சிலர் கோவிலைச் சுற்றி, வலது புறமாக, சுடும் கட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக?
பொதுவாக கோவிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் இடதிலிருந்து வலது பக்கமாக மூன்று முறையாவது தெய்வச்சிலை உள்ள கருவறையைச் சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர் மட்டும், வேண்டுதல்படி, நடப்பதற்குப் பதிலாக படுத்து உருண்டு கொண்டே சுற்றுவார்கள்.
ஒரு சக்தி வடிவத்தை சுற்றி வரும்போது, தெய்வீக சக்தியை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. ஆனால் நாம் வாழும் இடத்தைப் பொறுத்து அது இரண்டு விதமாக உள்ளது. பூமத்திய ரேகைக்கு வட பகுதியில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், கருவறையைச் சுற்றி வலது புறமாகவும் (கடிகாரம் சுற்றும் திசையில்), பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் வாழ்பவர்கள் இடது புறமாகவும் சுற்ற வேண்டும். ஏன் இந்த வேறுபாடு என்றால்..
இதை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும். பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் நீர்த் துளி அல்லது ஏதோ ஒரு பொருள் மேலிருந்து கீழ் வரும்போது, அந்தப் பொருள் சுற்றிக் கொண்டே கீழே விழுமானால், அது வலது புறமாகத்தான் சுற்றி விழும். குழாயைத் திருப்பினால் கூட நீர் வலதுபுறமாகவே சுற்றி விழுவதைப் பார்க்க முடியும். பூமத்திய ரேகைக்கு கீழே அதாவது தென் புறமுள்ள நாடுகளில் இது இடது பக்கம் நிகழும். சரியாக பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஊர்களில், இதை ஒரு சுற்றுலா அம்சமாக வைத்திருப்பார்கள். பூமத்திய ரேகைக்கு அந்தப்பக்கம் உள்ள குழாயைத் திருப்பினால் தண்ணீர் ஒரு திசையிலும் இந்தப்பக்கம் வந்து குழாயைத் திருப்பினால் தண்ணீர் வேறு திசையிலும் சுற்றி விழும்.
எனவேதான் பூமத்திய ரேகைக்கு மேல்புறமுள்ள நம் நாட்டில் ஒரு சக்தி வடிவத்தை சுற்றும்போது வலது புறமாக சுற்றுகிறார்கள். இப்படிச் செய்யும்போது தெய்வீகத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாகிறது. ஆனால் ஏன் படுத்துக் கொண்டே சுற்றுகிறார்கள் என்றால்..
அனைவராலும் ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு முழுமையாக தங்களை அர்ப்பணிக்க முடிவதில்லை. ஏதோ ஒரு செயல் மூலம்தான் தங்களை அர்ப்பணிக்க முடிகிறது. செயல் எந்த அளவு தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களால் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க முடிகிறது. அதனால்தான் மக்கள் இதுபோன்ற வழிகளை உருவாக்கிக் கொண்டார்கள். நடந்து சுற்றுவதற்குப் பதிலாக உருண்டு கொண்டே சுற்றுகிறார்கள்.
இப்படிச் சுற்றுவதால் அவர்களுக்கு ஏதாவது அதிகமாகக் கிடைக்குமா என்றால் அப்படி ஏதும் சொல்லமுடியாது. ஆனால் எதையாவது கஷ்டப்பட்டு செய்யும்போதுதான், மக்களுக்கு, எதையோ அர்ப்பணிக்கிறோம் என்ற எண்ணமும் மன நிறைவும் ஏற்படுகிறது.
இப்படிச் செய்யும்போது, சக்தியை கிரகிப்பதற்கு ஏதுவாக, தங்களை அதிகமாக திறந்த நிலையில் வைத்துக் கொள்ள முடிகிறது.அதிக நேரம் அந்த சக்தி நிலை உள்ள இடத்தில் இருக்கமுடிகிறது. எனவேதான் உருண்டு கொண்டே கோவிலைச் சுற்றுகிறார்கள். அதுவும்கூட, கோவிலைச் சுற்றி வெளிப்புறமுள்ள கருங்கல் தரையில், சூரியனின் தகிக்கும் வெப்பத்தில் உருண்டு சுற்றி வருகிறார்கள்.
3 comments:
இது வரை நான் அறியாத அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம்....நன்றி!
நல்ல விளக்கம் ஐயா... நன்றி...
ஆன்மீக தகவல் அற்புதமானது.திருப்பதி சென்றால் அங்கபிரதட்சனம் செய்வது எனது வழக்கம்.1985ல் இருந்து எனது வழக்கமாகக் கொண்டு உள்ளேன்.
தங்களது தகவல் அர்த்தமுள்ளதாக உள்ளது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment