் உறுதிபட எதையும் சொல்ல முடியவில்லை. ஒரு சிலர் அது குறித்தும் பேசுகிறார்கள். தாங்கள் சொர்க்கத்துக்குத்தான் போகப்போவதாக அடித்துச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் உறுதியாக இருப்பவர்கள் புறப்படலாம். எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிடவும் சிறந்த இடத்துக்குச் செல்வதென்று நிச்சயமாகத் தெரிந்தால், விரைந்து போகத் தோன்றும். எங்கே எப்படி போவதென்று தெரியாதபோது, ஆறுதலுக்காக இப்படிச் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்!
      மரணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலேயே, அது பெரிய சிக்கலாக உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் உடல், இந்த பூமியின் ஒரு பகுதி. பூமியிலிருந்து தோன்றியது பூமிக்குள் மீண்டும் போகப் போகிறது. நீங்களும் நானும் இந்த பூமிக்கு வரும் முன்பு எண்ணிலடங்காத எத்தனையோ பேர் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிட்டார்கள். ஆழப் புதைத்துவைக்காத பட்சத்தில் நீங்களும் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிடுவீர்கள்!
      உடலைக்கொண்டு சில அற்புதங்களை நிகழ்த்தியிருந்தால், இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள்.
      நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக வைத்துக்கொள்வோம். அதனைப் பத்து கோடியாக நீங்கள் பெருக்கிவிட்டீர்கள். பத்தாண்டுகள் கழித்து நான் உங்களைத் தேடி வந்தால் என்னை மகிழ்வுடன் வரவேற்று, ஒரு கோடிக்கு இரண்டு கோடியாய் திருப்பித் தருவீர்கள். ஒருவேளை அந்த ஒரு கோடி ரூபாயை நீங்கள் வீணடித்திருந்தால் கடன்காரர் வரும்போது அஞ்சுவீர்கள்.
      இந்த உடம்பும் அப்படித்தான். உலகத்திடம் நீங்கள் பெற்ற கடன் இது. இதைக் கொண்டு சில அற்புதங்களை, மிக முக்கியமானவற்றை நீங்கள் நிகழ்த்தியிருந்தால் இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள். நீங்கள் எப்படி மரணமடைகிறீர்கள் என்பதே, உங்களுக்குள் எப்படி வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதன் அடையாளம்தான். ஒரு மனிதனின் கடைசி விநாடி குறித்து பல ஆன்மீக மரபுகள் ஆழமாகப் பேசுகின்றன. அந்த விநாடியில் உங்களால் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், அந்தத் தன்மையே காலங்கடந்தும் தொடர்கிறது. இன்றிரவு தூங்கச் செல்லும்போது, அன்புமயமான உள்நிலையை உருவாக்கிக் கொண்டு, புன்னகையுடன், விழிப்புணர்வுடன் தூங்கச் செல்லுங்கள். இரவு முழுவதும் அன்பு நிலை உங்களுக்குள் ததும்பி, காலை வேளையிலும் வெளிப்படுவதை உணர்வீர்கள்!
      இன்றிரவு படுக்கப் போகும்போது, விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் நீங்கள் ஆழ்கிற அந்தக் கடைசி விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.
      உங்களுக்கு அது சாத்தியமானால், நீங்கள் கற்பனை செய்துகூடப் பாராத பல அம்சங்கள் உங்கள் வாழ்வில் நிதர்சனமாய் நடப்பதை உணர்வீர்கள். விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் அமிழ்கிற விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், வாழ்விலிருந்து மரணத்துக்குள்ளும் முழு விழிப்புணர்வுடன் நுழைய முடியும்! வாழ்க வளமுடன்!

2 comments:

Thozhirkalam Channel said...

http://otti.makkalsanthai.com/upcoming.php

திண்டுக்கல் தனபாலன் said...

/// நீங்கள் எப்படி மரணமடைகிறீர்கள் என்பதே, உங்களுக்குள் எப்படி வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதன் அடையாளம்தான். ///

இது ஒன்றே போதுமே...

Post a Comment