Friday, February 4, 2011

சினம் - மன்னிப்பு ஆனந்தம்

        சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு. மகாத்மா எழுதிய ஆயிரமாயிரம் வாசகங்களில் தலைசிறந்த வாசகம் எது? அதன் முடிவு, பலகீனமானவன் யாரையும் மன்னிப்பதில்லை, பலம் பொருந்தியவன் அனைவரையும் மன்னிக்கிறான்.
        மன்னிப்புக்கு மாற்றுப்பாதை கோபம். நாம் தவறு செய்யும் போது, அப்பாவோ, அம்மாவோ அல்லது உயரதிகாரிகளோ "ந‌டந்தது நடந்து போச்சு, சரி பரவயில்லை" என மன்னிக்க மாட்டார்களா என ஏங்குகிறோம், நாம் மன்னிப்புக்கு ஏங்குகிறோம், பிறரை மன்னிக்கத் தயங்குகிறோம்.
        நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களில் பல ரகங்கள் உண்டு. சாதுக்கள், சண்டாளர்கள், ஏமாற்றுபவர்கள், ஏமாறுபவர்கள், கருமிகள், தருமவான்கள், முன்கோபிகள், மூர்க்கர்கள், அருளாளர்கள் என பலவகையினரை நாம் பார்க்கிறோம். இவர்களுக்கு மத்தியில் தான் நாம் வாழவேண்டியிருக்கிறது. யாருடனும் பகைமை கொள்ளாது அனைவரிடமும் இணக்கமாக வாழ, நமக்கு அவரவர்களை அவரவர் நிலையில் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.
        நமது வாழ்க்கையில் நித்தம் நித்தம் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சம்பவங்களே! சிலது நல்ல பலனைத் தரும், சிலது நல்ல பாடத்தைத் தரும். பலனைப் பெறும்போது சந்தோசமடைகிறோம், பாடத்தைப் பெறும் போது சம்மந்தப்பட்ட மனிதர்களை கோபம் கொண்டு காயப்படுத்துகிறோம்.

        கண்டிப்பு வேண்டும், ஆனால் கோபம் கொண்டு வார்த்தைகளை தாறுமாறாக கொட்டும் கோபம் வேண்டாம். கோபம் கொண்டால் மனிதனுக்கும் விலங்கிற்கும் வித்தியாசமில்லை. ஆனால் மன்னித்தல் என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியமானது. மனிதனின் த்னித்தன்மையை இழக்கச் செய்வது சினம். ஆகவே வள்ளுவர் அருளினார்,
                      " தன்னைத்தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
            தன்னையே கொல்லும் சினம்"
        அன்பின் அடையாளம் மன்னிப்பு. ஆணவத்தின் ஆரவாரம் சினம்.
        வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிறுசிறு சம்பவங்கள்-கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை, வசதி மிகுந்த சிலர் என்னை மதிக்கவில்லை, வெளிநாடு போகும் போது என்னிடம் சொல்லிக்கொண்டு போகவில்லை, மருத்துவமனையில் இருக்கும் போது என்னை வந்து பார்க்கவில்லை என்ற எண்ணங்கள் சில சிக்கல்களை கோபத்தை மனதில் ஏற்படுத்தலாம். உருவான சிறுசிறு சிக்கல்களை  பெரிதாக்குவது நம்கையில் தான் இருக்கிறது. சிக்கல் உருவானது நம் மனதில் ஆகவே தீர்வும் அங்கே தான் உருவாக வேண்டும். சிக்கல் சிறிதாக இருக்கும் போது அதை உருவாக்கியவரை மன்னித்து சம்பவம் நடக்காதது மாதிரி நாம் நடந்து கொண்டால் அந்த சிக்கலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கிறோம். மாறாக, சினம் கொண்டு சம்மந்தப்பட்டவர்களை வார்த்தைகளால் வாரி இறைத்தால் சிக்கல் பெரிதாகி விடுகிறது. அவர் மீது நமக்கு வெறுப்பும், நம் மீது அவருக்கு வெறுப்பும் உண்டாகி நல்ல உறவுகளை இழக்கிறோம்.
                      "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
                     இனமெனும் ஏமப்புனையைச் சுடும்"
        சென்னையில் எனது நெருங்கிய உறவுக்காரர், மிகவும் வேண்டியவர். அவர் வீட்டுக் கல்யாணத்திற்கு பத்திரிக்கை இன்னும் வரவில்லை, விடிந்தால் கல்யாணம் கல்யாணத்திற்கு செல்வதா? வேண்டாமா?
        நெருங்கிய உறவுக்காறர் ஆயிற்றே பத்திரிக்கை கொடுத்து தான் கல்யாணத்திற்கு செல்ல வேண்டுமா? என்று அவரை மன்னித்து கல்யாணத்திற்கு சென்றால், நான் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். "நேரில் வந்து அழைக்கலாமென்று இருந்தேன், கடைசி நேரத்தில் விட்டுப் போய்விட்டது என்று கட்டிப் பிடிப்பார் அவர். அங்கே நல்உறவு  வாழ்க்கை முழுவதும் நீடிக்கும். அல்லது சென்னையில் எத்தனையோ திருமணங்கள் அழைப்பில்லாமல் நடக்கின்றன அதில் இதுவும் ஒன்று என்று பேசாமல்(கல்யாணத்திற்கு போகாமல்) விட்டுவிட்டால் அதோடு சிக்கல் தீர்ந்து உறவு நீடிக்கும். அதை விடுத்து கோபத்தில் போகாமல் விட்டுவிட்டதுடன், நாளைக்கு நம்வீட்டு விசேஷத்திற்கும் அவருக்கு அழைப்பு கொடுக்கக் கூடாது என்ற முடிவுடன், அவரைப் பற்றி தகாத வார்த்தைகளை அள்ளி வீச, அதை நான்கு பேரிடம் சொல்ல உறவு முறிகிறது.
        வீட்டிலாகட்டும், வெளியிலாகட்டும் கோபம் கொண்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டு உறவுகளை முறித்து விடாதீர்கள். உறவுகள் முறிய முறிய தனிமைப் படுத்தப்படுவோம். உற‌வுகளைக் கட்டிக் காப்பற்றுவது தெய்வீகம். அந்த தெய்வீகத் தன்மையை வளர்ப்பது நமது மன்னிக்கும் தன்மையே.
        சினம் நம்மைத் தாழ்த்திவிடும், மன்னிக்கும் தன்மை ஒன்றே நம்மை உயர்த்தவல்லது. மன்னிப்பே மகத்தானது. மன்னிப்பே நமக்கும் நிம்மதியைத் தந்து, மற்ற‌வர்களுக்கும் நிம்மதியைத் தரும். மன்னிப்பதால் ஆனந்தம் நிலைக்கும், ஆனந்தம் பெருகும்..........
…………………… அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி…………………….

No comments:

Post a Comment