Thursday, February 3, 2011

நட்பு - ஆனந்தம்

        மனித வாழ்க்கையில் விலை மதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுகதுக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பாண்மையே நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.
        பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தியும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றவரோடு நட்பு கொள்ள இடமிருக்கிறது. ச‌முதாயத்தில் இத்தகைய நட்பு தான் மலிந்திருக்கிறது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்து கொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்பத்திலேயே உணர்ந்து முறித்துவிடுவது நலம்.
        ஒரு நீதிபதி தன்முன் குற்றம் சுமத்தப்பட்டு எதிரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாக இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தே விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளி என்று திர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால் அளிக்கிறார். அதுவரையில் அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அது போல, பொருள் தேவை, ஒழுங்கீனம் மிகுந்துள்ள இந்தக் காலத்தில், அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக் கூடாது என்ற கருத்தை முதலில் வைத்துக்கொண்டே அவரோடு நட்பு கொண்டு அவர் நடத்தையை ஆராயவேண்டும். சந்தர்ப்பங்கள் தான் மனித உள்ளத்தை உரை போடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்ளம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தானவர் என்ற முடிவுக்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்பதை முன் வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின் கொள்ளுகிறார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் களங்கமுடையோன் என்ற கருத்தை வைத்து சோதனைக்கு பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.
        நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு‍‍‍‍‍-சீடன், கணவன்-மனைவி, ஆசிரியர்-மாணவன், எசமான்-பனியாள், பொருட்களை விற்பவர்-வாங்குவோர், துணைவர்கள் அகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவுநிலை இந்த மூன்றிலும் ஒவ்வொருவரும் வேறு பட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் எறு கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்து போக இருக்கும் வாய்பு தான் அதிகம்.
        சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு, அத்த‌கைய நண்பர்கள் மேல் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்க்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள்தான் கொஞ்சமா?
        எதிரிகளால் ஏற்ப்படவிருக்கும் கெடுதல்களை புரிந்து கொள்ள முடியும். முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உளவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாது. இத‌ற்கு உலகசரித்திரம் சான்று கூறுகிறது.
        எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையே தான் அது வலுவுள்ளதாக இருக்க முடியும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால்-இணைந்தால்-ந‌ட்புக்கு எந்த வித‌த்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.
        நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும். வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.
        நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள்த் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள இந்தக் காலத்தில் அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம் பெற்றோர் எண்ணிக்கையைவிட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.
        அறிவோடும், விழிப்போடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, அகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ, ஆற்றலையோ உத‌வியும், பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத-ஏமாற்றமளிக்காத-உயர்முறையாகும். அதுவே ஆனந்தமான வாழ்க்கைக்கு உதவும் முறையாகும்................................
.........................அருட்தந்தை வேதத்திரி மகரிஷி................................. 
வாழ்க வளமுடன்!

2 comments:

மதுரை சரவணன் said...

நட்பு சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்

தமிழ் மொழி said...

அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_27.html?m=1

Post a Comment