Monday, July 22, 2013

குரு பெளர்ணமி என்றழைப்பது ஏன்? ஆனந்தம்

      



      ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமியை குரு பௌர்ணமி என்று அழைக்கிறார்கள். அது ஏன்? குரு பௌர்ணமிக்கான சிறப்பு என்ன?

சத்குரு:

      மனித உடல் என்பது மண்ணைத் தவிர வேறு ஏதுமில்லை. எனவே இந்த பூமியின் இயல்பு, இந்த பூமியின் மனப்பாங்கு போன்றவை மாறும்போது அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழ்கின்றன. பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜுன் வரை – தை முதல் ஆனி வரை) உத்திராயணம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜுலை முதல் டிசம்பர் வரை – ஆடி முதல் மார்கழி வரை) தக்ஷிணாயணம் என்கிறோம்.

      சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
உத்திராயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (தை மாதம்) “தன்ய பௌர்ணமி” என அழைக்கிறோம். தக்ஷிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (ஆடி மாதம்) “குரு பௌர்ணமி” என்கிறோம். இப்பௌர்ணமி ஜுலை மாதத்தில் ஏற்படும். தட்சிணாயன காலமான (ஜுலையிலிருந்து டிசம்பர் வரை) ஆறு மாதங்கள் ‘உள்வாங்கிக் கொள்ளும்‘ தன்மையுடையதாகவும், உத்திராயண காலமான (ஜனவரி முதல் ஜுன் வரை) ஆறு மாதங்கள் ‘நிறைவடையும்‘ தன்மையுடையதாகவும் உள்ளன.

      சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை, அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.

      லிங்கபைரவி தேவியின் கண்கள் கூட ஒவ்வொரு 6 மாதத்திற்கும் மாறும். ஜனவரியிலிருந்து ஜுன் வரை உத்திராயணத்தில் தேவியின் கண்கள் தீப்பொறியாகவும், ஜுலையிலிருந்து டிசம்பர் வரை தட்சிணாயனத்தில் அவள் கண்கள் சாந்தமாகவும் இருக்கும். தேவியின் சக்தியும் அதற்கேற்றாற் போல மாறும். இதனாலேயே இந்தியாவில் பெண்தன்மைக்கு உண்டான கொண்டாட்டங்கள் அனைத்தும் தட்சிணாயனத்திலேயே தொடங்கும்.

      உத்திராயணத்தில், ஜனவரியிலிருந்து ஜுன் வரை இந்த பூமி ஆண்தன்மை வாய்ந்ததாக, நிறைவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். அடுத்த ஆறு மாதங்கள் ஜுலையிலிருந்து டிசம்பர் வரை, தட்சிணாயனத்தில் பெண்தன்மை வாய்ந்ததாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. எனவேதான் சிவன் தன்னுடைய போதனைகளை வழங்க தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியை தேர்ந்தெடுத்து குருவாக அமர்ந்து போதனைகளை வழங்கினார். எனவேதான் இந்தப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று வழங்கப்படுகிறது.

      ஈஷா யோகா மையத்திலும் ஒவ்வொரு வருடமும், தியானலிங்கத்தில் குரு பௌர்ணமி குரு பூஜையுடன் கொண்டாடப்படுகிறது.

      மேலும் ஆன்மீக சாதகர்கள் அனைவரும் அன்று தங்கள் குருவிற்கு குருபூஜை செய்து, அடுத்துவரும் 6 மாதங்களுக்கு (உள் வாங்கும் தன்மையுடையவை) ஆன்மீகப் பயிற்சிகள் தீவிரமாக செய்து வந்தால் அப்பயிற்சியின் பலன்கள் அடுத்த 6 மாதங்களில் (நிறைவடையும் தன்மையுடையவை) பலனளிக்கக் துவங்கும்.

Saturday, July 13, 2013

அங்கப் பிரதக்ஷணம் எதற்காக? ஆனந்தம்

      



      சிலர் கோவிலைச் சுற்றி, வலது புறமாக, சுடும் கட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக?

      பொதுவாக கோவிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் இடதிலிருந்து வலது பக்கமாக மூன்று முறையாவது தெய்வச்சிலை உள்ள கருவறையைச் சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர் மட்டும், வேண்டுதல்படி, நடப்பதற்குப் பதிலாக படுத்து உருண்டு கொண்டே சுற்றுவார்கள்.

      ஒரு சக்தி வடிவத்தை சுற்றி வரும்போது, தெய்வீக சக்தியை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. ஆனால் நாம் வாழும் இடத்தைப் பொறுத்து அது இரண்டு விதமாக உள்ளது. பூமத்திய ரேகைக்கு வட பகுதியில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், கருவறையைச் சுற்றி வலது புறமாகவும் (கடிகாரம் சுற்றும் திசையில்), பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் வாழ்பவர்கள் இடது புறமாகவும் சுற்ற வேண்டும். ஏன் இந்த வேறுபாடு என்றால்..

      இதை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும். பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் நீர்த் துளி அல்லது ஏதோ ஒரு பொருள் மேலிருந்து கீழ் வரும்போது, அந்தப் பொருள் சுற்றிக் கொண்டே கீழே விழுமானால், அது வலது புறமாகத்தான் சுற்றி விழும். குழாயைத் திருப்பினால் கூட நீர் வலதுபுறமாகவே சுற்றி விழுவதைப் பார்க்க முடியும். பூமத்திய ரேகைக்கு கீழே அதாவது தென் புறமுள்ள நாடுகளில் இது இடது பக்கம் நிகழும். சரியாக பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஊர்களில், இதை ஒரு சுற்றுலா அம்சமாக வைத்திருப்பார்கள். பூமத்திய ரேகைக்கு அந்தப்பக்கம் உள்ள குழாயைத் திருப்பினால் தண்ணீர் ஒரு திசையிலும் இந்தப்பக்கம் வந்து குழாயைத் திருப்பினால் தண்ணீர் வேறு திசையிலும் சுற்றி விழும்.
     
      எனவேதான் பூமத்திய ரேகைக்கு மேல்புறமுள்ள நம் நாட்டில் ஒரு சக்தி வடிவத்தை சுற்றும்போது வலது புறமாக சுற்றுகிறார்கள். இப்படிச் செய்யும்போது தெய்வீகத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாகிறது. ஆனால் ஏன் படுத்துக் கொண்டே சுற்றுகிறார்கள் என்றால்..

      அனைவராலும் ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு முழுமையாக தங்களை அர்ப்பணிக்க முடிவதில்லை. ஏதோ ஒரு செயல் மூலம்தான் தங்களை அர்ப்பணிக்க முடிகிறது. செயல் எந்த அளவு தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களால் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க முடிகிறது. அதனால்தான் மக்கள் இதுபோன்ற வழிகளை உருவாக்கிக் கொண்டார்கள். நடந்து சுற்றுவதற்குப் பதிலாக உருண்டு கொண்டே சுற்றுகிறார்கள்.

இப்படிச் சுற்றுவதால் அவர்களுக்கு ஏதாவது அதிகமாகக் கிடைக்குமா என்றால் அப்படி ஏதும் சொல்லமுடியாது. ஆனால் எதையாவது கஷ்டப்பட்டு செய்யும்போதுதான், மக்களுக்கு, எதையோ அர்ப்பணிக்கிறோம் என்ற எண்ணமும் மன நிறைவும் ஏற்படுகிறது.

      இப்படிச் செய்யும்போது, சக்தியை கிரகிப்பதற்கு ஏதுவாக, தங்களை அதிகமாக திறந்த நிலையில் வைத்துக் கொள்ள முடிகிறது.அதிக நேரம் அந்த சக்தி நிலை உள்ள இடத்தில் இருக்கமுடிகிறது. எனவேதான் உருண்டு கொண்டே கோவிலைச் சுற்றுகிறார்கள். அதுவும்கூட, கோவிலைச் சுற்றி வெளிப்புறமுள்ள கருங்கல் தரையில், சூரியனின் தகிக்கும் வெப்பத்தில் உருண்டு சுற்றி வருகிறார்கள்.

Monday, July 8, 2013

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே? ஆனந்தம்

      



      ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு ஒரு வாக்கியம் இருக்கே, அது எவ்வளவு உண்மை?

      பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்துப் பழகிவிட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்ணை முழுமையாக அருகிலிருந்து பார்க்கத் தவறி விட்டவர்களின் பக்குவமற்ற புலம்பல் இது.

      உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை. ஆண், பெண் என்று இருவரையும் வித்தியாசப்படுத்தப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு பேரும் இல்லாமல் குடும்பமோ, சமூகமோ, உலகமோ, எதுவுமே முழுமையடையாது.

      ஆனால், ஓர் ஆணால் உணர முடியாத சில நுட்பமான உணர்வுகளை ஒரு பெண்ணால் உணர முடியும். ஆண் தன்னுடைய புத்தியால் செலுத்தப்படுகிறான். பெண்ணோ தன்னுடைய உள்ளுணர்வால் செலுத்தப்படுகிறாள்.

      புத்தி என்பது வெளியிலிருந்து சேகரித்து எந்தத் தரத்தில் கிடைத்ததோ, அந்தத் தரத்தில்தான் செயல்படும். உள்ளுணர்வு வெளி அழுக்குகளால் அசிங்கப்படாதது. தூய்மையானது; புத்தியைவிட உயர்வானது. அதனால், பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

      உலகின் பல விஷயங்களை விஞ்ஞானப்பூர்வமாக பகுத்துப் புரிந்து கொள்ள ஆணுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவனுக்கு அருகிலேயே இருந்த பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது. புரிந்து கொள்ள முடியாததின் மீது இயல்பாகவே அச்சம் வரும்.

      அச்சத்தால் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க விடாமல், தன் முரட்டுத் தனத்தால் தாழ்த்தி வைத்தான். தன் உடல் வலுவைப் பிரயோகித்து, புத்தியின் தத்திரங்களைப் பயன்படுத்தி, அவளைத் தன் நிழலில் வைத்திருக்க வேண்டியதை எல்லாம் அவன் செய்து முடித்தான்.

      அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

      ஆவது நிச்சயமாக ஒரு பெண்ணால்தான், ஓர் உயிரைத் தன்னுள் வைத்து, உருவம் கொடுத்து இந்த உலகுக்கு உங்களைக் கொடுப்பவள் ஒரு பெண்தான்.

      ஆனால், அழிவதற்கும் அவளையே பொறுப்பாக்கிப் பார்க்கிறான் என்றால், அப்புறம் அந்த ஆணுடைய பங்களிப்புதான் என்ன?

      ஓர் ஆண் பெண்ணை மரியாதையுடன் உரிய மதிப்புடன் கையாளத் தெரியாவிட்டால், அவளால் அழிந்து போகக்கூடும்.

      ஆக்குவதோ, அழிப்பதோ ஏதோ ஒரு திறமை பெண்ணிடம் இருக்கிறதே, எல்லாவற்றையும் அவளிடமே ஒப்படைத்துவிட்டு ஒன்றுக்கும் உதவாதவனாகத்தானே ஆண் இருக்கிறான்?

      திறமையான ஆண்கள் நிச்சயம் இந்த வார்த்தைகளை அலட்சியம் செய்வார்கள்.

Saturday, July 6, 2013

பில்லிசூனியம் உண்மையா? ஆனந்தம்



     
      சித்து வேலைகளிலேயே மிக மோசமான வகைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் நிகழ்கின்றன. மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அது வெகு சொற்பம் மட்டுமே. நல்லது, கெட்டது என இரண்டு வகைகளிலும், உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதுதான் மிக அதிகம்.

      நம்மைச் சுற்றி இருக்கும் மக்களின் நோக்கங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதை 100% நாம் விரும்பிய வழியில் உருவாக்க இயலும்.
எனவே உங்கள் மனதை நேர்மறையான மந்திரவித்தையாக மாற்றிவிட்டால், மற்றவர்களுடைய பில்லிசூனியங்களை நீங்கள் புறக்கணித்துவிடலாம். ஆனால் உங்கள் மனமே பில்லிசூனியமாக இருந்தால், உங்களை அழிப்பதற்கு யாரோ ஒருவர் கொஞ்சம் கொளுத்திவிட்டால் போதும் அது சுலபமாகிவிடும்.

      மற்றவர்கள் உங்கள் மீது எந்த நோக்கத்தோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்றாலும், அவர்களுடைய நோக்கங்களை உங்களால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். கோடிக்கணக்கான மக்கள் உங்களை விரும்பும்படியாக சூழ்நிலையை உங்களால் உருவாக்க முடியும். ஒருவகையில் பார்த்தால், நீங்கள் அவர்களுடைய நோக்கங்களையும் கட்டுப்படுத்துகிறீர்கள், ஆனால் அது 100% சாத்தியமில்லை.

      உங்களுடைய சொந்த குடும்பமே கூட திடீரென்று உங்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். இதை நாம் தினசரி வாழ்க்கை சூழ்நிலையில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? எனவே மற்றவர்கள் உங்கள் மீது என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, முதலில் உங்கள் மனம் உங்களுக்குச் செய்யக் கூடிய கொடூரமான செயல்களைப் பற்றி பார்க்க வேண்டியது அவசியம்.

      உங்கள் மனதை நீங்கள் சரி செய்துவிட்டால், மற்றவர்களுடைய மந்திர வித்தைகள் – அவை நல்லவையோ அல்லது பில்லிசூனியங்களோ, உங்கள் மேல் அவை தாக்கம் ஏற்படுத்தாது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவை உங்கள் மேல் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறைவாக இருக்கலாம், ஆனால் அவற்றால் உங்கள் வாழ்க்கையின் பாதையை மாற்ற முடியாது.

      சித்து வேலைகள் செய்வது ஓர் விஞ்ஞானம். அது இன்றைய உலகில் பெரும்பாலும் தொலைந்தேவிட்டது. நாம் இதனை இழந்தது சரியல்ல. உண்மையில் சித்துவேலைகளை நேர்மறையாகவும் பயன்படுத்த முடியும். இந்த முறைகள் ஒருவருடைய சொந்த சக்திநிலைகளையோ அல்லது வெளிப்புற சக்திநிலைகளையோ குறிப்பிட்ட சில விஷயங்களைப் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தொழில்நுட்பம்.

      ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் இதனை துஷ்பிரயோகம் செய்துவிட்டனர். நேர்மறையான மந்திர வித்தைகளை விட, எதிர்மறையான பில்லிசூனிய வித்தைகள் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியவை. எனவே அதற்கு கிடைத்த ஆதரவினால், நிறைய பேர் மந்திர வித்தைகளை நேர்மைறையாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு முறையற்ற வகைகளில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

      ஒரு குறிப்பிட்ட திறமை உருவானது கெட்ட விஷயத்திற்காக இல்லை. அதைப் பயன்படுத்தும் கைகள்தான் அது நல்லதா, கெட்டதா என்பதை தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு திறமையும் நல்வாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படலாம் அல்லது மக்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம்.

      நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். சில நேரங்களில், சில விஷயங்கள் எதிர்மறையான நோக்கங்களோடு செய்யப்படுகின்றன, வேறு சில சமயங்களில் மிகவும் எதிர்மறையான விஷயங்கள் நேர்மறை நோக்கங்களோடு செயல்படுத்தப் படுகின்றன.

      விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனித குலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதங்கள், ஆனால் துர்திர்ஷ்டவசமாக, அவற்றைப் பயன்படுத்தத் துவங்கிய நூறு வருடங்களுக்குள், அவற்றை நமக்கு எதிராக திசை மாற்றிவிட்டோம். இதனால் மனித குலத்தின் பிழைப்புக்கு மட்டுமல்லாமல், இந்த பூமிக்கே அவை அச்சுறுத்தலாக மாறி நிற்கின்றன.

      நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில், நாம் உபயோகிக்கும் இந்த தொழில்நுட்ப விந்தைகளை நீங்கள் நேர்மறை மந்திரவித்தைகள் என்பீர்களா அல்லது எதிர்மறையான பில்லிசூனியங்கள் என்பீர்களா? உண்மையில் பார்த்தால், உங்களுக்கு எப்படி விருப்பமோ அவற்றை அப்படி அழைக்கலாம். அவை துவங்கும்போது நல்ல நோக்கங்களுடனே துவங்கப்பட்டிருக்கலாம் அல்லவா?

      அதே போல பில்லிசூனியம் என்று நீங்கள் அழைக்கும் விஷயங்களும் நல்ல நோக்கங்களுடன்தான் துவங்கின. ஆனால் மக்கள் அவற்றை பலவிதமான வழிகளில் துஷ்பிரயோகம் செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நிலையில் பில்லிசூனியத்தைச் செய்யத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாக இருப்பதால், அவை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

      அவர்களுடைய நேரத்தையும், சக்தியையும் உங்கள் மீது செலவழிக்கும் அளவுக்கு நீங்கள் அவ்வளவு பெரிய மனிதரா? நீங்கள் ஒரு சக்ரவர்த்தியாக இருந்தால், நம்மை யாரோ ஏதோ செய்துவிடுவார்கள் என்று நீங்கள் கவலைப்படலாம் அல்லது ஒரு தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்திருந்தால், இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படலாம்.

      அப்படி எதுவும் இல்லை என்கிறபோது நீங்கள் இவ்வளவு வருந்தத் தேவையில்லை. யாரும் தங்களுடைய நேரத்தை, சக்திகளை, பணத்தை உங்கள் மீது பில்லிசூனியம் வைப்பதற்காக பயன்படுத்தப் போவதில்லை. நீங்களே உங்கள் சொந்த மந்திரவித்தைகளை உங்களுக்குள் செய்வதுதான் நல்லது.