Monday, July 22, 2013

குரு பெளர்ணமி என்றழைப்பது ஏன்? ஆனந்தம்

      



      ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமியை குரு பௌர்ணமி என்று அழைக்கிறார்கள். அது ஏன்? குரு பௌர்ணமிக்கான சிறப்பு என்ன?

சத்குரு:

      மனித உடல் என்பது மண்ணைத் தவிர வேறு ஏதுமில்லை. எனவே இந்த பூமியின் இயல்பு, இந்த பூமியின் மனப்பாங்கு போன்றவை மாறும்போது அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழ்கின்றன. பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜுன் வரை – தை முதல் ஆனி வரை) உத்திராயணம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜுலை முதல் டிசம்பர் வரை – ஆடி முதல் மார்கழி வரை) தக்ஷிணாயணம் என்கிறோம்.

      சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
உத்திராயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (தை மாதம்) “தன்ய பௌர்ணமி” என அழைக்கிறோம். தக்ஷிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (ஆடி மாதம்) “குரு பௌர்ணமி” என்கிறோம். இப்பௌர்ணமி ஜுலை மாதத்தில் ஏற்படும். தட்சிணாயன காலமான (ஜுலையிலிருந்து டிசம்பர் வரை) ஆறு மாதங்கள் ‘உள்வாங்கிக் கொள்ளும்‘ தன்மையுடையதாகவும், உத்திராயண காலமான (ஜனவரி முதல் ஜுன் வரை) ஆறு மாதங்கள் ‘நிறைவடையும்‘ தன்மையுடையதாகவும் உள்ளன.

      சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை, அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.

      லிங்கபைரவி தேவியின் கண்கள் கூட ஒவ்வொரு 6 மாதத்திற்கும் மாறும். ஜனவரியிலிருந்து ஜுன் வரை உத்திராயணத்தில் தேவியின் கண்கள் தீப்பொறியாகவும், ஜுலையிலிருந்து டிசம்பர் வரை தட்சிணாயனத்தில் அவள் கண்கள் சாந்தமாகவும் இருக்கும். தேவியின் சக்தியும் அதற்கேற்றாற் போல மாறும். இதனாலேயே இந்தியாவில் பெண்தன்மைக்கு உண்டான கொண்டாட்டங்கள் அனைத்தும் தட்சிணாயனத்திலேயே தொடங்கும்.

      உத்திராயணத்தில், ஜனவரியிலிருந்து ஜுன் வரை இந்த பூமி ஆண்தன்மை வாய்ந்ததாக, நிறைவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். அடுத்த ஆறு மாதங்கள் ஜுலையிலிருந்து டிசம்பர் வரை, தட்சிணாயனத்தில் பெண்தன்மை வாய்ந்ததாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. எனவேதான் சிவன் தன்னுடைய போதனைகளை வழங்க தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியை தேர்ந்தெடுத்து குருவாக அமர்ந்து போதனைகளை வழங்கினார். எனவேதான் இந்தப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று வழங்கப்படுகிறது.

      ஈஷா யோகா மையத்திலும் ஒவ்வொரு வருடமும், தியானலிங்கத்தில் குரு பௌர்ணமி குரு பூஜையுடன் கொண்டாடப்படுகிறது.

      மேலும் ஆன்மீக சாதகர்கள் அனைவரும் அன்று தங்கள் குருவிற்கு குருபூஜை செய்து, அடுத்துவரும் 6 மாதங்களுக்கு (உள் வாங்கும் தன்மையுடையவை) ஆன்மீகப் பயிற்சிகள் தீவிரமாக செய்து வந்தால் அப்பயிற்சியின் பலன்கள் அடுத்த 6 மாதங்களில் (நிறைவடையும் தன்மையுடையவை) பலனளிக்கக் துவங்கும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்திற்கு நன்றிகள்...

Post a Comment