Saturday, March 5, 2011

திருமணம் ஆனந்தம்

      மற்றவர்களை பார்த்து, அவர்களை போலவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை விருப்பமாக இருக்கிறதோ, வசதியாக இருக்கிறதோ அதுதான் உங்களுக்கு உகந்தது
      எங்கே கலவரம் வெடித்தாலும், பெண்கள் தாமாகவே பாதுகாப்பான பின்னணிக்கு ஒதுங்கிவிடுவார்கள். போர் என்று வந்தால், ஆண்கள்தான் முன்னணிக்கு வருவார்கள். சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாக இருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தை சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள்
      ஒரு தகப்பன் தனக்கு பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாதென்று வேற்றோரு நம்பிக்கைக்குரிய இளைஞனிடம் அவளை ஒப்படைத்த காரண்த்தால் தான் அது கன்னிகாதானம் என்று அழைக்கப்பட்டது. பெண் பாதுகாப்பாக இருக்க அவளுக்கு கல்யாணம் அவசியம் என்று சமூகம் நினைத்ததன் காரணம் அது தான்.
      ஒரு பெண்ணுக்கு குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால் அது அந்த குடும்பத்துகே ஒரு அவமானமாக கருதப்பட்டது. முக்கியமான நிகழ்ச்சிகளில் திருமணம் ஆகாத முதிர் கன்னிகள் பங்கு பெறுவது கடினமானது. அவளுடைய குணநலனே கேலிக்குரியதாக பேசப்பட்டது.
      திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் காலங்காலமாக நம்பவைக்கப்பட்டு இருக்கிறது.இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற அச்சம் பெற்றோர்களிடம் உருவானது.இன்றைக்கும் சிலருக்கு திருமணம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கலாம். அதுவே வசதியாக இருக்கலாம்.சந்தோஷம் தருவதாக இருக்கலாம். அவரவர் மனப்பாங்கை பொருத்தது.ஆனால் அதுவே பொதுவான விதி அல்ல.
      ஒரு வாழ்க்கை முழுமை பெற திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை புதிய உறவுகளை கவனமாக கையாளத் தெரியாதவர்களும் திருமணத்துக்கு வற்புறுத்தப்பட்டு, அதில் தள்ளப் படுவது பரிதாபமானது. திருமணத்தால் வாழ்க்கை அர்த்தமற்று போனவர்களும் கூட அடுத்தவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதுதான் இந்த சமூகத்தில் நடக்கிறது.
      மகளை உடைமை என்று நினைத்த காலம் மலையேறிவிட்டது. தான் சாவதற்குள் யாரிடமாவது அவளை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை.சொல்லப் போனால் பெண் யாருடைய உடைமையும் அல்ல.அவள் ஒரு தனி உயிர். சுதந்திரமான உயிர். அவளுக்கு தேவையான கல்வியும் சமூக தளமும் அமைத்து கொடுத்தால் போதும் அவளெ தன்னை பாதுகாத்துக் கொள்வாள்.தன் வாழ்க்கையை எப்படி நடத்திக்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு தெரியும்.
      உங்களுக்கு தனிமை பாதை பிடித்திருக்கிறதா? அதையே தேர்ந்தெடுங்கள். திருமணப்பாதையில் நடந்துதான் ஆகவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் மகிழ்ச்சிதான் முக்கியம். ஆனந்தமாக வாழ வேண்டும் அது தான் முக்கியம். த‌னிமையில் தான் ஆனந்தம் உள்ளது என்றால் தனிமையையே தேர்ந்தெடுக்கலாம்....
      ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை என்றால், அவரைக் குறை உள்ளவராக பார்க்கும் மனநிலை முன்காலம் அளவுக்கு இப்போது இல்லை. சிறிது சிறிதாக மாறி வருகிறது. எனவே, திருமணம் என்பது உங்களை பொறுத்தவரை அமுதமா, விஷமா?

யோசித்து முடிவெடுங்கள்......

3 comments:

சக்தி கல்வி மையம் said...

பயனுந்ந பதிவு...

சக்தி கல்வி மையம் said...

மிகவும் பயனுள்ள பதிவு...

சுதர்ஷன் said...

தெளிவான விளக்கம் :)

Post a Comment