Showing posts with label துறவி. Show all posts
Showing posts with label துறவி. Show all posts

Sunday, June 10, 2012

இன்றைய இளைஞர்கள்? ஆனந்தம் குட்டிக் கதை!


      ஒரு சாலையில் இரு துறவிகள் ஒரு அட்டையை பிடித்துக்க்கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த அட்டையில், "கவனம், முடிவு வந்துவிட்டது, திரும்பிச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.
      அப்போது வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் அருகில், கிறீச்சிட்டு நின்றது. வண்டி முழுவதும் இளைஞர்கள். வண்டி ஓட்டி வந்த இளைஞன் வெளியே எட்டிப் பார்த்து. உங்களை மாதிரி சாமியார்களுக்கு நல்ல வார்த்தையே சொல்லத் தெரியாதே! எப்பப் பார்த்தாலும் கவனமாக இரு, அப்படிச்செய், இப்படிச்செய், நிதானமாக நட என ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்களே, உங்களோட ஒரே தலைவலி! என்று சொல்லிக்கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து மேலே சென்றான். சில நிமிடங்களில் அந்த வண்டி எதிலோ மோதி எங்கோ விழுந்த சப்தம் கேட்டது.
      அப்போது முதல் துறவி மற்ற துறவியிடம் மெதுவாகச் சொன்னார், "ம், பாலம் பழுதடைந்து விட்டது என்று மட்டும் நாம் சொல்லியிருக்கலாம்".

Sunday, October 30, 2011

சரியான தீர்வு யாரால்? ஆனந்தம்


      அரசியல்வாதிகளில் பலர் ஆன்மீகவாதிகளிடம் ஆலோசனை கேட்டு நடக்கிறார்களே, ஆன்மீகவாதிகளால் சமூகப்பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
      இந்த வாதிகளில் பெரும்பாலானோர் உண்மையில் வியாதிகள்! அவர்களால் பிரச்சனையை உருவாக்க முடியுமே தவிர, தீர்வு சொல்ல முடியாது. அரசியைல் பிரச்சனைகள், ச்மூகப்பிரச்சனைகள் மட்டுமல்ல ஆன்மீகப் பிரச்சனைகளைக் கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியாது.
      தங்கள் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கருத்துக்களைக் கோர்த்து, நல்ல கோட்பாடுகளின் அடிபடையில் நடப்பதாக நினைத்து அவர்கள் கொடுத்துவரும் ஆலோசனைகள் பிரச்சனைகளை தீவிரப் படுத்தியிருக்கின்றனவே தவிர தீர்த்துவைக்கவில்லை.
      சில பிரச்சனைகள் தீர்வு பெறாமலேயே தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றனவே ஏன்? அவற்றை தெளிவான கண்ணோட்டத்துடன் அனுகும் பக்குவம், அவற்றைக் கையாள்பவரிடம் இல்லை. அதுதான் விஷயம். அந்த பிரச்சனைகள் பூதகரமாக வளர்ந்திருப்பதற்க்கு அதுதான் காரணம்.
      "முன்பு அரசவைகளில் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கிய துறவிகளும் இந்த வகையை சார்ந்தவர்கள் தானோ?"
      இல்லை, இல்லை; தன்னை ஆன்மீகவாதி என அறிவித்துக்கொண்டு மரியாதை எதிர்பார்ப்பவர்கள் வேறு; ஆன்மீகத்திலேயே ஈடுபட்டிருப்பவர்கள் வேறு!
      ஆன்மீகப் பாதையில் தன்னை உணர்ந்து செல்பவர்களின் பார்வை மற்றவர்களைக் காட்டிலும் மிகத்தெளிவாக இருக்கும். வாழ்க்கை பற்றியும், மனித உறவுகளைப் பற்றியும் அவர்களுடைய கணிப்பு இன்னும் ஆழமாக, அனுபவப்பூர்வமாக இருக்கும்(ஏனென்றால் அவர்களுக்கென்று எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்பும் இருக்காது). எதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அவரால் பிரச்சனைகளை எல்லாக் கோணங்களில் இருந்தும் பாரபட்சமின்றி மிகத்தெளிவாக பார்க்க முடியும். சரியான தீர்வும் சொல்ல முடியும்.
      அதனால் தான் அரசவைகளில் முற்றும் துறந்த ஞானிகளின் ஆலோசனைகளுக்கு மதிப்பு இருந்தது. ஆடம்பர வாழ்வை எதிர்பார்த்து அவர்கள் அரண்மனைகளில் குடியேற‌வில்லை. அரிய ஞானம் கொண்டு அலோசனைகள் வழங்கவே மன்னனுடன் அவர்கள் வசித்தார்கள்.
      ஜனக மன்னன் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற போது, தன் குருவுடன் ஆசிரமக்குடிலுக்கு போகவே பிரியப்பட்டான். ஆனால் அவன் குரு அஷ்டவக்கிரர் அவனைத் தடுத்தார்.
      "உன் சுகங்களை விட்டுகொடுப்பது பற்றிய பிரச்சனை அல்ல இது. ஒரு ஞானவானின் ஆட்சி எப்படி இருக்கும் என்று மக்கள் அறிந்து, அனுபவித்து மகிழ வேண்டும். எனவே, நீ அரியணையிலேயே இரு!" என்று அவனைத்திருப்பி அரண்மனைக்கே அனுப்பினார்.
      ஞானிகளின் தீர்கமான அணுகுமுறை மன்னனுக்கும் மக்களுக்கும் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும்.
      மனிதப் பிறவியை பற்றிய பல அம்சங்களைத் தெரிந்து வைதிருப்பர் ஞானிகள். மனித உடல் எப்படி இயங்குகிறது, மனம் எப்படிச் செயல்படுகிறது. அவனுடைய சக்தியை எப்படி மேம்படுத்துவது என்று ஞானிகள் அறிவர். அவர்களுடைய சேவையை சமூகம் பயன் படுத்திக்கொள்ள முன்வந்தால், அது மிகச் சிறந்த பலன்களையே கொடுக்கும்.
      ஆனால் உண்மையான ஞானிகள் சமூகம் பற்றிய விசயங்களுக்கு வருவதே அபூர்வம். யாரோ ஓரிருவர் தான் அத்தி பூத்தார் போல் சமூகத்திற்கே வருவர். மிகுந்து ஞானிகள் தனித்தே இருப்பர். அவ்வாறு யாராவது நிஜமாக வந்து தீர்வு கொடுத்தால் அந்தத் தலைமுறை மிகுந்த பாக்கியம் செய்த தலைமுறையாகும். அதனால் தான் அந்தக் காலத்து மன்னர்கள் துறவிகளைத் தேடிப்பிடித்து தீர்வு கேட்க அழைத்து வருவர். அல்லது அவர்களது ஆசிரமம் இருக்கும் இடத்திற்க்கு சென்று தீர்வு கேட்பர்

      "ஒழுக்கம் உள்ளவர்களாலும், நல்லவர்களாலும் கூட பாரபட்சமின்றி தீர்வு தரமுடியுமே? இதற்க்கு ஆன்மீக ஞானம் அவசியமா?
      பிரச்சனை என்பதற்க்கு ஒரு தீய பகுதி இருக்கும். மிகந‌ல்லவர்களால் நல்லதைப் பார்க்க முடியுமே தவிர, தீயதை உண்ர்ந்து கொள்ள முடியாது.
      ஆஸ்திரேலியாவில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்ட ஒருவன் தன் மூன்று சகோதரிகளுடன் ஒரு பயணம் மேற்க்கொண்டான்.
      வழியில், அந்தப் பகுதியின் இளவரசன் எதிர்ப்பட்டான், "இந்த மூன்று அழகான பெண்களில் ஒருத்தியை என் மனைவியாக்கிக் கொள்கிறேன் சம்மதமா?" என்று கேட்டான் இளவரசன்.
      மூவரில் ஒருத்திக்கு மட்டும் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்தால் மற்றவர்கள் இருவர் வேதனைப் படுவார்கள் என நினைத்துக் கொண்டு, "மூவரையும் ஒரே தகுதி கொண்டவர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பதாய் இருக்கின்றேன்" என மறுத்துவிட்டான் ஆன்மீகவாதி.
      அப்படி எல்லா விததிலும் ஒரே தகுதி கொண்டா மூவரைத் தேடித் தேடி பல வருடங்களை வீண‌டித்தான். கடைசி வரை அந்த பெண்கள் கன்னிகளாகவே வாழ வேண்டியதாகி விட்டது.
      "எங்களில் ஒருத்திக்காகவாவது கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை உன் எண்னத்தினால் வீணாகப்போயிற்றே" என புலம்பி கண் கலங்கினர் சகோதரிகள்.
      மற்ற இரு சகோதரிகள் வேதனை கொள்வார்கள் என அவன் நினைத்து தீர்மானித்து அவன் எடுத்த 'நல்ல' முடிவால், யாருக்குமே சந்தோசம் கிடைக்காமல் போனது. ஒரு சரியான முடிவெடுக்க அவர்கள் நல்லவர்களாக மட்டுமிருந்தால் போதாது என்பதைச் சுட்டிக் காட்டும் கதை இது.
      அதே போல் தான் ஒழுக்கம் உள்ளவர்களும்! தங்கள் விதி முறைகளில் சிக்கிக் கொண்டு விட்டால், பிரச்சனைகளின் முழுப் பரிமாணத்தை அவர்களால் கவனிக்க முடியாது. அதற்க்கொரு தீர்வும் சொல்லமுடியாது. இரு வெவ்வேறு மனிதர்களின் ஒழுக்க நிலைகளின் பெரும்பாலும் சண்டைகளில் தான் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. நல்லவர்களிடமும், ஒழுக்கம் பற்றிய கவனம் கொண்டவர்களிடம் பாரபட்ச மற்ற தீர்வு என்பது சாத்தியமே இல்லை.
      ஞானிகளிடம் தான் அந்த அமுதம் கிடைக்கும்.

Wednesday, July 27, 2011

வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள்


      ஒரு ஜென் துறவியின் குடிலுக்குள் புகுந்துவிட்ட திருடனைச் சீடர்கள் பிடித்து இழுத்து வந்தனர். திருடுவதற்கு தங்கமோ, வெள்ளியோ, பணமோ எதுவும் கிடைக்காமல், ஏற்கெனவே அவன் வெறுப்பில் இருந்தான்.
      ''திருட வந்து வெறுங் கையுடன் போகாதே. இந்தா...'' என்று துறவி தன் அங்கியைக் கழற்றிக் கொடுத்தார். அவன் அதைப் பறித்துக்கொண்டு ஓடினான். தாங்கள் பிடித்து வந்தவனை துறவி தப்பிக்க விட்டுவிட்டாரே என்று சீடர்கள் வெகுண்டு பார்த்தனர்.
      துறவி வானத்தை அண்ணாந்து பார்த்தார். ''ஐயோ பாவம்! அந்த நிலவை மட்டும் என்னால் அவனுக்கு வழங்க முடிந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!'' என்றார்.
      வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள் எப்போதுமே மனிதனுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன. ஆனால், அவற்றைவிட அவனுக்கு சிறு சிறு விஷயங்களிலேயே ஆர்வம் எழுகிறது.
      அடுத்தவரை, உலகத்தை, ஏன் பிரபஞ்சத்தையே உங்களில் ஒரு பகுதியாக உணர முடியும். மனிதனுக்கு மட்டும்தான் இந்த உணர்வு வரமாகக் கிடைத்திருக்கிறது. இதை விழிப்பு உணர்வுடன் அனுபவிக்கத் தவறிவிட்டு, களவாடுவதில் கவனம்வைக்கிறோம். மனிதர்களிடம்
இருந்து மட்டுமல்ல, இந்தப் பூமியில் இருந்தும் களவாடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
      யார் அதிகமாகக் களவாடுகிறாரோ, அவரை வெற்றிகொண்டவராக அறிவித்து மகிழ்கிறோம். பிரபஞ்சத்தையே உங்களுடையதாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் தங்கம், வைரம் என்றெல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே உங்கள் கவனம் போகிறது. எல்லை அற்றதையே
உங்களுடையதாக்கிக்கொள்வதை விடுத்து, நிலப் பகுதியின் சிறு சதுரங்களைக் கையகப்படுத்திக்கொள்வதில் சந்தோஷப்படுகிறீர்கள்.
      இந்தப் பூமிக்கு வந்திருப்பது முழுமையாக வாழ்வதற்காக. வாழ்க்கையின் ஆழத்தையும் அர்த்தத்தையும் அனுபவித்து உணர்வதற்காக. இப்படி அற்பமான அம்சங்களில் ஆர்வத்தையும் கவனத்தையும் சிக்கவைத்துவிட்டு, அற்புதங்களையும் மகத்தான விஷயங்களையும் தவறவிடுகிறோம்.
      வாழ்க்கையை எந்த அளவு தீவிரத்துடன் நீங்கள் அணுகுகிறீர்கள் என்பதுதான் அதை மேன்மைமிக்கதாக, மகத்துவம்மிக்கதாக ஆக்க முடியும். இதைச் சீடர்களுக்கு அடையாளம் காட்டுவதுபோல் நிலவே இருக்க, சிறு பொருட்களில் திருடன் சந்தோஷப்பட்டதை ஜென் துறவி சுட்டிக்காட்டுகிறார்!

Sunday, June 12, 2011

ஆசை-துன்பம் ஆனந்தம்


      கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
      கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.
      துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
      ஆசையே துன்பத்திற்க்கு காரணம் என்று புத்தர் சொன்னது இது தானோ? அந்த கைத்தடியை, பற்றியதால் அவனே அவனுக்கு துன்பத்தை வரவழைத்துக் கொண்டான். இந்த சிந்தனை சாதாரண விசயமில்லை, ஆழ்ந்து யோசியுங்கள். பல துன்பங்கள் உங்களை விட்டு விலகும்.

Wednesday, June 1, 2011

விமர்சனம் ஆனந்தம்


      பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?
      நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.
      அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
      சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.
      எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்களின் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

Friday, February 25, 2011

ஜென் முறை ஆனந்தம்


      டோக்குசான் என்ற ஜென் துறவி மூலிகைகளை பறிப்பதற்காக மலைச்சாரல் ஒன்றில் சென்று கொண்டு இருந்தார். ஓரிடத்தில் ஒரு குன்றின் மீது சிறிய குடிசை இருப்பதைக் கண்டார். சுற்றிலும் நிறைய தூரத்திற்கு எந்த வீடும் இல்லை. அது போன்ற ஏகாந்தத்தில் குடிசை இருக்க வேண்டுமென்றால் அதில் வசிப்பது ஒரு துறவியாகத் தான் இருக்க வேண்டும் என்றெண்ணிய டோக்குசான் அந்தக் குடிசையின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்ததோ ஒரு மூதாட்டி.
      அந்த ஜென் துறவியைப் பார்த்தவுடன் மூதாட்டி பக்தியுடன் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து வரவேற்றாள். அவருக்கு முகமலர்ச்சியோடு வரவேற்ற அவளைக் கண்டு வியப்பு. "அம்மா நீங்கள் இந்த மலையில் இந்த ஏகாந்தத்தில் என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டார்.
      "ஐயா நான் இங்கு தனியாகத் தான் வசிக்கிறேன். இங்கு யாரும் வருவதில்லை. இங்கு காய்கறிகள் வளர்த்து அருகே உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறேன்" என்றாள் அந்த மூதாட்டி. விளையும் காய்கறிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் அவருக்கு விவரித்தாள். மலைச்சாரலில் விளையும் அந்தக் காய்கறிகள் சத்தானவை என்றும் அந்தக் கிராம மக்களுக்கு அந்த சத்தான காய்கறிகளை விற்பதில் தனக்கு ஒரு நிறைவிருக்கிறது என்றும் தெரிவித்தாள். அவருக்கும் அந்தக் காய்கறிகளைக் கொண்டு தான் சமைத்திருந்த எளிய உணவை அளித்து உபசரித்தாள். தன் வீட்டுக்கு வந்த அபூர்வமான அந்த விருந்தாளியைக் கண்டு அவளுக்கு பெருத்த மகிழ்ச்சி.
      அந்த மகிழ்ச்சியையும், அன்பையும் கவனித்த டோக்குசான் உணவருந்தியபடியே கேட்டார். "வேலை இல்லாத போது நீங்கள் எப்படிப் பொழுதைப் போக்குகிறீர்கள்?"
      "நான் சுவர்க் கோழிகளின் ஓசையையும், மழை, காற்றின் இசையையும், இரவில் நிலவழகையும் ரசித்து மகிழ்வேன். பொழுது தானாகப் போகிறது" என்றாள் அந்த மூதாட்டி.
      அந்த மூதாட்டியின் பதில் டோக்குசானை மனதினுள் பாராட்ட வைத்தது. அவர் மௌனமாகத் தலையாட்டினார்.
      "ஐயா நான் படிப்பறிவில்லாதவள். ஆன்மிக ஞானம் அறியாதவள். எனக்கு புத்தரின் அறிவுரைகளைப் போதிப்பீர்களா?" என்று மூதாட்டி மிகுந்த அடக்கத்துடன் கேட்டாள்.
      "தனக்கு சமமானவர்களுக்கு ஒரு மனிதன் போதிப்பதில்லை. மேலும் ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்ற டோக்குசான் அந்தப் பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு விடைபெற்றார்
      இன்றெல்லாம் வேலை என்பதே ஒரு கடுஞ்சொல் என்பது போல் ஆகிவிட்டது. சலிப்புடனும், அலுப்புடனும் அணுகும் சமாச்சாரமாகி விட்டது. அதுவும் அந்த மூதாட்டியைப் போல் வயோதிகத்தை எட்டும் போது வேலை பெருஞ்சுமையாகவே தோன்றி விடுகிறது. ஆனால் அந்த மூதாட்டி தன் வேலையை மகிழ்ச்சியாகச் செய்வதுடன் மீதியுள்ள பொழுதையும் நிறைவாகக் கழிக்க முடிந்ததை அந்த ஜென் துறவி கவனித்தார். பொழுதைப் போக்க உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கையில், நூறாயிரம் கேளிக்கைகளைத் தேடி ஈடுபட்டும் திருப்தியடையாமல் திணறிக் கொண்டிருக்கையில் சுவர்க்கோழிகளின் ஓசையயும், காற்றும், மழையும் உருவாக்கும் இசையையும், நிலவழகையும் ரசித்தபடி வாழும் அந்த மூதாட்டியின் ரசனையைப் பார்த்து ஜென் துறவி வியந்தார். இதுவல்லவா ஜென்னின் வாழ்க்கை முறை என்று நினைத்ததால் தான் டோக்குசான் "ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்றார்.
      ஜென்னில் இருக்கின்ற இடமோ, செய்கின்ற தொழிலோ முக்கியமில்லை. படித்து முடித்த புத்தகங்களின் எண்ணிக்கையோ, சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தின் அளவோ ஒரு அடையாளமில்லை. வாழ்கின்ற முறையில் தான் எல்லா சூட்சுமமும் இருக்கின்றது. ஜென் நிகழ்காலத்தில் முழுமையாக இருக்கச் சொல்கிறது. இருப்பவற்றை முழுமையாக ரசித்து ஆனந்தமாக வாழ் சொல்கிறது. கிடைத்தவற்றிற்கு நன்றியுடன் இருக்கச் சொல்கிறது. ஜென்னில் ஒப்பீடுகள் இல்லை. ஒப்பீடுகள் இல்லாத போது துக்கங்களும் இல்லை.
      நிகழ்காலத்தில் முழுமையாக, ஆனந்தமாக‌ வாழும் போது செய்கின்ற செயல்களில் தானாக மெருகு கூடி விடுகிறது. மனதில் தானாக நிறைவு ஏற்பட்டு வருகிறது. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்து ஆனந்தமாக வாழ முடிகிறது. ஜென்னில் தேநீர் அருந்துவதே ஒரு தியானத்தைப் போல செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் தேனீரை மிகவும் ரசித்து, ருசித்து, நன்றியுடன், மகிழ்ச்சியுடன், நிதானமாக, ஆனந்தமாக‌ அருந்த வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.
      இன்றைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்க முடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன. தேவைகள் அதிகப்பட அதிகப்பட அதற்காகத் தர வேண்டிய விலையும் அதிகப்படுகிறது. அதுவும் விரைவாக அந்தத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற வெறியும் இருந்து விட்டால் பின் வேறெதற்கும் வாழ்க்கையில் நேரமோ, மனமோ இருப்பதில்லை. அதில் உண்மையில் பலியாவது இது போன்ற சின்னச் சின்ன ரசனைகளும் ஆனந்தமும் தான்.
      இலக்குகள் மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஒவ்வொரு கணமும் வாழப்பட வேண்டுமேயொழிய ஓட்டப்படக் கூடாது. எல்லாம் இயந்திரகதியில் இருந்துவிடக்கூடாது. இலக்குகளைப் போலவே அவற்றை நோக்கிச் செல்லும் பயணத்தின் தரமும் முக்கியமே. முழுமனதோடும், ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்ய வேண்டிய செயல்களைச் செய்தோமானால் விரைவாகவும் தரமாகவும் சிறப்பாகவும் எதையும் செய்து முடிக்கவும் முடியும். இதையே ஜென் வலியுறுத்துகிறது.
      மேலும் ஜென் எளிய வாழ்க்கையையும், நிறைவான மனநிலையையும் மிக முக்கியமாகக் கருதுகிறது. ஜென்னிற்கு கூர்மையான அறிவு முக்கியமில்லை. பக்குவப்பட்ட மனம் முக்கியம். அந்த மூதாட்டிக்கு ஜென் என்றால் என்ன என்று தெரியாமலேயே ஜென் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். அதனால் அதை விளக்க வேண்டிய போதனைகளுக்கு அவசியமிருக்கவில்லை. வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்காகவே போதனைகளே அல்லாமல் போதனைகளைக் கற்பதற்காக வாழ்க்கை அல்ல.
      சுவர்க்கோழிகளின் ஓசையையும், காற்றையும், மழையையும், நிலவையும் யாரும் என்றும் அந்த மூதாட்டியிடமிருந்து பறித்து விட முடியாது. நம்மிடமிருந்து யாரும், எப்போதும் அபகரிக்க முடியாதவற்றின் மூலம் நம்மால் மகிழ்ச்சியடைய முடிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் என்றும் குறைவதில்லை அல்லவா? இதுவே ஜென் சொல்லும் மகிழ்வாக வாழ, வாழ்க்கையின் மிக உன்னதமான‌ சூட்சுமம்.
................வாழ்க வளமுடன்!

Thursday, January 27, 2011

வேரும் இறக்கையும் ஆனந்தம்:

ஓரு முறை பணக்கார கெளரவமான குடும்பத்தை சேர்ந்த ஓரு இளைஞன், ஓரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்தவன். எல்லா ஆசைகளிலும் ஈடுபட்டவன். அவனிடம் போதுமான பணம் இருந்தது. எனவே பிரச்சனை இல்லை.
        ஆனால் பிறகு அவனுக்கு சலித்து விட்டது. காமத்துடன், பெண்களுடன், மதுவுடன் சலித்துவிட்டது. அவன் ஜென்குருவிடம் வந்து, எனக்கு உலகம் சலித்து போய்விட்டது. நான் யார் என்பதை நான் அறிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா என கேட்டான்.
        தெரடர்ந்து அந்த இளைஞன் ஆனால் நீங்கள் ஏதும் சொல்வதற்க்கு முன்னால் நான் என்னைப் பற்றி ஓன்றை சொல்லி விடுகிறேன். என்னால் முடிவெடுக்க இயலாது. என்னால் எதையும் நீண்டகாலம் செய்ய முடியாது. எனவே நீங்கள் எனக்கு ஏதாவது முறையை கொடுத்தால் அல்லது என்னை தியானிக்கும் படி கூறினால் நான் ஓரு சில நாட்கள் செய்யக் கூடும். அதன் பின் நான் உலகில் ஓன்றுமில்லை என நன்றாக தெரிந்திருந்தும், அங்கு துன்பம், மரணம் மட்டுமே காத்திருக்கிறது என நன்றாக தெரிந்திருந்தாலும், தப்பித்துக் கொள்வேன். இதுதான் என் மனதின் வழி. என்னால் தொடர்ந்து செய்யமுடியாது, என்னால் எந்த காரியத்திலும் ஆழ்ந்து ஈடுபட முடியாது, எனவே நீங்கள் எதையாவது தேர்ந்தெடுப்பதற்க்கு முன், இதனை நினைவில் கொள்ளுங்கள். எனக் கூறினான்.
        குரு, நீ ஆழமாக ஈடுபடாவிட்டால் பிறகு அது மிகவும் கடினம். ஏனெனில் நீ கடந்த காலத்தில் செய்த அனைத்தையும் அழிப்பதற்க்கு நீண்ட முயற்சி தேவைப்படும். நீ பின்புறமாக பயணிக்க வேண்டும். அது திரும்பி செல்லுதலாக இருக்கும். நீ புதிதாக, இளமையாக, பிறந்த கணத்திற்கு செல்ல வேண்டும். அந்த புத்துணர்வை மீண்டும் அடைய வேண்டும். அது முன்னால் செல்வதல்ல, நீ பின்னால் செல்ல வேண்டும். திரும்பவும் குழந்தையாக வேண்டும். ஆனால் நீ என்னால் எதிலும் ஆழமாக ஈடுபட முடியாது எனக் கூறினால் சில நாட்களுக்குள் நீ தப்பி சென்று விடுவாய். அது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான் உன்னை ஓரு கேள்வி கேட்கிறேன், எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதையாவது செய்ததுண்டா?  
        இளைஞன் சிந்தித்து பார்த்துவிட்டு, ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். அது மட்டுமே என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவை அனைத்தும் வீழ்ந்து விட்டன. சதுரங்கம் மட்டுமே இன்னும் என்னுடன் உள்ளது. அதன்மூலம் நான் எப்படியோ என்னுடைய நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன், எனக் கூறினான்.
        குரு அப்படியென்றால் ஏதாவது செய்யலாம். நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் பணிரெண்டு வருடங்களாக அவர் ஓரே அறையில் தியானித்துக் கொண்டிருந்தார். அவர் உலகம், சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.
        குரு அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன். ஏனெனில் நான் தியானதன்மையுள்ள ஓரு துறவி, பணிரெண்டு வருடங்களாக தியானித்துக் கொண்டிருக்கும் ஓருவர், ஓரு சாதாரண இளைஞனிடம் தோற்றுப்போவதை விரும்பமாட்டேன். ஆனால் நீ என்னுடைய கையால் இறந்தால் பிறகு நீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய். எனவே கவலைப் படாதே, எனக் கூறினார்.  
        இளைஞன் சிறிது சங்கடமடைந்தான். பிறகு குரு அவனிடம் திரும்பி, இதோ பார், நீ சதுரங்கத்துள் மூழ்கி விடுவாய் என நீ கூறியுள்ளாய். எனவே இப்போது முழுமையாக முழ்கிவிடு – ஏனெனில் இது வாழ்வா சாவா என்பதற்க்கான கேள்வி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். நினைவில் கொள். ஆனால் நான் உனக்கு சொர்க்கத்தை பற்றி உறுதியளிக்க முடியாது. அந்த துறவி எப்படியிருந்தாலும் போய்விடுவார். ஆனால் நான் உனக்கு எந்த சொர்க்கத்தைப் பற்றியும் உறுதியளிக்க முடியாது. நீ இறந்தால் நரகம்தான்.- உடனடியாக நீ ஏழாவது நரகம் சென்று விடுவாய் எனக் கூறினார்.
        ஓரு நொடி இளைஞன் தப்பி செல்ல நினைத்தான். இது ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது, இதற்காக அவன் இங்கு வரவில்லை. ஆனால் பிறகு அது கெளரவ குறைச்சலாக தெரிந்தது. அவன் ஓரு சாமுராய், ஓரு வீரனின் மகன். மரணத்தின் காரணமாக தப்பிச் செல்வது அவன் இரத்தத்தில் இல்லை. எனவே அவன் சரி எனக் கூறினான்.     
        விளையாட்டு தொடங்கியது. இளைஞன் வேகமான காற்றினால் ஆடும் இலையைப் போல நடுங்கத் தொடங்கினான். முழு உடலும் நடுங்கியது. அவனுக்கு வியர்க்க, விறுவிறுக்க தொடங்கியது. அவனுக்கு தலைமுதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?
        சிந்தனை நின்றுவிட்டது. ஏனெனில் இப்படிப் பட்ட ஓரு அவசரத்தில் நீ சிந்திக்க முடியாது. சிந்தனை ஓய்வு நேரத்திற்கு உரியது. எந்த பிரச்னையும் இல்லாத போது நீ சிந்திக்கலாம். உண்மையிலேயே ஓரு பிரச்னை எழும்போது சிந்தனை நின்றுவிடுகிறது. ஏனெனில் மனதிற்கு நேரம் தேவை. அபாயம் உள்ளபோது நேரம் இருப்பதில்லை. உடனடியாக நீ ஏதாவது செய்தாக வேண்டும்.
        ஓவ்வொரு நொடியும் இறப்பு அருகில் வந்து கொண்டிருக்கிறது. துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், தனது சாவு நிச்சயம் என நினைத்துக் கொண்டான். ஆனால் எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான். எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் இறப்பு காத்திருக்கிறது என்பதையும் மறந்து விட்டான். ஏனெனில் மரணம் கூட ஓரு எண்ணமே. அவன் மரணத்தை மறந்து விட்டான். அவன் வாழ்க்கையை பற்றி மறந்துவிட்டான். அவன் விளையாட்டின் ஓரு பகுதியாகி விட்டான். ஆட்கொள்ளப் பட்டு அதில் முழுமையாக முழ்கி விட்டான்.  
         போக, போக மனம் முழுமையாக மறைய, மறைய அவன் அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அந்த நொடி மட்டுமே இருந்தது. நிகழ்காலம் மட்டுமே இருந்ததால் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. உடல் சரியாகி விட்டது, நடுக்கம் நின்றுவிட்டது. வியர்வை ஆவியாகி விட்டது. லேசானவனாக, இறக்கை போல எடையற்றவனாக உணர்ந்தான். வியர்வை கூட உதவியது. அவன் எடையற்றவனானான். அவனுடைய முழு உடலும் பறந்துவிடலாம் போல இருந்தது. அவனுடைய மனம் இல்லை. பார்வை தெளிவடைந்தது. மிகவும் தெளிவடைந்தது. அவனால் முன்னால் பார்க்க முடிந்தது. ஐந்து நகர்தல் முன்பே பார்க்க முடிந்தது. அவன் இதுவரை இவ்வளவு அழகாக விளையாடியதேயில்லை. மற்றவரின் விளையாட்டு குலையத் தொடங்கியது. ஓரு சில நிமிடங்களில் துறவி தோற்றுவிடுவார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது.
        அப்போது திடீரென அவனுடைய கண்கள் தெளிவாக இருந்த போது, கண்ணாடி போல பார்வை கச்சிதமாக, ஆழமாக இருந்தபோது, அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பணிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது.
        பணிரெண்டு வருட எளிமை – அவர் மிகவும் தூய்மையடைந்திருந்தார். ஆசைகளற்று, எண்ணங்களற்று, இலக்கற்று, காரணமற்று இருந்தார். அவர் எவ்வளவு வெகுளியாக இருக்கமுடியுமோ அவ்வளவு வெகுளியாக இருந்தார்......ஓரு குழந்தை கூட அவ்வளவு வெகுளியாக இல்லை. அவருடைய அழகிய முகம், அவருடைய தெளிந்த வான்நீலம் கொண்ட கண்கள்.......இந்த இளைஞன் அவரிடம் கருணை கொண்டான். இப்போதோ, பிறகோ அவருடைய தலை வெட்டப்படும். அவன் இந்த கருணையை உணர்ந்த அந்த நொடியில், தெரியாத கதவுகள் திறந்தன. தெரியவே தெரியாத ஏதோ ஓன்று அவனுடைய இதயத்தை நிரப்பத் தொடங்கியது. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவனுடைய உள்ளிருப்பு முழுவதிலும் மலர்கள் கொட்டத் தொடங்கின. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவன் இதுவரை இந்த பரவசத்தை, இந்த அழகை, இந்த ஆசீர்வாதத்தை அறிந்ததேயில்லை.
        பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. என்னிடம் மதிப்புக்குரியது ஏதுமில்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்
       இந்த துறவி ஏற்கனவே சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் செழிப்பாக இருக்கிறார். அவருடைய தலையை வெட்ட வேண்டிய தேவை இல்லை. “உன்னுடைய தலை வெட்டப் படும்” என குரு கூறிய போது அவர் கவலைப் படவே இல்லை. ஓரு எண்ணம் கூட அவர் மனதில் உதயமாகவே இல்லை. தேர்ந்தெடுக்கும் கேள்வியே இல்லை.- குரு இது இப்படித்தான் எனக் கூறினால் அது சரி. துறவி அவருடைய முழு இதயத்துடன் “சரி“ எனக் கூறிவிட்டார். அதனால்தான் வியர்வையோ, நடுக்கமோ இல்லை. துறவி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார். இறப்பு ஓரு பிரச்சனையே அல்ல.
        குரு நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.     
        இரண்டு அடிப்படையான விஷயங்களும் நடந்து விட்டன, தியானம் மற்றும் கருணை. இவை இரண்டையும் புத்தர் அடிப்படையானவை எனக் கூறியுள்ளார். பிரக்ஞை, கருணை. தியானம் மற்றும் கருணை.
        இளைஞன் எனக்கு விளக்கமளியுங்கள் எனக் கேட்டான். எனக்கு தெரியாத ஏதோ ஓன்று நடந்துள்ளது. நான் ஏற்கனவே நிலைமாற்றம் அடைந்துவிட்டேன். நான் ஓரு சில மணி நேரங்களுக்கு முன்னால் உங்களிடம் வந்த அதே இளைஞன் அல்ல. அந்த மனிதன் ஏற்கனவே இறந்துவிட்டான். ஏதோ ஓன்று நடந்தது. நீங்கள் அதிசயம் நிகழ்த்தி விட்டீர்கள். எனக் கூறினான்.
        குரு, இறப்பு மிக விரைவில் நேரிடக்கூடியதாக இருந்ததால், உன்னால் சிந்தனை செய்ய முடியவில்லை. எண்ணங்கள் நின்றுவிட்டன. இறப்பு மிகவும் பக்கத்தில் இருந்ததால் சிந்தனை இயலாத காரியமாகி விட்டது. இறப்பு மிக அருகில் இருந்ததால் உனக்கும் இறப்புக்கும் இடையே இடைவெளி இல்லை. எண்ணங்கள் நகர இடம் தேவை. இடம் இல்லை, எனவே சிந்தனை நின்றுவிட்டது. தியானம் தன்னிச்சையாக நிகழ்ந்தது. ஆனால் அது போதுமானதல்ல. ஏனெனில் அபாயத்தில் நடைபெறும் இந்த வகையான தியானம் தொலைந்து விடும். அபாயம் போனவுடன் தியானமும் போய்விடும். எனவே நான் சதுரங்க அட்டையை எறிய முடியாது. நான் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக் கூறினார்.
        உண்மையிலேயே தியானம் நிகழ்ந்தால் காரணம் என்னவாக இருந்தாலும் கருணை பின் தொடர வேண்டும். தியானத்தின் மலர்ச்சி கருணை. கருணை வரவில்லை எனில் உனது தியானம் ஏதோ ஓரு இடத்தில் தவறாகவே உள்ளது.
        பிறகு நான் உனது முகத்தை பார்த்தேன். நீ பரவசத்தில் திளைத்திருந்தாய். உன்னுடைய கண்கள் புத்தரைப் போல இருந்தன. நீ துறவியை பார்த்து இந்த துறவிக்காக என்னை தியாகம் செய்வது சிறந்தது. இந்த துறவி என்னை விட மதிப்பு வாய்ந்தவர். என உணர்ந்து நினைத்துக் கொண்டாய்.  
        இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக உன்னை தியாகம் செய்யும் பொழுது அது அன்பு. நீ வழியாகவும், மற்றவர் குறிக்கோளாகவும் ஆகும்போது அது அன்பு. நீ குறிக்கோளாகவும், மற்றவர் வழியாகவும் ஆகும்போது அது காமஇச்சை. காமஇச்சை எப்போதும் தந்திரமானது. அன்பு எப்போதும் கருணை மயமானது.
        பிறகு நான் உனது கண்களில் கருணை எழுவதை கண்டேன். பிறகு நீ தோற்றுப் போவதற்க்காகவே காய்களை தவறாக நகர்த்தினாய். எனவே நீ கொல்லப்பட்டு இந்த துறவி காப்பாற்றப்படுவார். அந்த வினாடியில் நான் சதுரங்க அட்டையை கவிழ்த்தாக வேண்டும். நீ வெற்றி பெற்றுவிட்டாய். இப்போது நீ இங்கே இருக்கலாம். நான் உனக்கு தியானம் கருணை இரண்டையும் கற்றுக் கொடுத்துவிட்டேன். இப்போது இந்த வழித் தடங்களை பின் தொடர். அவை உனது தன்னிச்சையான நிலையாகட்டும். – சூழ்நிலையை பொறுத்தோ, எந்த அபாயத்தையும் சார்ந்தோ அல்ல. அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்.
        இந்த கதையை உனக்குள் சுமந்து கொள். உனது இதயத்தில் சுமந்திரு. அது உனது இதயத்தின் துடிப்பாகட்டும். நீ தியானத்தில் வேர் கொண்டு கருணையின் இறக்கைகளை கொண்டிருப்பாய். அதனால்தான் நான் உனக்கு இரண்டு விஷயங்களை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறுகிறேன். இந்த பூமியில் வேர்களும் அந்த சொர்க்கத்தில் இறக்கைகளும். தியானம் இந்த பூமி, இது இப்போது இங்கே, இந்த நொடியில் நீ உனது வேர்களைப் பரப்பலாம் அதனைச் செய். வேர்கள் இருக்குமானால் உனது இறக்கைகள் உயர்ந்த வானத்தை அடையும். கருணை என்பது வானம், தியானம் என்பது பூமி. தியானமும், கருணையும் சந்திக்கும்பொழுது ஓரு ஞானி பிறக்கிறார்.
        தியானத்திற்குள் மிக மிக ஆழமாக செல், அப்போதுதான் நீ கருணையில் மிக மிக உயரமாக செல்லமுடியும். எவ்வளவு ஆழமாக மரத்தின் வேர் இருக்கிறதோ, அந்த அளவிற்கு உயரமான சிகரங்களை மரம் அடையும். நீ மரத்தை பார்க்கமுடியும், நீ வேர்களை பார்க்க இயலாது, ஆனால் அவை எப்போதும் ஓரே விகிதத்திலேயே இருக்கும். மரம் வானத்தை அடைந்தால் வேர்கள் கண்டிப்பாக பூமியின் இறுதிவரைச் சென்றிருக்கும். விகிதாச்சாரம் ஓன்றே. உன்னுடைய தியானம் எவ்வளவு ஆழமாக உள்ளதோ, அதே ஆழத்தை உனது கருணையும் கொண்டிருக்கும். எனவே கருணைதான் அளவுகோல். உன்னிடம் கருணை இல்லை, ஆனால் நீ தியானத்தன்மையுடன் இருப்பதாக நீ நினைத்துகொண்டிருந்தால் பிறகு நீ உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய். கருணை கண்டிப்பாக நடைபெறவேண்டும், ஏனெனில் அதுவே மரத்தின் மலர்தல்.
        தியானம் கருணையை அடைவதற்குரிய வழிமுறை. கருணைதான் வாழும்வழி. ..................................ஓஷோ

Thursday, January 6, 2011

மனநிலை ஆனந்தம்

        ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு துறவி மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த துறவி அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
        அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி இறங்கி, "சுவாமி, உங்களது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றான்.
        அந்த துறவி தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள்,என்றான்.
        அரசன், "நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது தவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன். அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்."  என்றான்.
        இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான்.
        ஆனால் அந்த துறவியோ எழுந்து நின்று, "போகலாம்" எனக் கூறுகிறார். 
        இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், "நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில் இருக்கும் சுகங்களை அனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியே அல்ல." என அரசன் மனம் நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து. வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள்........ அப்போது தான் அவர் ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் அந்த துறவி தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.
        ஆனால் அந்த துற‌வி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல வேலையாட்களை அமர்த்தி துறவியை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் அந்தத் துறவி தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தார். என்ன வகையான துறவி இவர்? அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.
        அரசன், "கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்." என்று நினைத்தான்.
        ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?
        ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.
        துறவியோ, நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.
        நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் இவ்வளவு காலமாக இந்த அரண்மனை சுகத்தை அனுபவிக்கும் துறவியாகிய‌ உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?
        என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில் எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் வர வேண்டும், என்றார் துறவி.
        இருவரும் பல மைல் தாண்டி சென்று கொண்டிருந்தனர். ஒரு ந‌தியை கடந்தனர். கரையை கடந்தவுடன் துறவி, "நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா" என்றார்.
        அரசன், "என்னால் எப்படி தொடர்ந்து வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்....... ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு தொடர்ந்து வர முடியும்?" என்றான்.
        துறவியோ, வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். நான் அரண்மனையில் எவ்வளவு ஆனந்தத்தோடு இருந்தேனோ அதே ஆனந்தத்தோடு மரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில் இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனக்கு எல்லாம் ஒரே நிலைதான். என்றார்.
        தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் துறவியின் காலில் விழுந்து, இப்படி நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான். நீங்க‌ள் மீண்டும் என் அர‌ண்ம‌னைக்கே வ‌ர‌வேண்டும் என்றான்.
        துறவியோ, அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றி விட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னை போகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாக தேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.
       ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.
       அந்த துறவியோ, நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும். என்றார். உன் தூக்க‌ம், நிம்மதி போய்விடும். ஆகவே உன் மீது கருணை கொண்டு நான் வரப்போவதில்லை, என் வழியே போகவிடு என்று கூறிவிட்டு போய் விட்டார்........ எந்த மனநிலையிலும்  நிலையிலும் ஆனந்தமாக வாழ்பவர்களே.... உயிர்ப்போடு வாழ்பவர்கள்.