Friday, October 19, 2012

அறுபதாம் கல்யாணம் ஏன்? விளக்கம்! ஆனந்தம்


      நம் பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை , அந்த பருவத்தை பாலாவஸ்தா என்பார்கள். அப்போது குழந்தை செய்வதெல்லாம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் அவ்வளவு தான். அதற்கு மேல் அவன் ஏதும் செய்யத்தேவையில்லை.
      12 வயது நிறைவுற்றதும் அவனுக்கு பிரம்மோபதேசமும் அதன் பின் வித்தியாபியாசம் அதாவது கல்வி கற்பித்தலும் நடக்கும். பிரம்மோபதேசம் என்பது, இது எனது, எனதில்லை என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்திலும் பிரம்மனைக் காணக் கற்றுத் தருவது. இந்த தன்மை இல்லாத மனிதருக்கு கல்வி கற்பிக்கக்கூடாது. ஏனெனில் கல்வி என்பது மாபெரும் சக்தி. அவர், இவர், எனது, எனதில்லை, வேண்டும், வேண்டாம் என்று பிரித்துப் பார்க்கும் மனிதருக்கு சக்தியை கொடுத்தால் அவரால் பிரச்ச‌னை தான் வரும்.
      எனவே 12வயதில் பிரம்மோபதேசம் கொடுத்து, அதன் பின் 12ல் இருந்து 24 வயது வரை வித்தியாபியாசம் கொடுத்தார்கள். அவன் தன் வீட்டில் இல்லாமல் ஒரு குருவிடம் சென்று தங்கி அங்கேயே அனைத்தையும் கற்றுக்கொள்வான். அப்போது அவனுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆகியவை போதிக்கப்படும், இந்த நிலையை பிரம்மச்சரியம் என்பார்கள். 12 வருடம் குருவிடம் தேவையான கல்வி கற்று 24வது வயதில் தேவையான அறிவு பெற்றவராக இருப்பார்.
      இப்போது அவருக்கு ஆர்வம் இருக்கும் பட்சத்தில் பிரம்மச்சரிய நிலையில் இருந்து துறவு நிலைக்கு நேரடியாக சென்றுவிடலாம். அல்லது திருமணம் செய்து கொண்டு அடுத்த 24 ஆண்டுகள் இல்லற வாழ்கையில் ஈடுபடலாம்.
      அந்த 24 வருட தாம்பத்தியத்திற்கு பிறகு, அதாவது 48வது வயதில் குழந்தைகள் வளர்ந்து பெரியவராகி இருப்பார்கள். அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சன்னியாசம் எடுப்பார்கள். ஓரிடத்திற்கு சென்று ஆன்மீக சாதனை செய்து தன்னை உணர்ந்த நிலையில் திரும்பி வருவார்கள்.
      12 வருட‌ங்கள் தனித் தனியாக இருந்த கணவனும் மனைவியும் மீண்டும் இப்போது அவருடைய 60வது வயதில் ஒன்று சேருவார்கள்.
அவர்களுக்கு முதல் முறை திருமணம் நடந்த போது அவர்களுக்கு உடல் ஆர்வம் மிக முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது கணவனுடைய 60வது வயதில் அவர்களுக்கு உடல் ஆர்வத்தினால் ஒன்று சேரவில்லை. வேறு ஒரு ஆழமான தன்மையை உணர்ந்த நிலையில் ஒன்று சேருகிறார்கள்.
      இப்போது அவர்கள் தனியாக காட்டிற்க்கு சென்று வேறொரு தன்மையில் மீண்டும் ஒன்றாக வாழ விரும்புகிறார்கள். இந்த வாழ்க்கையை தான் வானபிரஸ்தா என்றனர். வானபிரஸ்தா செல்லும் முன் அவர்கள் ஏற்கனவே பிரிந்திருந்ததால், அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும் வ‌ழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்தது.
      ஆனால் இப்போது வீட்டில் சேர்ந்து இருந்து வாழ்ந்து கொண்டே 60வயதில் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொள்கின்றனர். இதில் ஒன்றும் அர்த்தமில்லை. வெறும் சடங்காகத்தான் இருக்கிறது. வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment