Friday, November 11, 2011

மரணத்தின் கதை ஆனந்தம்


      இது கண்டிப்பாக எப்பேர்பட்டவனுக்கும், எப்படியாகிலும் மரணம் நிகழ்ந்தே தீரும் என்பதற்க்கான  ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை.  ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். அவர்,“நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார்.
      அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். நாளை சூரிய அஸ்தமனத்தில் நாம் சந்திப்போம். உனக்கு மிகவும் பொறுப்புக்கள் இருப்பதால் நான் உன்னிடம் இதை தெரிவிக்கலாம் என்று வந்தேன். சாதாரணமாக நான் யாரிடமும் முன்கூட்டியே தெரிவிக்க போவதில்லை. ஆனால் நீ ஒரு அரசன், மிக முக்கியமானவன், மிக மிக அரிதானவன். என்னால் உன்னை சரியான இடத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன். நீ வேறு எங்காவது சந்திப்பில் சிக்கிக் கொண்டு விட்டால் நான் என்ன செய்வது நீ என்னை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் நினைவில் கொள்.” என்று சொல்லியது.
      அரசர், “எது சரியான இடம்?” என்று கேட்பதற்கு முன் பயத்தினால் அவரது தூக்கம் கலைந்துவிட்டது. நிழல் உருவம் மறைந்துவிட்டது. நேரம் தெரிந்துவிட்டது, சரியான காலம் – நாளை சூரிய அஸ்தமனம் – ஆனால் இடம் எது நான் உன்னை சந்திக்க வேண்டிய இடம் எங்கிருக்கிறது என்று கேட்பதற்க்காக அவர் பலமுறை கண்களை மூடி அந்த நிழல் உருவத்தை பார்க்க முயற்சித்தார். இறப்பை சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதல்ல. அந்த இடம் எது என்று தெரிந்தால் அதை தவிர்த்து விடலாம். ஆனால் இந்த முழு உலகத்தில் அந்த இடம் எது
      ஆனால் உன்னால் கனவை தொடர முடியாது  -அது மிகவும் கடினம். ஒரு முறை கனவு கலைந்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்து கண்களை மூடி கனவை தொடர முயன்றாலும் அது வராது.
      அரசர் மிகவும் பயந்து போய் தனது அரசவை ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள், பூசாரிகள், ரேகைசாஸ்திரம் சொல்பவர்கள் என யாவரையும் அழைத்து,“அந்த சரியான இடம் எது என்று எனக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் அங்கு செல்லாமல் அதை தவிர்க்க முடியும்” என கூறினார்.
      உடனே அவர்கள் அனைவரும் தங்களது பழமையான நூல்களில் பதில் தேட ஆரம்பித்தனர். காலை வந்து சூரியன் எழுந்தது. காலை முழுமையாக விடிந்தவுடன் அரசர் மிகவும் பயந்து போனார். ஏனெனில் பொழுது விடிந்தால் முடியுமே! முடிவின் ஆரம்பம் தானே விடியல். சூரியன் விடிந்தால் அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லையே.
      சூரியன் ஏற்கனவே அஸ்தமனத்தை நோக்கி செல்ல துவங்கி விட்டான். இன்னும் இவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். அரசர்,“உங்களுடைய நூல்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அது எந்த இடம் என்று மட்டும் சொல்லுங்கள், போதும். அப்போதுதான் அங்கு நான் போகாமல் இருக்கமுடியும் ” என்றார்.
      அவர்கள், “ இருங்கள். இது ஒரு எளிமையான கேள்வி அல்ல. நாங்கள் அதற்கான வழிமுறைகளை கண்டு, பின் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஜோதிடர் ஒன்றை சொல்கிறார், பூசாரி வேறு ஒன்றை சொல்கிறார். நாங்கள் உங்களுக்கு பதினைந்து பதில்கள் கொடுத்தால் அதனால் என்ன பயன் ? ஆகையால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் சொல்கிறோம்” என்றனர்,
      அரசரின் வயதான வேலையாள் ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அரசரது காதில் மெதுவாக, “ நான் கிழவன். நான் இந்த பெரிய மனிதர்களின் வாக்குவாதத்தில் தலையிடகூடாது. நான் ஒரு வேலையாள். ஆனால் வயதானவன், எனக்கு உன் தந்தையின் வயதிருக்கும். உங்களது சிறிய வயதிலிருந்து நான் உங்களை வளர்த்திருக்கிறேன். நான் சொல்வதை கேளுங்கள். இவர்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள்.
      இவர்கள் தங்களுக்குள் வருடக்கணக்கில் சண்டையிடுவார்களே தவிர ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இரண்டு தத்துவவாதிகளோ, இரண்டு ஜோதிடர்களோ, இரண்டு குறி சொல்பவர்களோ ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். ஒத்துப் போகாமைதான் அவர்களது வியாபாரம், அவர்கள் அப்படி ஒத்துப் போகாமல் இருப்பதில்தான் வாழ்கிறார்கள். அதனால் காத்திருக்காதீர்கள். காலம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் என்னைக் கேட்டால் உங்களிடம் உள்ள மிகச் சிறந்த குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு – உங்களிடம் அப்படிபட்ட சிறப்பான குதிரைகள் உள்ளன. – இந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடுங்கள். ஒரு விஷயம் நிச்சயம். நீங்கள் இந்த இடத்தில், இந்த அரண்மனையில், இந்த நகரத்தில், உங்களது ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடாது. எங்காவது தப்பிச் சென்று விடுங்கள்” என்று கூறினான்.
      அரசருக்கு இது சரியென்று பட்டது. அரசர், “ நீ சொல்வது சரிதான். ஏனெனில் இவர்கள் இதை சூரிய அஸ்தமனத்திற்க்குள் முடிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.” என்றவாறே அவர் தன்னுடைய குதிரைகளில் சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மாலையாவதற்குள் அவர் தனது ராஜ்ஜியத்தின் எல்லையை கடந்து வேறொரு ராஜ்ஜியத்திற்க்குள் நுழைந்து விட்டார். அவர் தான் தப்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இப்போது இவர் எங்கிருக்கிறார் என்று இறப்பினால் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.
      இரவு ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு சோலையினுள் நுழைந்தார். அவர் தனது குதிரைக்கு மிகவும் நன்றி செலுத்தினார். ஏனெனில் இந்த குதிரை உண்மையிலேயே ஒரு அற்புதமான விஷயத்தை செய்து முடித்திருக்கிறது. நாள் முழுவதும் அது மிகவும் வேகமாக ஓடி வந்திருக்கிறது. அது அப்படி ஓடி அரசர் கூட இது வரை பார்த்ததேயில்லை. அது தண்ணீர் குடிக்கக் கூட ஓய்வெடுக்கவில்லை. அது ஒரு வினாடி கூட ஓய்வெடுக்க நிற்கவும் இல்லை. அது இந்த அவசரத்தை புரிந்து கொண்டதைப் போல நடந்து கொண்டது.
      அரசர் அதற்கு நன்றி கூறினார். அவர் அதனிடம், “ நீ என்னை காப்பாற்றி விட்டாய். நான் உனக்கு நன்றி கூறுகிறேன், எனக்கு உன் மேல் அன்பு பெருகுகிறது, நான் உனக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன். நாளை நாம் நமது ராஜ்ஜியத்திற்க்குள் சென்றவுடன் எனக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை நீயும் பெறுவாய் ” என்றார்.
      அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம் ஆனது, அப்போது ஒரு கரம்....... அரசர் தனது தோள் மீது ஒரு கரம் படிவதை உணர்ந்தார். அவர் திரும்பி பார்த்தார். அவர் கனவில் பார்த்த அதே கறுப்பு நிழல் உருவம் அங்கே இருந்தது.
      அந்த நிழல் உருவம் சிரித்தபடி, “நீ அந்த குதிரைக்கு நன்றி சொல்லக் கூடாது. நான் தான் அந்த குதிரைக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுதான் நான் காத்துக் கொண்டிருக்கும் இடம். உன்னுடைய குதிரையால் இங்கு வர முடியுமோ வர முடியாதோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அது வந்து சேர்ந்து விட்டது. இந்த உலகிலேயே மிக அற்புதமான குதிரை உன்னுடையது. நீ சரியான நேரத்திற்கு சரியான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்.” என்றது.
      நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் இறப்பை சந்திக்க சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தடைந்து விடுவாய்.

1 comment:

குறையொன்றுமில்லை. said...

எவ்வளவு தூரம் ஓடினாலும் இறப்பிலிருந்து தப்பிக்கவே முடியாதுதான் இல்லியா?

Post a Comment