Monday, March 14, 2011

வலிகூட பரவசமாகும் ஆனந்தம்

      தமிழ்மேதை மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தண்டியலங்காரம் என்ற பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில ஆசைப்பட்டார்.ஆனால் முறையாகப் பயிற்றுவிக்கக் கூடிய தகுதி வாய்ந்த புலவர் யாரும் இல்லை.அச்சமயம் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த ஒரு பரதேசி, இதில் நல்ல தேர்ச்சி பெற்றவர் என அறிந்து கொண்டார். பின், அவர் செல்லுமிடம் எல்லாம் பின் தொடர்ந்து சென்றார்.அவர் தேவைகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்து கொண்டே தண்டியலங்காரம் முழுவதையும் பாடம் கேட்டதுடன், மூல நூலை முற்றிலும் பிரதி எடுத்தார்.எடுத்த காரியத்தில் ஜெயிக்க, எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்லத் தயாராய் இருந்தால் மட்டுமே ஜெயம் உங்களுக்குச்
சொந்தமாகும்.
      "இது சரி" "இது நல்லது" என்ற தெளிவு பிறந்துவிட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் விலையாகக் கொடுக்கலாம்.
      தியானம் எவ்வளவு நல்லது என்பது புரிந்து விட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் கொடுக்க முடியும். அது புரியாத வரை "எங்கப்பா! நமக்கெல்லாம் தியானம் செய்ய நேரம் இருக்கு" என்ற சாக்குபோக்கு மட்டுமே சொல்ல முடியும்.ஜி.டி. நாயுடு ஒரு முறை தன் அலுவலகத்தின், தலைமை நிர்வாகி அறைக்குள் பிரவேசித்தார்.அங்கு சிதறிக் கிடந்த பொருட்களை அடுக்கி, குப்பைக் கூளங்களை அகற்றி, பின் ஒரு கடிதம் எழுதி,
மேஜையின் மேல் வைத்தார். அதில், "உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க, ஒரு வாய்ப்பளித்ததற்கு மிகவும் நன்றி" என்று எழுதியிருந்தார்.
      அந்த அதிகாரி, கடிதம் கண்டவுடன் ஓடோடிச் சென்று நாயுடுவிடம் மன்னிப்பு கோரினார். அதற்கு ஜி.டி. நாயுடு..."உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் வேலையை விட்டுவிட்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டு வரவேண்டியிருக்காதல்லவா?" என்றார்.
      எளிமையும், புதுமையும், புத்திசாலித்தனத்தின் அங்கங்கள்.சாதாரண மனிதனால் யோசித்துக்கூட பார்க்க முடியாத ஒரு கோணத்திலிருந்து வெளிவரும் புத்திசாலியின் புதுமைகள் சாதாரண மனிதனுக்கு... புதிர்! ஆச்சர்யம்!!எளிமையாக இருக்கும் புத்திசாலிகளின் மனமும் லேசாகவே இருக்கும். அதனால்தான், அவர்களின் ஒவ்வொரு செயலிலும் புதுமை தெரிகிறது. அவை புகழ் பெறுகிறது. ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்,
நிலக்கடலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் மாபெரும் சாதனைகளையும் படைத்தார். சாதனைகளின் ரகசியம் பற்றி விசாரித்தனர்... அவர், சாதனைக்கான நுணுக்கங்களை பைபிளிலிலிருந்து கற்றதாகத் தெரிவித்தார்.
      மேலும், செனட் விசாரணை கமிட்டியாளர்களின் கேள்விக்கு, அவர் அளித்த பதில் புதுமையானதாக இருந்தது. "பைபிளில் நேரடியாக நிலக்கடலை பற்றி ஒன்றும் கூறப்படவில்லை.ஆனால், நிலக்கடலையைப் படைத்த கடவுளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. நிலக்கடலை பற்றிய முழு உண்மைகளையும், எனக்கு அருளும்படி கடவுளிடம் வேண்டிக் கொண்டு, என் ஆராய்ச்சியினைத் தொடங்கினேன். மெல்ல மெல்ல நிலக்கடலை சம்பந்தமான புதிர்கள் மறைந்து உண்மைகள் எனக்கு விளங்கின" என்றார்.
      எல்லாவற்றையும் அறிவுபூர்வமாக விளக்கிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் காட்ட முடியாது. மனித உணர்வு, மனிதவாழ்வு, கடவுள் சக்தி போன்ற எதற்குமே ஆதாரங்கள் கிடையாது. ஆனால் ஆதாரமற்ற அந்த அருவங்கள் தான், உங்களையும் உலகையும் இயக்குகிறது. இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்த ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு நடைமுறை வாழ்வியல் சாட்சி.
      வலிகூட பரவசமாகும்;விழிப்புணர்வை சேர்த்துவிட்டால்! - ஜென் தத்துவம் உடலில் வலி ஏற்படும் காலங்களில் 'வலி எங்கிருந்து வருகிறது' என உணர்வால் ஊடுருவுங்கள்.ஊடுருவ, ஊடுருவ வலி அதிகமாகும். அதே நேரத்தில் வலி ஏற்படும் பரப்பளவு சுருங்கிக் கொண்டே செல்லும். வலி ஒடுங்கிக்கொண்டே செல்லும். ஒரு சிறு புள்ளியாய் வலி ஒடுங்கிய பின் அந்த எதிர்பாராத அனுபவம் நிகழும். ஒடுங்கிய வலி பரவசமாய் வெடிக்கும். உடலுக்குள் ஆனந்தம் பரவும்.

2 comments:

மதுரை சரவணன் said...

good post thanks for sharing.

TamilTechToday said...

Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

Post a Comment