பள்ளியில் தோள் கொடுத்தவன், கல்லூரி வாழ்க்கையை கலகலப்பாக்கியவன், திருமண மேடையில் கைக்குட்டையால் முகம் துடைத்தவன், எல்லோருக்கும் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருப்பவன் எப்போதும் ஒரு நண்பன்தான். ஆனால், ஆயிரம்பேர் படிக்கும் கல்லூரியில், நாம் ஏன் ஒரு சிலரைமட்டும் நண்பர்களாக ஆக்கிக் கொண்டுள்ளோம்?! நட்பு பற்றி சத்குருவின் சில வரிகள்…
சத்குரு:
உங்களைப் போலவே எண்ணுகிற, உணர்கிற, உங்களைப் புரிந்துகொள்கிற, உங்களைப்போல விருப்பங்களைக் கொண்டவர்களைத்தான் நண்பர்கள் என்கிறீர்கள்!
எனவே எப்போதும் உங்கள் முட்டாள் தனங்களை ஆதரிப்பவர்களைத்தான் தேடிச் செல்கிறீர்கள். அந்த விதத்தில் பார்த்தால் ஒரு குருவோடு இருப்பது வித்தியாசமானது. அவர் உங்கள் நண்பர். ஆனால், உங்கள் அகங்காரத்தைக் கீழே இழுத்து அதன் மீது நடனமாடுபவர். சாதாரணமாக அகங்காரத்தைச் சீண்டினால், உங்கள் நண்பர் எதிரியாகி விடுவார். நாம் செய்வது என்னவென்றால் உங்கள் அகங்காரத்தின் மீது நடனமாடினாலும் பரவாயில்லை, நீ என் நண்பன் என்ற நிலையை ஏற்படுத்துவது.
நீங்கள் யாருக்காவது நண்பர் எனில் அவருக்குப் பிடித்தவராக இருக்க எவ்வளவு முட்டாள்தனங்களைச் செய்கிறீர்கள் பாருங்கள். சூழலைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில், இனிமையற்ற எத்தனை விஷயங்களை உங்களுக்குள் போட்டுப் புதைத்து வைத்திருக்கிறீர்கள் பாருங்கள்.
இனிமையற்ற விதைகளை மண்ணில் விதைத்தால், பழங்களும் அப்படித்தான் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கும்.
உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அவருக்கு உங்களைப் பிடிக்காது என்றாலும் பரவாயில்லை என்ற தைரியம் உங்களுக்கு வேண்டும். தற்போது உங்கள் நண்பர்களில் பலர் ஒப்பந்தங்களோடும் விருப்பு வெறுப்புகளோடும்தான் உள்ளனர்.
ஓர் உண்மை நண்பர் உங்களின் முட்டாள்தனங்களைச் சுட்டிக்காட்டினாலும் அன்போடு பழகும் தைரியமுடன் இருக்க வேண்டும். அதுதான் நட்பு! வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment