Sunday, October 30, 2011

சரியான தீர்வு யாரால்? ஆனந்தம்


      அரசியல்வாதிகளில் பலர் ஆன்மீகவாதிகளிடம் ஆலோசனை கேட்டு நடக்கிறார்களே, ஆன்மீகவாதிகளால் சமூகப்பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
      இந்த வாதிகளில் பெரும்பாலானோர் உண்மையில் வியாதிகள்! அவர்களால் பிரச்சனையை உருவாக்க முடியுமே தவிர, தீர்வு சொல்ல முடியாது. அரசியைல் பிரச்சனைகள், ச்மூகப்பிரச்சனைகள் மட்டுமல்ல ஆன்மீகப் பிரச்சனைகளைக் கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியாது.
      தங்கள் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கருத்துக்களைக் கோர்த்து, நல்ல கோட்பாடுகளின் அடிபடையில் நடப்பதாக நினைத்து அவர்கள் கொடுத்துவரும் ஆலோசனைகள் பிரச்சனைகளை தீவிரப் படுத்தியிருக்கின்றனவே தவிர தீர்த்துவைக்கவில்லை.
      சில பிரச்சனைகள் தீர்வு பெறாமலேயே தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றனவே ஏன்? அவற்றை தெளிவான கண்ணோட்டத்துடன் அனுகும் பக்குவம், அவற்றைக் கையாள்பவரிடம் இல்லை. அதுதான் விஷயம். அந்த பிரச்சனைகள் பூதகரமாக வளர்ந்திருப்பதற்க்கு அதுதான் காரணம்.
      "முன்பு அரசவைகளில் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கிய துறவிகளும் இந்த வகையை சார்ந்தவர்கள் தானோ?"
      இல்லை, இல்லை; தன்னை ஆன்மீகவாதி என அறிவித்துக்கொண்டு மரியாதை எதிர்பார்ப்பவர்கள் வேறு; ஆன்மீகத்திலேயே ஈடுபட்டிருப்பவர்கள் வேறு!
      ஆன்மீகப் பாதையில் தன்னை உணர்ந்து செல்பவர்களின் பார்வை மற்றவர்களைக் காட்டிலும் மிகத்தெளிவாக இருக்கும். வாழ்க்கை பற்றியும், மனித உறவுகளைப் பற்றியும் அவர்களுடைய கணிப்பு இன்னும் ஆழமாக, அனுபவப்பூர்வமாக இருக்கும்(ஏனென்றால் அவர்களுக்கென்று எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்பும் இருக்காது). எதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அவரால் பிரச்சனைகளை எல்லாக் கோணங்களில் இருந்தும் பாரபட்சமின்றி மிகத்தெளிவாக பார்க்க முடியும். சரியான தீர்வும் சொல்ல முடியும்.
      அதனால் தான் அரசவைகளில் முற்றும் துறந்த ஞானிகளின் ஆலோசனைகளுக்கு மதிப்பு இருந்தது. ஆடம்பர வாழ்வை எதிர்பார்த்து அவர்கள் அரண்மனைகளில் குடியேற‌வில்லை. அரிய ஞானம் கொண்டு அலோசனைகள் வழங்கவே மன்னனுடன் அவர்கள் வசித்தார்கள்.
      ஜனக மன்னன் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற போது, தன் குருவுடன் ஆசிரமக்குடிலுக்கு போகவே பிரியப்பட்டான். ஆனால் அவன் குரு அஷ்டவக்கிரர் அவனைத் தடுத்தார்.
      "உன் சுகங்களை விட்டுகொடுப்பது பற்றிய பிரச்சனை அல்ல இது. ஒரு ஞானவானின் ஆட்சி எப்படி இருக்கும் என்று மக்கள் அறிந்து, அனுபவித்து மகிழ வேண்டும். எனவே, நீ அரியணையிலேயே இரு!" என்று அவனைத்திருப்பி அரண்மனைக்கே அனுப்பினார்.
      ஞானிகளின் தீர்கமான அணுகுமுறை மன்னனுக்கும் மக்களுக்கும் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும்.
      மனிதப் பிறவியை பற்றிய பல அம்சங்களைத் தெரிந்து வைதிருப்பர் ஞானிகள். மனித உடல் எப்படி இயங்குகிறது, மனம் எப்படிச் செயல்படுகிறது. அவனுடைய சக்தியை எப்படி மேம்படுத்துவது என்று ஞானிகள் அறிவர். அவர்களுடைய சேவையை சமூகம் பயன் படுத்திக்கொள்ள முன்வந்தால், அது மிகச் சிறந்த பலன்களையே கொடுக்கும்.
      ஆனால் உண்மையான ஞானிகள் சமூகம் பற்றிய விசயங்களுக்கு வருவதே அபூர்வம். யாரோ ஓரிருவர் தான் அத்தி பூத்தார் போல் சமூகத்திற்கே வருவர். மிகுந்து ஞானிகள் தனித்தே இருப்பர். அவ்வாறு யாராவது நிஜமாக வந்து தீர்வு கொடுத்தால் அந்தத் தலைமுறை மிகுந்த பாக்கியம் செய்த தலைமுறையாகும். அதனால் தான் அந்தக் காலத்து மன்னர்கள் துறவிகளைத் தேடிப்பிடித்து தீர்வு கேட்க அழைத்து வருவர். அல்லது அவர்களது ஆசிரமம் இருக்கும் இடத்திற்க்கு சென்று தீர்வு கேட்பர்

      "ஒழுக்கம் உள்ளவர்களாலும், நல்லவர்களாலும் கூட பாரபட்சமின்றி தீர்வு தரமுடியுமே? இதற்க்கு ஆன்மீக ஞானம் அவசியமா?
      பிரச்சனை என்பதற்க்கு ஒரு தீய பகுதி இருக்கும். மிகந‌ல்லவர்களால் நல்லதைப் பார்க்க முடியுமே தவிர, தீயதை உண்ர்ந்து கொள்ள முடியாது.
      ஆஸ்திரேலியாவில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்ட ஒருவன் தன் மூன்று சகோதரிகளுடன் ஒரு பயணம் மேற்க்கொண்டான்.
      வழியில், அந்தப் பகுதியின் இளவரசன் எதிர்ப்பட்டான், "இந்த மூன்று அழகான பெண்களில் ஒருத்தியை என் மனைவியாக்கிக் கொள்கிறேன் சம்மதமா?" என்று கேட்டான் இளவரசன்.
      மூவரில் ஒருத்திக்கு மட்டும் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்தால் மற்றவர்கள் இருவர் வேதனைப் படுவார்கள் என நினைத்துக் கொண்டு, "மூவரையும் ஒரே தகுதி கொண்டவர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பதாய் இருக்கின்றேன்" என மறுத்துவிட்டான் ஆன்மீகவாதி.
      அப்படி எல்லா விததிலும் ஒரே தகுதி கொண்டா மூவரைத் தேடித் தேடி பல வருடங்களை வீண‌டித்தான். கடைசி வரை அந்த பெண்கள் கன்னிகளாகவே வாழ வேண்டியதாகி விட்டது.
      "எங்களில் ஒருத்திக்காகவாவது கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை உன் எண்னத்தினால் வீணாகப்போயிற்றே" என புலம்பி கண் கலங்கினர் சகோதரிகள்.
      மற்ற இரு சகோதரிகள் வேதனை கொள்வார்கள் என அவன் நினைத்து தீர்மானித்து அவன் எடுத்த 'நல்ல' முடிவால், யாருக்குமே சந்தோசம் கிடைக்காமல் போனது. ஒரு சரியான முடிவெடுக்க அவர்கள் நல்லவர்களாக மட்டுமிருந்தால் போதாது என்பதைச் சுட்டிக் காட்டும் கதை இது.
      அதே போல் தான் ஒழுக்கம் உள்ளவர்களும்! தங்கள் விதி முறைகளில் சிக்கிக் கொண்டு விட்டால், பிரச்சனைகளின் முழுப் பரிமாணத்தை அவர்களால் கவனிக்க முடியாது. அதற்க்கொரு தீர்வும் சொல்லமுடியாது. இரு வெவ்வேறு மனிதர்களின் ஒழுக்க நிலைகளின் பெரும்பாலும் சண்டைகளில் தான் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. நல்லவர்களிடமும், ஒழுக்கம் பற்றிய கவனம் கொண்டவர்களிடம் பாரபட்ச மற்ற தீர்வு என்பது சாத்தியமே இல்லை.
      ஞானிகளிடம் தான் அந்த அமுதம் கிடைக்கும்.

Wednesday, October 26, 2011

ப‌ண்டிகைகள் ஏன்? ஆனந்தம்


      பண்டிகை நாள் என்றாலே வெறுப்பாக இருக்கிறது பெண்கள் சமையல் கட்டிலேயே அடைந்து கிடந்து. விதவிதமாக திண்பண்டங்களைச் செய்தே களைத்துப் போகிறோம். இதுவா கொண்டாட்டம் என்பது?
      வாழ்க்கை என்பதே ஆனந்தமாக கொண்டாடப்பட வேண்டியது, அப்படி அமைத்துக் கொள்ளாதவர்களுக்காகத்தான் வெளியில் பல கொண்டாட்டங்களை அமைத்துக் கொடுத்தார்கள்.
      வயலை உழப்போகிறார்களா அது ஒரு கொண்டாட்டம், விதை தூவப்போகிறார்களா அது ஒரு கொண்டாட்டம், களையெடுப்பது ஒரு கொண்டாட்டம், அறுவடை செய்வது ஒரு கொண்டாட்டம், உழவு மாடுகளுக்கு மரியாதை செய்வது ஒரு கொண்டாட்டம்,யார் வீட்டிலாவது திருமணமா அது பல நாள் கொண்டாட்டம், என்றெல்லாம் ஏன் அமைத்தார்கள்?
      கொண்டாட்டம் என்பது சந்தோசத்தின் வெளிப்பாடு, வாழ்க்கையின் அடிப்படை. நீங்கள் கொண்டாட்டத்தை எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான், உங்களின் ஆனந்தம் இருக்கிறது.
      கொண்டாட்டம் வயிறு முட்ட சாப்பிடுவதில் இல்லை, உணர்வில் இருக்கிறது, உங்களின் முதல் கவனம் சந்தோசமாக இருப்பதில் தான் இருக்க வேண்டும்.
      விதவிதமாக சமைக்க வேண்டும் பின்பு அதைப் புசிக்க வேண்டும், அப்புறம் தான் கொண்டாட வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
      முதலில் உங்கள் வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ளுங்கள். சமையல் செய்வதை ஏன் வேலையாக நினைக்கிறீர்கள்? காய்கள் நறுக்குவதைக் கூட ஒரு கொண்டாட்டமாக மற்றிக் கொண்டு செய்து பாருங்கள் பண்டிகை நாள் மட்டுமல்ல வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தான் என்பதை உணர்வீர்கள்.
      பெண்கள் வேலை செய்ய வேண்டும், ஆண்கள் தான் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
      ஆண், பெண் என பிரித்து பேசவில்லை, வாழ்க்கையை வேதனையோடு நகர்த்த தீர்மானித்திருக்கிறீர்களா? அல்லது கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ள விருப்பமா? என்று தான் கேட்டேன்.
      அன்பும், பிரியமும், விருப்பமும் இல்லாமல் நீங்கள் சமைத்தால் ஒரு விதத்தில் ஆண்களுக்கும் அது தண்டனை தானே?
      பெண்களாவது புலம்பித் தள்ளி விடுகிறார்கள். ஆண்கள்.....?
      ஒருமுறை சங்கரன்பிள்ளை பெண்கள் கூட்டம் ஒன்றுக்கு போயிருந்தார்...
      "பெண்கள் முட்டாள்களாக கருதப்படுகிறார்கள். அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். வேட்டையாடப்பட்டும், இரைகளாக விரட்டப்பட்டும் இருக்கிறாகள். அவர்கள் எந்த விதத்திலாவது வேதனைப் படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா?" என்று மைக்கை இறுகப் பற்றி ஒரு கனமான பெண்மணி உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டிருந்தாள்.
      சங்கரன்பிள்ளை எழுந்தார். "என்னால் சொல்லமுடியும். பெண்கள் ஒரு போதும் மெளனமாக வேதனைப்பட்டதில்லை" என்றார்.
      உண்மைதானே?
      உங்களுக்குள் நீங்கள் சந்தோசமாக இல்லாதபோது சுற்றி உள்ளவர்களை நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்க அனுமதிப்பீர்கள்? தூக்கி வைத்த முகத்துடன் நீங்கள் உட்கார்ந்தால், மற்றவர்களின் கொண்டாட்டம் என்னவாகும்? சமைத்த களைப்பும் சாப்பிட்ட அயர்ச்சியும் தான் பண்டிகை நாட்களில் மிச்சமாகும்.
      சந்தோசமான நபராக இருக்கும் வரைதான் நீங்கள் ஆபத்தில்லாதவர். சந்தோசம் இல்லாத நேரங்களில், பரிதாபகரமான செயல்களில் எல்லாம் நீங்கள் ஈடுபடுவீர்கள், ஆண்களும் இதைப்புரிந்து கொண்டால் உங்களுக்கு இந்த வேதனை இருக்காது.
      ஆண்களைப் பற்றி பேசும்போது தான் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
      கடற்க்கரையில் ஒரு பெண், கூழாங்கல் ஒன்றைக் கண்டெடுத்தாள், சுத்தம் செய்ய அதைத் தேய்த்தாள். எதிரில் ஒரு பூதம் தோன்றியது.
      "என்னை விடுவித்ததற்க்காக உன் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுகிறேன் என்ன வேண்டும் கேள்?" என்றது பூதம்.
      "என் நாய்க்குட்டி பேசவேண்டும், பாட வேண்டும், ஆட வேண்டும்!"
      பூதம் உதட்டைப் பிதுக்கியது. "அத்தனை சக்தி எனக்கில்லை. வேறு ஏதாவது கேள்!"
      "அப்படியானால் அன்பானவனாக, நகைச்சுவை உணர்வு மிகுந்தவனாக, வீட்டு வேலைகளில் சந்தோசமாக உதவுபவனாக, என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக, என்னிடம் பொய்யே சொலாதவனாக ஓர் ஆண்மகனை எனக்கு கணவனாக கண்டுபித்துக் கொடு!"
      பூதம் பெறு மூச்சுவிட்டது. "முதல் ஆசையே பரவயில்லை, எங்கே உண் நாய்க்குட்டி" என்றது.
      இந்த தேசத்தில் மட்டுமல்ல....உலகெங்கிலும் சிடுக்கான குடும்பப் பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்துவதை ஆண்கள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
      வீட்டில் பெண்கள் வேதனையாக இருந்தால், அந்த வீட்டின் மொத்த சந்தோசமும் பறிபோகும் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
      கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்பட்டவையே பண்டிகைகள். கால ஓட்டத்தில், அடிப்படை நோக்கம் மறைந்து போய், வெறும் சடங்குகள் மட்டும் நின்றுவிட்டதால் தான் பண்டிகைகள் பெண்கள் மீது பெரும் பாரமாக அழுத்துகின்றன.
      அரசியலோ, ஆண்மீகமோ எந்த அமைப்பாக இருந்தாலும் காலத்துக்கு ஏற்றார்போல் திருத்தி அமைக்கப் பட வேண்டும். அப்போது தான் அதன் அடிப்படை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்.
      பண்டிகைகளுக்கும் அந்த அவசியம் வந்துவிட்டது.
      வெளியே மிதக்கும் விஷத்தைக் கக்கினால் தான் உள்ளே ததும்பும் அமுதத்தை ருசிக்க முடியும்!