மனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களின் வாழ்க்கையின் போக்கை, தங்கள் விருப்பு வெறுப்பைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள். "எனக்கு பிடித்திருப்பதால் இதைச் செய்கிறேன்" என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமில்லை. உங்களைச் சுற்றி இருப்பவைகளுக்கு உங்களைப் பிடித்திருக்கிறதா? என்பது தான் கேள்வி. ஏனென்றால் உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது என இரண்டுமே இரு விதமான பிணைப்புகள் தான். இரண்டுமே உங்கள் புரிதலை திசை திருப்பக் கூடியதுதான்.
ஒருவரைப் பிடித்திருந்தால் அவரைப் பற்றிய உங்களது எண்ணம் மிகையானதாகவே இருக்கும்.ஒருவரைப் பிடிக்காதிருந்தாலும் அவரைப் பற்றிய உங்களது எண்ணம் மிகையானதான் இருக்கும். ஒன்றை மிகைப்படுத்துகிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை உள்ளதை உள்ளபடி பார்கத்தவறி விட்டீர்கள் என்று அர்த்தம். உள்ளதை உள்ளபடி பார்கத்தவறி விட்டீர்கள் என்றாலே வாழ்க்கையை சரியான முறையில் உங்களால் கையாள முடியாது. எனவே உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமே இல்லை.
உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மட்டுமின்றி, மலர்கள், செடி கொடிகள் மரங்கள் அனைத்திற்க்குமே உங்களைப் பிடித்திருக்கிறதா என்பது தான் கேள்வி.
உண்மையில் தாவரங்கள் உங்களை விட நுண்ணுணர்வு கொண்டவை. நீங்கள் நடக்கும் பூமிக்கு கூட உங்களைப் பிடிக்கும் விதமாக வாழ பழகிக் கொண்டிர்கள் என்றால், வாழ்வில் வரும் அனைத்துமே ஒரு வரமாக இருப்பதாக உணரத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவை உங்களை வெறுக்கத் தொடங்கினால் இப்போது நலமாகத் தெரியும் எல்லாமே சாபமாக மாறுவதை உணரத்தொடங்குவீர்கள். சொல்லப் போனால் மனிதவாழ்வின் மீதான சாபம் என்று ஏதுமில்லை. மனிதர்களுக்கு எது வேண்டியிருக்கிறதோ, எதை அடையப் போராடுகிறானோ, எதற்காக அவர்கள் ஏங்குகிறார்களோ அவையே அவர்களின் சாபமாக மாறித் துன்புறுகின்றன.
மனிதர்களின், சொத்து, வேலை, உறவுகள், அவர்களின் உடல், மனம் என்று எல்லாமே சாபமாக மாறித் துன்புறுத்துகிறது. வருத்தமும் துன்பமும் வானத்திலிருந்து பொழிவதில்லை, மாறாக அவர்கள் எதை விரும்புகிறார்களோ
அவைகளே துன்பத்திற்க்கு மூலமாக மாறி விடுகிறது.
உலகத்திலுள்ள ஒவ்வொன்றுக்கும் உங்களைப் பிடித்திருக்கும் விதமாக நீங்கள் வாழப் பழக வேண்டும். இப்போது கொசுக்களுக்கு மட்டும் தான் உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. பறவைகள், பூச்சிகள், பூக்களுக்கெல்லாம் உங்களை பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பருகும் நீர், உங்கள் சுவாசக்காற்று, உங்கள் உணவு எல்லாமே எல்லாமே நஞ்சாக மாறி விடக்கூடும். அவற்றுக்கு உங்களை பிடித்திருந்தால் அவையே அமுதமாக மாறும்.
பிரபஞ்சம் என்கிற படைப்பும் அதைப் படைத்தவரும் உங்களை நேசித்தே ஆகவேண்டும் என்ற விதமாய் வாழ்வதே வாழ்க்கை. உஙகள் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதல்ல வாழ்க்கை. பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அனுவுக்கும் உங்கள் மேல் பிரியம் தோன்றும் விதமாக வாழும் முறைக்கு தான் வாழ்க்கை என்று பெயர்.
இல்லையென்றால் நீங்கள் எதற்காக பாடுபட்டாலும். எதுவும் உங்களுக்கு பயண் தரும் விதமாக இராது. நீங்கள் என்னென்னவோ செய்யலாம், ஏதேதொ ஆகலாம், பல வருமானம் வரலாம் ஆனால் வாழ்வில் எதையும் அழுத்தமாக உணராமலே ஒரு சுழற்ச்சியில் இருப்பீர்கள்
கற்களுக்கும், தாவரங்களுக்கும் பிடித்திருக்கும் விதமாக கனிவு மிக்க வாழ்க்கையை நீங்கள் நடத்தினால் உங்கள் நுண்ணுணர்வுக்கே வழ்க்கை ஒரு வரம் என்பது புரிய வரும். தொட்டாற் சிணுங்கிகள் தன் விருப்பமின்மையை தெரிவிக்கின்றன, அதற்க்கு மட்டுமல்ல, எல்லாத் தாவரங்களுமே உங்களைப் பிடிக்குமா இல்லையா என்பதைத் தெளிவாகச் சொல்லுகின்றன. அவற்றின் பாஷயை நீங்கள் புரிந்து கொள்ளுமளவு நீங்கள் நுட்பமானவராக இருங்கள். கொட்டை எழுத்தில் எழுதினாலோ சத்தம் போட்டுச் சொன்னாலோ தான் உங்களுக்கு புரியும் என்கிற நிலையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.
இதற்கு ஏற்கும் தன்மையில் நீங்கள் இருப்பது தான் முக்கியம், "தான்" என்ற நிலை உங்களுக்குள் பெரிதாக இருந்தால், உங்களின் ஏற்கும் தன்மை குறையும். தான் எண்ணும் எண்ணம் உங்களுக்குள் இல்லாமல் போனால் இந்த பிரபஞ்சமே உங்களுடன் இனைந்து நடனமாடும். நீங்கள் அந்நிலையில் படைத்தவனின் கருவியாகவே வாழலாம். இல்லையென்றால் எண்ணங்கள், அபத்தங்கள், உணர்ச்சிகள், பேதங்கள் ஆகியவற்றின் குவியலாகத் தான் வாழ்வீர்கள்.
ஒவ்வொரு மனிதரும் தேர்வு செய்ய இரு வேறு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று படைத்தவனின் அங்கமாகவே வாழலாம். இதை ஈஷாங்கா என்கிறோம். அல்லது அபத்தங்களின் தொகுப்பாகவே வாழலாம்.
இந்த இரண்டிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் உரிமை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நொடியிலும் காத்திருக்கிறது. இந்த உணர்வு உங்களுக்கு இருந்தால் உங்களைச் சுற்றியுள்ள பாறைகள், பூக்கள் என்று படைபின் ஒவ்வொரு அணுவும் உங்களுடன் பேசும். இல்லையென்றால் இந்த பிரபஞ்சத்தில் தணிமையாகத்தான் உணர்வீர்கள். பாதுகாப்பு அற்றவராக, உளவியல் தடுமாற்றம் மிக்கவராக வாழ்வீர்கள்.
சரியான தேர்வை செய்தால் சரியான விஷயங்கள் நிகழ்கின்றன. தவறான தேர்வை செய்தால் நடப்பவையெல்லாம் தவறாகவே போய் விடுகின்றன. வெற்றியும் தோல்வியும் இதன் அடிப்படையில் தான் நிகழ்கின்றன. வலியும் துயரமும், வருத்தமும் வந்தால் யார் மீது பழியைப் போடலாம் என்று அங்குமிங்கும் பார்க்காதீர்கள். உங்களுக்கு நோய் வந்தால் அடுத்தவர்களுக்கா மருந்து கொடுக்கிறீர்கள்? உங்களுக்கு துன்பம் வந்தால் மட்டும் அடுத்தவர்களை ஏன் காரணம் சொல்லுகிறீர்கள்? இந்த எளிய விசயம் புரியவே சிலருக்கு பல பிறவிகள் தேவைப்படுகின்றன.
ஒருமுறை சங்கரன் பிள்ளை தட்டுத்தடுமாறி குடிபோதையில் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குப் போக வேண்டியவர் அதிகாலை 2.30 மணிக்கு தட்டுத் தடுமாறி கல்லிலும் முள்ளிலும் விழுந்து எழுந்து போனார். வீடு வந்து சேர்ந்து கண்ணாடியில் பார்த்தால் முகமெங்கும் ரத்த காயங்கள்.
உடனே ரகசியமாக மனைவிக்கு தெரியக்கூடது என்று, மருந்து பெட்டியைத் திறந்து காயமான இடங்களுக்கெல்லாம் பிளாஸ்திரி போட்டுக் கொண்டு படுத்துவிட்டார். காலையில் அவர் மனைவி வந்து சங்கரன் பிள்ளை முகத்தில் தண்ணீரைக் கொட்டி எழுப்பி, தரதரவென்று இழுத்து போய் காட்டிய போது தான் விஷயம் புரிந்தது. காயத்திற்க்கு கட்டுபோடுவதாய் நினைத்துக் கொண்டு கண்ணாடி முழுக்க பிளாஸ்திரியை ஒட்டி வைத்திருக்கிறார்.
விழிப்புணர்வே இல்லாத மனிதர்கள் தான் தங்கள் காயங்களுக்கு வெளியே காரணம் கண்டு பிடிப்பார்கள். உங்கள் வரங்களும் சாபங்களும் உள்ளிருந்தே நிகழ்கின்றன.
இதை உணர்ந்து நடந்தால் உங்கள் வாழ்க்கை அழகாகவும் அற்புதமாகவும் மாறும். இது புரிய ஒரு பிறவியை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை தன்னுடைய வழிகளில் உஙளுக்கு பாடம் கற்பிக்கும்.
வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா? தேர்ந்தெடுங்கள்!
..............................வாழ்க வளமுடன்!........................
4 comments:
அறியாமையைப் போக்கித் தெளிவூட்டும்
அருமையான எழுத்து
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
Bloggers, Please try this one and share your comments. "Sozialpapier" is an interest based network. It connects you to the favourite articles, authors and interests. Simply find the interests and start subscribe it. http://sozialpapier.com .
அருமை,நன்றி.
very good brother. starts your spiritual services.
Post a Comment