ஆராய்ச்சிப் பயணம் என்பதன் பொருள் என்ன? நீங்கள் இதுவரை பயணப்படாத இடங்களுக்குச் சென்று அங்குள்ளதை முழுமையாக அறிவதுதான் ஆராய்ச்சிப் பயணம், அது ஒரு கருத்து அல்ல. நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு, ஆப்பிரிக்கக் கண்டத்தை ஆராய்ச்சி செய்தால், அது வெறும் கற்பனை மட்டுமே. ஆனால் நீங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் சென்று, அங்கு குறுக்கும் நெடுக்கும் சென்று அனைத்தையும் கண்டறிவது வெறும் கருத்தோ அல்லது கற்பனையோ ஆகாது. இதைத்தான் ஆராய்ச்சிப்பயணம் என்கிறோம்.
ஒன்றை ஆய்ந்து கண்டறிவதற்கும் அல்லது அதைப்பற்றிய ஒரு கருத்தை மட்டும் உருவாக்கிக் கொள்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒன்றைக் கண்டறிவதுதான் நமக்குத் தேவையே தவிர அதைப் பற்றிய வெறும் கருத்து உருவாக்கிக் கொள்வது அல்ல. ஒன்றைப் பற்றிய முடிவுக்கு வந்து விட்டீர்கள் என்பது கருத்து.
வாழ்க்கை பற்றி நீங்கள் ஒரு கருத்துக்கு வந்து விட்டீர்கள் என்றால வாழ்க்கை பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 10 நிமிடங்களில் நீங்கள் கணக்குப் போடுமளவுக்கு வாழ்க்கை அவ்வளவு சிறியதாக இல்லை. அது உங்கள் கணக்கிற்குள் வருவதாக இருந்தால், இவ்வளவு வருடங்கள் நாம் வாழத் தகுதியானதே இல்லை. வாழ்க்கையை உங்களால் அப்படித் தொகுக்க முடியாது. சிறிது சிறிதாக ஆராய்ந்து அறியத்தான் முடியும். அதைத்தான் உங்களால் செய்ய முடியும். அப்படிச் நீங்கள் வாழ்க்கையை தொகுக்க முனைந்து விட்டால் எதையோ தவற விட்டீர்கள் என்பதுதான் பொருள்.
அதே போல் வாழ்க்கையில் பாதுகாப்பைத் தேடுவதும் சரியல்ல. வாழ்க்கையில் பாதுகாப்பைத் தேடுவது என்பது வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிப் பயணத்தில் ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது சிறிய அளவில் சாதித்திருந்தாலும் அதை முக்கியமாகக் கருதுகிறீர்கள். அதை வைத்து அஸ்திவாரம் எழுப்பப் பார்க்கிறீர்கள்.
திரவம் போல இலகுவாக இருப்பதை விடுத்து எதையோ வைத்து அஸ்திவாரம் எழுப்பி ஒரே இடத்திலேயே இருக்க விரும்புகிறீர்கள். வாழ்க்கை இப்படி தேங்கிப் போகும்போது, மிகவும் மோசமான நிலைக்குப் போய்விடுகிறது. அப்போது உங்களுக்கு என்ன நடக்கும் என்றால் நீங்கள் நன்றாகக் கண்ணீர் விட்டுக் கதறவும் மாட்டீர்கள், மனம் விட்டுச் சிரிக்கவும் மாட்டீர்கள். உங்கள் கண்ணீருக்கும் வேலையிருக்காது, மலர்ந்த சிரிப்புக்கும் வேலையிருக்காது. ஒரே இடத்தில் தங்கி விடுவீர்கள்.
மாறாக வாழ்க்கையை முழுமையாக ஆய்ந்து வாழும்போது, ஒன்று மிகவும் உயிரோட்டத்துடன் வாழ்வீர்கள். அது மிகவும் மகத்தானதாகது. அல்லது வீழ்ந்து மடிவீர்கள். அதுவும் சரிதான். ஆனால் இப்போது நீங்கள் உயிர்ப்போடும் இல்லை. இறக்கவும் இல்லை. கடைசியில் உண்மையிலேயே நீங்கள் இறக்க வேண்டிய நேரம் வரும்போது, அந்த கடைசி தருணத்தில்தான், இதுவரை வாழாமலே போய்விட்டோம் என்பதை அறிந்து கொள்வீர்கள். அது மிகவும் துயரமானது. உலகில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இப்படித்தான் இறக்கிறார்கள்.
மனிதர்கள் 70 - 80 வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் இறந்து போகும் நேரத்தில் அவர்களைப் பார்த்தால் வெறும் பயமும், குழப்பமுமாகத்தான் இருப்பார்கள். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமலேயே இறக்கிறோம் என்பதை அந்த கடைசி நேரத்தில் கண்டு கொள்கிறார்கள். வாழ்க்கையின் ஒரு அணுவைக்கூட அறிந்து கொள்ளாமல் அவர்கள் இறந்து போகிறார்கள்.
எனவே வாழ்க்கைப் பயணத்தில் முழுமையாக இறங்கி ஒவ்வொன்றையும் கண்டறியுங்கள். அப்படி வாழ்ந்து இறக்கும் தருவாயில் ஆனந்தமாக இறந்தால் அது அற்புதமானது. குறைந்தபட்சம் அமைதியாக இறந்தாலும் சரிதான். அல்லது உள்நிலையில் ஆனந்தத்தை அடையும் முயற்ச்சியில் வலியுடன் இறக்கிறீர்கள். அதுவும் நல்லதுதான். ஆனந்தம்தான் ஏற்படவில்லை, அதற்கான முயற்சியில் குறைந்த பட்சம் வலி வந்தாலும் நல்லதுதான். அந்த வலி கூட உங்களுக்கு நிகழாமல் நீங்கள் இறப்பது மிகவும் துயரமானது, இல்லையா?
இறுதி நேரத்தில், வாழாமலேயே போகிறோமே என்று நீங்கள் குழப்பத்திலும் திகைப்பிலும் இறக்கிறீர்கள் என்றால் அது மிகவும் கொடூரமானது. நீங்கள் ஆனந்தத்துடன் இறந்து போங்கள், அமைதியாக இறந்து போங்கள், அல்லது (ஆனந்தத்தை அடையும் முயற்ச்சியில்) வலியுடனாவது இறந்து போங்கள். ஆனால் நாம் யாருமே திகைப்பிலும், குழப்பத்திலும், ஏக்கத்திலும் இறப்பது சரியானதல்ல..............
No comments:
Post a Comment