ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார்.
இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான்.
அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது.
இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான்.
அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள்.
இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம்.
அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்கு வந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை.
இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு என்பதை உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன்.
இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்.....அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்.... அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள்.
ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது.
அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில் நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும்.
அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான்.
பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும்.
அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள்.
இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படி இருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன்.
அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்..... இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான்.
பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான்.
அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர்.
அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும்.
அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்... யாரையும் எங்கிருந்தாலும் - சாவு - உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும்.
அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார்.
அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின் கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான்.
அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார்.
இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னை வாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான்.
அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குரு சொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய்.
அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார்.
இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை.
அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள் சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான்.
அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான்.
அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார்.
துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறது அரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்........ எத்தனை நஷ்டம் என்றான்.
ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார்.
அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான்.
அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும்
ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம். நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒரு சாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும்.
அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான்.
அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார்.
மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக - சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது.
அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்..... ஒரே ஒரு கணம் கவனமில்லாமை...... பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது.
கவனித்தல் ஒரு சிறிய விஷயம்.ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான்.
பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன
நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான்
நீ - செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய்.
செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும்.
மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை.
எதையும் செய்யாதே.
நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது
பசிக்கும்போது சாப்பிடு.
தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி
தூக்கம் வரும்போது தூங்கு
விழிப்பு வரும்போது எழுந்து கொள்.
மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு.
தேவையான சிறிய விஷயங்களை செய்.
சாதாரண வாழ்க்கையை வாழ்.
நீ கண்டுபிடிப்பாய். அது தான் தியானம், உன்னை புத்தனாக்கும், இயேசுவக்கும், கிருஷ்ணனாக்கும். வாழ்க வளமுடன்!