பஸ்ஸில் மிக அழகான ஒரு பெண்ணை அடிக்கடி பார்க்கிறேன். அவள் முகம் என் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது. கல்லூரி செமஸ்டர் நேரம் இது. படிப்பதற்காகப் புத்தகங்களைத் திறந்தால், அந்தப் பெண்ணின் முகமே வந்துவந்து என்னைத் தொந்தரவு செய்கிறது. அவள் முகம் தரும் சந்தோஷம் ஒருபுறம், படிக்க முடியவில்லையே என்கிற துக்கம் மறுபுறம்… இரண்டும் சேர்ந்து வறுத்தெடுக்கின்றன. நான் என்ன செய்வது?”
சத்குரு:
யாரோ ஒருத்தியின் நினைவு உங்களுக்குச் சந்தோஷம் தரமுடியும் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். ஒரு பெண்ணைப் பார்த்தீர்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவுதானே? கவனியுங்கள். அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்ததும் மகிழ்ச்சி எங்கே பிறக்கிறது? உங்களுக்கு வெளியிலா, உள்ளேயா? உள்ளேதானே? தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஆனந்தத்தை உங்களால் கொடுக்கவும் முடியாது. வாங்கவும் முடியாது. அதை அனுபவிக்கத்தான் முடியும். அது எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத் தூண்டி உயிர்ப்பிக்கும் சக்தியை வெளியில் யார் கையிலோ ஒப்படைத்துவிட்டீர்கள். அதனால், குரங்காட்டியின் கோலுக்கு ஆடும் குரங்கைப் போல் ஆடுகிறீர்கள்.
படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?
படிப்பு முக்கியம் என்று தோன்றினால், முழுமையான ஈடுபாட்டுடன் உங்களை அதனுடன் பிணைத்துக் கொள்ளுங்கள். மற்றதெல்லாம் தானாக மறைந்துவிடும். மாறாக, ஒரு குறிப்பிட்ட நினைவை மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அதுவே உங்கள் முழுநேர வேலையாக ஆகிவிடும்.
பனிப் பிரதேசத்தில் இருந்த ஒரு சித்தரைத் தேடிப் போனார் சங்கரன்பிள்ளை. “மண்ணைத் தங்கமாக்கும் மந்திரம் உங்களுக்குத் தெரியுமாமே? எனக்கு சொல்லித் தருவீர்களா?” என்று மண்டியிட்டார். சித்தர் சம்மதித்தார். மந்திரங்களை சங்கரன்பிள்ளை காதில் ரகசியமாகச் சொன்னார்.
சங்கரன்பிள்ளைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “இது வெகு சுலபமாக இருக்கிறதே! இந்த மந்திரங்கள் நிச்சயம் வேலை செய்யும்தானே?” “நிச்சயம் இது மண்ணைப் பொன்னாக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. மந்திரங்களை உச்சரிக்கும்போது, குரங்குகளைப் பற்றி நீ நினைக்கக்கூடாது” என்றார் சித்தர்.
சங்கரன்பிள்ளை சிரித்தார். “போயும் போயும் குரங்குகளை நான் ஏன் நினைக்கப் போகிறேன்?”
ஆனால், சங்கரன்பிள்ளை மந்திரங்களைச் சொல்லக் கண்களை மூடினால் போதும், குரங்குகளைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற நினைப்பே அவர் நினைவு பூராவும் ஆக்கிரமித்தது. இருபத்து நான்கு மணி நேரமும் சிந்தனையில் குரங்குகள் நிரம்பி வழிந்தன.
இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், சித்தர் காலில் போய் விழுந்தார் சங்கரன்பிள்ளை. “பொன்னே எனக்கு வேண்டாம். என்னைச் சுற்றிக் கும்மாளமிடும் குரங்குகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அது போதும்!” என்று கதறினார்.
மனித மனம் அப்படித்தான். எதையாவது தவிர்க்க நினைத்தீர்கள் என்றால், அதையேதான் வட்டமிடும். உங்கள் மனதை உங்கள் வசப்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை நீங்கள் தெரிந்து கொள்ளும் வரை, எதை நிராகரிக்கப் பார்க்கிறீர்களோ, அதுதான் உங்கள் மனதில் நிரம்பி வழிந்து ஆக்கிரமிக்கும்.
உங்களுக்கு என்ன நடக்கிறது என்கிற விழிப்புணர்வு இல்லாமல், உங்கள் வாழ்க்கையைக் கடைசி வரை செலுத்தப் போகிறீர்களா?
இன்றைக்கு ஒரு வேலை செய்யுங்கள். கண்களை இறுக மூடிக் கொண்டு, போக்குவரத்தில் வண்டியை ஓட்டிப் பாருங்களேன். அதிர்ஷ்டம் இருந்தால், அங்கே இங்கே சிலரை இடித்துத் தள்ளிவிட்டு, இந்த முறை வீட்டுக்குக்கூட போய்ச் சேரலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணையிருக்குமா? சீக்கிரமே உங்களை அள்ளிப்போக ஆம்புலன்ஸ் வந்து சேரும்.
சங்கரன் பிள்ளை டாக்டரைத் தேடிப் போனார்.
“டாக்டர், என் காதுகளைப் பாருங்கள்!”
“ஐயையோ! இந்தளவுக்கு எப்படித் தீய்ந்து போனது?” என்று டாக்டர் பதறினார்.
“நான் சட்டைக்கு இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து என் மனைவியிடமிருந்து போன் வந்தது. குழப்பத்தில் போன் என்று நினைத்து கொதிக்கும் இஸ்திரிப் பெட்டியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டுவிட்டேன்…!”
“அடக் கடவுளே… சரி, இடக்காது எப்படித் தீய்ந்தது?”
சங்கரள்பிள்ளை பற்களை நறநறத்தார்.
“அந்த ராட்சஸி மறுபடியும் போன் செய்து தொலைத்தாளே!”
நீங்கள் கவனத்துடன் நடந்து கொள்வதோ, சங்கரன்பிள்ளை போல் நடந்து கொள்வதோ யார் கையில் இருக்கிறது? உங்கள் கையில்தானே?
ஆனந்தமோ, துக்கமோ.. கவனமின்றி நீங்கள் அதன் திரியை வெளியே வைத்திருக்கும்வரை, அதை வெளியிலிருந்து ஒருவர் சுலபமாகப் பற்ற வைக்க முடியும். உங்களை அலைக்கழிக்கக் கூடிய ஸ்டார்ட் பட்டனை ஏன் வேறு யார் கையிலோ கொடுத்துவிட்டு அவதிப்படுகிறீர்கள்?
உங்கள் அடிப்படைப் பிரச்சனை என்ன தெரியுமா? நீங்கள் இங்கே இருக்கும்போது, அங்கே இருக்க விரும்புகிறீர்கள். அங்கே இருக்கும்போது, இங்கே இருக்க விரும்புகிறீர்கள்.
நீங்கள் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முழுமையான ஈடுபாட்டுடன் இப்போது செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். தேவையற்றது தானாக விலகிப் போகிறதா இல்லையா, பாருங்கள்.
படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?
எது ஆனந்தமோ, அதை எப்போதும் செய்யுங்கள். தப்பே இல்லை.
ஆனால், அப்படி எதைச் சந்தோஷமாகச் செய்தாலும், அதன் பின்விளைவுகளையும் அதே சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
வாழ்க வளமுடன்!