Thursday, February 24, 2011

கதவைத்திற காற்று வரட்டும் ஆனந்தம்


        ஒரு ஜென் ஞானி, மலையையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்.
        அந்த நதிக்கரையோரத்தில் துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவன், குடிசையில் அடைந்து கொண்டு “வாழ்க்கை துக்ககரமானது! வாழ்க்கை துக்ககரமானது! என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
        இதைக்கேட்ட ஞானி, “இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமானது. குடிசையைவிட்டு வெளியே வந்துபார். உனக்குத் தெரியும்” என்றார். துறவியின் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
        முதலில் கதவைத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடி வரும் தென்றல் உன்னை வெளியே கொண்டு வரும்” என்று சொன்னார் ஞானி. அதையும் அவன் கேட்கிற மாதிரி இல்லை.
        உடனே அந்த ஞானி, ” அடடே….ஆபத்து! ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது” என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக்கொண்டு அவன் வெளியே ஓடி வந்தான்.
        வந்தவனைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மின்னுவதையும், அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றான்.
        ‘குடிசையை விட்டு வெளியே வா… அழகைக் கண்டு ஆராதிக்கலாம் என்று அழைத்தபோது அவன் குட்கவில்லை. அவனோ கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எனவே, ‘பரம்பொருளைக் காணலாம் மோட்சம் அடையலாம்” என்று அவனிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவனை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?
        அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்தியது தான், “ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது” என்று கத்தியது.
        விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது. புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது.நீரில் குதிக்க பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.கதவைத் திறக்க பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது. ஆனந்தம் பொங்காது. அனைவரது வாழ்விலும் ஆனந்தம் பொங்க வாழ வேண்டும். எல்லா நிலையிலும் ஆனந்தத்தோடு வாழவேண்டும். ஆனந்தமே ஒவ்வொருவரது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
      

1 comment:

Jayadev Das said...

எங்க பாத்தாலும் சைனீஸ் நூடல்ஸ் பிரபலம் ஆனா மாதிரி யாரைப் பார்த்தாலும் நீதி சொல்றதுக்கு ஜென் கதைதான் சொல்றாங்க. என்ன ஆச்சு, ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் நீதிக் கதைகளே இல்லையா?
\\கதவைத்திற காற்று வரட்டும் \\ ஐயோ சாமி எனக்கு சன் டீ.வி யில் பார்த்த திருவண்ணாமலை ராஜசேகர் படந்தான் ஞாபகம் வருது, வேண்டாம்டா சாமி, ஆளை விடுங்க எஸ்கேப்....

Post a Comment