Friday, February 25, 2011

ஜென் முறை ஆனந்தம்


      டோக்குசான் என்ற ஜென் துறவி மூலிகைகளை பறிப்பதற்காக மலைச்சாரல் ஒன்றில் சென்று கொண்டு இருந்தார். ஓரிடத்தில் ஒரு குன்றின் மீது சிறிய குடிசை இருப்பதைக் கண்டார். சுற்றிலும் நிறைய தூரத்திற்கு எந்த வீடும் இல்லை. அது போன்ற ஏகாந்தத்தில் குடிசை இருக்க வேண்டுமென்றால் அதில் வசிப்பது ஒரு துறவியாகத் தான் இருக்க வேண்டும் என்றெண்ணிய டோக்குசான் அந்தக் குடிசையின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்ததோ ஒரு மூதாட்டி.
      அந்த ஜென் துறவியைப் பார்த்தவுடன் மூதாட்டி பக்தியுடன் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து வரவேற்றாள். அவருக்கு முகமலர்ச்சியோடு வரவேற்ற அவளைக் கண்டு வியப்பு. "அம்மா நீங்கள் இந்த மலையில் இந்த ஏகாந்தத்தில் என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டார்.
      "ஐயா நான் இங்கு தனியாகத் தான் வசிக்கிறேன். இங்கு யாரும் வருவதில்லை. இங்கு காய்கறிகள் வளர்த்து அருகே உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறேன்" என்றாள் அந்த மூதாட்டி. விளையும் காய்கறிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் அவருக்கு விவரித்தாள். மலைச்சாரலில் விளையும் அந்தக் காய்கறிகள் சத்தானவை என்றும் அந்தக் கிராம மக்களுக்கு அந்த சத்தான காய்கறிகளை விற்பதில் தனக்கு ஒரு நிறைவிருக்கிறது என்றும் தெரிவித்தாள். அவருக்கும் அந்தக் காய்கறிகளைக் கொண்டு தான் சமைத்திருந்த எளிய உணவை அளித்து உபசரித்தாள். தன் வீட்டுக்கு வந்த அபூர்வமான அந்த விருந்தாளியைக் கண்டு அவளுக்கு பெருத்த மகிழ்ச்சி.
      அந்த மகிழ்ச்சியையும், அன்பையும் கவனித்த டோக்குசான் உணவருந்தியபடியே கேட்டார். "வேலை இல்லாத போது நீங்கள் எப்படிப் பொழுதைப் போக்குகிறீர்கள்?"
      "நான் சுவர்க் கோழிகளின் ஓசையையும், மழை, காற்றின் இசையையும், இரவில் நிலவழகையும் ரசித்து மகிழ்வேன். பொழுது தானாகப் போகிறது" என்றாள் அந்த மூதாட்டி.
      அந்த மூதாட்டியின் பதில் டோக்குசானை மனதினுள் பாராட்ட வைத்தது. அவர் மௌனமாகத் தலையாட்டினார்.
      "ஐயா நான் படிப்பறிவில்லாதவள். ஆன்மிக ஞானம் அறியாதவள். எனக்கு புத்தரின் அறிவுரைகளைப் போதிப்பீர்களா?" என்று மூதாட்டி மிகுந்த அடக்கத்துடன் கேட்டாள்.
      "தனக்கு சமமானவர்களுக்கு ஒரு மனிதன் போதிப்பதில்லை. மேலும் ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்ற டோக்குசான் அந்தப் பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு விடைபெற்றார்
      இன்றெல்லாம் வேலை என்பதே ஒரு கடுஞ்சொல் என்பது போல் ஆகிவிட்டது. சலிப்புடனும், அலுப்புடனும் அணுகும் சமாச்சாரமாகி விட்டது. அதுவும் அந்த மூதாட்டியைப் போல் வயோதிகத்தை எட்டும் போது வேலை பெருஞ்சுமையாகவே தோன்றி விடுகிறது. ஆனால் அந்த மூதாட்டி தன் வேலையை மகிழ்ச்சியாகச் செய்வதுடன் மீதியுள்ள பொழுதையும் நிறைவாகக் கழிக்க முடிந்ததை அந்த ஜென் துறவி கவனித்தார். பொழுதைப் போக்க உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கையில், நூறாயிரம் கேளிக்கைகளைத் தேடி ஈடுபட்டும் திருப்தியடையாமல் திணறிக் கொண்டிருக்கையில் சுவர்க்கோழிகளின் ஓசையயும், காற்றும், மழையும் உருவாக்கும் இசையையும், நிலவழகையும் ரசித்தபடி வாழும் அந்த மூதாட்டியின் ரசனையைப் பார்த்து ஜென் துறவி வியந்தார். இதுவல்லவா ஜென்னின் வாழ்க்கை முறை என்று நினைத்ததால் தான் டோக்குசான் "ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்றார்.
      ஜென்னில் இருக்கின்ற இடமோ, செய்கின்ற தொழிலோ முக்கியமில்லை. படித்து முடித்த புத்தகங்களின் எண்ணிக்கையோ, சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தின் அளவோ ஒரு அடையாளமில்லை. வாழ்கின்ற முறையில் தான் எல்லா சூட்சுமமும் இருக்கின்றது. ஜென் நிகழ்காலத்தில் முழுமையாக இருக்கச் சொல்கிறது. இருப்பவற்றை முழுமையாக ரசித்து ஆனந்தமாக வாழ் சொல்கிறது. கிடைத்தவற்றிற்கு நன்றியுடன் இருக்கச் சொல்கிறது. ஜென்னில் ஒப்பீடுகள் இல்லை. ஒப்பீடுகள் இல்லாத போது துக்கங்களும் இல்லை.
      நிகழ்காலத்தில் முழுமையாக, ஆனந்தமாக‌ வாழும் போது செய்கின்ற செயல்களில் தானாக மெருகு கூடி விடுகிறது. மனதில் தானாக நிறைவு ஏற்பட்டு வருகிறது. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்து ஆனந்தமாக வாழ முடிகிறது. ஜென்னில் தேநீர் அருந்துவதே ஒரு தியானத்தைப் போல செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் தேனீரை மிகவும் ரசித்து, ருசித்து, நன்றியுடன், மகிழ்ச்சியுடன், நிதானமாக, ஆனந்தமாக‌ அருந்த வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.
      இன்றைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்க முடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன. தேவைகள் அதிகப்பட அதிகப்பட அதற்காகத் தர வேண்டிய விலையும் அதிகப்படுகிறது. அதுவும் விரைவாக அந்தத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற வெறியும் இருந்து விட்டால் பின் வேறெதற்கும் வாழ்க்கையில் நேரமோ, மனமோ இருப்பதில்லை. அதில் உண்மையில் பலியாவது இது போன்ற சின்னச் சின்ன ரசனைகளும் ஆனந்தமும் தான்.
      இலக்குகள் மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஒவ்வொரு கணமும் வாழப்பட வேண்டுமேயொழிய ஓட்டப்படக் கூடாது. எல்லாம் இயந்திரகதியில் இருந்துவிடக்கூடாது. இலக்குகளைப் போலவே அவற்றை நோக்கிச் செல்லும் பயணத்தின் தரமும் முக்கியமே. முழுமனதோடும், ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்ய வேண்டிய செயல்களைச் செய்தோமானால் விரைவாகவும் தரமாகவும் சிறப்பாகவும் எதையும் செய்து முடிக்கவும் முடியும். இதையே ஜென் வலியுறுத்துகிறது.
      மேலும் ஜென் எளிய வாழ்க்கையையும், நிறைவான மனநிலையையும் மிக முக்கியமாகக் கருதுகிறது. ஜென்னிற்கு கூர்மையான அறிவு முக்கியமில்லை. பக்குவப்பட்ட மனம் முக்கியம். அந்த மூதாட்டிக்கு ஜென் என்றால் என்ன என்று தெரியாமலேயே ஜென் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். அதனால் அதை விளக்க வேண்டிய போதனைகளுக்கு அவசியமிருக்கவில்லை. வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்காகவே போதனைகளே அல்லாமல் போதனைகளைக் கற்பதற்காக வாழ்க்கை அல்ல.
      சுவர்க்கோழிகளின் ஓசையையும், காற்றையும், மழையையும், நிலவையும் யாரும் என்றும் அந்த மூதாட்டியிடமிருந்து பறித்து விட முடியாது. நம்மிடமிருந்து யாரும், எப்போதும் அபகரிக்க முடியாதவற்றின் மூலம் நம்மால் மகிழ்ச்சியடைய முடிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் என்றும் குறைவதில்லை அல்லவா? இதுவே ஜென் சொல்லும் மகிழ்வாக வாழ, வாழ்க்கையின் மிக உன்னதமான‌ சூட்சுமம்.
................வாழ்க வளமுடன்!

4 comments:

ப.கந்தசாமி said...

ஆனந்தம் மனதில்தான் இருக்கிறது என்பதை அழகாகச் சொல்லுகிறது.

சுந்தரவடிவேல் said...

அழகான கதை.

VELU.G said...

நல்ல கருத்து ஜென் என்றால் என்னவென்று பிரதிபலித்தக் கதை

Unknown said...

very good. good story

Post a Comment